Friday, June 25, 2021

வீடு பேறு! 5 -16

'நாங்க விசாரிக்கப் போயிருந்த அன்னிக்கு அவங்க வீடு முளைப்புடிச்சுகிட்டு இருந்தாங்க… அதுவே நல்ல சகுனமாகப் பட்டது…’ என்றார் அப்பா. அப்பா அந்த அளவுக்கு சகுனமெல்லாம் பார்க்கும் ஆள் இல்லை. ஆனால், சில விஷயங்கள் மனதுக்குப் பட்டது என்றால் பட்டென்று பிடித்துக் கொள்வார்.

இப்படித்தான் வீட்டுக்கு ஒரு டிவி வாங்கலாம் என்று கடைக்குப் போனார். கலர் டிவி வாங்கும் அளவுக்கு காசு கொண்டுதான் போயிருந்தார். ஆனால், ‘இதைப் போட்டுக் காட்டுப்பா…’ என்று ஒரு டிவியைக் கைகாட்ட, கடைக்காரரும் போட்டுக் காட்டியிருக்கிறார். அந்த கறுப்பு வெள்ளை டிவியில் பிள்ளையார் பட்டி பிள்ளையாருக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. ‘இது நல்லாயிருக்கு… இதையே பேக் பண்ணிருங்க…’ என்று சொல்லி, வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். அவர் மனதுக்கு சரி என்று படவேண்டும்.

அப்படித்தான் அந்த விஷயமும் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணா புரம் முதல் தெருவில் இருக்கும் அந்த முளைப் பிடித்த வீட்டுக்கு எதிரில் இருந்த விஜய் ஸ்டோர்ஸ்காரங்க வீட்டுக்குப் பெண் பார்க்கப் போனோம். (புதிதாகக் கட்டுவதற்காக முளைப் பிடித்த வீடும் அவர்களுடையதுதான்!) தெருவெல்லாம் கல் பரப்பி வைத்திருக்க, தெருமுனையிலேயே காரை விட்டு இறங்கி நடந்தோம். ஆச்சியின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்த நான் கடைசி ஆளாக வீட்டினுள் நுழைந்தேன்.

பெண் பார்க்கும் படலம்… புறப்படும்போது நான் அசத்தலாக இருக்கும் என்று நம்பி போட்டுக் கொண்டிருந்த ஆரஞ்சு கலர் சட்டையைப் பார்த்த அப்பா, ‘என்னடா… சட்டை மாத்தலையா..?’ என்று கேட்டு காலி பண்ணினார் என்றால், பெண் வீட்டில் லட்டு கொடுத்தவுடன், ‘ஏண்டா… பொண்ணு வீட்டுல கேசரி கொடுப்பாங்கனுதானே மேட்சா கேசரி பவுடர் கலர்ல சட்டை போட்டுகிட்டு வந்தே… இப்படி மிஸ் ஆகிடுச்சே..?’ என்று அண்ணாச்சி இன்னொருபக்கம் கேலி பண்ணினார்.

அந்த விஜய் ஸ்டோர்ஸ் வீடுதான் என் மாமனார் வீடு! ஸ்ரீவில்லிபுத்தூரில் விஜய் ஸ்டோர்ஸ் வீடு என்பதே முழு விலாசம். அந்த அளவுக்கு நகரின் பிரபலமான குடும்பம்.

அண்ணனும் தம்பியும் ஒரே குடும்பமாக இருக்காங்க… ரெண்டு பேரின் குழந்தைகளும் ஒரே வயிற்றில் பிறந்த மாதிரி இருக்காங்க… பெரிய குடும்பம்… நல்லாயிருக்கும்…’ என்று அம்மாவும் அப்பாவும் சொல்ல, அந்த குடும்பத்துப் பெண்ணே எனக்கு மனைவியானார்.

ஐந்து பெண்கள் மூன்று பிள்ளைகள் என்று மொத்தம் எட்டு குழந்தைகள். இவர்களில் என் மனைவி ஐந்தாமவர். பெண்களில் நாலாவது ஆள்! அதனால் எப்போதும் கலகலவென்று இருக்கும் வீடு.

மூத்த மருமகன் வழக்கறிஞர், அடுத்தவர் சொந்தத் தொழில், மூன்றாவதாக நான்… பத்திரிகைக்காரன்..! ஒரு மாப்பிள்ளையாவது தேதி கிழிச்சா சம்பளம் வர்ற மாதிரி கவர்மெண்ட் மாப்பிள்ளையா அமையலையே! என்று மனைவியின் பாட்டி வருத்தப்படுவார்களாம். அடுத்து வந்த இரண்டு மாப்பிள்ளைகளுமே தனியார் பணிதான்!

பத்திரிகைத் தொழில் என்பது அந்த வீட்டுக்கு ரொம்பவே புதியது. பத்திரிகைக்கும் அவர்களுக்கும் இருந்த ஒரே தொடர்பு தினமணி பேப்பர் மட்டும்தான்! திருமணமான பிறகு நான் போன அன்று கடைக்குட்டி மாப்பிள்ளையிடம் தினத்தந்தி வாங்கி வரச் சொன்னேன். அதைப் பார்த்ததும் தீயை மிதித்தது போல பதறிப் போனார் பெரிய மாமா. ஆனால், மறுநாள் முதல் தினத்தந்தியும் வீட்டுக்கு வந்தது.

என் வீட்டைப் போலவே மனைவியின் வீடும் நீளமான ரயில் பெட்டி வீடுதான். வராந்தா, முன்னறை, அடுத்த அறை, அடுக்களை பின்கட்டு என்று கச்சிதமான வீடு. வீட்டு ஆட்கள் அதிகம் என்பதால் நாலைந்து வீடு தாண்டி இன்னொரு வீடும் எதிரே ஒரு வீடும் என்று மூன்று வீடுகள் இருக்கின்றன. ஆனால், சமையல் செய்யும் வீடுதானே வீடு!

மூத்த மகனின் திருமணத்துக்குப் பிறகு பெரிய மாமாவும் சின்ன மாமாவும் தனித்தனி குடும்பங்கள் ஆனார்கள். மருமகன்கள் என்பவர்கள் வரும் நேரமெல்லாம் திருநாளாக இருக்கும். ஆனால், மருமகள் என்பவள் வீட்டிலேயே இருக்க வேண்டியவள். அதனால், அவளுக்கான இடமும் நேரமும் கூட்டுக் குடும்பத்தால் மூச்சுமுட்டிவிடக் கூடாது என்பதால் எல்லோருமாகப் பேசி தனித்தனி ஆனார்கள். ஆனால், மருமகன்கள் வரும் நேரம் ஒரே குடும்பமாகத்தான் இருக்கும்!

தினத்தந்தி போலவே அந்த வீட்டில் என்னால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. எப்போது அங்கு போனாலும் அசைவம் மணக்கும். சைவம் சமைத்தாலும் அசைவ வாசனையோடு பட்டை சோம்பு மசாலா இல்லாத சமையலே இருக்காது. விருந்து உபசரிப்பு என்பதே அந்த வாசனைதான்! ஆனால், எனக்கு மசாலா வாசனை அலர்ஜி.

திருமணத்துக்குப் பிறகு எங்கள் பயணம் சுவாரஸ்யமாக இருக்கும். சென்னைக்கு புறப்படும்போது தென்காசியில் இருந்து ரயில் ஏறுவோம்… ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு பை கொடுக்கப்படும். அனேகமாக மாமா, அத்தை, மச்சான் என்று மொத்த குடும்பமுமே ரயில் நிலையத்தில் இருப்பார்கள். சில நிமிடங்கள் என்றாலும் பார்த்துக் கொள்ளமுடியுமே என்ற ஆசைதான்! அவர்கள் கொடுக்கும் பையில் அன்று புதிதாக கடைக்கு வரும் வார பத்திரிகை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்பெஷல் பால்கோவா பாக்கெட்டுகள், கூடவே இரவு உணவு, தண்ணீர் பாட்டில்! (அந்த தண்ணீர் பாட்டில் சென்னை வந்த பிறகும் இரண்டு மூன்று நாட்கள் என் மனைவியின் ஊர் தாகத்தைத் தீர்க்கும்)

தொடக்கத்தில், ஒருமுறை இந்த பட்டியலில் கடைசியாக இருந்த உணவுப் பாக்கெட்டைத் திறந்தோம். ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பான ஹோட்டலில் இருந்து வரவைக்கப்பட்ட பிய்த்துப் போட்ட பரோட்டா, சிக்கன் குருமா..! ஒரே நேரத்தில் அய் என்றும் அய்யே என்றும் இரண்டு குரல்கள்! அய் என்பது மனைவியின் குரல். அய்யே என்பது என் குரல்!

ஏன் அய்யே என்று கேட்ட மனைவியிடம், ஹோட்டலில் சாப்பிடுவது என்றால் பார்டர் பரோட்டாவே வாங்கியிருக்கலாமே… வீட்டு சாப்பாடுதானே வேணும் என்று விளக்கம் சொன்னேன். அது அப்படியே ரெக்கார்டட் வாய்ஸாக விஜய் ஸ்டோர்ஸ் வீட்டுக்குப் போய்ச் சேர அன்றுமுதல் இன்று வரை வீட்டுச் சாப்பாடுதான்!

அதிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்கெட்டில் காய்கறிக் கடை வைத்திருப்பவர், சரியாகச் சொல்லிவிடுவார், நான் என்று ஊருக்கு வருகிறேன் என்று! நான் ஊருக்குப் போகும் தினத்தில் அவர் கடை கத்தரிக்காய் கடைசலும் இட்லியும்தான் காலை டிபனாக இருக்கும்! சின்ன மாமா காய்கறிக் கடைக்கு காலங்கார்த்தால போய்விடுவார்.

முதலில் சின்ன மாமா, அடுத்து அவர்களின் சகோதரி, சமீபத்தில் பெரிய மாமா என்று கால இடைவெளியில் ஒவ்வொருவராக இயற்கையுடன் கலந்துவிட, களையிழந்து விட்டது விஜய் ஸ்டோர்ஸ் வீடு. ஆனாலும் அடுத்த தலைமுறை இன்னும் உத்வேகத்தோடும் அன்போடும் பொலிவு பெற்று விட்டது வீடு! அதன் உதாரணம் முந்தைய தலைமுறைக் கனவை அடுத்த தலைமுறை கையில் எடுத்திருப்பதுதான்!

என் இரண்டாவது மச்சான் திருப்பதி என் மகனிடம் விடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான், ‘மருமவனே… என்ன வேணா படி… ஆனா, பச்சை மையில கையெழுத்துப் போடுற வேலைக்குப் போயிரு… அதுதான் கவுரவம்… புரியுதா… மருமகனுக்கு பச்சை மை மாமா கடையிலருந்துதான்… சரியா?’

No comments: