நான் சென்னையில் வீடு வாங்கலாம் என்று முடிவெடுத்து கோடம்பாக்கத்தில் ஒரு அபார்ட்மெண்டில் முதல் மாடியில் ஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்டையும் பார்த்து முடிவு செய்துவிட்டு, அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு போனேன். அவர்களுக்குப் பிடித்திருந்தால் அட்வான்ஸ் கொடுத்துவிடலாம் என்பது திட்டம்.
கதவைத் திறந்த நொடியில் அப்பா சொன்னார்… இதையா வீடுனு
சொல்லி கூட்டிட்டு வந்தே..? இந்த தரை… கீழ்வீட்டுக்காரனோட கூரை, கூரை… மேல் வீட்டுக்காரனோட
தரை, இந்தச் சொவரு அந்த வீட்டுக்காரனோடது, அந்தச் செவரு இந்த வீட்டுக்காரனோடது, ஒரு
பூட்டையும் சாவியையும் வாங்கி இந்தக் கதவைப் பூட்டிட்டா அது உன் வீடு… அதுசரி… உனக்கு
பயன்படும்னா வாங்கிக்கோ..!’ என்றார் அப்பா. அந்த வீட்டுக்கே நான் வங்கிக்காரனோடு பதினைந்து
வருட கடன் ஒப்பந்தம் போட்டிருந்தேன்.
அப்பாவின் கேள்விக்குக் காரணம் கிராமத்தில் இருக்கும்
அவருடைய வீடு! அந்த வீட்டின் முன் வாசலில் நின்று பார்த்தால் பின்வாசலில் நிற்பவர்
மங்கலான புள்ளியாகத் தெரிவார். வாசலில் ஏதோ சத்தம் கேட்டால் அடுக்களையில் இருந்து மூன்று
கட்டுகள் தாண்டி வந்தால்தான் முற்றத்தில் நிற்கும் ஆள் யார் என்று முகம் பிடிபடும்!
அப்பாவின் தாத்தா காலத்தில் சிறு வீடாகத்தான் இருந்தது.
சொல்லப் போனால் அப்பாவின் தாத்தாவும் ஆச்சியும் கொத்தனாரும் சித்தாளுமாக நின்று சேர்ந்து
கட்டிய வீடு அது. உழைப்பின் வாசம் அந்த வீட்டில் அடிக்கும். அந்த வீட்டில்தான் என்
பெரிய தாத்தா, சின்னத் தாத்தா தொடங்கி பல பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள் அந்த பெரிய ஆச்சி!
என் தந்தை கல்யாணம் கூட அந்த வீட்டு வாசலில் உள்ள முற்றத்தில் யானைப் பந்தல் போடப்பட்டுதான்
நடந்திருக்கிறது. நான் பிறந்து மண்ணைச் சுரண்டித் தின்று வளர்ந்த வீடு அது. அந்த வீட்டின்
ஆயுள் முடிந்ததை அடுத்து அப்பா அதை இடித்துக் கட்டினார். அப்பா காலத்தில் இரண்டு தவணையாக
கட்டப்பட்ட வீடு அது!
இப்போது இருக்கும் அமைப்பில் எங்கள் வீட்டைப் பற்றிச்
சொல்கிறேன்.
வாசலில் ஒரு கேட்… அதைத் திறந்தால் ஒரு வெளிமுற்றம்…
போர்ட்டிகோ… அடுத்து சின்னஞ்சிறு சிட் அவுட்… அதில் இருந்து உள்ளே நுழைந்தால் புது
பட்டால… அதிலேயே படி அமைத்து மாடிக்குச் செல்லும் வழி! அதைத் தாண்டினால் பழைய பட்டால,
அடுத்து ரெண்டாம் பத்தி… அதன் ஒருபகுதியை இரண்டாகப் பிரித்து நெற்குதில்… அரங்கு வீடு
எனப்படும் ஸ்டோர் ரூம், அதற்கு அடுத்து அடுக்களை… அரங்குவீட்டின் வாசல் அடுக்களையைப்
பார்த்து இருக்கும். அதற்கு அடுத்து சாய்ப்பு… அதன் ஒருபகுதியில் பாத்ரூம்… அதில் இருந்து
இறங்கினால் திறந்த வானவெளி… அடுத்து நீண்ட மாட்டுத் தொழுவம், கடைசியில் இரண்டு கக்கூஸ்!
இரண்டு முறை கேட்டுக்கும் கக்கூஸுக்கும் நடந்தால் பசிக்கும்!
அகலம் குறைவான வீடென்பதால் சைடு ரூமுக்கெல்லாம் வழியில்லை.
இப்போதாவது மாடியிருக்கிறது, மாடியில் ஒரு முன்னறையும் அறையும் இருக்கிறது. ஆனால்,
இந்த வீடு இடித்துக்கட்டப்படுவதற்கு முன்பு அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
அந்த வீட்டின் வடிவத்தையும் சொல்கிறேன்.
வாசலில் இருந்து நுழைந்தால் நடைகூடம்… உள்ளே வந்தால்
முற்றம்… நடைகூடம் போக மீதியிருக்கும் இடத்தில் ஒரு அறை… முற்றத்தைத் தாண்டினால் ஒரு
திண்ணை, அடுத்து ஒரு பட்டாலை, அடுத்து இரண்டாம் பத்தி, அதில் வலதுபக்கம் மறைத்து நெற்குதில்,
அதைத் தாண்டி படியிறங்கினால் வானவெளி, அதில் ஒருபக்கம் திறந்த பாத்ரூம், இன்னொருபக்கம்
தண்ணீர் தொட்டி, அடுத்து அடுக்களை, அதன் மூலையில் ஒரு அங்கணக் குழி! திறந்து பின்பக்கம்
இறங்கினால் ஒரு பழைய தொழுவம், பசு மாடுகளைக் கட்ட, பின்னால் இன்னொரு புது தொழுவம்,
எருமைகளையும் காளைகளையும் கட்ட.. அதைத் தாண்டிப் போனால் ஒரு எருக்குழி!
காலைக்கடன்களுக்கெல்லாம் ஊருக்குக் கிழக்கே இருக்கும்
குளம்தான்! அதன்பிறகு நீண்டகாலத்துக்குப் பிறகு எருக்குழியை ஒட்டி ஒரு நெரசல் கட்டப்பட்டது.
கூரை வைத்து மறைக்கப்பட்ட தடுப்பு கொண்ட எடுப்பு கக்கூஸ்தான் அந்த நெரசல்! அதுவே எங்கள்
ஊரில் ஆடம்பரம்!
ஒருகட்டத்தில் இந்த அடுக்களை இடிந்துவிடும் சூழல் வந்தவுடன்
திண்ணையையும் பட்டாலையையும் வைத்துக் கொண்டு மீதி எல்லாவற்றையும் இடித்து கட்டினார்
அப்பா. அதன்பிறகு சிலகாலம் கழித்து முன்பக்கம் உள்ள பகுதியையும் இடித்துக் கட்ட மொத்த
வீடும் புதிதானது. அந்தப் புதிய வீட்டுக்கே வயது இருபத்தைந்துக்கு மேலாகிறது.
நாங்கள் படுக்கும் அறையைப் போலவே புதிய வீட்டிலும்
மாறாமல் இருப்பது மாட்டுத் தொழுவம். அப்பாவுக்கு அரசாங்க வேலை என்றாலும் தன்னை விவசாயத்துக்கும்
பகிர்ந்து கொடுத்திருந்தார். அதனால், பசுவும் கன்றுமாக பால்மாடு நிற்கும். சொசைட்டிக்கு
கறந்து கொடுக்க எருமையும் நிற்கும். வயல் வேலைகளுக்கு, வண்டி இழுக்க காளைமாடுகளும்
உண்டு.
நிலங்களை எல்லாம் குத்தகைக்குக் கொடுத்துவிட்ட காலத்தில்
அடிகுழாயில் மாடு குளிப்பாட்டக் கூடிய சூழலும் வந்த நேரத்தில் தொழுவம் என்பது துணி
காயப்போடும் இடமாகி விட்டது.
