Friday, June 25, 2021

வீடு பேறு! 5 -16

'நாங்க விசாரிக்கப் போயிருந்த அன்னிக்கு அவங்க வீடு முளைப்புடிச்சுகிட்டு இருந்தாங்க… அதுவே நல்ல சகுனமாகப் பட்டது…’ என்றார் அப்பா. அப்பா அந்த அளவுக்கு சகுனமெல்லாம் பார்க்கும் ஆள் இல்லை. ஆனால், சில விஷயங்கள் மனதுக்குப் பட்டது என்றால் பட்டென்று பிடித்துக் கொள்வார்.

இப்படித்தான் வீட்டுக்கு ஒரு டிவி வாங்கலாம் என்று கடைக்குப் போனார். கலர் டிவி வாங்கும் அளவுக்கு காசு கொண்டுதான் போயிருந்தார். ஆனால், ‘இதைப் போட்டுக் காட்டுப்பா…’ என்று ஒரு டிவியைக் கைகாட்ட, கடைக்காரரும் போட்டுக் காட்டியிருக்கிறார். அந்த கறுப்பு வெள்ளை டிவியில் பிள்ளையார் பட்டி பிள்ளையாருக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. ‘இது நல்லாயிருக்கு… இதையே பேக் பண்ணிருங்க…’ என்று சொல்லி, வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். அவர் மனதுக்கு சரி என்று படவேண்டும்.

அப்படித்தான் அந்த விஷயமும் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணா புரம் முதல் தெருவில் இருக்கும் அந்த முளைப் பிடித்த வீட்டுக்கு எதிரில் இருந்த விஜய் ஸ்டோர்ஸ்காரங்க வீட்டுக்குப் பெண் பார்க்கப் போனோம். (புதிதாகக் கட்டுவதற்காக முளைப் பிடித்த வீடும் அவர்களுடையதுதான்!) தெருவெல்லாம் கல் பரப்பி வைத்திருக்க, தெருமுனையிலேயே காரை விட்டு இறங்கி நடந்தோம். ஆச்சியின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்த நான் கடைசி ஆளாக வீட்டினுள் நுழைந்தேன்.

பெண் பார்க்கும் படலம்… புறப்படும்போது நான் அசத்தலாக இருக்கும் என்று நம்பி போட்டுக் கொண்டிருந்த ஆரஞ்சு கலர் சட்டையைப் பார்த்த அப்பா, ‘என்னடா… சட்டை மாத்தலையா..?’ என்று கேட்டு காலி பண்ணினார் என்றால், பெண் வீட்டில் லட்டு கொடுத்தவுடன், ‘ஏண்டா… பொண்ணு வீட்டுல கேசரி கொடுப்பாங்கனுதானே மேட்சா கேசரி பவுடர் கலர்ல சட்டை போட்டுகிட்டு வந்தே… இப்படி மிஸ் ஆகிடுச்சே..?’ என்று அண்ணாச்சி இன்னொருபக்கம் கேலி பண்ணினார்.

அந்த விஜய் ஸ்டோர்ஸ் வீடுதான் என் மாமனார் வீடு! ஸ்ரீவில்லிபுத்தூரில் விஜய் ஸ்டோர்ஸ் வீடு என்பதே முழு விலாசம். அந்த அளவுக்கு நகரின் பிரபலமான குடும்பம்.

அண்ணனும் தம்பியும் ஒரே குடும்பமாக இருக்காங்க… ரெண்டு பேரின் குழந்தைகளும் ஒரே வயிற்றில் பிறந்த மாதிரி இருக்காங்க… பெரிய குடும்பம்… நல்லாயிருக்கும்…’ என்று அம்மாவும் அப்பாவும் சொல்ல, அந்த குடும்பத்துப் பெண்ணே எனக்கு மனைவியானார்.

ஐந்து பெண்கள் மூன்று பிள்ளைகள் என்று மொத்தம் எட்டு குழந்தைகள். இவர்களில் என் மனைவி ஐந்தாமவர். பெண்களில் நாலாவது ஆள்! அதனால் எப்போதும் கலகலவென்று இருக்கும் வீடு.

மூத்த மருமகன் வழக்கறிஞர், அடுத்தவர் சொந்தத் தொழில், மூன்றாவதாக நான்… பத்திரிகைக்காரன்..! ஒரு மாப்பிள்ளையாவது தேதி கிழிச்சா சம்பளம் வர்ற மாதிரி கவர்மெண்ட் மாப்பிள்ளையா அமையலையே! என்று மனைவியின் பாட்டி வருத்தப்படுவார்களாம். அடுத்து வந்த இரண்டு மாப்பிள்ளைகளுமே தனியார் பணிதான்!

பத்திரிகைத் தொழில் என்பது அந்த வீட்டுக்கு ரொம்பவே புதியது. பத்திரிகைக்கும் அவர்களுக்கும் இருந்த ஒரே தொடர்பு தினமணி பேப்பர் மட்டும்தான்! திருமணமான பிறகு நான் போன அன்று கடைக்குட்டி மாப்பிள்ளையிடம் தினத்தந்தி வாங்கி வரச் சொன்னேன். அதைப் பார்த்ததும் தீயை மிதித்தது போல பதறிப் போனார் பெரிய மாமா. ஆனால், மறுநாள் முதல் தினத்தந்தியும் வீட்டுக்கு வந்தது.

என் வீட்டைப் போலவே மனைவியின் வீடும் நீளமான ரயில் பெட்டி வீடுதான். வராந்தா, முன்னறை, அடுத்த அறை, அடுக்களை பின்கட்டு என்று கச்சிதமான வீடு. வீட்டு ஆட்கள் அதிகம் என்பதால் நாலைந்து வீடு தாண்டி இன்னொரு வீடும் எதிரே ஒரு வீடும் என்று மூன்று வீடுகள் இருக்கின்றன. ஆனால், சமையல் செய்யும் வீடுதானே வீடு!

மூத்த மகனின் திருமணத்துக்குப் பிறகு பெரிய மாமாவும் சின்ன மாமாவும் தனித்தனி குடும்பங்கள் ஆனார்கள். மருமகன்கள் என்பவர்கள் வரும் நேரமெல்லாம் திருநாளாக இருக்கும். ஆனால், மருமகள் என்பவள் வீட்டிலேயே இருக்க வேண்டியவள். அதனால், அவளுக்கான இடமும் நேரமும் கூட்டுக் குடும்பத்தால் மூச்சுமுட்டிவிடக் கூடாது என்பதால் எல்லோருமாகப் பேசி தனித்தனி ஆனார்கள். ஆனால், மருமகன்கள் வரும் நேரம் ஒரே குடும்பமாகத்தான் இருக்கும்!

தினத்தந்தி போலவே அந்த வீட்டில் என்னால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. எப்போது அங்கு போனாலும் அசைவம் மணக்கும். சைவம் சமைத்தாலும் அசைவ வாசனையோடு பட்டை சோம்பு மசாலா இல்லாத சமையலே இருக்காது. விருந்து உபசரிப்பு என்பதே அந்த வாசனைதான்! ஆனால், எனக்கு மசாலா வாசனை அலர்ஜி.

