Monday, May 9, 2022

எவர் பொருட்டு..?!

 மதுரை ரயில் நிலையத்தின் உள்ளே நுழையும்போது வெக்கை தாளாமல் உடலில் வியர்த்துக் கொட்டியது. கண் எதிரே செங்கோட்டை லோக்கல் நிற்பதைப் பார்த்ததும் சின்ன ஆறுதல் வந்தது. டிக்கெட் கவுண்டரில் கூட்டம் குவிந்திருக்க பதினேழாவதாகவோ இருபத்து மூன்றாவதாகவோ போய் வரிசையில் நின்றேன். அனிச்சையாக என் கண் மொபைலைப் பார்த்தது.

‘இன்னும் அரைமணி நேரம் இருக்கு ரயில எடுக்க… அதுக்குள்ள டிக்கெட் வாங்கிரலாம்…’ என்றார் எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பாட்டையா. இது அவர் எனக்கு சொன்ன சமாதானமா இல்லை அவருக்கே சொல்லிக் கொண்டதா என்று தெரியவில்லை.

என்னிடம் இருந்த போனை கொஞ்சம் விநோதமாகப் பார்த்தார். ‘இது போனா..?’ என்றார்.

‘ஆமா பாட்டையா… இங்கன நிக்கயிலயே யார்ட்டனாலும் பேசலாம்… வீட்டுல இருக்கும்லா கறுப்பு கலர்ல… அது கணக்கா…’ என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ‘அப்படி போடு போடு…’ என்று ரிங் டோன் ஒலித்தது. பாட்டையா பக்காப்படிக்கு முக்காப்படி கொள்ளும் சட்டைப் பைக்குள் கையை விட்டுத் துழாவி ஒரு மொபைலை எடுத்தார். என்னைப் பார்த்துக் கொண்டே அதன் பச்சை பட்டனை அழுத்தினார்.

‘என்னட்டி… இடம் கிடச்சுட்டா… துண்டப் போட்டு இடம் புடிச்சுக்கோ… இன்னொரு ஆளுக்கும் இடம் புடிக்கணும்… நல்லா சாஞ்சு இரு… வேணும்னா படுத்துக்கோ… சரி… வச்சுருதேன்…’ போனை கையில் எடுத்து பார்த்துவிட்டு சிவப்பு பட்டனை அழுத்திவிட்டு மறுபடியும் பைக்குள் போட்டுக் கொண்டார்.

‘தெங்காசி வரைக்கும் நட்டாமாவே நிக்க முடியுமா… ஆமா… தெங்காசிதான போறிய… நாங்க சங்கரங்கோயில்… ஆளான்னா கூட நின்னுரலாம்… எஸ்டேட்ல இல பறிக்கவோ மாரி முதுகுல மூட்டை சொம வெச்சிருக்கிய… அதான் கிழவிட்ட சொல்லி உங்களுக்கும் இடம் போடச் சொன்னேன்…’ பேசிக் கொண்டே முன்னால் நகர்ந்தார் பாட்டையா.

ஒருபக்கம் வரிசை நகர்ந்து கொண்டிருக்க இன்னொருபக்கம் கண்ணெதிரே ரயில் ஆட்களால் நிரம்பிக் கொண்டிருந்தது. பாட்டையா என்னைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கவுண்டர் வரை இழுத்துச் சென்றார். அவர் கையில் இருந்த குடை வெயிலுக்காகவா இல்லை மழைக்காகவா என்று யோசித்துக் கொண்டே நான் முன்னகர அது அவருக்கு நடைக்கு உதவும் குச்சி என்பது நகர்தலில் தெரிந்தது.

இருவரும் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு பிளாட்பாரத்தினுள் நுழைந்தோம். பாட்டையா  மிக சுவாதீனமாக பைக்குள் இருந்து மொபைல் போனை எடுத்து ஐந்து என்ற எண்ணை அழுத்தி காதில் போனை வைத்தார். சில நொடிகளுக்குப் பின் எதிர்முனை எடுக்கப்பட கத்தி பேசத் தொடங்கினார்.

