Tuesday, September 15, 2015

கொட்டாகுளம்

வறண்ட காற்றாக புறப்பட்டு கீழக் குளத்து நீரைத் தொட்டுக் கொண்டு வரும்போது குளிரையும் சேர்த்து கொண்டு வந்தது. கிழக்கே இருந்து காற்றடித்தால் கீழக் குளத்தாலும் மேற்கே இருந்து காற்றடித்தால் மேலக் குளத்து தயவாலும் வருடம் முழுக்க குளிர் காற்றை அனுபவித்துக் கொண்டிருந்த்து கொட்டாகுளம். வடக்குத் தெருவுக்குள் திரும்பியதுமே கீழக் குளத்துக் காத்து மேலே வந்து மோதியது. காதை மறைத்துக் கட்டியிருந்த தலைப்பாகையை இன்னும் இறுக்கிக் கொண்டார் சிவனு!
மூப்பனார் சாவடியில் கைலியை போர்த்திக் கொண்டு படுத்திருந்த எவனோ பக்கத்தில் கிடந்த நாய் மேலே காலைத் தூக்கிப் போட்டான்.
சவத்து மூதிபொண்டாட்டி நெனப்பு போலுக்குஅது வசங்கெட்ட எடத்துல கடிச்சு வெச்சுதுன்னா பொறவு ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லாம போயிரும்என்று முனங்கியவர், திடுமென்று நினைத்துக் கொண்டவராக, ‘வேகொல்லோண்டான் வந்திருப்பானாஇல்லன்னா ஆய்க்குடிகாரரு கடையில ஒரு சாயா குடிச்சுட்டு வந்துறலாம்…’ என்று அவர் சொல்ல, ராமையா தலைப்பாகை சுருட்டுக்குள் வைத்திருந்த பீடிக்கட்டில் இருந்து ஒரு பீடியை எடுத்து நுனியைக் கடித்து துப்பி விட்டு தீப்பெட்டியை எடுத்து பற்ற வைத்துக் கொண்டார்.
வாயில என்ன வாளப்பளத்தயா வச்சிருக்கீருராத்திரி உம்ம வீட்டுலதானயா அந்தப் பய கஞ்சி குடிச்சிருப்பான்சொல்லிதான போயிருப்பான்சொல்லும்யா…’ சிவனு தொடர்ந்து பேசிக் கொண்டே நடக்க, பீடியை நன்றாக உள்ளே இழுத்து புகையை ஊதிய ராமையா சிரித்துக் கொண்டார்.
வே மாப்ளகாலங்காத்தால உமக்கு வாளப்பளத்துல வாய வைக்கலன்னா விடியாதேஅவன் கஞ்சி குடிச்சுட்டு நேரா இங்க வந்து மொடக்கிடுதேன்னு சொல்லிட்டுதான் வந்தான்மடையிலதான் படுத்து கெடப்பான்வாரும்தண்ணிய அடைச்சிட்டு போவையில ஒரு சாயா அடிப்போம்இப்பம் போனா பளைய பால்ல டீய போடுவாருஎன்று பீடியை தூர எறிந்துவிட்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நடையை எட்டிப் போட்டார் ராமையா.
வடக்குத் தெருவின் கீழக் கடைசிக்கு வந்து வடக்கு பார்த்து திரும்பியதுமே மினுக் மினுக்கென்று விளக்கு எரிந்த சித்தாவி அம்மன் கோவிலைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டார் சிவனு. கண்கள் தானாக அதைத் தாண்டி தூரத்தில் தெரியும் சுடுகாட்டின் மீதும் விழுந்தது. சுடுகாட்டுக்குள்ளேயும் வெளிச்சம் தெரிந்தது.
பார்வையைத் திருப்பி பாலத்தின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் வாய்க்காலை எட்டிப் பார்த்தார் ராமையா. சிவனு அவரை லேசாகச் சுரண்டி, ‘என்ன மாப்ளநம்ம குட்டியா பிள்ளை நின்னு எரியுதாரு போலுக்குபார்டர்ல சாப்ட கோளியும் புரோட்டாவும் தீயில வம்பாப் போவுதய்யா…’ என்று சிரித்துக் கொண்டே சொல்ல, ராமையா, இன்னொரு பீடியை கட்டில் இருந்து எடுத்துவிட்டு என்னமோ நினைப்பில் காதில் செருகிக் கொண்டு குளத்துக் கரையில் திரும்பி நடக்கத் தொடங்கினார்.
என்னவேபீடிய பத்த வச்சா அந்த தீயில இருந்து குட்டியா புள்ள இந்த தீக்கு வந்துருவாருனு பயப்படுதீரோகுடும்நா வேணா பத்த வச்சு தாறேன்…’ என்று பீடியை காதில் இருந்து எடுக்க, பிடுங்கி மறுபடியும் காதில் செருகிக் கொண்ட ராமையா, ‘அதெல்லாம் ஒண்ணுமில்லஆனா, குட்டியாபுள்ள இப்படி போயிருவாருனு நெனச்சுகூட பாக்கலமூந்தாநாத்து நம்ம கண்ணுபுளி மெட்டுல தண்ணி தொறக்க யாரெல்லாம் போலாம்னு பேசி முடிச்சுட்டு நாலு ரொட்டி சாப்டு வருவோம்னு போனா, ரஹ்மத்ல புள்ளைவாள் கோளிய முழுங்கிகிட்டு இருக்காருஎன்னய பாத்ததும் மனுசனுக்கு ஒரு மாரி ஆகிப் போச்சுஎன்னடே ரொட்டி சாப்டவானு என்னய கேட்டாருஇல்ல அண்ணாச்சிநம்ம பாய்கிட்ட உம்ம தங்கச்சிய கட்டித் தாரியளானு கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்உங்கள மாரி சைவப் புள்ளயெல்லாம் இங்க வரப் போய்த்தான் ரொட்டி, கோழி எல்லாம் ரேட்டு ஏறிப் போச்சுனுட்டு வந்தேன்இன்னைக்கு ஆளே இல்லை…’ என்று வடக்கே பார்த்து பெருமூச்சு விட்டார் ராமையா.
ஆமா மாப்ளபொசுக்னு எட்டணாவா இருந்த ரொட்டிய எம்பது பைசாவாக்கிட்டான்அஞ்சு ரொட்டி, ஒரு ஆம்ப்ளேட் தின்னா அஞ்சு ரூபா கணக்காகிப் போவுதுஅந்தப் பய வல்லத்த பூரா வளச்சுருவான் போல இருக்கு…’ என்று சிவனு பார்டர் பரோட்டா கடை பக்கம் பேச்சைத் திருப்பிவிட்டார்.
இருவரும் இன்னும் பத்து எட்டு வைத்து செல்ல, ஊரோரத்து முதல் மடையில் வேட்டியை தலை வரைக்கும் இழுத்துப் போர்த்தியபடி ஒருக்களித்து படுத்திருந்த கொல்லங்கொண்டான் கண்ணில் பட்டான். ஊர் தண்ணீர் பாய்ச்சி. மேலக் குளம், கீழக் குளம், வாய்க்கால் எல்லாமே கொல்லங்கொண்டான் கட்டுப்பாடுதான். எந்த மடையை எப்போது திறக்க வேண்டும் எப்போது அடைக்க வேண்டும் என்பது அவனுடைய கணக்குதான்.
தலையாரி, விஏஓ என்று யார் சொன்னாலும் எடுபடாது. யாராவது புகார் கொண்டு போனால், அவன அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு போயிருங்கலெச்சய கெடுப்பான், போயி கேட்டா என்று அனுப்பிவிடுவார்கள். டீ காபி கொடுத்தால்கூட வாங்கிக் குடிக்காத தண்ணீர் பாய்ச்சி. வீட்டு வீட்டுக்கு கும்புடு போட்டு பூவுக்கு அரைக் கோட்டை நெல்லு வாங்கும் விஏஓவை பேசத்தானே செய்வான். குடும்பம் என்று யாரும் அவனுக்கு கிடையாது. பெரும்பாலும் ஏதாவது ஒரு மதகு அடியில்தான் படுத்து கிடப்பான். தோளில் கிடக்கும் வேட்டி இடுப்பில் இருந்தால் இடுப்பில் கிடந்த வேட்டி தோளில் கிடக்கும். ரெண்டு குளத்து தண்ணீரிலும் முக்கி முக்கி வேட்டிகள் ரெண்டுமே லேசாக காவி கரை படிந்து போய்த்தான் இருக்கும்.
வேஅலுப்புல அங்குட்டு பொரண்டுட்டாம்னா என்னவே ஆகும்..?’ பாதத்தை நன்றாக அழுத்தி பதித்தபடி கரையில் இருந்து முதல் மடைப் பக்கமாக இறங்கும் சிவனு கேட்க, ராமையா அவிழ்ந்த துண்டை சரியாகப் பிடித்தபடி ஓடி இறங்கிக் கொண்டே பதில் சொன்னார்.
அவன் ஒண்ணும் உம்ம மாரி இல்லவேமசுர் காலெல்லாம் அவனுக்கு கண்ணுலேசா காத்து அடிச்சுதுன்னாலே அவனுக்கு முழிப்பு தட்டிரும்என்றபடி காதில் செருகிய பீடியை எடுத்து பற்ற வைத்தார். முதலில் உறிஞ்சிய புகையை மூக்கு வழியாக விட்ட நேரத்தில் கண் விழித்த கொல்லங்கொண்டான், ‘வாங்க மொதலாளிவிடிய இன்னும் நேரங் கெடக்குஅதுக்குள்ள வந்துட்டியகூட யாரு..? செவனு ஐயாவா…’ என்றான் வேட்டியை உதறி எழுந்தபடி.
நல்லாருக்குடேரெண்டு நாத்தங்கால் வெச்சிருக்கற அவரு ஒமக்கு மொதலாளிஎங்கள யாருனு கேக்ககளத்துல அளக்கையில கேளேன் இந்தக் கேள்விய..’ என்றார். கேள்வி நக்கலாக இருந்தாலும் தண்ணீர் பாய்ச்சி தன்னை குறைவாகப் பேசிய வலி அதில் தெரிந்தது.
பாத்தனேதொள்ளாளிக்கு அளக்க தூர் நெளிஞ்ச மரக்கால்லா வெச்சிருக்கியயாவாரி காரி துப்பிட்டு போனாம்லாமறந்துருவமா என்னஒங்க ஒறவு களத்து மேட்டோட சரிஆனா, மொதலாளி ஒரே சட்டிய ஆளுக்கு பாதியா சாப்புட கூப்டுத ஆளுஒண்ணாயிருமா என்ன…’ என்று சொல்லிக் கொண்டே பதிலை எதிர்பார்க்காமல் வேட்டியை அவிழ்த்து வைத்துவிட்டு கோமணத்தை இறுக்கியபடி மடை முகப்பை நோக்கி தண்ணீருக்குள் பாய்ந்தான்.
என்ன சொன்னாலும் சிவனு சங்கடப்படுவார் என்பதை உணர்ந்த ராமையா, மாப்ளேநீரு இங்கன நின்னு தண்ணி உள்ள இழுக்கானு பாரும்நான் மடை அடைப்பில்லாம வருதானு அங்கிட்டு பாக்கேன் என்றபடி வேகமாக கரையில் ஏறி வயக்காட்டுப் பக்கமாக இறங்கினார்.
மடை முகப்பில் குதித்த கொல்லங்கொண்டான் அப்படியே மடையின் உள்ளே புகுந்து வயக்காட்டுப் பக்கமாக வெளியே வந்தான். கிட்டத்தட்ட ஏழெட்டு நிமிடங்கள் மூச்சடக்கி அவன் மடையின் உள்ளே தவழ்ந்து அடைத்துக் கிடக்கும் கசடுகளை எல்லாம் அள்ளிக் கொண்டு வெளியே வரவேண்டும். அடைப்பு பலமாக இருந்தால் கூட ரெண்டு மூன்று நிமிடங்கள்கூட ஆகலாம். ஆனால், கொல்லங்கொண்டானின் நாள் அந்த மூச்சடக்குதலில்தான் தொடங்குகிறது. கொல்லங்கொண்டானின் நாள் மட்டுமல்லகொட்டாகுளத்தின் நாளும்தான்!

No comments: