Monday, February 28, 2011

நானும் விகடனும்!

நண்பர் அரவிந்தனுக்கு முதல் நன்றி. அவர்தான் நான் பேசும்போதெல்லாம் இதை எழுதுங்க பாபு... நல்ல விஷயங்கள் சொல்றீங்க... இதெல்லாம் உங்க அனுபவமா மட்டும் இல்லாமல் பத்திரிகையாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அடிக்கடி சொல்லிச் சொல்லி என்னை எழுதத் தூண்டினார்.

விகடன் 85-ம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதிலேயே நானும் விகடனும் என்ற பிரபலங்களின் அனுபவப் பகிர்வு இடம்பெற்றிருக்கிறது. ஆனால், இது அந்த டைப் நானும் விகடனும் அல்ல..! விகடன் எனக்குக் கற்றுக் கொடுத்த விஷயங்களைச் சொல்லலாம் என்ற யோசனையோடுதான் எழுதத் தொடங்குகிறேன்.

என்னை பத்திரிகையாளனாக ஆக்கியது விகடன். என்ஜினியரிங் படித்த என் அண்ணன் என்ஜினியராகிவிட்டார். ஆனால் டிகிரி படித்த நான் என்னவாகப் போகிறேன் என்ற பயம் என் பெற்றோரிடம் இருந்துகொண்டேதான் இருந்தது. ஆனால், என் அண்ணனுக்கு முன்னால் என்னை சம்பாதிக்க வைத்தது விகடன். மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோதே விகடன் ஊழியராகிவிட்டேன்.

அடடே... கொஞ்சம் உபசார வாசனை அடிக்கிறதே... சரி, ரூட்டை மாத்திடலாம்!

உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்து கொண்டிருந்த நேரம்... அனேகமாக 96 போட்டி என்று நினைவு. விகடனில் கிரிக்கெட் தொடர்பாக ஒரு போட்டி வைத்திருந்தோம். அதாவது கோப்பையை வெல்லப் போகும் அணி, அரையிறுதிக்கு வரும் நான்கு அணிகள், வேகமாக 50 அடிக்கும் வீரர், 100 அடிக்கும் வீரர் அதிக விக்கெட்டுகள் எடுக்கப் போகும் பவுலர் என்று பல கேள்விகளோடு இருந்தது அந்தப் போட்டி.

இறுதிப் போட்டி ஞாயிறன்று நடப்பதாக இருந்தது. அந்தப் போட்டியின் முடிவில் விகடன் கேள்வித்தாளில் இருந்த அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும். ஆனால், அதைப் பற்றி எதுவுமே விகடனில் எழுத முடியாது. ஏனென்றால், விகடன் இதழ் முடிக்கும் நாள் சனிக்கிழமை. எப்படி இந்த இக்கட்டை சமாளிப்பது என்ற கேள்வியோடு எடிட்டோரியல் மீட்டிங் நீண்டநேரமாக நடந்து கொண்டிருந்தது.

ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்ல, அணியின் கடைக்குட்டியான நான் கையை உயர்த்தினேன். எம்.டி. (பாலசுப்பிரமணியன் சார்) என்ன என்பது போல பார்த்தார். மெதுவாக எழுந்து சார், நாம இஷ்யூவை ஞாயிற்றுக்கிழமை முடிச்சா என்ன..?’ என்றேன். ஒட்டுமொத்த எடிட்டோரியல் அணியும் அதிர்ந்து போனது. சனிக்கிழமை இரவு இதழ் அச்சுக்குப் போனால்தான் ஞாயிறன்று பிரிண்ட் ஆகி, திங்களன்று கடைகளுக்குச் செல்லும். அதையே காலி செய்வது போல ஐடியா கொடுக்கிறானே... அடிப்படையே தெரியாமல்! என்பதுபோல எல்லோரும் என்னைப் பார்க்க, எம்.டி. கொஞ்சநேரம் கண்களை மூடி யோசித்தார். பிறகு, ‘சொல்லுங்க பாபு... ஞாயிற்றுக் கிழமை இரவு 11.30 மணிக்கு இறுதிப் போட்டி முடியும். அதன் பிறகு என்ன செய்யமுடியும் என்றார்.

நானோ உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு, ‘கேள்விகளுக்கான சரியான பதிலை மட்டும் முதல் பக்கத்தில் போட்டுடலாம். இந்த பதில்களை எழுதிய வெற்றியாளர் விவரம் அடுத்த இதழில்னு போடலாம் சார். உலகக் கோப்பை போட்டியை கவர் பண்ணின மாதிரி ஆகிடும் என்றேன். மீண்டும் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தார் எம்.டி. அடுத்து போனை எடுத்து ஜே.எம்.டி-யை அழைத்தார்.

இதழை ஞாயிறன்று முடித்தால் என்ன என்ற கேள்வியோடு அவரை உசுப்ப, பேப்பர் பேப்பராக கணக்குப் போட்டுப் பார்த்த ஜே.எம்.டி. கடைசியாக ஒரு தொகையைச் சொன்னார். அதாவது, சனியன்று இரவு ஷிப்ட், ஞாயிறு பகல் ஷிப்ட் ஊழியர்களுக்கு வேலை இல்லை. ஞாயிறு இரவு ஷிப்ட் ஊழியர்கள் தவிர இன்னும் கொஞ்ச பேர் ஓவர் டைம் செய்ய வேண்டும் என்றெல்லாம் கணக்குப் போட்டுச் சொன்னார். மீண்டும் எம்.டி. சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். பிறகு ஓகே... அப்படியே செய்துடலாம்’ என்று சொன்னார்.

ஒப்பந்தப்படி நான் ஞாயிறன்று அலுவலகத்தில் உட்கார்ந்து போட்டியைப் பார்த்தேன். இதழ் நிர்வாக ஆசிரியர் வீயெஸ்வீ சார் அவருடைய வீட்டில் மேட்ச் பார்த்தார். எம்.டி. அவர் வீட்டில்! போட்டி முடிந்ததும் மூவரும் அந்த கூப்பனை நிரப்பினோம். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் போனில் பேசி சரியான பதில்களை உறுதி செய்து கொண்டோம். 12.00 மணிக்கு அச்சகத்து இயந்திரங்கள் ஓடத் தொடங்கின. முதல் செட் புத்தகம் ரெடியானதும் வழக்கம் போல திங்களன்று காலையில் சென்னை கடைகளுக்கு விற்பனைக்குச் சென்றது. வாசகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

செவ்வாயன்று மீண்டும் எடிட்டோரியல் மீட்டிங். கையில் ஒரு கட்டு கடிதங்களோடு வந்தார் எம்.டி. வரும்போதே ஜே.எம்.டி-யையும் வரச் சொல்லியிருந்தார். அவர் கொண்டு வந்திருந்த கடிதங்கள் அத்தனையும் உலகக் கோப்பை பற்றிய உடனடி ரியாக்‌ஷனுக்குக் கிடைத்த பாராட்டுகள். பணக் கணக்கு, ஓவர் டைம் கணக்கைவிட இது பெரிய விஷயம் என்றார். என்னைப் பாராட்டும்விதமாக பணமுடிப்பு கொடுத்தார்.

இப்படித்தான்... எந்த சபையாக இருந்தாலும் உனக்குத் தோன்றும் கருத்தை தைரியமாக முன் வைக்க வேண்டும், அதற்கான முழு திட்டமும் உன்னிடம் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் என்னைப் பாராட்டவில்லை. ஆனால், அதை என்னை உணரச் செய்தார். அதுதான் விகடனின் வெற்றி! இன்று அது என் குணமாகவே மாறியிருக்கிறது.

விகடனுக்கு நன்றி!