பழைய வீட்டை இடித்துக் கட்டியதில் நான் இழந்த முக்கியமான
அம்சம் வெளிவாசலில் இருபக்கமும் இருந்த மாப்பிள்ளைத் திண்ணைதான். எல்லா வீட்டு வாசல்களிலும்
இரண்டு பக்கமும் இரண்டு திண்ணைகள் இருக்கும். கல்லா மண்ணா விளையாட்டு தொடங்கி கதை பேசும்
காலம் வரையில் அந்தத் திண்ணை எங்களுக்கு சிம்மாசனம்! மணிக்கணக்கில் உட்கார்ந்து அரட்டை
அடிப்போம்.
அப்போதெல்லாம் முன் வாசல் திண்ணை தூணில் ஆட்டுக் குட்டி
கட்டிக் கிடக்கும்… முற்றத்தில் கோழிகள் மேயும். அவற்றுக்கென்று தனியான வீடு போல கோழிக்கூடு
இருக்கும். நாயும் பூனையும் ஒரே தட்டில் பால் குடிக்கும் என்று முழு சம்சாரி வீடாக
இருந்தது எங்கள் வீடு.
இப்படி பத்தி பத்தியாக இருந்தால் குடித்தனம் நடத்துவது
எப்படி, பிள்ளை பெற்றுக் கொள்வது எப்படி என்ற கேள்வி வருமா இல்லையா..? எங்கள் ஊரில்
யாருக்கும் அந்தக் கேள்வி வந்ததில்லை. ஏனென்றால் எல்லா வீடுகளுமே அப்படித்தான் இருக்கும்,
அதில் வாழ்ந்துதான் வம்சத்தை விருத்தி செய்து கொண்டிருந்தது எங்கள் சமூகம். ஆனால்,
எங்கள் ஊருக்கு பேண்ட் போட்டுக் கொண்டு வந்த சென்னைப் பெண்ணுக்கு இந்த சந்தேகம் வந்தது
சுவாரஸ்யமான ஒரு கிளைக்கதை!
எங்கள் பகுதியில் இருக்கும் குற்றாலம் பராசக்தி மகளிர்
கல்லூரிக்கு என்.எஸ்.எஸ் கேம்ப் வந்திருந்தனர் கல்லூரிப் பெண்கள். அவர்களில் சென்னையில்
இருந்து வந்திருந்த கல்லூரிப் பெண்கள் கொண்ட ஒரு டீம் வில்லேஜ் விசிட் என்ற பெயரில்
எங்கள் ஊருக்குள் வந்தது. எங்கள் தெருவில் வந்த அந்தப் பெண்கள் எங்கள் வீட்டுக்குள்
நுழைந்தார்கள். வீட்டை மொத்தமாகச் சுற்றியவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.
என்ன என்று கேட்டபோது ஒன்றுமில்லை என்று வெட்கச் சிரிப்புச் சிரித்தார்கள். பிறகு சம்பந்தம்
இல்லாமல் உங்க அப்பா கூடப் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்றார்கள். அது ஏழெட்டு பேர்
இருக்கும்… ஆனா, அப்பா மட்டுமே உயிரோடு இருக்கிறார் என்றேன். ஏழெட்டு பேரா… இந்த வீட்டிலேயா…
எப்படி என்றார்கள் ஆச்சரியமாக!
அப்போது அவர்களில் ஒருத்தி கண்களில் பட்டது எங்கள்
வீட்டு பட்டாலையில் இருந்த ஏணி. இது என்ன..? என்றாள். இது மச்சுக்குப் போற வழி என்றேன்.
மச்சு என்றால்..? என்றாள். வாங்க என்று அழைத்துக் கொண்டு படியேறினேன். மேலே பழைய பொருட்களைப்
போட்டு வைக்கவும் தானியங்களைக் கொட்டி வைக்கவும் இடம் இருக்கும். கூடவே எங்கள் வீட்டில்
கன்னிக்கு கும்பிடும் சேலையை வைத்திருக்கும் பெட்டியும் இருக்கும். அதையெல்லாம் நான்
சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் அதையெல்லாம் கவனித்ததாகவே தெரியவில்லை. முகம்
சிவக்க ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டே இருந்தார்கள். என்ன என்று கேட்டபோது
சொன்னார்கள், திஸ் இஸ் த பிளேஸ், ஃபார் தட் ப்ரைவசி..!
No comments:
Post a Comment