நடந்த
கதை ஒன்றைப் பற்றி பேசுவது என்று முடிவெடுத்துவிட்டதால் நடந்ததில் இருந்தே தொடங்குகிறேன். அன்று காலையில் வழக்கம்போல வாக்கிங் செல்லலாம் என்று புறப்பட்டேன். எப்போதுமே காலைக் கடன்களை முடித்து கடமையோடு டிராக் சூட், ஷூ எல்லாம் அணிந்துகொண்ட பிறகு பர்ஸில் இருந்து பத்து ரூபாய் எடுத்து பையில் வைத்துக் கொள்வேன். ஒருவேளை வாக்கிங் செல்லும்போது கிறுகிறுப்பு வந்துவிட்டால் ஒரு சோடா வாங்கவாவது பணம் வேண்டுமே என்றுதான் அந்த பத்து ரூபாய். இதுவரையில் சோடா வாங்கும் சூழல் வந்ததில்லை என்பதால் பத்து ரூபாய்க்கு சோடா கிடைக்குமா என்பது பற்றிகூட நான் யோசித்ததில்லை. டிராக் சூட் போல, ஷூ போல பத்து ரூபாய் என்பதும் வாக்கிங் வஸ்துகளில் ஒன்றாகிவிட்டது.
இப்போது
சம்பவ தினத்துக்கு வந்துவிடலாம்… முழுமையாகத் தயாராகி அந்த பத்து ரூபாயை எடுக்கலாம் என்று ஃப்ரிட்ஜின் மேல் இருந்த பர்ஸை எடுத்தபோது அதிகாலையில் இருக்கும் என் வயிற்றைப் போல கொஞ்சம் உள்வாங்கி இருந்தது. முந்தைய தினம்தான் ஏடிஎம்மில் இருந்து மூவாயிரம் ரூபாய் எடுத்திருந்தேன். மகனுக்கு செருப்பு வாங்க முந்நூறு ரூபாய் எடுக்கப் போனபோது தவறுதலாக ஒரு பூஜ்யத்தை அழுத்திவிட, அந்த மெஷின் மூவாயிரத்தைக் கொடுத்துவிட்டது. பையனுக்கு பிடித்த செருப்பு கிடைக்கவில்லை… அதனால் மூவாயிரமும் பர்ஸில் அப்படியே இருந்தது.
இருந்தது
என்று சொன்னால் நம்பமுடியாது என்னும் அளவுக்கு மெலிந்து போய் இருந்த பர்ஸைப் பார்த்தபோது பகீரென்று இருந்தது. ராத்திரி பர்ஸைப் பார்த்த மனைவி, இவ்ளோ பணத்தைத் தூக்கிட்டு அலையாதீங்க… யாராச்சும் தேடி வந்து கடன் கேட்பாங்க… நீங்களும் தூக்கி கொடுத்துருவீங்க… ஒழுங்கா என்கிட்டே கொடுத்திடுங்க என்று சொல்லியிருந்தாள். கடனாவது திரும்பக் கிடைக்க பத்து சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது என்று உதடு வரை வந்த வார்த்தைகளை மனைவி கொடுத்த தோசையைக் கொண்டே தொண்டைக்குள் துரத்தியிருந்தேன். கனவில் யாரேனும் கடன் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள் என்று பயந்தோ என்னவோ ராவோடு ராவாக எடுத்து வைத்துவிட்டாள் போலிருக்கிறதே என்று நினைத்தபடியே பர்ஸை எடுத்த இடத்தில் வைத்தேன். அப்போதுதான் கவனித்தேன்… பர்ஸ் பக்கத்திலேயே ஃப்ரிட்ஜ் மீது வைத்திருந்த மோதிரத்தையும் காணவில்லை.
தீபாவளிக்கு
என்ன போடுவீங்க என்று கேட்டபோது வடை, குலோப்ஜாமூன் எல்லாம் போடுவோம் என்று ஜோக் அடித்த மாமனாரை மிரட்டி வாங்கிய ரெண்டு பவுன் மோதிரம். என்னுடைய முதல் எழுத்தையும் மனைவியின் முதலெழுத்தையும் (ஆதாரமாம்!) தாங்கிய அந்த மோதிரத்தை இரவு நேரங்களில் கழற்றி வைத்துவிட்டு உறங்குவது என் பழக்கம். அது என்னவோ குடும்பப் பொறுப்புகளைக் கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டு நான் நானாகவே உறங்குவது போல ஒரு நிம்மதி!
ஃப்ரிட்ஜ்
மேலே முழுக்கத் தேடினேன். எங்கேயும் காணவில்லை. பக்கத்தில் எங்காவது விழுந்திருக்குமோ என்று சுற்றும் முற்றும் தேடினேன். அப்போதும் கிடைக்கவில்லை. இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் என் மனைவி வீட்டில் போட்ட மோதிரத்தோடு சேர்ந்து என் அம்மா போட்ட மோதிரமும் காணாமல் போயிருந்ததுதான். துக்கத்திலும் என் மனைவிக்கு சின்ன சந்தோஷம் கிடைக்கும் என்பதால் கொஞ்சம் ஆறுதலாக உணர்ந்தேன்.
ஆக,
ரெண்டு பவுன் ரெண்டு பவுன் என்ற கணக்கில் இரண்டு மோதிரங்கள், மூவாயிரம் ரூபாய் பணம் ஆகிய விஷயங்களைக் காணவில்லை. ஒருவேளை நான் இப்படி அலட்சியமாக வைத்திருப்பதைக் கண்ட என் மனைவி எல்லாவற்றையும் எடுத்து உள்ளே வைத்திருப்பாளோ என்று ஒருகணம் தோன்றியது. உறங்கிக் கொண்டிருக்கும் அவளை எழுப்பி குழப்ப வேண்டாம் என்ற முடிவோடு கடமையை ஆற்ற வாக்கிங் புறப்பட்டேன்.
பணம்
என்னாகியிருக்கும்…
பவுன் என்னாகியிருக்கும் என்ற குழப்பத்தோடு நடந்ததால் வாக்கிங்கில் கவனம் வைக்கமுடியவில்லை. மனைவி எடுத்து உள்ளே வைத்திருக்கலாம் என்ற சின்ன நம்பிக்கை இருந்தாலும் மனம் நாலா திசையிலும் அலைந்தது. கூடவே பத்து ரூபாய்கூட பையில் இல்லாமல் வந்துவிட்டோம்… மயக்கம் கியக்கம் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற படபடப்பு வேறு! சமாளித்து வாக்கிங்கை முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது, ‘என்னங்க… மொத்த காசையும் வாக்கிங் போறப்ப எடுத்துட்டுப் போயிட்டீங்களா என்ன… காய்கறிக்காரன்கிட்டே முளைக்கீரை வாங்கிட்டு பர்ஸைப் பார்த்தா காலியா இருந்துச்சு…’ என்ற மனைவியின் குரல் அடிவயிற்றைக் கலக்கியது. அப்போது அந்த மூவாயிரம் ப்ளஸ் நாலு பவுன் தங்கம்…? ஓடிப் போய் டாய்லெட்டுக்குள் புகுந்து மூச்சு வாங்கினேன்.
பவுன்
விலை என்னவாக இருக்கிறது… அதுவும் பங்குச் சந்தை பாதாளத்தில் விழுந்த தினத்தில் பவுன் விலை உச்சத்தில் இருக்கும் என்று பேப்பரில் போட்ட தினம் அன்று. அதனால், நான் தொலைத்த மோதிரத்தின் விலையும் உச்சத்தில்தான் இருக்கும். சில நிமிட ஆசுவாசத்துக்குப் பிறகு ஃப்ளெஷ்ஷை அழுத்த மனைவி வெளியே இருந்து, என்னங்க… லாரித் தண்ணி ஆயிரம் ரூபாய்… நீங்க பாட்டுக்கு அமுக்கி அமுக்கி செப்டிக் டேங்கை நிறைச்சுடாதீங்க… தங்கத்தைகூட வீணாக்கலாம்… தண்ணியை வீணாக்கக் கூடாதுங்கற மாதிரி இருக்கு நிலைமை… கொஞ்சமா புழங்குங்க..’ என்று குரல் கொடுக்க, அப்ப தங்கம் வீணாகிடுச்சுனு சொன்னா கோபப்பட மாட்டாளோ என்ற எண்ணத்தோடு வெளியே வந்தேன்.
‘வாக்கிங் போனதுல வயித்தைக் கலக்கிடுச்சு… அதுசரி, பர்ஸுல இருந்த பணத்தை எடுத்து பீரோ உள்ளே வெச்சுட்டேனு நினைச்சேன்… என்னைக் கேட்கிறே… அதோட மோதிரங்களையும் காணோம்…’ என்று கேஷுவலான குரலில் கேட்டேன். கையில் வைத்திருந்த காபியை அப்படியே தவற விட்டுவிட்டு ஓடி வந்தாள். அந்த ஒரு கிளாஸ் தண்ணீரை நீ வீணாக்கலாமா என்று கேட்கக் கூடிய நிலையில் நான் இல்லை என்பதால் அமைதியாக இருந்தேன்.
‘என்ன… எங்கப்பா போட்ட மோதிரத்தைத் தொலைச்சுட்டீங்களா…?’ என்றாள். ‘எங்க அம்மா போட்ட மோதிரத்தையும்தான்…’ என்று நான் சொன்னது அவள் காதில்… ஏன், அவள் காலில்கூட விழுந்த மாதிரி தெரியவில்லை. அந்த ஒரு பவுன் மோதிரத்துக்காக அவளுடைய அப்பா எப்படியெல்லாம் ரத்தம் சிந்தி உழைத்தார், எத்தனை நாள் ஓவர் டைம் பார்த்தார், எத்தனை சீட்டு கட்டினார் என்றெல்லாம் அளந்துவிட்டு, போதாக் குறைக்கு இந்தப் பயலுக்கு ஷூ வாங்க வெச்சிருந்த காசையும் தொலைச்சுட்டீங்களா… அவ்ளோ பணத்தை எதுக்கு வாக்கிங் போறப்ப எடுத்துட்டு போறீங்க..?’ என்று முடித்தாள்.
அது
வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் மீதுதான் இருந்தது என்று சொன்னதும், ‘ஹா… உங்க மோதிரத்தை எடுக்க திருடன் வீட்டுக்குள்ளயா வருவான்… நாம பெட்ரூமுல படுத்திருக்கறப்ப…’ என்று அலட்சியமாகச் சொல்லிக் கொண்டே ஃப்ரிட்ஜை நோக்கி போனாள். ஒரு தேர்ந்த போலீஸ் புலனாய்வு அதிகாரியின் நடையைப் போலிருந்தது அவளுடைய நடை.
ஃப்ரிட்ஜ்
அருகே இருந்த ஜன்னல் கொக்கி விடுபட்டிக்க, அந்தக் கதவு சும்மா சாத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒரு சீப்பை எடுத்து கதவை லேசாகத் திறந்து பார்த்தாள். (கைரேகையை அழிச்சுடக் கூடாதுல்ல!) பின்வீட்டில் இருந்து பால்கனி விளக்கு வெளிச்சம் என் வீட்டு ஃப்ரிட்ஜ் மீது தெளிவாக விழுந்தது.
‘ஆக, திருடன் இந்த ஜன்னல் கதவை லேசாத் திறந்து பார்த்திருக்கான்… நீங்க பப்பரப்பானு எல்லாத்தையும் ஃப்ரிட்ஜ் மேல வெச்சிருந்திருக்கீங்க… அவன் லட்டு மாதிரி அள்ளிகிட்டு போயிட்டான்… உங்க அஜாக்கிரதையால ஒரு பவுன் மோதிரம் போச்சு… மூவாயிரம் ரூபா பணம் போச்சு…’ என்றாள். அப்போதுகூட அவள் எங்கம்மா போட்ட மோதிரத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வதாக இல்லை.
‘வேணா போலீஸ்ல இரு கம்ப்ளைண்ட் குடுத்துப் பார்த்துடுவோமா..?’ என்றேன். அவளுடைய தீர்ப்பு என்பது கிட்டத்தட்ட ஜனாதிபதி கருணைமனு மாதிரி. அதற்கு மேல் அப்பீலுக்கு வழியேதும் இல்லை என்றாலும் சின்ன நப்பாசையோடு கேட்டேன்.
‘ஒரு பிரயோஜனமும் இல்லை… ஆனாலும் குடுத்துப் பாருங்க…’ என்றாள். கடகடவென்று குளித்து உடைமாற்றிக் கொண்டு வேகமாகப் புறப்பட்டேன். புகார் கொடுக்க வசதியாக கையோடு ஒரு வெள்ளைத் தாளும் வீட்டு விலாசத்துக்கான அடையாளமாக ரேஷன் கார்டையும் எடுத்து வைத்துக் கொண்டேன்.