திருமணத்துக்குப் பிறகு எங்கள் பயணம் சுவாரஸ்யமாக இருக்கும். சென்னைக்கு புறப்படும்போது தென்காசியில் இருந்து ரயில் ஏறுவோம்… ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு பை கொடுக்கப்படும். அனேகமாக மாமா, அத்தை, மச்சான் என்று மொத்த குடும்பமுமே ரயில் நிலையத்தில் இருப்பார்கள். சில நிமிடங்கள் என்றாலும் பார்த்துக் கொள்ளமுடியுமே என்ற ஆசைதான்! அவர்கள் கொடுக்கும் பையில் அன்று புதிதாக கடைக்கு வரும் வார பத்திரிகை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்பெஷல் பால்கோவா பாக்கெட்டுகள், கூடவே இரவு உணவு, தண்ணீர் பாட்டில்! (அந்த தண்ணீர் பாட்டில் சென்னை வந்த பிறகும் இரண்டு மூன்று நாட்கள் என் மனைவியின் ஊர் தாகத்தைத் தீர்க்கும்)

தொடக்கத்தில், ஒருமுறை இந்த பட்டியலில் கடைசியாக இருந்த உணவுப் பாக்கெட்டைத் திறந்தோம். ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பான ஹோட்டலில் இருந்து வரவைக்கப்பட்ட பிய்த்துப் போட்ட பரோட்டா, சிக்கன் குருமா..! ஒரே நேரத்தில் அய் என்றும் அய்யே என்றும் இரண்டு குரல்கள்! அய் என்பது மனைவியின் குரல். அய்யே என்பது என் குரல்!

ஏன் அய்யே என்று கேட்ட மனைவியிடம், ஹோட்டலில் சாப்பிடுவது என்றால் பார்டர் பரோட்டாவே வாங்கியிருக்கலாமே… வீட்டு சாப்பாடுதானே வேணும் என்று விளக்கம் சொன்னேன். அது அப்படியே ரெக்கார்டட் வாய்ஸாக விஜய் ஸ்டோர்ஸ் வீட்டுக்குப் போய்ச் சேர அன்றுமுதல் இன்று வரை வீட்டுச் சாப்பாடுதான்!

அதிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்கெட்டில் காய்கறிக் கடை வைத்திருப்பவர், சரியாகச் சொல்லிவிடுவார், நான் என்று ஊருக்கு வருகிறேன் என்று! நான் ஊருக்குப் போகும் தினத்தில் அவர் கடை கத்தரிக்காய் கடைசலும் இட்லியும்தான் காலை டிபனாக இருக்கும்! சின்ன மாமா காய்கறிக் கடைக்கு காலங்கார்த்தால போய்விடுவார்.

முதலில் சின்ன மாமா, அடுத்து அவர்களின் சகோதரி, சமீபத்தில் பெரிய மாமா என்று கால இடைவெளியில் ஒவ்வொருவராக இயற்கையுடன் கலந்துவிட, களையிழந்து விட்டது விஜய் ஸ்டோர்ஸ் வீடு. ஆனாலும் அடுத்த தலைமுறை இன்னும் உத்வேகத்தோடும் அன்போடும் பொலிவு பெற்று விட்டது வீடு! அதன் உதாரணம் முந்தைய தலைமுறைக் கனவை அடுத்த தலைமுறை கையில் எடுத்திருப்பதுதான்!

என் இரண்டாவது மச்சான் திருப்பதி என் மகனிடம் விடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான், ‘மருமவனே… என்ன வேணா படி… ஆனா, பச்சை மையில கையெழுத்துப் போடுற வேலைக்குப் போயிரு… அதுதான் கவுரவம்… புரியுதா… மருமகனுக்கு பச்சை மை மாமா கடையிலருந்துதான்… சரியா?’

Monday, June 21, 2021

வீடு பேறு! 4/16

 ‘சென்னைக்கு வந்திருங்க பாபு..!’ என்று அழைத்தார்கள் நாசரும் இஸ்மாயிலும்! ‘சென்னைக்குப் போனால் என்ன செய்வே..?’ என்ற கேள்விக்கு முன்பாக அப்பாவும் அம்மாவும் கேட்ட கேள்வி ‘எங்கே தங்குவே..?’ என்பதுதான்! ‘நண்பர்கள் நாசர், இஸ்மாயில் எல்லாம் வீடு எடுத்திருக்காங்க… நானும் அங்கே தங்கிக்குவேன்…’ என்றேன்.

1/123… முகப்பேர் மேற்கு… இதுதான் சென்னையில் என் முதல் முகவரி! சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னைக்கு வந்து இறங்கிய நாள் இன்னமும் நினைவில் இருக்கிறது. அதற்கு முன்பு விருந்தாளியாக சில நாட்கள் நாசர் மற்றும் நண்பர்கள் இருந்த வீட்டில் தங்கியிருக்கிறேன். கிட்டத்தட்ட ஒற்றை அறை வீடு அது. கிச்சன் என்று பெயருக்கு ஒன்று இருக்கும். சில நாட்கள் வந்து தங்கிவிட்டு ஓடிவிடுவேன். இந்தமுறை இனி சென்னைதான் என்ற முடிவோடு வந்து இறங்கினேன். என்ன செய்யப் போகிறோம் என்ற தெளிவில்லை, ஆனாலும் சென்னைதான் வாழ்க்கை என்ற முடிவு மனதில் இருந்தது.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை… நாசர் ஒமேகா கேபிள்ஸ் என்ற நிறுவனத்தில் பணியில் இருந்தார். திங்கள் முதல் சனி வரையில் காலை சீக்கிரமே அலுவலகம் போய்விடுவார். இஸ்மாயிலுக்கு சொந்த கம்பெனி… அவரும் தலைவர் என்கிற வெங்கட், வேத்து என்கிற வேதமூர்த்தி இன்னும் சில நண்பர்கள் இணைந்து நடத்திய ஏதோ உதிரிபாகம் தயாரிக்கும் ஏதோ ஒரு கம்பெனியை நடத்தி வந்தார்கள். அதனால், இஸ்மாயில் கொஞ்சம் முன்னேபின்னே போவார், வருவார்!

அதனால், எப்போது ஊருக்கு வந்தாலும் சனியன்று கிளம்பி ஞாயிறன்று சென்னை வந்து விடுவார்கள். அப்போதுதான் திங்கட்கிழமை டென்ஷன் இல்லாமல் வேலைக்குச் செல்லமுடியும். அப்படியொரு ஞாயிற்றுக்கிழமைதான் நானும் அவர்களோடு வந்து இறங்கினேன்.

அவர்கள் தங்கியிருந்த அறையில் நாசர், இஸ்மாயிலைத் தவிர வேதமூர்த்தி தங்கியிருந்தார். கூடவே மேலூரார் என்று செல்லமாகவும் கோபமாகவும் அழைக்கப்படும் சிவசுப்பிரமணியன் தங்கியிருந்தார். அவரும் பொறியாளர்தான். அவர் வேறொரு மென்பொறியியல் நிறுவனத்தில் வேலையில் இருந்தார். அவர் ஏற்பாட்டின் பேரில்தான் நான் சென்னையின் முதல் வேலையில் சேர்ந்தேன். அதன்பிறகுதான் விகடனுக்குள் நுழைந்தேன்.

மறுபடியும் அந்த ஞாயிற்றுக் கிழமைக்கு வருகிறேன். காலையில் அறைக்கு வந்தவுடன் அறிமுகமெல்லாம் முடிந்தது. நாசர் எனக்கும் அந்த அறைக்குமான உறவைப் பற்றிச் சொன்னார். ‘பாபு… ஒரு வேலைனு செட்டில் ஆகற வரைக்கும் ரூம் ரெண்ட் ஷேர் பண்ண வேண்டாம்… நாங்க பார்த்துக்கறோம்… சாப்பாடு தினமும் ராத்திரியும் ஞாயிற்றுக் கிழமைகள்ல மதியமும் ஒரு வீட்டில் இருந்து சாப்பாடு கொடுத்து விடுவாங்க… அந்த பில்லும் நாங்க பார்த்துக்கறோம்… காலை சாப்பாட்டுக்கும் சோப்பு, சீப்பு இத்யாதிகளுக்கும் வர்ற வழியில் இருக்கற அண்ணாச்சி டிபன் கடையில் அக்கவுண்ட் தொடங்கித் தர்றோம்… உங்களால் எப்ப எவ்வளவு கொடுக்க முடியுமோ கொடுத்து அக்கவுண்டை மெயிண்டெய்ன் பண்ணிக்கோங்க… ஓகேதானே..?’ என்றார்.

‘டபுள் ஓகே..!’ என்றேன். அடுத்த நொடி நாசர் அதிர்ச்சி காட்டினார்.

‘பாபு… நீங்க வெஜிடேரியனாச்சே… இங்கே சன் டேன்னா அசைவம் சமைச்சு கொடுத்து விடுவாங்களே..?’ என்று பதறியவரிடம், ‘நண்டு சாப்பிடுற ஊருக்குப் போனா நடுத்துண்டு சாப்டுக்க வேண்டியதுதான்… அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்…’ என்றேன்.

குளித்து ப்ரெஷ் ஆகி வருவதற்குள் லஞ்ச் கேரியர் வந்துவிட்டது. டப்பாவைத் திறந்தால் நண்டு! ‘நடுத் துண்டை பாபுவுக்கு கொடுத்திருங்க…’ என்றார் இஸ்மாயில் சிரித்துக் கொண்டே! சுடச்சுட நான் வெஜிட்டேரியன் ஆனேன். அதன்பிறகு அத்தனையும் சாப்பிட்டுப் பழகிக் கொண்டேன், அகோரியாக மட்டும்தான் மாறவில்லை!

வீடென்று பார்த்தால் மூன்றே அறைகள்தான். முதல் அறை செருப்புகளைப் போட்டு வைப்பதற்கான வராண்டா… (ஆமாம்… செருப்பு கழற்றி கழற்றி அவ்வளவு மண்ணோடு இருக்கும்.) அடுத்த அறையில்தான் எல்லோருக்கும் படுக்கை! அதை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்வோம். மூன்றாவது அறை கட்டும்போது கிச்சன்… எங்களுக்கு உடைமாற்றும் அறை. பின்னால் சின்னஞ்சிறு பாத்ரூம்… வீட்டின் முன்னால் படிக்கட்டின் கீழே டாய்லெட்! அவ்வளவுதான் வீடு!

ஆனால், தென்காசியில் இருந்து புறப்படும் அத்தனை வி.ஐ.பி (யெஸ்… தனுஷ் நடித்த அதே விஐபி விரிவாக்கம்தான்) களுக்கும் அந்த அறையில் இடம் உண்டு. எவ்வளவு வேண்டுமானாலும் விரிந்து கொடுக்கும்.

ஒருகட்டத்தில் எங்கள் படைக்கு நிகராக தம்பியர் படையும் அறையை நிறைத்திருந்தது. எங்கள் தென்காசி டீம் மெம்பர்களான தங்கராஜின் தம்பி பாரி, மகேஷின் தம்பி செந்தில், கைலாஷின் தம்பி மாரியப்பன் என்று இளைய தலைமுறை வந்து இறங்கினார்கள். அவர்களுக்கும் இடம் இருந்தது அந்த வீட்டில்!

மேலே சொன்னேனே மேலூரார்… எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தவர், அவர்தான் எங்கள் அறையின் எண்டர்டெய்னர்… யார் கேள்வி கேட்டாலும் அவர் சொல்லும் பதில் அத்தனை ஃபன்னாக இருக்கும். மொழி மட்டுமல்ல… முழியும் கொஞ்சம் பாண்டியராஜன் டைப்தான்! ஆனால், அவர் அந்த ஃபன் விஷயங்களை அறிந்து செய்வதில்லை… சீரியஸாகவே பேசுவார். நமக்குதான் சிரிப்பு சிரிப்பாக வரும்.

எங்களுக்கு இருந்த இன்னொரு எண்டர்டெய்ன்மெண்ட் ஞாயிற்றுக் கிழமை சினிமா. அப்போது குடும்பஸ்தனாக இருந்த தலைவர் என்கிற வெங்கட் வீடு அடுத்த தெருவில் இருந்தது. ஞாயிற்றுக் கிழமை மாலை கும்பலாகக் கிளம்பி அவர் வீட்டுக்குப் போய் தூர்தர்ஷன் சினிமா பார்ப்போம். சினிமா மொக்கையாக இருந்தாலும் கவலையில்லை… ஏனென்றால் அண்ணி கையால் சிறப்பான டீ கிடைக்கும்.

நான் சென்னையில் முதன்முதலில் தங்கியதால் அந்த வீடு எனக்கு ஸ்பெஷல் இல்லை. நான் வந்து இறங்கிய நாளில் சாப்பாடு, வட்டச் செலவுகளுக்கு கவலைப்பட வேண்டாம் என்று நண்பர்கள் சொன்னது வெறும் வாய் வார்த்தை இல்லை. கையில் எடுத்துக் கொண்டு வந்த பணம் தீரும் வரை ஜாலியாக சுற்றிய என்னிடம், ‘பாபு… நீங்க விகடன்ல ஸ்டூடண்ட் ரிப்போர்ட்டரா எல்லாம் இருந்திருக்கீங்க இல்ல… மேலூர் கம்பெனியில் ஒரு பத்திரிகை நடத்துறாங்க… அதிலே ட்ரை பண்ணலாமே..?’ என்றார் நாசர். நானும் மேலூரார் சிபாரிசால் வேலையில் சேர்ந்தேன். மாதம் 900 ரூபாய் (இரண்டு சைபர்தான்… எண்ணிக்கை பிழை இல்லை) சம்பளம்!

அடுத்த வாரம் ஏதோ வேலையாக அண்ணாசாலை பக்கம் போனவன் அங்கிருக்கும் விகடன் அலுவலகம் போனேன். அங்கு நிருபர்களாக இருந்த ரா.கண்ணனும் ஜி.கவுதமும், ‘பத்திரிகை வேலைன்னா விகடனுக்கு வந்துட வேண்டியதுதானே..?’ என்றார்கள். ஆனால், அங்கே முழுநேர வேலை உடனடியாகக் கிடைக்காது. கட்டுரை எழுதிக் கொடுத்து அது பிரசுரம் ஆனால் சன்மானம் கிடைக்கும். ஒருவேளை எதிர்காலத்தில் வேலை கிடைக்கலாம் என்கிற நிலை!

மாதம் ஒன்றாம் தேதி கிடைக்கும் உறுதியான சம்பளமா… அல்லது விகடன் என்ற பிரபலமான பிராண்டா… குழப்பத்தில் இருந்தேன்.

மறுபடியும் நாசர்தான் உட்கார வைத்து பேசினார். ‘விகடன்ல ட்ரை பண்ணுனா ஆறு மாசம் இல்லை ஒரு வருஷத்துல உங்களை ப்ரூவ் பண்ணி வேலையில் சேர்ந்திட முடியாதா என்ன..? அந்த ஒரு வருஷத்துக்கு வீடு, சாப்பாடு பற்றியெல்லாம் யோசிக்காதீங்க… நாங்க பார்த்துக்கறோம்… வீட்டுக்கு ஷேர் கொடுக்கணுமேனு சின்ன வேலைக்கு போகவேண்டாம்..’ என்று அவரும் இஸ்மாயிலும் சொன்ன வார்த்தைகளை எடுத்துக் கொண்டு விகடனுக்கு போனேன்..! முதல்மாதமே ஆயிரத்து அறுநூறு ரூபாய் சன்மானம்..!

அடுத்த பூ காலத்தில் கைலாஷ் தம்பி மாரியப்பன் வந்தான்… நாசர் சொன்னார். ‘மாரியப்பனுக்கு வேலை கிடைக்கற வரைக்கும் அவன் செலவுகளை நாம பார்த்துக்கணும் பாபு… அதனால உங்க ஷேர் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா தேவைப்படும்..!’

Thursday, June 17, 2021

வீடுபேறு! 3/16

 விகடனில் சம்சாரி என்றொரு கதை எழுதியிருந்தேன். விவசாயம் பார்க்க ஆசைப்படும் ஒருவன் முன்னால் அவனுக்கு தூண்டுதலாக இருந்த ஒரு விவசாயி எந்தக் கோலத்தில் நின்றார் என்பதுதான் கதையின் சாரம். நிஜ வாழ்வில் நான் பார்த்த மனிதர்தான் அந்தக் கதைக்கான மையப்புள்ளி! நான் கதையில் எழுதியிருந்ததைப் போலவே கந்தன் சித்தப்பா வெள்ளைச் சிரிப்போடுதான் பந்தி பரிமாறும் வரிசையில் நின்று கொண்டிருந்தார். நான்தான் ஒரு விவசாயியை சமையல் கூலித் தொழிலாளி ஆக்கிய குற்ற உணர்வில் தலை குனிந்து நின்றேன்.

அந்த கந்தன் சித்தப்பாவின் வீடு ஆய்க்குடியில் இருக்கிறது. என் பள்ளிப்பருவ நாளில் அப்பாவுக்கு ஆய்க்குடிக்கு டிரான்ஸ்பர் கிடைக்க, அந்த வீட்டுக்கு அடுத்து அவருடைய அண்ணன் புதிதாகக் கட்டியிருந்த வீட்டுக்குதான் நாங்கள் குடி போனோம்.

புத்தம் புதிய வீடு… முற்றத்தை அடுத்து ஒரு வெளித் திண்ணை, உள்ளே ஒரு திண்ணை, அடுத்து ஒரு பட்டாலை, அடுக்களை என்று மிகச் சுருக்கமான வீடு… ஆனால், மாளிகை போல மனம் படைத்த மக்கள் சுற்றிலும் குடியிருந்தார்கள். கந்தன் சித்தப்பா, அவருடைய மனைவி முருகம்மா சித்தி, அவர்களுடைய தம்பி மனைவி கரடி சித்தி (கரடிமாடசாமி அவர்களுடைய குல தெய்வம்) பட்டன் பெரியப்பா குடும்பம், வீட்டுச் சொந்தக்காரரான சண்முகம் பெரியப்பா என்று எல்லோரையுமே உறவு சொல்லி அழைக்கும் அளவுக்கு முதல்நாளே நெருக்கமாக மாறிய மனிதர்கள்.

இப்போதும் ஆய்க்குடியில் ரத்த சொந்தங்கள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் இந்த உறவுகளையும் பார்க்காவிட்டால் பேசாவிட்டால் அந்தப் பயணம் முழுமை பெறாது என்கிற அளவுக்கு நெருக்கமான உறவு இருக்கிறது.

வீட்டின் முன்னால் மாட்டுத் தொழுவம் இருக்கும். அப்பா அரசு வேலை பார்க்கிறவர், அம்மா முன் கொசுவம் வைத்து சேலை கட்டுபவர் என்பதால் டீசண்டான குடும்பம் என்ற சலுகையில் மாடுகளை கொஞ்சம் தள்ளி கட்டிக் கொண்டார்கள். ஆனால், அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்க முடியாத அளவுக்கு அன்பு வழிந்தது அந்த வீட்டில்!

மெயின் ரோட்டுக்கு மிக அருகில் இருந்த வீடு அது. அதனால் மெயின் ரோட்டில் இருந்த எங்கள் பள்ளிக்கூடத்துக்கும் அப்பாவின் ஆஸ்பத்திரிக்கும் (அப்பா அங்கே மருந்தாளுநர்) அது மிக அருகில் அமைந்திருந்தது.

அந்த வீட்டிலும் டாய்லெட் கிடையாது. ஆற்றுக்குத்தான் போக வேண்டும். குளிக்க ஆற்றுக்குச் செல்லும் வழியில்தான் நண்பர்கள் கிடைத்தார்கள். அதைவிடச் சிறப்பான அனுபவமாக அமைவது துணி துவைக்கச் செல்வதுதான். எங்கே கிணற்றில் பம்ப் வைத்து தண்ணீர் இறைக்கிறார்கள் என்று பார்த்து அங்கே செல்வோம். சில நேரங்களில் கிணற்றில் தண்ணீர் அடியாழத்துக்குப் போய்விடும். அப்போது நீர் ஊறட்டும் என்று போட்டுவிட்டுப் போய்விடுவார்கள் பம்ப் ஷெட் காரர்கள். நாம் அப்படி காத்திருக்க முடியாதே..? கரையில் வைத்து துணியை கும்மி வாளிக்குள் வைத்து கிணற்றில் இறக்குவார்கள். உள்ளே யாரேனும் ஒருவரோ இருவரோ இறங்கி தேங்கியிருக்கும் ஊற்றில் அலசி வாளியில் போட்டு மேலே அனுப்புவார்கள். ஓரிரு முறை கரடிச் சித்தியோடு நானும் கிணற்றுக்குள் இறங்கியிருக்கிறேன்.

பொதுவாக எங்கள் கிராமத்து வீட்டில் இருந்த காலங்களில் அம்மா எங்கேனும் வெளியூர் செல்ல வேண்டியிருந்தால் (துஷ்டி போன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்காக) எனக்கும் அண்ணாச்சிக்கும் தூக்குச் சட்டியில் சாப்பாட்டை எடுத்து வைத்து திண்ணையில் கிடக்கும் ஊஞ்சல் கொக்கியில் மாட்டி வைத்துவிடுவார்கள். அங்கே சாப்பாட்டு சட்டி தொங்கினாலே புரிந்துவிடும். பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் எடுத்து வைத்து சாப்பிட்டு விட்டு திண்ணையில் இருந்தபடியே விளையாடிக் கொண்டோ படித்துக் கொண்டோ இருப்போம். கை கழுவ, தண்ணீர் குடிக்க கடைசி வீட்டு ஆச்சி வீடு கை கொடுக்கும்.

இங்கேயும் அதே பழக்கம்தான். அதேபோல சாப்பாடு இருக்கும். எடுத்து சாப்பிட்டு விட்டு விளையாடப் போவோம். இங்கே மற்ற தேவைகளுக்கு முருகம்மா சித்தி வீடு கைகொடுக்கும்.

வீடு பற்றி இத்தனை நினைவுகளைச் சுமந்து இறக்கி வைக்கும் இந்த நேரத்தில் கரடிச் சித்தி வீட்டு சித்தப்பாவைப் பற்றி பேசாமல் கடக்க முடியாது. அவருடைய வேலையே கேரளாவுக்கு அடிமாடுகளைக் கொண்டு செல்வதுதான். கொண்டு செல்வது என்றால் லாரியில் ஏற்றிக் கொண்டுபோய் இறக்குவது அல்ல. சாலை வழியாக நாட்கணக்கில் பெரும் மந்தையாக மாடுகளை ஓட்டிக் கொண்டுபோய் உரிய விலாசத்தில் சேர்த்துவிட்டு வரவேண்டும். அவரைப் பொறுத்த அளவில் வீடு என்பதே சாலையும் டீக்கடைகளும்தான்!

எப்போதாவதுதான் வீட்டுக்கு வருவார். அதுகூட ஒரு மந்தை மாடுகள் சேரும் காலம் வரைக்கும்தான்! கிட்டத்தட்ட ஒரு நாடோடி வாழ்க்கையை வாழும் மனிதர். திடீரென்று பார்த்தால் வீட்டு வாசலில் பல் துலக்கும் குச்சியோடு உட்கார்ந்திருப்பார். சில நேரங்களில் தின்பண்டம் ஏதேனும் வாங்கி வந்து எங்களுக்கும் தருவார். மிக மிக அன்பான மனிதர்.

முதன்முதலாக நானும் என் தங்கையும் சேர்ந்து உப்புமா கிண்டலாம் என்று முடிவெடுத்து அதைச் செயல்படுத்தியது இந்த வீட்டில்தான். ரவையில் தொடங்கி வெங்காயம் பச்சைமிளகாய் வரையில் எல்லாமும் சரியான அளவில் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிண்டி இறக்கிவிட்டோம். சாப்பிடும்போதுதான் தெரிந்தது, அதில் உப்பு போடவில்லை என்று! அதனாலேயே என்ன சமைத்தோம் என்பதைச் சொல்ல முடியாத சிக்கல் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் சீனி தொட்டுக் கொண்டு அதைச் சாப்பிட்டோம்.

உறவுகள் என்பது நம்மோடு பிறந்தவர்கள் மட்டும்தான்… நம் சொந்தத்தோடு இருப்பவர்கள் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த எண்ண ஓட்டத்தை மாற்றி யாவரும் கேளிர் என்பதைக் கற்றுக் கொடுத்த வீடு அது என்று சொல்லலாம். இன்றுவரை கைகுலுக்கும் யாருடனும் நட்பாக முடிகிறது என்றால் அதற்கான சிறு தொடக்கப் புள்ளி அந்த வீட்டில் இருக்கிறது.

ஆனால் உலகத்தின் தராசு எப்படி இயங்குகிறது என்பதையும் அந்த வீடு கற்றுக் கொடுத்தது. அந்த வீட்டின் பின்பக்கமுள்ள தெருவில் வீட்டுக்கு நேர் பின்பக்கம் ஒரு பலசரக்குக் கடை இருந்தது. எல்லோரும் உறங்கும் அல்லது உண்ட மயக்கத்தில் கிறங்கிக் கிடக்கும் நேரத்தில் அந்த பலசரக்குக் கடையில் ஒரு பாடம் நடந்து கொண்டிருக்கும். முதலாளி கடைப் பையனுக்கு கைப்பக்குவத்தைக் கற்றுக் கொடுப்பார்.

ஏலே… நாம தராசைப் புடிக்கையிலே நடுவுல இருக்கற முள்ளை இப்படி பெருவிரலால லேசாத் தள்ளிவிடணும். அது சாமான் இருக்கற தட்டுப் பக்கம் சாயும்போதே வாங்க வந்தவங்க பையிலயோ கூடையிலயோ தட்டிறணும். அதேபோல எண்ணெய் அளக்கற உழக்க லேசா ஒரு நூல் சாய்ச்சு புடிக்கணும்… வாங்குறவங்க கண்ணுக்கு எண்ணெய் வழிய வழிய ஊத்துற மாரி இருக்கும்… ஆனா, உழக்குல தலை தடவுனாப்புலதான் எண்ணெய் அளவு இருக்கும்… இதுலதான் நாம மிச்சம் புடிக்கணும்… புரியுதா..? என்று அவர் நடத்தும் பாடத்தை கண்ணால் பார்த்தவன் நான்!

இன்றைக்கும் உலகத்தில் நடு முள்ளை யார் எந்தப்பக்கம் தள்ளி விடுகிறார்கள் என்றும் அந்த நூல் அளவு வித்தியாசத்தில் வழியும் விஷயத்தையும் என்னால் கண்டுபிடித்துவிட முடியும். அந்தக் கடைப் பையன் என்னவாக இருக்கிறானோ தெரியவில்லை!