‘ஏட்டி… டிக்கெட் எடுத்துட்டேன்… எங்கன இருக்க…?’

பாட்டையா காதுகளைத் தாண்டி ஆச்சியின் குரல் கேட்டது.

‘ரயில்லதாம்பா இருக்கேன்…’

‘கண்டார ஓழி… நல்லா வந்திரும் வாயில… ரயில்ல இருக்காம வேற எங்கன இருப்ப… எந்தப் பெட்டில இருக்கனு சொல்லுட்டி…’

’அதா… இந்தா… சந்திப்புனு போட்ருக்கும்லா… அதுக்கு எதுத்தாப்ல…’

‘சவத்து மூதி… உன்ன மாரி ஒரு ஒண்ணுக்குமத்தவள கொண்டாந்து எந்தலைல கட்டுனானே எங்க மாமன்… அவனச் சொல்லணும்… இந்த டேசன் முழுக்க சந்திப்புனுதாம்டி போட்ருக்கும்… எங்கன இருக்க..?’

அவர் குரல் பதற்றமாகிவிட நான் சற்று எட்டிப் பார்த்தேன்… தூரத்தில் மஞ்சள் மின்னும் போர்டில் மதுரை சந்திப்பு என்ற எழுத்துகள் கண்ணில் பட்டன.

‘பாட்டையா… அந்த போர்டு கிட்ட போய்ப் பாப்போம்…’ பாட்டையாவால் வேகமாக நடக்க முடியவில்லை. ஆனாலும் ரயில் புறப்பட்டுவிடுமோ என்ற பதற்றம் அவரை இழுத்துக் கொண்டு வந்தது. அந்த பெட்டியில்தான் ஆச்சி இருந்தார். அரக்கப் பறக்க ஏறி ஆச்சியை இடித்துக் கொண்டு உட்கார்ந்தார். நான் மெதுவாக அருகில் செல்ல ஆச்சியை தள்ளி உட்காரச் சொல்லி எனக்கும் இடம் தந்தார்.

‘சார்வாள் தெங்காசி போறாவோ… ரொம்ப ஒவ்வாரம்… அவாள் இல்லைன்னா உன்ன கண்டுபுடிக்க சங்கடப்பட்ருப்பேன்…’ என்றார் பாட்டையா. மஞ்சள் போர்டைக் காட்டியதைத் தவிர வேறெதுவும் செய்யாத எனக்கு அவருடைய வார்த்தைகள் குத்தலாக இருந்தன.

’இடம் புடிச்சு வச்சதுக்கு நன்றி ஆச்சி…’ என்றேன். ஆச்சி காவிப் பல் சிரிப்போடு அதை ஏற்கும் நொடியில் உள்ளே புகுந்து தட்டி விட்டார்.

‘சார்வாள்… நீங்க வேற… அவ என்ன சீட்ட தலையிலயா வச்சு தாங்குனா… ஒரு ஆளுக்கு இடம் புடிச்சு குடுத்ததெல்லாம் பெருசா பேசுதிய…’ என்றவர், மனைவி பக்கம் திரும்பி, ‘ரயிலேறிட்டோம்னு உம் மவனுக்கு தாக்கல் சொல்லிரு… மருமவட்ட சொல்லி ராத்திரிக்கு சோறு வடிக்கச் சொல்லிறச் சொல்லு…’ என்று அடுத்தடுத்து கட்டளைகளைப் போட்டுவிட்டு காலை நீட்டி, கண்ணை மூடிக் கொண்டார்.

ஆச்சி கையில் இருந்த ஒயர் கூடைக்குள் கையை விட்டு தேடி சுருக்குப் பையை எடுத்து உள்ளே இருந்து ஒரு போனை எடுத்தாள். மூன்றாம் எண்ணை அழுத்தி காதில் வைத்தாள்.

‘ஐயா ராசா… நீ சாப்டியா… இல்லையா… சரி நீ சாப்டுரு… நாங்க வண்டி ஏறிட்டோம்… எங்களுக்கு செவாமிய பொங்கிறச் சொல்லு… ஒங்கப்பாவுக்கு மேலுகாலுக்கு இதமா ஒரு கரண்டி மொளவு ரசம் வைக்கச் சொல்லு… நான் மத்தியான குழம்ப ஊத்திகிடுவேன்… சரிப்பா… நான் வெச்சுருதேன்…’ போனை அணைத்து மறுபடியும் சுருக்கு பைக்குள் போட்டு அதை ஒயர் கூடைக்குள் போட்டு காலுக்கு இடையே வைத்துவிட்டு என்னைப் பார்த்து சிரித்தாள்.

‘எப்படி ஆச்சி மகனுக்கு பாட்டையாவுக்கு எல்லாம் போன் பண்ணுதே..?’ என்றேன்.

மறுபடியும் தேடி போனை எடுத்தாள். ஐந்தாம் நம்பரைக் காட்டி, ‘இத அமுக்குனா அய்யாவுக்கு பேசலாம்… இதை அழுத்துனா மவனுக்கு பேசலாம்… இதை அழுத்துனா மவ புள்ள பேரன் கிட்ட பேசலாம்… அவந்தான் சொல்லிக் குடுத்தான்…’ என்றாள். என்னிடம் சொல்லும்போது ஐந்தாம் நம்பர் பட்டனை அழுத்திவிட்டாள் போலும்… பாட்டையா போன் அடித்தது. ஆச்சி அதை கவனிக்காமல் போனை மறுபடியும் சுருக்கு பையினுள் போட்டு கூடைக்குள் போட்டுவிட்டாள்.

கண் மூடியிருந்த பாட்டையா எடுத்துப் பார்த்துவிட்டு காதில் வைத்தார். அவர் பேசும் அலோ அவருக்கே கேட்டிருக்க வேண்டும்.

‘ஏட்டி… நீயா எம் போனுக்கு போட்ட…’ என்றார்.

ஆச்சி பதற்றத்தோடு போனை எடுத்து சிவப்பு பட்டனை அழுத்தினாள்.

‘தம்பிட்ட எப்டி போன் பேசணும்னு சொல்லி காட்டுனேன்… உங்களுக்கு லைன் போயிட்டு…’ என்று சிரித்தாள்.

‘இப்படி கண்ட நம்பருக்கும் போடு… என் சொத்தெல்லாம் ரீசார்ஜ் பண்ணியே ஜப்தி ஆவப் போவுது…’ என்று சலித்துக் கொண்டார். என்பக்கம் திரும்பினார்.

‘பாத்தேளா சார்வாள்… எலிக்கு பவுசு வந்தா எலிகாப்டர் கேக்கும்னு சும்மாவா சொன்னான்… அவ ஒங்களுக்கு போன் போடச் சொல்லித் தாராளாம்… ஏட்டி… சார்வாள் வச்சிருக்க போன நீ பாத்துருக்கியா… அவாள் அதுல அமெரிக்கா காரன்கூடல்லாம் பேசுவாவோ… நீ அவாளுக்கு சொல்லித் தாரியோ… போக்கத்த பயவுள்ள…’ என்றவர் மறுபடியும் கண்ணை மூடிக் கொண்டார்.

ஆச்சி ஆச்சரியமாக என்னைப் பார்க்க, நான் என் பையில் இருந்த போனை எடுத்துக் காட்டினேன். ரேகை பதித்தால்தான் திறக்கும் என்று நான் சொன்னதும், ‘என்னப் போல கைநாட்டு கேசுகளுக்குனு கண்டுபுடிச்சிருக்கான் போலுக்கு…’ என்றாள் ஆச்சி வெள்ளந்தியாக! அவள் கையில் கொடுத்தேன். வெற்றிலை தடவிச் சிவந்த தன் விரல்களால் அதை ஆசைதீர தடவிப் பார்த்தாள்.

‘இதுல போட்டோ புடிக்கலாமாய்யா..?’ என்றாள்.

‘புடிக்கலாம்ச்சி… உன்னைய புடிக்கட்டுமா...?’ என்று கேமராவை ஆன் செய்தேன்.