இரவுப்
பணியில் இருந்த காவலர்கள் வீட்டுக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்க, பகல் பணிக்காக ஃப்ரெஷ்ஷாக காவலர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். மிகுந்த தயக்கத்தோடு காவல் நிலைய வாசலை அடைந்ததும் கண்ணெல்லாம் சிவந்து களைப்போடு வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த எஸ்.ஐ. என்னைப் பார்த்து சிவந்த கண்களால் என்ன என்பது போல சைகை செய்தார்.
வீட்டுல
நகை, பணம் திருட்டு போயிடுச்சு என்றேன். சொல்லும் நொடியில் நாளைக்கு தினசரி பேப்பரில் வாலிபர் (டை அடிக்கிறேன்) வீட்டில் நகை பணம் திருட்டு என்று செய்தி வருவதுபோல தோற்ற மயக்கம் தோன்றி மறைந்தது. உள்ளே போய்ச் சொல்லுங்க… என்று சொல்லிவிட்டு வண்டியை உதைத்தார். தயங்கித் தயங்கி உள்ளே நடந்தேன்.
என்ன
ஏதென்றுகூடக் கேட்காமல் உட்காருங்க என்றார் உள்ளே இருந்த எஸ்.ஐ. அந்த நேரத்தில் டீ கொண்டு வந்த பையன் ஒரு டீயை அவர் டேபிளில் வைக்க, ‘சாருக்கு ஒரு டீ குடு’ என்றார். பரவாயில்லை சார்… வீட்டுல சாப்டுட்டுதான் வந்தேன் என்றேன். எப்ப வேணாலும் கட் சொல்லி ஒன் மோர் சொல்வாங்களோ என்று சந்தேகம் எழும் அளவுக்கு சினிமா காட்சி போலவே இருந்தது.
இத்தனை
அன்பாக விசாரிக்கும் போலீஸ் ஸ்டேஷன் தமிழ்நாட்டில் இருக்கிறதா என்ன என்று ஆச்சரியமாக இருந்தது. தன் டீயைக் குடித்து முடித்துவிட்டு என்ன விஷயம் என்று அந்த எஸ்.ஐ கேட்க, தலைசுத்தல் வந்தா சோடா வாங்கறதுக்கு பத்து ரூபாய் எடுத்துக் கொண்டு வாக்கிங் செல்லும் பழக்கத்தில் தொடங்கி எல்லா விஷயத்தையும் கோர்வையாகச் சொல்லி முடித்தேன்.
‘அடடா… என்ன சார்… கவனமா இருக்க வேணாமா… இதுக்குதான் நாங்க ஜன்னல் ஓரமா வேல்யூயபிள் திங்ஸை வைக்காதீங்கனு சொல்லிகிட்டே இருக்கோம். ஒரு புகார் எழுதிக் கொடுங்க… விசாரிச்சுடுவோம்… எந்த ஏரியா என்றார். ஏரியாவைச் சொன்னதும், அடடா… அது கிருஷ்ணா நகர் போலீஸ் லிமிட்ல வரும்… நீங்க அங்கேதான் புகார் கொடுக்கணும்…’ என்றார். அப்போது ரோந்து புறப்பட்ட இரு காவலர்கள் எஸ்.ஐ. யிடம் பை சொல்லிவிட்டுப் போவற்காக உள்ளே வந்தார்கள்.
‘சார் வீட்டுல நகை பணம் மிஸ்ஸிங்… ஆனா, சார் வீடு நம்ம லிமிட்ல இல்லை. கிருஷ்ணா நகர் ஸ்டேஷன் லிமிட்… அதான் அங்கே போகச் சொல்லியிருக்கேன்…’ என்றார். அந்த இருவரும் எந்தத் தெரு என்று விசாரித்தார்கள். என் விலாசத்தைச் சொன்னதும், ‘அடடா… முந்தின தெரு வரைக்கும் நம்ம லிமிட்… உங்க தெருவிலே இருந்து கிருஷ்ணா நகர் லிமிட்… அங்கே போய்ப் பாருங்க… என்று என்னிடம் சொல்லிவிட்டு, நாங்க ரவுண்ட்ஸ் போயிட்டு வர்றோம் சார்… என்று விறைப்பாக சல்யூட் அடித்துவிட்டு புறப்பட்டார்கள்.