Monday, June 14, 2021

வீடு பேறு! 2/16

 இந்த கொரோனா முதல் அலைக் காலத்தில் ஈரோட்டில் இருந்து தங்கராஜ் போன் பண்ணியிருந்தான். ‘ஒரு வீடு கட்டியிருக்கேன்… இந்த தேதியில் பால் காய்ச்சப் போறேன்… உன் வேலைக்கு ஏற்றபடி பிளான் பண்ணிக்கோ..! என்றான். தங்கராஜ் எப்போதுமே அப்படித்தான்… தன் தரப்பு விஷயங்களைச் சொல்வானே தவிர தன் விருப்பங்களைச் சொல்லமாட்டான். ஒருவேளை அது என்னால் நிறைவேற்ற முடியாததாக இருந்துவிட்டால் அவன் விருப்பத்தைச் செய்யமுடியவில்லையே என்று நான் வருத்தப்படுவேனோ என்று நினைப்பான். அதனாலேயே விருப்பமாக எதையும் சொல்லமாட்டான்.

அம்மாவும் தங்கையும் போய்ப் பார்த்துவிட்டு வீடு அருமையாக இருக்கிறது என்று சிலாகித்துச் சொன்னார்கள். எனக்கும் தங்கராஜ் வீட்டைப் பார்க்க வேண்டும் போலத்தான் இருந்தது. ஆனால், அப்போது படப்பிடிப்பு வேலை இருந்தது, கொரோனா அலையடித்து முடிந்த பிறகு சிலநாட்கள் அங்கு தங்கும் வகையில் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

எனக்கு தங்கராஜ் வீடு என்றதும் செங்கோட்டையில் வண்டிமலச்சி அம்மன் கோவில் அருகே அவன் குடியிருந்த வீடுதான் நினைவில் வருகிறது. மிகப் பழமையான வீடு அது. உள்ளே நுழைந்ததும் ஒரு கூடம்… இடதும் வலதுமாக அறைகள் என்று குத்துமதிப்பாகத்தான் அந்த வீடு என் நினைவில் இருக்கிறது. அவனுடைய அப்பா செங்கோட்டை பஸ் நிலையம் எதிரில் ஒரு கடை வைத்திருந்தார். பெரிதாக வியாபாரம் எதுவும் நடக்காது. ஆனாலும் சின்சியராக கடையில் இருப்பார்.

எங்கள் நட்பு வட்டத்திலேயே முதன்முதலில் வேலைக்குச் சென்றவன் தங்கராஜ்தான். சானிடரி இன்ஸ்பெக்டர் கோர்ஸ் படித்துவிட்டு முனிசிபல் அலுவலகத்தில் சானிடரி இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தான். கும்பகோணத்தில் வேலை பார்த்தான். மேன்ஷன் போன்ற இடத்தில் அறை எடுத்து தங்கியிருந்தான். அங்கே போனால் ராஜ மரியாதை கிடைக்கும். எஸ்.ஐ நண்பர் என்பது பெரிய கெத்து!

அவன் செங்கோட்டைக்கு வரும் நாட்களில் வீட்டுக்குப் போவேன். பெரும்பாலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக்காலத்தில்தான் வீட்டுக்கு வருவான். எனக்கும் அப்போதுதான் கல்லூரியில் விடுமுறை கிடைக்கும். ஊருக்கு வந்திருப்பேன்.

பொதுவாகவே அவன் வீடு பெரிய அலங்காரம் ஏதுமில்லாமல்தான் இருக்கும். அது எளிமை என்றுதான் பலநாள் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவன் அப்பாவின் மனநிலை என்று ஒருநாள் தெரிந்து கொண்டேன்.

ஒருமுறை பொங்கலுக்கு அவன் வீட்டுக்குப் போன போது வெள்ளையடிக்கப்படாமல், வாசலில் கோலம் இல்லாமல் பளிச்சென்று வெறுமையாக இருந்தது. என்ன இது என்று கேட்டபோது, வீடு இருக்கறவங்களுக்குதான் பொங்கல் என்பது பண்டிகை… இல்லாதவங்களுக்கு அது ஒரு விடுமுறை நாள்… அவ்வளவுதான்! என்றார் அவன் அப்பா. இது வீடுதானே என்றபோது, ‘வீடுதான்… ஆனா, என் வீடுனு உரிமையோடு சொல்ல முடியாதுல்ல… நான் தங்கியிருக்கிறேன்… அவ்ளோதான்…’ என்றார். தங்கராஜ் வழக்கம் போல சிரித்துக் கொண்டே என்னை வெளியில் அழைத்து வந்தான்.

அதன்பிறகு அவன் தென்காசிக்கு மாற்றல் வாங்கி வந்த பிறகு அவனுக்குத் திருமணமும் ஆன பிறகு தென்காசியில் ஹவுசிங் போர்டு பகுதியில் வாடகைக்கு குடியிருந்தான். அங்கு சென்றிருந்த போதும் அப்பா அதே ஜென் மனநிலையில்தான் இருந்தார். எல்லா விஷயங்களும் இயல்பாக கலகலப்பாகப் பேசுவார். பத்திரிகைப் பணி பற்றியெல்லாம் விலாவாரியாகப் பேசுவார். வீடு பற்றி மட்டும் அவரும் பேசுவதில்லை, நானும் எதுவும் கேட்டுக் கொள்வதில்லை!

அப்பாவின் அந்த மனநிலையினாலேயே என்னால் அவன் குடியிருந்த செங்கோட்டை வீட்டையும் சரி, தென்காசி ஹவுசிங் போர்டு வீட்டையும் சரி, அறை அறையாக நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. கொஞ்சம் மங்கலாகத்தான் நினைவில் இருக்கிறது. அப்பா சொன்னது போலவே அது அவர் வீடு அல்லவே..! அப்பாவுக்கே அது வீடு இல்லை என்னும்போது அது எப்படி தங்கராஜ் வீடாக இருக்கமுடியும்!

தங்கராஜ் மனதிலும் வீடு என்பது ஒரு விஷயமாகவே இருக்காது. சம்பாதிக்கத் தொடங்கிய பிறகும் வீடு வாங்கவோ கட்டவோ வேண்டும் என்ற என்ணம் இருப்பதாகவோ தெரியவே தெரியாது. அவன் அதுபற்றியெல்லாம் பேசமாட்டான். தென்காசியில் தங்கராஜ் உட்பட நண்பர்கள் எல்லோரும் இடம் வாங்கி குடியிருப்பாக வீடுகள் கட்டலாம் என்று பேசினோம். பேச்சளவிலேயே இன்றும் இருக்கிறது அந்தத் திட்டம்!

மாற்றலாகிப் போகும் இடங்களில் எல்லாம் நமக்கு ஒரு வீடு கிடைக்காமலா போய்விடும்… அதுபற்றிப் பேசவும் கவலைப்படவும் என்ன இருக்கிறது என்பதுதான் அவன் எண்ணம். அப்படியேதான் அதை அமைத்துக் கொள்ளவும் செய்தான்.

அவன் கொஞ்சகாலம் சங்கரன்கோவிலில் வேலை பார்த்தான். அப்போது தனியாக ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தான். தங்குமிடம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அவனுடைய உதவியாளர் அதை வீட்டைவிட மேலாகப் பார்த்துக் கொள்வார். நாம் போய்த் தங்கினால் தங்கராஜுக்குக் கிடைக்கும் அதே மரியாதை நமக்கும் கிடைக்கும். தேர்தல் காலங்களில் தொகுதி குறித்த அலசல் கட்டுரைகளுக்காகச் செல்லும்போது அந்த வீடுதான் எனக்கு இளைப்பாறுதல் தந்தது.

தங்கைக்கு ராஜபாளையத்தில் திருமணம் நடந்த நாளில் அவள் இல்லாத என் வீட்டை எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பத்தில் இருந்தபோது அவனுடைய சங்கரன் கோவில் வீட்டுக்குத்தான் ஓடினேன். தேர்தல் வேலை ஒரு சாக்கு என்றாலும் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ள அந்த நிழல் உதவியாக இருந்தது.

இப்போதுமே அப்படித்தான் சொல்வான், அவன் இருக்கும் வீடு என்பது நமக்கும் உரிமை உடையதுதான்… அதில் நீயும் பங்கெடுத்துக் கொள்ளலாம் என்பான்.

கால மாற்றத்தில் கணினித் துறையில் வேலைக்குப் போன தங்கராஜின் தம்பி பாரி செங்கோட்டை குற்றாலம் சாலையில் ஒரு அவுட்டர் ஏரியாவில் இடம் வாங்கி வீட்டைக் கட்டினான். அந்த வீட்டில்தான் தங்கராஜின் அப்பாவும் அம்மாவும் இருந்தார்கள். அங்கிருந்துதான் ஒருநாள் தங்கராஜ் அழைத்துச் சொன்னான், அப்பா இறந்துட்டாங்க என்று!

சொந்த வீட்டில் இருந்து இறுதிப் பயணம் புறப்பட்ட அப்பாவின் முகத்தில் இருந்த சிரிப்பு எந்த வீட்டில் இருந்தபோதும் அவரிடம் நான் பார்த்தறியாதது!

Saturday, June 12, 2021

வீடுபேறு! 01/16

 நான் சென்னையில் வீடு வாங்கலாம் என்று முடிவெடுத்து கோடம்பாக்கத்தில் ஒரு அபார்ட்மெண்டில் முதல் மாடியில் ஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்டையும் பார்த்து முடிவு செய்துவிட்டு, அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு போனேன். அவர்களுக்குப் பிடித்திருந்தால் அட்வான்ஸ் கொடுத்துவிடலாம் என்பது திட்டம்.

கதவைத் திறந்த நொடியில் அப்பா சொன்னார்… இதையா வீடுனு சொல்லி கூட்டிட்டு வந்தே..? இந்த தரை… கீழ்வீட்டுக்காரனோட கூரை, கூரை… மேல் வீட்டுக்காரனோட தரை, இந்தச் சொவரு அந்த வீட்டுக்காரனோடது, அந்தச் செவரு இந்த வீட்டுக்காரனோடது, ஒரு பூட்டையும் சாவியையும் வாங்கி இந்தக் கதவைப் பூட்டிட்டா அது உன் வீடு… அதுசரி… உனக்கு பயன்படும்னா வாங்கிக்கோ..!’ என்றார் அப்பா. அந்த வீட்டுக்கே நான் வங்கிக்காரனோடு பதினைந்து வருட கடன் ஒப்பந்தம் போட்டிருந்தேன்.

அப்பாவின் கேள்விக்குக் காரணம் கிராமத்தில் இருக்கும் அவருடைய வீடு! அந்த வீட்டின் முன் வாசலில் நின்று பார்த்தால் பின்வாசலில் நிற்பவர் மங்கலான புள்ளியாகத் தெரிவார். வாசலில் ஏதோ சத்தம் கேட்டால் அடுக்களையில் இருந்து மூன்று கட்டுகள் தாண்டி வந்தால்தான் முற்றத்தில் நிற்கும் ஆள் யார் என்று முகம் பிடிபடும்!

அப்பாவின் தாத்தா காலத்தில் சிறு வீடாகத்தான் இருந்தது. சொல்லப் போனால் அப்பாவின் தாத்தாவும் ஆச்சியும் கொத்தனாரும் சித்தாளுமாக நின்று சேர்ந்து கட்டிய வீடு அது. உழைப்பின் வாசம் அந்த வீட்டில் அடிக்கும். அந்த வீட்டில்தான் என் பெரிய தாத்தா, சின்னத் தாத்தா தொடங்கி பல பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள் அந்த பெரிய ஆச்சி! என் தந்தை கல்யாணம் கூட அந்த வீட்டு வாசலில் உள்ள முற்றத்தில் யானைப் பந்தல் போடப்பட்டுதான் நடந்திருக்கிறது. நான் பிறந்து மண்ணைச் சுரண்டித் தின்று வளர்ந்த வீடு அது. அந்த வீட்டின் ஆயுள் முடிந்ததை அடுத்து அப்பா அதை இடித்துக் கட்டினார். அப்பா காலத்தில் இரண்டு தவணையாக கட்டப்பட்ட வீடு அது!

இப்போது இருக்கும் அமைப்பில் எங்கள் வீட்டைப் பற்றிச் சொல்கிறேன்.

வாசலில் ஒரு கேட்… அதைத் திறந்தால் ஒரு வெளிமுற்றம்… போர்ட்டிகோ… அடுத்து சின்னஞ்சிறு சிட் அவுட்… அதில் இருந்து உள்ளே நுழைந்தால் புது பட்டால… அதிலேயே படி அமைத்து மாடிக்குச் செல்லும் வழி! அதைத் தாண்டினால் பழைய பட்டால, அடுத்து ரெண்டாம் பத்தி… அதன் ஒருபகுதியை இரண்டாகப் பிரித்து நெற்குதில்… அரங்கு வீடு எனப்படும் ஸ்டோர் ரூம், அதற்கு அடுத்து அடுக்களை… அரங்குவீட்டின் வாசல் அடுக்களையைப் பார்த்து இருக்கும். அதற்கு அடுத்து சாய்ப்பு… அதன் ஒருபகுதியில் பாத்ரூம்… அதில் இருந்து இறங்கினால் திறந்த வானவெளி… அடுத்து நீண்ட மாட்டுத் தொழுவம், கடைசியில் இரண்டு கக்கூஸ்!

இரண்டு முறை கேட்டுக்கும் கக்கூஸுக்கும் நடந்தால் பசிக்கும்!

அகலம் குறைவான வீடென்பதால் சைடு ரூமுக்கெல்லாம் வழியில்லை. இப்போதாவது மாடியிருக்கிறது, மாடியில் ஒரு முன்னறையும் அறையும் இருக்கிறது. ஆனால், இந்த வீடு இடித்துக்கட்டப்படுவதற்கு முன்பு அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

அந்த வீட்டின் வடிவத்தையும் சொல்கிறேன்.

வாசலில் இருந்து நுழைந்தால் நடைகூடம்… உள்ளே வந்தால் முற்றம்… நடைகூடம் போக மீதியிருக்கும் இடத்தில் ஒரு அறை… முற்றத்தைத் தாண்டினால் ஒரு திண்ணை, அடுத்து ஒரு பட்டாலை, அடுத்து இரண்டாம் பத்தி, அதில் வலதுபக்கம் மறைத்து நெற்குதில், அதைத் தாண்டி படியிறங்கினால் வானவெளி, அதில் ஒருபக்கம் திறந்த பாத்ரூம், இன்னொருபக்கம் தண்ணீர் தொட்டி, அடுத்து அடுக்களை, அதன் மூலையில் ஒரு அங்கணக் குழி! திறந்து பின்பக்கம் இறங்கினால் ஒரு பழைய தொழுவம், பசு மாடுகளைக் கட்ட, பின்னால் இன்னொரு புது தொழுவம், எருமைகளையும் காளைகளையும் கட்ட.. அதைத் தாண்டிப் போனால் ஒரு எருக்குழி!

காலைக்கடன்களுக்கெல்லாம் ஊருக்குக் கிழக்கே இருக்கும் குளம்தான்! அதன்பிறகு நீண்டகாலத்துக்குப் பிறகு எருக்குழியை ஒட்டி ஒரு நெரசல் கட்டப்பட்டது. கூரை வைத்து மறைக்கப்பட்ட தடுப்பு கொண்ட எடுப்பு கக்கூஸ்தான் அந்த நெரசல்! அதுவே எங்கள் ஊரில் ஆடம்பரம்!

ஒருகட்டத்தில் இந்த அடுக்களை இடிந்துவிடும் சூழல் வந்தவுடன் திண்ணையையும் பட்டாலையையும் வைத்துக் கொண்டு மீதி எல்லாவற்றையும் இடித்து கட்டினார் அப்பா. அதன்பிறகு சிலகாலம் கழித்து முன்பக்கம் உள்ள பகுதியையும் இடித்துக் கட்ட மொத்த வீடும் புதிதானது. அந்தப் புதிய வீட்டுக்கே வயது இருபத்தைந்துக்கு மேலாகிறது.

நாங்கள் படுக்கும் அறையைப் போலவே புதிய வீட்டிலும் மாறாமல் இருப்பது மாட்டுத் தொழுவம். அப்பாவுக்கு அரசாங்க வேலை என்றாலும் தன்னை விவசாயத்துக்கும் பகிர்ந்து கொடுத்திருந்தார். அதனால், பசுவும் கன்றுமாக பால்மாடு நிற்கும். சொசைட்டிக்கு கறந்து கொடுக்க எருமையும் நிற்கும். வயல் வேலைகளுக்கு, வண்டி இழுக்க காளைமாடுகளும் உண்டு.

நிலங்களை எல்லாம் குத்தகைக்குக் கொடுத்துவிட்ட காலத்தில் அடிகுழாயில் மாடு குளிப்பாட்டக் கூடிய சூழலும் வந்த நேரத்தில் தொழுவம் என்பது துணி காயப்போடும் இடமாகி விட்டது.

பழைய வீட்டை இடித்துக் கட்டியதில் நான் இழந்த முக்கியமான அம்சம் வெளிவாசலில் இருபக்கமும் இருந்த மாப்பிள்ளைத் திண்ணைதான். எல்லா வீட்டு வாசல்களிலும் இரண்டு பக்கமும் இரண்டு திண்ணைகள் இருக்கும். கல்லா மண்ணா விளையாட்டு தொடங்கி கதை பேசும் காலம் வரையில் அந்தத் திண்ணை எங்களுக்கு சிம்மாசனம்! மணிக்கணக்கில் உட்கார்ந்து அரட்டை அடிப்போம்.

அப்போதெல்லாம் முன் வாசல் திண்ணை தூணில் ஆட்டுக் குட்டி கட்டிக் கிடக்கும்… முற்றத்தில் கோழிகள் மேயும். அவற்றுக்கென்று தனியான வீடு போல கோழிக்கூடு இருக்கும். நாயும் பூனையும் ஒரே தட்டில் பால் குடிக்கும் என்று முழு சம்சாரி வீடாக இருந்தது எங்கள் வீடு.

இப்படி பத்தி பத்தியாக இருந்தால் குடித்தனம் நடத்துவது எப்படி, பிள்ளை பெற்றுக் கொள்வது எப்படி என்ற கேள்வி வருமா இல்லையா..? எங்கள் ஊரில் யாருக்கும் அந்தக் கேள்வி வந்ததில்லை. ஏனென்றால் எல்லா வீடுகளுமே அப்படித்தான் இருக்கும், அதில் வாழ்ந்துதான் வம்சத்தை விருத்தி செய்து கொண்டிருந்தது எங்கள் சமூகம். ஆனால், எங்கள் ஊருக்கு பேண்ட் போட்டுக் கொண்டு வந்த சென்னைப் பெண்ணுக்கு இந்த சந்தேகம் வந்தது சுவாரஸ்யமான ஒரு கிளைக்கதை!

எங்கள் பகுதியில் இருக்கும் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரிக்கு என்.எஸ்.எஸ் கேம்ப் வந்திருந்தனர் கல்லூரிப் பெண்கள். அவர்களில் சென்னையில் இருந்து வந்திருந்த கல்லூரிப் பெண்கள் கொண்ட ஒரு டீம் வில்லேஜ் விசிட் என்ற பெயரில் எங்கள் ஊருக்குள் வந்தது. எங்கள் தெருவில் வந்த அந்தப் பெண்கள் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தார்கள். வீட்டை மொத்தமாகச் சுற்றியவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். என்ன என்று கேட்டபோது ஒன்றுமில்லை என்று வெட்கச் சிரிப்புச் சிரித்தார்கள். பிறகு சம்பந்தம் இல்லாமல் உங்க அப்பா கூடப் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்றார்கள். அது ஏழெட்டு பேர் இருக்கும்… ஆனா, அப்பா மட்டுமே உயிரோடு இருக்கிறார் என்றேன். ஏழெட்டு பேரா… இந்த வீட்டிலேயா… எப்படி என்றார்கள் ஆச்சரியமாக!

அப்போது அவர்களில் ஒருத்தி கண்களில் பட்டது எங்கள் வீட்டு பட்டாலையில் இருந்த ஏணி. இது என்ன..? என்றாள். இது மச்சுக்குப் போற வழி என்றேன். மச்சு என்றால்..? என்றாள். வாங்க என்று அழைத்துக் கொண்டு படியேறினேன். மேலே பழைய பொருட்களைப் போட்டு வைக்கவும் தானியங்களைக் கொட்டி வைக்கவும் இடம் இருக்கும். கூடவே எங்கள் வீட்டில் கன்னிக்கு கும்பிடும் சேலையை வைத்திருக்கும் பெட்டியும் இருக்கும். அதையெல்லாம் நான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் அதையெல்லாம் கவனித்ததாகவே தெரியவில்லை. முகம் சிவக்க ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டே இருந்தார்கள். என்ன என்று கேட்டபோது சொன்னார்கள், திஸ் இஸ் த பிளேஸ், ஃபார் தட் ப்ரைவசி..!