இந்தத் தலைப்பில் ஆனந்த விகடனில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். அந்தக் கதைக்குள் பல ஆச்சிகள் இடம் பிடித்திருந்தார்கள். அதில் கடைசி வீட்டு ஆச்சிக்கும் பெரிய இடம் இருந்தது.
அவள்
பெயர் சுப்பம்மாள்… ஆனால், ஊரில் பலருக்கும் அவளை மருதக்கார ஆச்சி என்றால்தான் தெரியும்…
அவள் வாழ்க்கை கொஞ்சகாலம் மதுரையில் கழிந்ததால் அந்தக் காரணப் பெயர்.
கடைசி
வீட்டு ஆச்சி என்பது கதையில் தெருவின் கடைசியில் இருக்கும் வீட்டைச் சேர்ந்தவள் என்ற
பொருளில் இருக்கும். உண்மையில் அவள் வீடு தெருவின் நடுவேதான் இருந்தது.
எங்களுக்கு
மூன்று தலைமுறைக்கு முந்தைய தலைமுறையில் மூன்று சகோதரர்கள். முதலாமவர் என் பாட்டனார்…
அவருடைய வீடு மூத்தவனுக்கு மேல்பக்கம் என்ற மரபுப்படி மேற்கே அமைந்தது. இரண்டாமவருக்கு
நடுவில் வீடு… கடைக்குட்டிக்கு கடைசியில் வீடு என்று தங்கள் நிலத்தில் மூவரும் பாகம்
செய்து கொண்டார்கள். அந்த வகையில் மூன்றாமவரும் கடைசி வீட்டுக்காரருமான வள்ளித் தாத்தாவுக்கு
மனைவியாக அமைந்ததால் அவள் கடைசி வீட்டு ஆச்சி!
முறையின்படி
பார்த்தால் அவள் என் அப்பாவுக்கே ஆச்சி. ஆனால், அவள் என்னைத் தம்பி என்பாள். ஏனென்றால்
அவள் அம்மாவின் பெயரும் குழலாமணி… என் அம்மாவுக்கும் ஒரு பெயர் குழல்வாய்மொழி! அதனால்
அவளுக்கு நான் தம்பி… அதுவும் சின்னத் தம்பி!
அவள்
வயதுக் கிழவிகளில் அவள் கொஞ்சம் விவரமானவள். ஊரில் எல்லோரும் கூட்டல் குறி போல படம்
வரைந்து தாயம் விளையாடினால் அவள் மட்டும் ஒரு பலகையில் சதுரங்கம் போல கட்டங்கள் வரைந்து
வேறு விதமான தாயம் விளையாடுவாள். கூடச் சேர்ந்து விளையாடும் கிழவிகளுக்கு விருத்தம்
போடும் அளவுக்கு திருத்தமாக காய் நகர்த்தத் தெரியாது.
ஏ
மதினி… எதை நவட்டலாம்… ஏ அத்த… இந்த விருத்தத்துக்கு அந்தக் காய அடிக்குமா… என்று அவளிடமே
ஆலோசனை கேட்பார்கள். பெரும்பாலும் சாந்த சொரூபியாக இருக்கும் ஆச்சி எப்போதாவது சகுனியாக
ஆடுவாள், அதுவும் அவளுக்கு சீக்கிரம் ஆட்டம் முடிய வேண்டுமென்றால்..! என்னையும் சில
நேரங்களில் விளையாட்டுக்குச் சேர்த்துக் கொள்வார்கள். என் விருத்தத்துக்கு நானே காய்
வைக்கிறேன் என்றால் ஆச்சிக்கு பொங்கிக் கொண்டு வரும்… அதிலும் அவள் காய் எதையாவது அடிப்பது
போல வந்துவிட்டால் போதும்… கொதித்து விடுவாள். ‘ஏ ஆப்பா… எதை வைக்கணும்னு சொல்லு… குண்டியத்
தூக்கிகிட்டு தூக்கிகிட்டு வராத…’ என்று செல்லமாக மிரட்டுவாள்.
என்
மீது கூடுதல் பிரியத்தோடு இருப்பாள். ‘ஏ சின்னத்தம்பி… இந்த தேங்காய ஒடைச்சுக் குடு…’
என்று அழைப்பாள். அவள் வீட்டு பொங்கல் பானையில் தேங்காயை உடைத்து ஊற்றி பால் களைந்து
ஊற்றவும் உதவுவேன்.. எங்க வீட்டு பழனியாச்சி கிழக்கு வாட்டமாக தீயை எரித்து பொங்கலை
கீழ் முகமாக மிரட்டிப் பொங்க வைத்துவிட்டு, சூரியனப் பாத்து பொங்கியிருக்கு… நல்ல சகுனம்
என்று பெருமை பேசிக் கொண்டு இருக்கும் நேரத்தில் பானையை நேர் குத்தாக வைத்து தீயை சரி
சமமாக எரித்து எந்தப் பக்கம் பொங்கினாலும் ஏற்றுக் கொள்ளும் நேர்மைக்காரியாகவும் இருப்பாள்.
அம்மாவுக்குத்
துணையாக ஆத்துக்குக் குளிக்கப் போவாள். ஊர் வம்பு பேசாமல் குடும்பக் கதைகளை… உறவுகளை…
வாழ்ந்தவர்களை நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே வருவாள். ஆற்றில் இருந்து சுள்ளி பொறுக்கிக்
கொண்டு வருவாள். ஆச்சி… ஆத்துல என்ன பெறக்குன..? என்றால் சொல்லமாட்டாள். ஏன்னா தாத்தா
பேரு வள்ளி… சுள்ளினு சொன்னா அவரு பேரைச் சொல்றாப்புல ஆகிருமாம்!
ஒரே
மகன் ஒரே மகள் என்று இரண்டே இரண்டு பிள்ளைகள்தான். இருவர் வீட்டிலுமே அதிகநாட்கள் தங்க
மாட்டாள். வீடு வம்பாப் போயிரும் என்று ஓடி ஓடி வந்துவிடுவாள். வீட்டை அத்தனை சுத்தமாக
வைத்திருப்பாள். குழம்பு வைக்க கல் சட்டி… சாப்பிடுவதற்கு அட்டகாசமான மரவை (மரத்தால்
செய்யப்பட்ட தட்டு) என்று அவள் பயன்படுத்தும் பாத்திர பண்டங்களே வித்தியாசமாக இருக்கும்.
வாய்க்காலை
ஒட்டிய வீடு என்பதால் பூச்சி பொட்டுகள் அடிக்கடி வரும் போகும்.. அதற்கெல்லாம் நாங்கள்
பயப்பட மாட்டோம். அடிச்சுத் தூக்கிப் போட்டுட்டு போய்ட்டு வாத்தா ஆவுடையானு சொல்லிவிட்டு
வேலையைப் பார்க்கப் போய்விடுவோம். புற்றுக் கோவில் என்று பெயர் பெற்ற சங்கரன் கோவில்
சாமி கோமதி அம்மாள் என்பதால் பாம்பை ஆவுடை என்றும் சொல்வார்கள்.
அடிக்கடி
பாம்புத் தொல்லை ஏற்பட, கடைசி வீட்டு ஆச்சி வீட்டுக்கும் கார வீட்டுக்கும் நடுவே இருக்கும்
சுவரில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்று முடிவானது. சும்மா ஒப்புக்கு ஒரு சுவர்தானே
என்பதால் செங்கல் வரிசை வைத்து சுண்ணாம்பு காரையாக வைத்துக் கட்டியிருந்தார்கள். அதில்
நிறைய இடைவெளி இருக்கும். அதனுள் பாம்பு பதுங்கியிருந்தால் எப்படி கண்டுபிடிப்பது..?
சின்னதாக
ஒரு மண்பானையை எடுத்து அதற்குள் வைக்கோலும் தென்னங் கூந்தல் நாரும் வைத்து அடைத்து
உள்ளே சிறு கங்கை வைத்து ஒரு ஓட்டையை மறைத்து வைத்து பூசி விட்டாள். கூந்தலும் வைக்கோலும்
மூட்டமாக மாற அந்த ஓட்டை வழியாக புகை சுவருக்குள் நுழையத் தொடங்கியது. நாங்கள் கம்போடு
தயாரானோம். சுவரில் இருந்த ஓட்டைகளுக்குள் பதுங்கி இருந்த பாம்புகள் எல்லாம் டொப் டொப்
என்று எகிறி வெளியே குதித்தன! ஒரே நாளில் சுவர் சுத்தமானது. ஆச்சியின் டெக்னாலஜி அப்படி!
கடைசி
வீட்டு ஆச்சியை எல்லோரும் நினைவில் வைத்திருப்பார்கள்.. அதற்குப் பல காரணங்கள் உண்டு!
அந்தக்
கதையில் எழுதியதைப் போல ஆப்பம் சுட்டு விற்று வந்தாள். அதில் எழுதியது போலவே மாடு பத்திக்
கொண்டு போகும் கடற்கரையாண்டிக்கு என்று தனியாக ஆப்பம் சுட்டு வைப்பாள். கணக்கு வைத்துச்
சாப்பிட்டுக் காசு கொடுக்கும் சில கஸ்டமர்கள் அவளுக்கு எப்போதும் உண்டு! ஆனால், அவளைப்
பொறுத்த வரையில் அது வியாபாரம் இல்லை… பசியாற்றும் உதவி! அப்படித்தான் சொல்லுவாள் அவள்.
மருத
மரப் பட்டைகளைச் சேகரித்து வந்து இடித்துப் பொடியாக்கி வைத்திருப்பாள். அது சைபாலுக்கு
முன்பே நான் பார்த்த சர்வரோக நிவாரணி… பல்லு வலிக்கு ஆச்சி என்றால் ஒரு சிட்டிகை பொடியை
அள்ளி வலிக்கும் பல்லில் பூசுவாள். அதையே பல் விளக்கும் பொடியாகவும் தருவாள். குடி
தண்ணீரில் போட்டு லேசான துவர்ப்போடு குடிக்கச் செய்வாள்.
இதை
யார் கேட்டாலும் தருவாள்… இலவச மருத்துவம்… இன்னொரு உதவி!
பிடிப்பு
தடவுவது, தொக்கம் எடுப்பது போன்ற பிசியோதெரபி வைத்தியராகவும் இருப்பாள். ஆற்றில் கீழே
விழுந்ததில் இடது கை கொஞ்சம் பிசகி விட்டது, கடைசி வீட்டு ஆச்சிக்குதான்..! தன் வைத்தியம்
தனக்குப் பலிக்காது என்பது போல அந்த இடது கை மொழிக்கட்டு (மணிக்கட்டு) மட்டும் கொஞ்சம்
விலகியே செட் ஆகிவிட்டது. ஆனால், அதோடு தன் பிசியோ சேவையைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தாள்.
இரண்டு
பக்கமும் ஹெட்லைட் மூக்குத்தி, கலர் சேலை என்று இருந்த ஆச்சி தாத்தா செத்த பிறகு வெள்ளைச்
சேலைக்கு மாறிவிட்டாள். கையில் இருக்கும் கைக்குட்டை கூட வெள்ளை நிறத்தில்தான் இருக்கும்.
ஏன் ஆச்சி அப்படினு கேட்டா, ‘அதுதான் ஒன் தாத்தா’னு சொல்வா என்று அந்தக் கதையில் சொல்லியிருப்பேன்.
பொள்ளாச்சியில்
இருக்கும் மகன் வீட்டுக்குச் செல்கிறேன் என்று கிளம்பிச் சென்றாள். திருவள்ளுவர் பஸ்ஸில்
கடைசி வரிசையில்தான் இடம் கிடைத்தது. ஏறிக் கொண்ட பிறகு 14ம் நம்பர் சீட்டில் இருந்தவரைக்
கேட்டு சீட் மாற்றிக் கொண்டு அவரைக் கடைசி வரிசைக்கு அனுப்பியிருக்கிறாள்.
ராஜபாளையம்
தாண்டிய வண்டி விபத்துக்குள்ளாக யாருக்கும் எந்தச் சேதமும் இல்லை… 14ம் நம்பர் சீட்டில்
இருந்த ஆச்சி மட்டும் ஆயுளை முடித்துக் கொண்டாள்.
சீட்
நெஞ்சில் முட்டியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மரம் ஏற்பட்டிருக்கும் என்று சொன்னார்கள்.
கடைசி கடைசியாக அந்த 14ம் நம்பர் சீட் பயணிக்கு ஆச்சியால் முடிந்த உதவி!