இத்தனை
அன்பான ஆட்களை ஒருசேர ஒரு போலீஸ் ஸ்டேஷனில் பார்த்தபோது அவர்கள் லிமிட்டில் வீடு எடுத்து நகை பணத்தைத் தொலைத்திருக்கலாமோ என்று தோன்றியது. சின்ன மன வருத்தத்தோடு கிருஷ்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன்.
என்ன
ஆச்சரியம்…
அங்கே இருந்தவர்கள் எல்லாம் டிரான்ஸ்பரில் இங்கே வந்துவிட்டார்களோ என்று நினைக்கும் வகையில் கிருஷ்ணா நகர் ஸ்டேஷனிலும் அதே அன்பு வழிந்து ஓடியது. ச்சே… அந்த ஸ்டேஷன் லிமிட்டில் தொலைத்திருக்கலாமோ என்று நினைத்தது எத்தனை பிசகு என்று ஒருகணம் என்னை நானே நாணினேன்.
உங்க
விலாசத்தைச் சொல்லுங்க… ரவுண்ட்ஸ் போன கான்ஸ்டபிள்ஸ்கிட்டே சொல்லிடலாம் என்று எஸ்.ஐ கேட்க, கடகடவென்று விலாசத்தைச் சொன்னேன். உடனே அவர் அதை மைக்கில் அறிவித்தார். ஒருகணம் தமிழ்நாட்டின் மொத்த போலீஸ் நெட்வொர்க்கும் இந்த விலாசத்தைக் கேட்டு என் வீட்டு முன் குவிந்து விடுவது போல… அதேதான்… தோற்ற மயக்கம்தான்!
உங்க
போன் நம்பர் குடுத்துட்டுப் போங்க… புடிச்சுடலாம்… உழைச்சு சம்பாதிக்கற காசு வீண்போகாது என்றார். அதுவே மனதுக்கு நிறைவாக இருந்தது. வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது மனைவியின் அழைப்பு. செல்போனை எடுத்து என்ன என்றேன். நம்ம வீட்டுக்கு விசாரணைக்கு போலீஸ் வந்திருக்காங்க… என்றாள். வண்டியின் வேகத்தை அதிகமாக்கி வீடு வந்து சேர்ந்தேன்.
காலையில்
நான் பார்த்த அந்த ஸ்டேஷன் போலீஸார் இருவரும் மனைவியிடம் விசாரணை செய்தபடி சம்பவ இடத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில் கிருஷ்ணாநகர் போலீஸாரும் வயர்லெஸ் மைக்கில் தகவல் கிடைத்து வந்துவிட்டார்கள். இவர்களும் தங்கள் பங்குக்கு சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்கள். பிறகு நால்வரும் கூடிப் பேசினார்கள். கோணி வைத்துக் கொண்டு குப்பை பொறுக்குபவர்கள், ஜோசியம், குறி சொல்கிறேன் என்று சுற்றுபவர்கள், எலி பிடிக்க, காக்கா பிடிக்க வரும் குறவர் கூட்டம் இப்படி யாரேனும்தான் பணத்தை எடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று தங்கள் பேச்சின் முடிவில் தீர்மானம் எடுத்துவிட்டு ஆளுக்கொரு திசையில் கலைந்து சென்றார்கள். எனக்கென்னவோ, இந்த வழக்கை விசாரிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக… அதே… அதே… தோற்ற மயக்கம் ஏற்பட்டது!
ஒரு
குடிமகனுக்குக்
கிடைத்த மரியாதையை எண்ணி நான் பிரமித்திருந்த நேரத்தில் ஒரே நேரத்தில் இரண்டு ஸ்டேஷன்களில் இருந்தும் விசாரணைக்கு வந்ததில் என் மனைவிக்கு என் மேல் தனி மரியாதை ஏற்பட்டுவிட்டது. சட்னி எல்லாம் அரைத்து தோசை சுட்டுக் கொடுத்தாள்.
அடுத்த
சில தினங்களில் கிருஷ்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் என்னைத் தெரியாதவர்களே இல்லை என்னும் அளவுக்கு அவர்களோடு நெருக்கமாகி விட்டேன். குப்பை பொறுக்குபவர்கள் என நாலைந்து பேரை அழைத்து வந்திருந்தார்கள். ‘சார்… இவங்கள்ல யாராச்சும் உங்க தெரு பக்கமா சுத்தினாங்களா… அடையாளம் தெரியுதா..?’ என்றார்கள். அடுத்து இதேபோல குறவர்கள், குறி சொல்பவர்கள், புளி விற்பவர்கள், புளிச்ச கீரை விற்பவர்கள் என்று பலரையும் அழைத்து வந்து காட்டினார்கள். ஆனால், என்னால் யாரையும் உறுதியாக அடையாளம் காட்ட முடியவில்லை.
எனக்கே
கொஞ்சம் சலிப்புத் தட்டி விட்டது. சார்… ஏதாச்சும் கண்டுபுடிச்சாச் சொல்லுங்க… எனக்கு ஆபீஸ்ல பர்மிஷன் கிடைக்க மாட்டேங்குது…’ என்றேன். இந்த நல்லுறவுக்கு விலையாக அந்த பணம், நகையெல்லாம் இருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
அடுத்தநாள்
காலையில் நான் வாக்கிங் சென்றுவிட்டு திரும்பும்போது தினசரி ரோந்து செல்லும் இரு காவலர்களும் எதிரில் வந்தார்கள். ‘என்ன சார்… மாமூல் வாழ்க்கைக்கு வந்துட்டீங்க போல இருக்கு…’ என்றார்கள். ஆமாம் சார்… அது கிடைக்கறப்ப கிடைக்கட்டும்’ என்றேன். ஒரு விஷயம் உங்ககிட்டே சொல்லணும், சொல்லணும்னு நினைச்சுகிட்டே இருந்தோம். ஆனா, நம்ம எஸ்.ஐ உங்க கேஸை ஸ்பெஷலா கவனிச்சதால சொல்ல முடியலை. ஆனாலும் உங்க அலைச்சலைப் பார்க்கிறப்ப பாவமா இருந்துச்சு… அதான் வெளில மீட் பண்றப்ப சொல்லலாம்னு இருந்தோம். இன்னிக்கு சொல்லிடுறோம்… உங்க அலைச்சல் எல்லாமே வீண் தான்… திருட்டு பொருள் கிடைக்க வாய்ப்பே இல்லை’ என்று பலமான பீடிகையோடு தொடங்கினார்கள்.
‘சார்… பொதுவா பணம் காணாமப் போனா கிடைக்காது. ஏன்னா, உடனே செலவழிச்சுருவாங்க… நகைன்னா புடிக்க வாய்ப்பிருக்கு. அதையும் இப்ப என்ன பண்ணிடுதாங்கன்னா அடிச்ச அடுத்த நாளே உருக்கிடுறாங்க… அதனால நம்ம பொருள் இதுனு சொல்லமுடியாம ஆகிடுது… இப்பகூட பாருங்க… போன வாரம் ஒரு களவாணியப் புடிச்சோம்… கொஞ்சம் உருக்குன தங்கத்தை வெச்சிருந்தான். ஆனா, யாரு நகை எதுனு தெரியாம எப்படி ரிட்டர்ன் பண்றதுனு அவனை ரிமாண்ட் பண்ணுனதோட கேஸை முடிச்சுட்டோம்…’ என்று ஒருவர் சொல்ல, அடுத்தவர் தொடர்ந்தார்.
‘இப்ப உங்கள மாதிரி ஆட்கள் கரெக்டா ரெண்டு பவுன்னு புகார் கொடுத்திருக்கீங்க… ஆனா, அந்தப் பய உருக்கி வெச்சிருக்கற தங்கத்தைப் பார்த்தா ஒண்ணு, ஒண்ணரை பவுன் இருக்கும்… அடையாளம் தெரியாததால குடுக்க முடியலை… பாருங்க… புகார் குடுத்த ஆளு இருக்கீங்க… உங்க நகை கிடைக்கலை… நகை கிடைக்குது… ஆனா, அதைத் தொலைச்ச ஆளு யாருனு தெரியலை… எங்க பொழப்பு தேடித் தேடியே ஓய்ஞ்சு போயிரும் போல…’ என்றார் சலிப்போடு.
‘சார்… இப்படிச் செய்தா என்ன… நான் ரெண்டு பவுன் நகையை வாங்கிகிட்டதாச் சொல்லிடுறேன்… அந்த ஒன்றரைப் பவுனை எனக்கு கொடுத்திருங்க… வேணா அரைப் பவுன் காசை உங்களுக்கு கொடுத்துடுறேன்… கிடைச்ச வரை லாபம்தானே…!’ என்றேன்.
மூவரும்
டீ குடிக்கச் சென்றோம்.
குங்குமம் 17 மார்ச் 2017
No comments:
Post a Comment