‘நம்மள ரெண்டு பேரையும் புடிக்காப்ல இருக்கா… என் பேரன்… இந்தா இப்படி கைய உசக்க வெச்சுகிட்டு பாரு ஆச்சினு புடிப்பான்…’ என்றாள் சிரிப்போடு.

நான் போனை செல்ஃபி மோடுக்கு மாற்றி கையை உயர்த்தி இருவரையும் கவர் செய்தேன். செல்போனில் தெரிந்த அவள் முகம் அவளுக்கே புதிதாக இருந்திருக்க வேண்டும். இன்னும் மலர்ந்து சிரித்தாள்.

மறுபடியும் கூடையில் தேடி சுருக்குப் பையில் இருந்து போனை எடுத்து என்னிடம் தந்தாள். ‘அந்த போட்டாவ இந்த போனுக்கு அனுப்ப முடியுமா…?’ என்றாள்.

‘இல்ல ஆச்சி… உன் பேரன் நம்பர் சொல்லு… அவனுக்கு அனுப்பிருதேன்… அவன பிரிண்ட் போட்டு தரச் சொல்லு…’ என்றேன். நானே அவள் மொபைலில் இருந்து பேரன் எண்ணை குறித்துக் கொண்டேன்.

வண்டி விருதுநகருக்குள் நுழைந்தது. பாட்டையாவை உலுக்கி எழுப்பினாள் ஆச்சி.

‘அய்யா… விருதுநகர் வந்தா சொல்லுனியளே… வந்துட்டுனு நினக்கேன்…’

பாட்டையா பரபரப்பாக இங்கும் அங்குமாகப் பார்த்தார். சரக்கென்று வேட்டியை விலக்கி அண்டர்வேரில் இருந்து இருபது ரூபாய் நோட்டை எடுத்தார். பிறகு அதை வைத்துவிட்டு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்தார்.

‘சார்வாள்… லேசா எட்டி பால்காரன் வாரானானு பாருங்க… இங்க பால் நல்லாருக்கும்… மூணு பேருக்கும் வாங்குவோம்…’ என்றார்.

‘இல்ல பாட்டையா… நான் பால் சாப்ட மாட்டேன்… ரெண்டு வாங்குவோம்…’ என்று பால் விற்றவரை அழைத்தேன்.

இரண்டு கைகளிலும் இரண்டு கப் பாலை நான் வாங்க பாட்டையா டக்கென்று ரூபாயை எடுத்து கொடுத்துவிட்டார்.

‘ஏட்டி… வெத்தல எச்சியோடயா பால குடிப்ப… போய் வாய கொப்ளிச்சுட்டு வா… ஒண்ணுக்கு போணும்னாலும் போயிட்டு வா…’ என்றார்.

ஆச்சி நகர்ந்ததும் என்னிடம் கிசுகிசுப்பான குரலில் சொன்னார்.

‘நானும் பால் குடிக்க மாட்டேன்… இவ பசி தாங்க மாட்டா… ஒரு வாய் குடிச்சுக்கோன்னா வேண்டாம்னு நிலையா நிப்பா… அதான் எனக்குனு சொல்லி வாங்கி குடுக்கேன்… இத கொஞ்சம் போல குடிச்சுட்டு அவட்டயே குடுத்துருவேன்… சேத்து குடிச்சுருவா…’ என்றார்.

வண்டி நகர ஆச்சி வந்து அமர்ந்து நிதானமாக இரண்டு கப் பாலையும் ஊதி ஊதி குடித்தாள்.

‘சரி… செத்தோடம் கண்ண மூடு… ராஜாளயம் தாண்டி முழிச்சா போதும்…’ என்று தானும் கண்ணை மூடிக் கொண்டார் பாட்டையா! அவர்களை தொந்தரவு செய்யாமல் நானும் நகர்ந்து வாசல் பக்கமாக வந்து நின்று கொண்டேன்.

வாசலை ஒட்டிய இருக்கைகளில் இளைஞர் கூட்டம் ஒன்று அமர்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தது. விருதுநகரில் ஏறிய போளி வியாபாரி, ‘சூடான கடம்பூர் போளீய்…’ என்று கூவிக் கொண்டிருந்தார்.

சீட்டாட்ட கும்பலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் சட்டென்று எழுந்து தலையை எண்ணி போளி வாங்கினார். சீட்டாடியவர்களுக்கு ஆளுக்கொன்றாகக் கொடுத்துவிட்டு தனக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு என்னிடம் ஒன்றை நீட்டினார்.

‘இல்ல… நான் இதெல்லாம் சாப்டுறதில்ல…’ என்று மறுத்தேன்.

‘அட… என்னண்ணே நீங்க… ஒரு போளி சாப்டா என்ன வயிறா ரொம்பிடும்… சாப்டுங்க… இன்னிக்கு எனக்கு பர்த் டே… அதான் எல்லாருக்கும் ஸ்வீட் வாங்குனேன்… சாப்டுங்க…’ என்று நீட்டினார்.

சன்னமாக குரலில் ஹேப்பி பர்த் டே என்று சொல்லிவிட்டு போளியை பிட்டு வாயில் போட்டேன்.

‘நல்லாருக்குல்ல… எங்கே… குத்தாலம் குளிக்கப் போறீங்களா..?’ என்றார்.

‘இல்ல… ஊரே அதுதான்… தங்கச்சி மக கல்யாணம்… அதுக்கு போறேன்…’ என்றேன்.

‘நாங்க சின்னாளபட்டி… குத்தாலம் குளிக்கப் போறோம்… வருசத்துக்கு ஒரு ட்ரிப் இப்படி கிளம்பிடறது… நமக்கும் ஒரு சேஞ்ச் வேணும்ல…’ என்றார்.

‘ஓ… எல்லாம் தறி ஓட்றீங்களா..?’ என்றேன்.

‘சின்னாளபட்டின்னா சுங்குடி… ஊரெல்லாம் தறிங்கறது அந்தக் காலம்… இப்ப எல்லாம் மாறிப் போச்சு… நூத்துக்கு பத்து பேரு தறி ஓட்டுனா பெருசு… ஆளுக்கொரு வேலையப் பார்க்கப் போயிட்டோம்… இவனுக எல்லாரும் திண்டுக்கல்ல வேற வேற இடங்கள்ல வேல பாக்காங்க…’ என்றார்.

‘நீங்க..?’

‘நான் ஊர்தான்… அக்ரிகல்ச்சர்… சொந்தத் தொழில் பார்க்க முடியலனாலும் சந்தோஷமா இருக்கேன்… நீங்க போளி சாப்டுங்க…’ என்றார்.

‘ஆக்சுவலி இன்னிக்கு உங்களுக்கு பொறந்தநாள் இல்லைதானே..?’ என்றேன். சிரித்துக் கொண்டே போய் கூட்டத்தோடு அமர்ந்து கொண்டார். வெளியே திரும்பிப் பார்த்தேன். ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தூரமாக மின்னியது. மறுபடியும் சீட்டுக்கு வந்தேன்.

பாட்டையா எல் உடல் பட்டு விசுக்கென்று விழித்தார்.

‘ராஜாளையம் வந்துட்டா..?’ என்றார்.

‘வரப் போவுது… நீங்க படுங்க… நான் சங்கரன்கோயில் வந்ததும் எழுப்புதேன்…’ என்றேன்.

‘நல்ல காரியத்த கெடுத்திய… நான் ராஜாளையத்துல ரெடியானாத்தான் சங்கரங்கோயில்ல இறங்க முடியும்… அசைஞ்சு அசைஞ்சு நடக்கணும்லா…’ என்று சிரித்துக் கொண்டே ஆச்சியை எழுப்பினார்.

‘ஏட்டி… இறங்கணும்… எந்திரி…’ ஆச்சியும் எழுந்து உட்கார்ந்தாள். தலையை உதறி முடியை நீவி கொண்டையாக முடிந்து கொண்டாள். சீட்டுக்கு கீழே இருந்த பைகளை எடுத்து ஒழுங்கு படுத்தி வைத்தாள்.

ராஜபாளையத்தில் பரபரவென்று ஒரு பெண்கள் கூட்டம் ஏறியது.

‘ஏட்டி… இடமே இல்லயே… நிக்கத்தான் செய்யணுமோ…’ என்றாள் ஒருத்தி. பாட்டையா அவசரமாக, ‘நாங்க சங்கரங்கோயில்ல இறங்கிருவோம்… நீங்க இருந்துக்கங்க…’ என்றார். அந்தப் பெண்களும் சமாதானம் ஆனார்கள்.

சங்கரன்கோவில் வந்ததும் பைகளை நகர்த்தி வாசலுக்கு கொண்டு போய்க் கொடுத்தேன். ‘ரொம்ப தேங்க்ஸ் சார்வாள்…’ என்று அகலமாகச் சிரித்து விடைகொடுத்தார் பாட்டையா. ஆச்சிக்கும் சிரிப்பு அள்ளிக் கொண்டு வந்தது. வண்டி நகர மறுபடியும் இருக்கைக்கு வந்தேன்.

புதிதாக இடம் பிடித்தவர்கள் பைகளை விரித்து சேலைகளைப் பரப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

‘ஏட்டி… அவங் கடையில பாக்கையில ஒரு கலரா தெரியுது… ஆசையா எடுத்தேன்… இப்பம் பாத்தா வேறயா இருக்கே…’ என்றாள் ஒருத்தி.

‘எல்லா சீலையும் அப்டிதான் இருக்கும்… பகல் வெளிச்சத்துல பாரு… இன்னொரு கலர் தெரியும்…’ என்றாள் உடனிருந்தவள்.

அவள் சொன்னதற்கு ஆதரவு தெரிவிப்பது போல கைதட்டல் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தால் திருநங்கை ஒருத்தி கைதட்டி யாசகம் கேட்டுக் கொண்டிருந்தாள். ஒன்றும் ரெண்டுமாக எல்லோருமே காசு கொடுக்க வாங்கி வாங்கி இடுப்பில் செருகிக் கொண்டே வந்தாள். என்பங்குக்கு நானும் காசு கொடுத்தேன். சேலையை சிலாகித்தவளும் கொடுத்தாள். அதையும் வாங்கி இடுப்பில் செருகினாள் திருநங்கை.

அதைப் பார்த்ததும் சேலை எடுத்தவளுக்கு சுறுசுறுவென்று வந்துவிட்டது.

‘அடி பாவிமட்ட… துட்ட இடுப்புல சொருவுதேன்னு தொலச்சுட்டு போயிறாத… வம்பாடு பட்டு சம்பாதிக்க… வச்சு செலவழிக்க வேண்டாம்… ஒரு நிமிசம் நில்லு…’ என்று பரபரவென்று ஜவுளிக்கடை கட்டைப் பைக்குள் தேடி ஒரு பர்ஸை எடுத்தாள். கடையில் கொடுத்த புத்தம் புது பர்ஸ்…

‘இந்தா… துட்ட இதுல போட்டு ஜாக்கெட்டுக்குள்ள வை… ‘ என்று கொடுக்க, திருநங்கை மொத்த காசையும் இடுப்பில் இருந்து எடுத்து பர்ஸ் உள்ளே போட்டுவிட்டு பர்ஸுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். பர்ஸ் கொடுத்தவளையும் கன்னம் கிள்ளி முத்தினாள்.

‘என் செல்ல அக்கா…’

உடன் வந்தவளுக்கு பொசபொசவென்று ஆகிவிட்டது.

‘அடேய்… பத்து ரூவா குடுத்த எங்கள கண்ணு தெரியல… ஓசி பர்ஸு குடுத்தவ ஒனக்கு உடம்பொறந்தாளா போயிட்டா..? நல்லருக்கிட்டி நாயம்..?’ என்றாள்.

திருநங்கை வெடுக்கென்று வெட்டித் திரும்பினாள்.

‘இங்காருக்கா… நீ குடுத்த பத்து ரூவா ஒரு டீ காசு… குடிச்சுட்டு ஒண்ணுக்கு போயிட்டம்னா ஒண்ணுமில்லனு போயிரும்… ஆனா, இந்த பர்ஸு கிழிஞ்சு நூலாவும்தண்டியும் இந்த அக்கா நெனைப்பு இருக்கும்… இது ஒண்ணும் ஓசி பர்ஸு இல்ல… சீலைக்கு குடுத்த காசுல இதுக்கும் சேர்த்துதான் எடுத்துருப்பான் கடைக்காரன்…’ சொல்லிவிட்டு கைகளைத் தட்டிக் கொண்டு அடுத்த சீட்டுக்கு நகர்ந்தாள் அவள்.

தென்காசியில் வண்டி நிற்கும்போது இறங்க வழியில்லாமல் கொட்டியது மழை!

விகடன் தீபாவளி மலர் 2018

(இலக்கியச் சிந்தனை 2018ம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை பரிசு பெற்றது)

Sunday, February 13, 2022

கடைசி (வீட்டு) விவசாயி!

 




தர்மர் தாத்தா… எங்க ஊர்ல (கொட்டாகுளம் – தென்காசி மாவட்டம்) எங்க தெருவுல கீழக் கடைசியில இருக்க வீடு அவரோடதுதான்… பங்கு பாகமெல்லாம் பிரிச்சது போக அவருக்கு கிடைச்சது ஒரு குச்சிலும் கையகல நிலமும்தான்.

எல்லாரும் நாத்தங்கால்னு சொல்றதைத்தான் தருமரு வயலும்பாரு… அவருக்குக் கிடைச்சது அம்புட்டுதான் என்ன செய்ய..? என்றுதான் ஊருக்குள் பேசிக் கொள்வார்கள்.

ஆனால் ஒரு கோட்டை விதைப்பாடு நிலம் வைத்திருப்பவர் கூட அத்தனை அக்கறையாக வயலுக்குப் போக மாட்டார்கள். தினமும் காலையில் களைகொத்தியோடு வயலுக்கு கிளம்பிவிடுவார்.

நாற்று பாவுவதில் தொடங்கி களை எடுப்பது, உரம், பூச்சி மருந்து போடுவது என்று போய் அறுவடை செய்வது வரை தாத்தாவும் அவர் வீட்டு ஆச்சியும்தான் எல்லா வேலைகளையும் செய்வார்கள்.

எங்கள் ஊருக்கே விவசாயத்துக்கு தண்ணீர் வருவது மேற்கே இருக்கும் கண்ணுப்புளி மெட்டு அணையில் இருந்துதான்! வயல் வைத்திருப்பவர்கள் வீட்டுக்கு ஒரு ஆள் தண்ணீர் அடைக்க வரவேண்டும் என்பது ஊர்க்கட்டுப்பாடு. தலைப்பாகையை இறுகக் கட்டிக் கொண்டு முதல் ஆளாக வந்துவிடுவார். தாத்தா, சின்னப் புள்ள ஒண்ணுக்கு இருந்தா மறுகால் வெட்டி விடணும்… அந்த வயலுக்கு நீங்க எதுக்கு அலையறீங்க..? என்றால், என்னப்பா… ஊருக்கு ஒத்தது எனக்கும்… வயல்காரங்க வாங்கன்னா வரணுமா இல்லையா..? என்பார்.

எத்தனை பஞ்சத்திலும் தன் விவசாயத்தை அவர் கைவிடவே இல்லை.

தன் ஒற்றை மகளுக்கு மாப்பிள்ளை தேடும்போது அவர் வைத்த ஒரே நிபந்தனை… என் வீட்டை எடுத்துகிடட்டும்… ஆனா, வயலை வெள்ளாமை பார்க்காம போட்டுறக் கூடாது என்பதுதான்!

கடைசி விவசாயி படத்தில் மாயாண்டி ஐயாவைப் பார்க்கும்போது தருமர் தாத்தாதான் நினைவுக்கு வந்தார்!

(அவரைத் தவிர ‘முருகனடிமை’ ராமையா, உப்பு தோசைகளும் எங்கள் ஊரில் உண்டு!)

நன்றி மணிகண்டன்!