விகடன்
பவள விழா கொண்டாட்டம்... அதன் ஒருபகுதியாக விகடன் தாத்தா மாஸ்க்-கை மாட்டிக் கொண்டு விழாவுக்கு வரும் வாசகர்களை மகிழ்விக்கும் திட்டத்தை உருவாக்கி இருந்தார் எம்.டி. அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது. உடன் நண்பர் ரகோத்தமனும்..!
‘இந்த மாஸ்க் என்ன சைஸ்னு பார்த்தீங்களா… இதை மாட்டிகிட்டு நிக்கப் போறவரு ஆறரை அடி உயரமாச்சும் இருக்கணும்… ஒல்லியாகவும் இருந்துடக் கூடாது… அப்பதான் அம்சமா இருக்கும். அப்படி ஆளாப் பார்த்து தேடிப் புடிங்க…’ என்று முதல் மீட்டிங்கில் சொன்னார் எம்.டி. சினிமா வட்டாரத்தில் தேடி துணை நடிகர்களாகப் பார்த்து அப்படியே ஆட்களைப் பிடித்தோம். அந்த இருவரில் ஒருவர் பெயர் விஸ்கி இளங்கோ. விகடன் வாசகர். சிறு நகைச்சுவைத் துணுக்கெல்லாம் எழுதியவர். ‘எம்.டி அனுப்புன லெட்டரை எல்லாம் பத்திரமா வெச்சிருக்கேன். எனக்கு அவர்கூட ஒரு போட்டோ எடுக்கணும்… முடியுமா..?’ என்றார். முயற்சிக்கலாம்னு சொன்னேன். (முயற்சி செய்யலாம்னு எழுதக் கூடாது என்பார் எம்.டி. முயற்சி என்பதே ஒரு செயல். அதைச் செய்வோம்னு ஏன் தனியாச் சொல்லணும். அதனால் முயற்சிக்கலாம்… முயற்சித்தார்னு சொல்வதுதான் சரி என்பது அவருடைய எடிட்டோரியல் திருத்தம்.)
இருவருக்கும் அகல பட்டு ஜரிகைக் கரை போட்ட பஞ்சகச்ச வேட்டி, அதற்கு ஏற்ற டபுள் எக்ஸ் எல் சைஸ் ஜிப்பா (பைஜாமாவோடு வாங்குங்க… ஏன்னா, வேட்டிக்கான ஜிப்பா அவங்க சைஸுக்கு கிடைக்காது என்று சொல்லியிருந்தார்.) பளிச்சென்ற அங்கவஸ்திரம் எல்லாம் வாங்கியாகி விட்டது. ‘முருகேஷ்… சோம்பல் பார்க்காம இந்த ஜிப்பாவை ஒருமுறை அவங்களை போட்டுப் பார்த்துடச் சொல்லுங்க… பங்ஷன் அன்னிக்கு சிரமமாகிடும்…’ என்று சொல்லியிருந்தார். அதையும் செய்து முடித்துவிட்டோம். எல்லாம் கச்சிதமாக இருந்தது.
நிகழ்ச்சிக்கு முதல்நாள் மீண்டும் அழைத்தார். ‘அவங்க ரெண்டு பேரும் காலைல எட்டு மணிக்கெல்லாம் தயாரா இருக்கணும். சொல்லிட்டீங்க இல்லே… நீங்க ரெண்டு பேரும் (நானும் ரகோத்தமனும்) அவங்களைக் கூட இருந்து பார்த்துக்கணும். ரெண்டு பேரில் ஒருத்தர் வாசல்ல நின்னு வாசகர்களை வரவேற்கும்போது இன்னொருத்தர் அ\றையிலே ஓய்வு எடுக்கணும். பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு ஓய்வெடுக்கறவர் வரவேற்கப் போகணும்… வரவேற்பிலே நிற்பவர் ஓய்வெடுக்க வந்துடணும். இந்த ஷெட்யூல்ல எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. அவங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையிலே கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி வெச்சுக்கோங்க… அவங்களுக்கு கொடுத்துகிட்டே இருங்க… ரெண்டு டப்பா குளுக்கோஸ் வாங்கி வெச்சுக்கோங்க…’ என்றெல்லாம் குறிப்புகளைக் கொடுத்தார்.
நிகழ்ச்சி அன்று காலையில் இரு நண்பர்களும் வந்துவிட்டார்கள். எம்.டியிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன். இருவரின் உருவத்தைப் பார்த்து திருப்தி அடைந்த எம்டி, ‘சரியான ஆட்களைத் தான் கூட்டிட்டு வந்திருக்கீங்க…’ என்று சொல்லிவிட்டு அவர்களிடமும், ‘ஒருவர் வரவேற்கறப்ப இன்னொருத்தர் ஓய்வெடுக்கணும்…’ என்ற தகவலை விலாவாரியாக எடுத்துச் சொன்னார்.
ஒன்பது மணிவரையில் இந்த ஷிப்ட் முறை ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்தது. குடும்பம் குடும்பமாக வாசகர்கள் வரத் தொடங்க, வந்த குழந்தைகளுக்கு விகடன் தாத்தாவைப் பார்த்ததும் குஷி. பெரியவர்களுமே விகடன் தாத்தாவைப் பார்த்து உற்சாகமாகி விட்டார்கள். விகடன் தாத்தாவோடு நின்று போட்டோ எடுத்துக் கொள்வதில் ஆர்வமாகி விட்டார்கள்.
பதினைந்து நிமிட கெடு முடிந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர் வரவேற்பு பகுதிக்கு வர, இரண்டு விகடன் தாத்தாகளைப் பார்த்ததும் வாசகர்கள் உற்சாகம் கரைகடந்தது. இதைக் கண்டதும் விகடன் தாத்தாக்களும் குஷியாகி விட்டார்கள். இருவரும் எதிர் எதிரே ஓடி வந்து கட்டி அணைத்துக் கொள்ள, வாசகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்.
சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலே இந்த கொண்டாட்டம் போக, தற்செயலாக அரங்கினுள் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் இதைப் பார்த்த எம்டி டென்ஷனாக வாசலுக்கு வந்துவிட்டார். என்னை அழைத்து, ‘ரெண்டு பேர்ல ரொம்ப நேரமா நிக்கறவர் யாரு… அவரை அறைக்கு கூட்டிட்டு வாங்க…’ என்றார். நான் ஒரு விகடன் தாத்தாவை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றேன்.
ஒருத்தர் ஓய்வெடுக்கணும்… ஒருத்தர் வரவேற்கணும்னு சொன்னேன்ல… சம்பளம்தான் கொடுக்கறோமேனு ரெண்டு பேரையும் கொண்டு போய் நிறுத்திட்டீங்களா… அந்த மாஸ்கை வாங்குங்க…’ என்றார். நான் மாஸ்கைக் கழற்றச் சொல்லி வாங்க, என் தலையில் அதை மாட்டினார். பிளாஸ்டர் ஆஃப் பாரீஸால் செய்யப்பட்ட அந்த மாஸ்க் முழு வெப்பத்தை வெளிப்படுத்தியது. ஐந்து நிமிடங்களில் மூச்சுத் திணறிவிட்டது. மாஸ்கைக் கழற்றினேன்.
‘என்னாச்சு… அஞ்சு நிமிஷம்கூட போடமுடியலைல்ல… அப்படிப்பட்ட மாஸ்கை ஒருமணிநேரமா ஒருத்தர் போட்டுகிட்டு நிக்கறார். எப்படி உங்களால அதை வேடிக்கை பார்க்க முடியுது… இப்படி வேகும்னு எனக்கு தெரியாதுனு சொல்லாதீங்க… நான் பதினைஞ்சு நிமிஷத்துக்கு மேல போடக் கூடாதுனு சொன்னப்பவே நீங்க இதை யோசிச்சிருக்கணும். போங்க… நிகழ்ச்சி தொடங்கப் போகுது… அவரையும் அழைச்சுட்டு வந்து கொஞ்சம் ஓய்வெடுக்கச் சொல்லுங்க…’ என்று காது மடலெல்லாம் சிவக்க கத்திவிட்டுப் போய்விட்டார்.
இப்படிப்பட்ட திட்டுகள் எனக்கு பழகிவிட்ட ஒன்று. ஆனால், விகடன் தாத்தாவாக வேலை செய்ய வந்தவர் திகைத்து விட்டார். ‘விகடன் ஏன் மணிகண்டனோட மருத்துவ சிகிச்சைக்காக அவ்வளவு துடிச்சுது… படிக்க வழியில்லாதவங்களுக்காக ஏன் ஓடிப் போய் உதவுதுனு இப்ப புரியுது சார்… இந்த முதலாளிக்காக மூச்சு முட்டி திணறக் கூட செய்யலாம்…’ என்றார்.
அன்றைய நிகழ்ச்சி முழுவதும் விகடன் தாத்தாக்கள் மீது ஒரு கண் வைத்துக் கொண்டேதான் இருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் இருவரையும் மீண்டும் அழைத்தார். ‘குழந்தைகளை சந்தோஷப்படுத்தறது சாதாரண விஷயமில்லை… ஆனா, நீங்க குழந்தைகளுக்கு அதைச் செய்திருக்கீங்க… ரொம்ப சந்தோஷம்…’ என்றார்.
அந்த வாசக நடிகர், ‘ஐயா… உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கணும்…’ என்றார். உடனே புகைப்படக் காரர்களை அழைத்தார் எம்.டி. ஒருவரும் விகடன் தாத்தா மாஸ்க்கை மாட்டிக் கொண்டார்கள். போட்டோ எடுத்துக் கொண்டார்கள். நன்றி சொல்லிவிட்டு டிரெஸ்ஸிங் ரூமுக்கு திரும்பி நடக்கப் போனார்கள். இருவரையும் அழைத்த எம்.டி., ‘இந்த போட்டோவை என்ன செய்வீங்க..?’ என்றார்.
‘விகடன் ஆசிரியரோட நாங்க எடுத்துகிட்ட படம்னு வீட்ல காட்டி சந்தோஷப்படுவோம். ஃப்ரேம் பண்ணி வெச்சுக்குவோம்…’ என்றார்கள். உங்க முகமே இல்லாம ஆசிரியரோட நான் எடுத்துகிட்ட படம்னு சொன்னா உங்க வீட்டுல நம்புவாங்களா..?’
என்றார். ‘இதை நாங்க யோசிக்கலை சார்…’ என்று இருவரும் அசட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். இருவரையும் விகடன் மாஸ்க்கை கையில் வைத்துக் கொள்ளச் சொல்லி மறுபடியும் போஸ் கொடுத்தார்.
டிரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்று உடைமாற்றிக் கொண்டு ஜிப்பா, வேட்டி அங்கவஸ்திரம் எல்லாவற்றையும் மடித்து கொண்டு வந்து கொடுத்தர்கள். ‘அது விகடன் தாத்தா உங்களுக்கு கொடுத்த பரிசு… எடுத்துக்கோங்க…’ என்று சொல்ல, இருவருக்கும் நெகிழ்ச்சி. இதையடுத்து என்னிடம் திரும்பிச் சொன்னதுதான் இன்னும் உச்சம்.
‘முருகேஷ்… அவங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு 350 ரூபாய்தானே சம்பளம்… அதில் நூறு ரூபாயை ஏஜெண்ட் கமிஷனா எடுத்துக்குவார். அதனால ஆளுக்கு ஐநூறு ரூபா கொடுத்துடுங்க…’ என்றார்.
இருவர் முகத்திலும் தெரிந்த சிரிப்பு எம்.டி.யால் மட்டுமே கொடுக்க முடிந்தது!
No comments:
Post a Comment