Sunday, July 25, 2021

வீடுபேறு! 11/16

 ‘மதுரையில இருந்து காரைக்குடி போற பஸ்ல ஏறிடு… திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டுல இறங்கி அப்படியே வெளில வந்து ரைட் திரும்பு… ஒரு கோவில் கண்ணுல படும். அதோட காம்பவுண்ட் சுவரை ஒட்டி ஒரு சந்து மாதிரி போகும்… அதிலே நுழைஞ்சு வந்தா சந்து முடிவிலே ஒரு தெப்பக்குளம் வரும். அதை ஒட்டி ஒரு லைன் வீடு இருக்கும்… அதிலே முதல் வீடு…’ செழியன் தன் வீட்டுக்கு வழி சொல்வதே கூகுள் மேப் போட்ட மாதிரி தெளிவாக இருக்கும்.

செழியன் எப்போதுமே அப்படித்தான்… எதையுமே விலாவாரியாகப் பேசுவான். அந்த விஷயத்தில் அவன் அம்மா மாதிரி. ‘பாபு…’ என்று ஆரம்பித்தால் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், கை பரபரவென்று வேலை செய்து கொண்டே இருக்கும். ‘வந்தவனை ஒரு வாய் சாப்பிட விடும்மா… பேசிகிட்டே இருந்தா எப்படி..?’ என்று அப்பா சொன்னால்கூட வாய்தானே சாப்பிடப் போவுது… பேசுறது காதுலதானே விழணும்… சும்மா இருங்க…’ என்று அதற்கும் டீடெய்லாகப் பேசுவார்கள்.

நீச்சல் குளத்தோடு வீடு என்பது பெரிய கனவான்களின் வீடாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை… செழியனின் அப்பா போன்ற எளிய பள்ளிக்கூட ஆசிரியரின் வீடாகவும் அது இருக்கலாம். செழியன் அடையாளம் சொல்லும் தெப்பக்குளம் என்பது அவன் வீட்டு நீச்சல் குளம் போல வீட்டோடு ஒட்டித்தான் இருக்கும். ஆனால், நான் போன சமயங்களில் எல்லாம் பெரும்பாலும் வறண்டு போய்த்தான் கிடக்கும்.

செழியன் என் கல்லூரி நண்பன். நான் பொருளாதாரம் படித்த பாளை, சேவியர் கல்லூரியில் அவன் வேதியியல் படித்தான். விடுதியிலும் ஒரே அறையில் கூட தங்கியதில்லை. ஆனால், அவன் எனக்கு நெருக்கமான நண்பனாக இருந்தான். யார் எது செய்தாலும் பாராட்டுவது அவன் குணம்.

தன் வீட்டைப் பற்றியும் அம்மா, அப்பா, அக்கா, தங்கை, தம்பி பற்றியும் பேசிக் கொண்டே இருப்பான். அதனாலேயே அவன் வீடு மீது எனக்கு எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே போனது. போய் அவர்களைப் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

‘டேய்… எங்க புதுக்கோட்டை ஏரியாவுல ஜல்லிக்கட்டு பிரமாதமா இருக்கும்… பொங்கலுக்கு வீட்டுக்கு வர்றியா என்று கேட்டான். எங்கள் வீட்டில் பொங்கல் முக்கியமான பண்டிகை என்பதையோ இறந்து போன எங்கள் ஆச்சிக்கு அன்று இரவு சேலை வைத்துக் கும்பிடுவோம் என்பதையோ மறந்து, அவனோடு புறப்பட்டு விட்டேன். (பொங்கலுக்கும் ஏன் வரவில்லை என்று என் அப்பா விடுதிக்கு தேடி வந்ததும், என்னவோ தோன்றி பொங்கல் அன்று பகலில் நான் செழியன் வீட்டில் இருந்து புறப்பட்டு இரவில் வீடு வந்து அம்மாவிடம் திட்டு வாங்கியதும் தனிக் கதை!)

வெளிப்பார்வைக்கு செழியன் வீடு வராண்டா, ஹால், படுக்கையறை, கிச்சன் என்று இருந்தாலும் உண்மையில் அது அம்மாவின் அன்பு, அப்பாவின் கனிவு, அக்காவின் செல்லம், தங்கையின் பாசம், தம்பியின் உரிமை போன்றவற்றின் வடிவமாகத்தான் இருந்தது.

ஒட்டுமொத்தமாக நண்பர்கள் கூட்டமாகச் சென்றபோது மொட்டைமாடியில் படுத்து உறங்குவது, மொத்தமாக சோறு பிசைந்து அம்மா உருட்டி உருட்டித் தர எல்லோரும் சாப்பிட்டது என்று இப்போது சொல்வதற்கு விக்ரமன் பட மாண்டாஜ் போல இருந்தாலும் அன்று அத்தனையும் கொண்டாட்டமாகவே இருந்தது.

அம்மா எங்களோடு எல்லாவற்றிலும் பங்கெடுத்துக் கொள்வார். அப்பா எல்லாவற்றுக்கும் மவுன சாட்சியாக இருப்பார். அதுதான் அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு ஆதாரம். சின்னதாக சாதித்தாலும் பெரிதாக பாராட்டுவார். பெரிதாக தவறு செய்தாலும் சிறிதாக தண்டனை தருவார். அம்மா கொடுக்கும் தண்டனை என்பது மற்றவர்கள் பார்வைக்கு சின்னதாகத்தான் இருக்கும். ஆனால், அனுபவிப்பவனுக்குத் தெரியும், அதன் வேதனை!

உதாரணமாக ஒன்று சொல்கிறேன். நாற்காலி தண்டனை, அம்மாவின் தண்டனைகளில் ஒன்று. ஏதாவது தப்பு பண்ணிட்டா, சேர்ல உட்காருனு சொல்வாங்க. அதாவது கைகளை சேரில் வைத்திருப்பது போல நீட்டிக் கொண்டு சேரில் அமர்ந்திருப்பது போன்ற போஸில் இருக்க வேண்டும். ப்பூ… இவ்ளோதானா என்று தோன்றும். ஆனால், அப்படி அரைகுறையாகக் குனிந்த நிலையில் ஐந்தாவது நிமிடத்தில் மணிக்கட்டு தொடங்கி, இடுப்பு, குதிகால், மூட்டு என்று சகல பாகங்களும் நம்மிடம் மன்னிப்புக் கேளுடா பாவி… என்று கெஞ்சத் தொடங்கும். மன்னிப்புக் கேட்ட பிறகும் சகஜமாக நிமிர்ந்து நிற்க, இன்னோர் ஐந்து நிமிடங்கள் பிடிக்கும்.

கல்லூரிக் காலம் தாண்டினால் அதோடு நண்பர்களின் தொடர்பும் விட்டுப் போவது இயற்கைதானே… ஆனால், எங்கள் நட்பு இயற்கைக்கு விரோதமானது.

நான் மேற்படிப்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒரு டிப்ளோமோ படித்தேன். அதற்கான செமினாரில் கலந்து கொள்ள மதுரை வருவேன். அப்போதெல்லாம் செழியன் வீட்டுக்குப் போவேன். சனி இரவு போய் தங்கிவிட்டு ஞாயிறு காலை மறுபடியும் வகுப்புகளுக்காக மதுரை திரும்பிவிடுவேன். சில நாட்களில் செழியன் ஊரில் இருக்க மாட்டான். ஆனாலும் என் வீடுதானே என்ற உரிமையோடு செல்வேன்.

இன்னும் சில நாட்களில் என்னோடு செமினாரில் கலந்து கொள்ள வந்த நண்பர்களையும் எதுக்கு லாட்ஜ்ல ரூம் எடுக்கறீங்க… என்கூட வாங்க என்று அழைத்துக் கொண்டு செழியனின் வீட்டுக்குப் போவேன். போன் வசதி எல்லாம் இல்லாத அந்த காலகட்டத்தில் திடுதிப்பென்று இரவு சாப்பாட்டு நேரத்தில் இரண்டு மூன்று பேரோடு போய் நின்றால் பெத்த அம்மாவுக்கே கோபம் வரும். ஆனால், செழியனின் அம்மா சிரித்த முகமாக வந்தவர்களோடு பேசிக் கொண்டிருப்பார். அப்பா டிபனுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்குவார்.

அந்த சுற்றுவட்டாரத்தில் என்ன நிகழ்வு என்றாலும் அதற்கான மையப்புள்ளியாக செழியன் வீடு இருக்கும். காரைக்குடியில் நண்பர் குள. சண்முக சுந்தரத்தின் திருமணத்துக்கு போகும்போது வழியில் திருப்பத்தூரில் இறங்கி செழியனையும் கூட்டிக் கொண்டுதான் போனேன். கல்யாணச் சாப்பாட்டை மிஸ் பண்ணிவிட்டு (லேட்டாகப் போனதும் ஒரு காரணம்) செழியன் வீட்டுக்கு வந்துதான் சாப்பிட்டேன்.

பாதைகள் மாறி பயணங்கள் வேறான பிறகு என் வீட்டுக்குச் செல்வதே அபூர்வமானது போல செழியன் வீட்டுக்குச் செல்வதும் இல்லை என்றாகி விட்டது. விகடனுக்காக ஒருமுறை சர்வே டூர் சென்றிருந்தோம். கிடைத்த அரைமணி இடைவெளியில் திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து வலது பக்கம் திரும்பி, கோவில் காம்பவுண்டை ஒட்டிய சந்து வழியாக ஓடி, காய்ந்து கிடந்த தெப்பக்குளத்தைக் கடந்து லைன் வீட்டின் முதல் வீட்டின் முன்னால் போய் மூச்சு வாங்கி நின்றேன். வீட்டில் பெரிய பூட்டு தொங்கியது.

பக்கத்து வீட்டு கதவைத் தட்டினேன். ‘குழந்தை சாமி சார்…’ என்றதும் ‘அவங்க காலி பண்ணி போயிட்டாங்களே… சர்ச் பக்கத்துல ஜெராக்ஸ் கடை வெச்சிருக்காங்க…’ என்றார்.

அங்கே போனேன். அம்மாவும் அப்பாவும் இருந்தார்கள். ‘வா பாபு… அக்கா கல்யாணத்துக்குப் பிறகு… தங்கச்சியைக் கட்டிக் குடுத்த பிறகு… அப்பா ரிட்டையர்ட் ஆன பிறகு… செழியன் பிசினஸ் அதுஇதுனு அலைஞ்சு கடைசியா லாரி வாங்கி செட்டில் ஆன பிறகு… என்று அம்மா வழக்கம் போல பேசிக் கொண்டே போக அப்பா வழக்கம் போல அமைதியாக இருந்தார்.

ஆனால், இருவர் முகத்திலும் வழக்கமான சிரிப்பு இல்லை, ஒருவேளை அது ஒருபோதும் அலையடிக்காத அந்த தெப்பக் குள வீட்டிலேயே இருக்குமோ?!

No comments: