Thursday, July 1, 2021

வீடுபேறு! 6 – 16

 முதன்முறையாக சுப்புராஜ் வீட்டுக்குச் சென்றபோது கோழிக்கறி வாசனையோடு என்னை வரவேற்றது அவன் வீடு. வீடு என்று சொல்லிக் கொண்டாலும் வரவேற்றது அம்மாதான். என்னை யாரென்று கூட சுப்பு அம்மாவுக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆனால், சுப்புவின் குரல் கேட்டு அடுக்களையில் இருந்து வரும்போதே இரண்டு தட்டுகளோடு வந்தார் அம்மா. அவன் எப்போதும் நண்பர்களோடுதான் வீட்டுக்கு வருவான் என்று நினைத்தார்களோ அல்லது அவனோடு சேர்ந்து அமர்ந்து தானும் சாப்பிடலாம் என்று நினைத்து எடுத்து வந்தார்களோ தெரியாது, ஆனால், அன்றைக்கு அவன் வீட்டு அரிசியில்தான் என் பெயர் எழுதப்பட்டிருந்தது.

கண்ணை மூடிக் கொண்டு யோசிக்கும்போது ஒவ்வொரு வீடுமே ஒவ்வொரு நினைவைத் தரும். சுப்புவின் வீடு எனக்கு எப்போதும் வாசனை அடையாளத்தையே தரும். எப்போதும் ஏதேனும் ஒரு வாசனையைச் சுமந்தபடிதான் நிற்கும் அந்த வீடு. ஒன்றுமில்லாவிட்டாலும் நைனாவின் பொடி வாசனை… அல்லது திண்ணையில் இருக்கும் கண்ணாடி முன்னால் இருக்கும் பவுடர் டப்பா வாசனை!

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே என்னை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான் சுப்பு. பள்ளிக்கூட இலக்கிய மன்றத்தில் நான் தலைவர், அவன் செயலாளர். இலக்கிய மன்றக் கூட்டங்களுக்கு விருந்தினர் அழைத்து வரும் வேலைக்காக இருவரும் அலைந்து கொண்டேதான் இருப்போம். எத்தனை தூரத்தில் இருந்தாலும் வீட்டுக்கு போயிட்டு ஸ்கூலுக்குப் போகலாம் என்பான். நானும் சரி என்பேன். இருவரும் அவன் வீட்டில் சாப்பிடச் செல்வோம்.

ஒரு திண்ணை, அடுத்து ஒரு சிறிய அறை, அடுத்து அடுக்களை என்று மிகச் சின்னதான வீடுதான் சுப்புவின் வீடு. அதை ஒட்டி இதே அளவுக்கான இன்னொரு வீடு இருந்தது. இரண்டுக்கும் எதிரே ஒரு தனி அறை இருந்தது. இந்த மூன்றும் ஒரு காம்பவுண்ட் உள்ளே இருந்தது. இது மொத்தமும்தான் சுப்புவின் வீடு.

ஆனால், பக்கத்து வீட்டில் வேறொரு குடும்பம் இருந்தது. எதிரே இருந்த அறையில் சுப்புவின் அண்ணன் ரவி அண்ணனின் அலுவலகம் இருந்தது. அவர் ஏதோ போஸ்டல் சேமிப்பு வேலையைப் பகுதி நேரமாகச் செய்து வந்தார். முழு நேர வங்கிப் பணி அவருக்கு! அண்ணிக்கு அம்பாசமுத்திரத்தில் ஆசிரியை வேலை என்பதால் குடும்பம் அங்கே இருந்தது. அண்ணன் மட்டும் ரயிலில் வந்து போய்க் கொண்டிருப்பார். எங்களை அவர் பார்க்கும் ஒரு பார்வையில் உழைப்பின் மதிப்பு தெரியுமா என்ற தலைப்பில் ஒரு மணிநேர சொற்பொழிவுக்கான செறிவு இருக்கும். அவர் உழைப்பு அந்த அளவுக்கானது!

என்னுடைய முதல் எழுத்து சுப்புவின் வீட்டில்தான் தொடங்கியது. என்னுடைய பத்திரிகைப் பணிக்கான முதல் விதையை அவன் வீட்டில் இருந்துதான் தூவினேன். எனக்கு  முன்னதாக விகடனில் வேலை செய்தவன் அவன். அவனைப் போல எழுத ஆசைப்பட்டுதான் பத்திரிகையாளன் ஆனேன். இப்போதும் அவன் அனுப்பும் குறுஞ்செய்தியும் சிறு வார்த்தைகளும் பல பக்கங்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும்.

பொதுவாக வீட்டுக்கு ஊரில் இருந்து அக்கா, மாமா எல்லாம் வந்திருந்தால் நண்பர்களுக்கு இடமிருக்காது. சொந்தங்களை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும் என்ற நிலையில் நண்பர்களைக் கூப்பிடவே மாட்டார்கள். ஆனால், சுப்பு வீட்டில் அக்கா, பாவாக்கள் வந்திருக்கும்போதுதான் நாங்கள் கூடுவோம். சுப்புவுக்கு இணையாக பாவாவைக் கலாய்ப்போம். அவரும் சிரித்துக் கொண்டே சமாளிப்பார்.

பிள்ளைகள் மாமா மாமா என்று தோளில் தொங்கிக் கொண்டே திரிவார்கள். நாங்களும் அடுத்த ஆளுக்கு மிச்சமிருக்குமா என்றெல்லாம் கவலை இல்லாமல் சட்டியைக் கவிழ்த்து சாப்பிட்டு விட்டு வருவோம்.

தென்காசியில் சுவாமி சந்நிதி தெருவில் இருந்த நைனாவின் தையல் கடை வீட்டுக்கு இடமாறியது. கிட்டத்தட்ட நைனா ரிட்டயர்ட் ஆகிவிட்டார். ஆனால், அம்மாவுக்கு ஓய்வே இல்லை. அடுக்களைக்கும் திண்ணைக்குமாக நடந்து கொண்டேதான் இருந்தார்.

எப்போதும் பத்திருபது பேரோடு கலகலவென்றிருக்கும் வீடு கொஞ்சம் கொஞ்சமாக அமைதியானது. சுப்புவுக்கு வேலை கிடைத்து வெளியூர் கிளம்பினான். அவன் தம்பி கிருஷ்ணாவும் திருப்பூருக்குப் போனான். நாங்களும் சென்னைக்கு வந்தோம். அதன்பிறகு தென்காசிக்குப் போகும்போது சுப்பு வீட்டுக்குப் போனால் அம்மா மட்டும் கட்டிலில் படுத்துக் கிடப்பார்.

வாப்பா பாபு… டீ குடிக்கிறியா..? என்பார். இல்லம்மா… நீங்க படுங்க என்றால், நானும் குடிச்சுக்குவேன்… என்று டீ போடுவார். ஊர் பக்கமே வர்றதில்லையா… இல்லை, இங்கே வராம ஓடிப் போயிடுறியா..? என்பார். ஊருக்கு வருவதே குறைஞ்சுடுச்சும்மா என்று சொல்லும்போது குரல் உள்ளே போய்விடும். எதற்காக ஓடி ஓடி காசு சேர்க்கிறீங்க..? என்று அவர் கேட்காவிட்டாலும் நம் மனம் அந்தக் கேள்வியைக் கேட்கும். குற்ற உணர்ச்சியில் தலை தானாகக் குனியும்.

வேலை எப்படி இருக்கு..? வருமானம் சமாளிக்க முடியுதா..? உங்க நைனா கொண்டு வர்ற காசை வெச்சு அஞ்சு புள்ளைகளை ஆளாக்கினேன்… இப்ப எவ்வளவு சம்பாதிச்சாலும் பத்தாதுங்கற மாதிரி இருக்கு… நீங்க ஓடத்தானே வேண்டியிருக்கு… உங்க பிழைப்பும் அங்கே கிடக்கு… வர்றப்ப அம்மாவை ஒரு எட்டு பார்த்துக்கோங்க… அது போதும் என்பார். குற்ற உணர்ச்சிக்கெல்லாம் தேவையில்லை… என்று நமக்கு ஆறுதல் சொல்லும் வார்த்தைகளாக அவை இருக்கும்.

ஒருகட்டத்தில் நைனாவும் இல்லாமல் அம்மாவுக்கும் தனியே இருக்க முடியாமல் அக்கா வீட்டோடு போய் விட்டார். சுப்பு திருநெல்வேலியில் இருந்தான். அம்மாவுக்கு தென்காசியைத் தாண்டி வர மனதில்லை. கடைசி வரை தென்காசியிலேயே இருந்துவிட்டுப் போய்விட்டார்.

இப்போதும் தென்காசியில் இருக்கும் சுப்புராஜின் வீடு வாசனையோடுதான் இருக்கும், அம்மாவின் வாசனையோடு..!

No comments: