Monday, July 5, 2021

வீடுபேறு..! 07/16

 அடிக்கடி என் கனவில் ஒரு வீடு வந்துபோகும். விசாலமான புல்தரை, அதிலிருந்து படியேறினால் திறந்த திண்ணை… அதில் பிரம்பு நாற்காலிகள், அந்தத் திண்ணையில் இருந்தே செல்லும் வகையில் ஒரு அறை… படிக்கவும், எழுதவும்..! திண்ணையில் இருந்து உள்ளே நுழைந்தால் உயர்ந்த சீலிங் கொண்ட பெரிய அறை, அதிலேயே மாடிக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள், அங்கிருந்து உள்ளே சென்றால் சமையலறையும் பக்கத்தில் படுக்கையறையும். மாடியில் இரண்டு அறைகள், பால்கனிகளோடு..! இந்த வீட்டில் எல்லா அறைகளுமே மிகப் பெரிய அளவில் இருக்கும். பெரும்பாலும் நான் மாடியில் இருக்கும் பால்கனியில் நின்று காபி குடித்துக் கொண்டிருக்கும்போதோ அல்லது தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும்போதோ கனவு கலைந்துவிடும்.

செல்லதுரை தாத்தா வீட்டுக்குச் சென்றபோது என் கனவு வீட்டைக் கண்டேன்… என்னுடைய இந்தக் கனவில் வராத விஷயம் அந்த வீட்டில் இருக்கும் மனிதரின் மலர்ந்த புன்னகை!

ஒரு வீடு என்பது குடும்பத்தின் அடையாளம்… குடும்பத்தின் அடையாளம் என்பது ஊரின் அடையாளமாகவும் இருக்கும் என்றால் அது செல்லத்துரை தாத்தாவுடையதுதான். செங்கோட்டைக்கு அருகில் இருக்கும் வல்லம் கிராமத்தில் வீனஸ் குடும்பம் என்றால் மிகவும் பிரபலம். அந்தக் குடும்பத்தில் ஒருவர்தான் செல்லதுரை தாத்தா. எங்கள் மாமாவுக்கு மகளைக் கொடுத்ததன் மூலமாக எனக்குத் தாத்தாவாக ஆனார்.

பூர்வீகம் வல்லம் கிராமம் என்றாலும் நான் தாத்தாவைப் பார்த்தது எல்லாமே செங்கோட்டையில் இருந்த வீட்டில்தான். என் இரண்டு மாமாக்கள் செல்லதுரை தாத்தாவின் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டதால் எங்களுக்குள் இரட்டிப்பு உறவு என்றுகூடச் சொல்லலாம்.

இரண்டு மாமாக்களின் திருமணங்களுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் செல்லதுரை தாத்தா செங்கோட்டை பஸ் ஸ்டாண்டு பின்புறமிருக்கும் பெரிய வீட்டை வாங்கினாங்க, என் கனவில் வந்து போன வீட்டை!

முதன்முதலாக அந்த வீட்டுக்குப் போனபோது அத்தனை சந்தோஷமாக இருந்தது. கூடுதலாக வாசலில் நின்றபடி வாங்க பேரப்புள்ள என்று செல்லதுரை தாத்தா புன்னகை முகமாக அழைத்த விதமும் மகிழ்ச்சியைத் தந்தது.

திண்ணையின் இடதுபக்கம் இருக்கும் அறையை தாத்தா அலுவலக அறையாகப் பயன்படுத்தினாங்க. அங்கே ஒரு சோபா செட் இருக்கும். அவங்களுக்கான அலுவலக மேசையும் நாற்காலியும் இருக்கும். டீத் தூள் பிசினஸில் இருந்தாங்க. ஆனால், ஒருநாள்கூட என் தொழில் எப்படி தெரியுமா… என்னவெல்லாம் கஷ்டப்பட்டேன் தெரியுமா என்றெல்லாம் பேசியது கிடையாது.

எல்லா விஷயங்களும் பேசுவோம். அரசியலில் தொடங்கி சினிமா முதற்கொண்டு சீரியல் வரைக்கும் எல்லாமும் பேசுவோம். கேள்விகளாக கேட்டுக் கொண்டே இருப்பார்களே தவிர எந்த விஷயத்திலும் இது இப்படித்தான் பேரப்பிள்ளே… என்ன தெரியாமப் பேசுறீங்க என்று சொன்னதே கிடையாது.

அரசியலில்… அதிலும் தேர்தல் வந்துவிட்டால் அனுமானங்களையும் ஆசைகளையும் கலந்து கேள்விகளாகக் கேட்பாங்க. எப்படி பேரப்புள்ள அதிமுகதான் ஜெயிக்கும்னு சொல்லுதீங்க..? என்று கேட்பாங்க. இதுதான் தாத்தா என் யூகம் என்றால் ஓ… அப்படி ஒரு விஷயம் இருக்குல்ல… அதுக்குதான் பேரப்புள்ள வேணுங்கறது… எனக்கு இது தோணலை பார்த்தீங்களா..? என்று சந்தோஷப்படுவாங்க.

இடையே லட்சுமி ஆச்சி டீ கொண்டு வருவாங்க. லட்சுமி… போன தடவை பேரப்புள்ள வந்திருந்தப்ப இப்படி ஒரு விஷயம் சொன்னான்னு உன்கிட்டே சொன்னேன்ல… அது அப்படியே நடந்துச்சு பார்த்தியா… அதுதான் பத்திரிகைகாரங்க மூளை..! என்று பாராட்டுவாங்க.

நான் கல்லூரி முடித்த போது சினிமாவில் போய் வேலை பார்க்கலாம் என்ற ஆசை எழுந்தது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சினிமா என்ற நிலையில்லாத துறையில் சிரமப்பட வேண்டுமே என்ற கவலை. அப்போது என்னிடம் செல்லதுரை தாத்தாதான் பேசினாங்க. பெற்றவங்களோட கவலை எத்தனை நியாயமானது. அவங்களோட ஓய்வுகாலத்துல பிள்ளைகளின் நிலைமைக்காக கவலைப்படுற சூழல் வந்துட்டா எத்தனை கஷ்டம்… அந்த பயம் அவங்களுக்கு இருக்குமில்லையா… நீ ஒரு வேலையத் தேடிகிட்டு அதுக்குப் பிறகு கனவைத் துரத்திகிட்டு போ… அவங்களும் சந்தோஷமா ஆசீர்வாதம் பண்ணுவாங்க என்று எடுத்துச் சொன்னாங்க. நான் கிட்டத்தட்ட சினிமா கனவை மூட்டை கட்டும் முடிவுக்கு வந்துவிட்டேன்.

அடுத்து வந்த ஒருநாளில் அம்மாவும் அப்பாவும் என்னை உட்கார வைத்து நீ ஆசைப்பட்டபடி சினிமாவுக்கு முயற்சித்துப் பார்… ஐந்து வருடம் உனக்கு அவகாசம்… அதுக்குள்ளே உன்னால் அதில் காலூன்ற முடியும்னு தோணலைன்னா திரும்பி வந்துடு… அதுவரைக்குமான உன் செலவுகளை நாங்க பார்த்துக்குவோம் என்று சொன்னபோது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

என்னிடம் அப்பா அம்மாவின் தரப்பு நியாயங்களைப் பேசியதுபோலவே செல்லதுரை தாத்தா அவங்ககிட்டே என் தரப்பு நியாயங்களையும் என் ஆசையையும் எடுத்துச் சொல்லியிருந்திருக்கலாம். அதனால்தான் இந்த முடிவுக்கு வந்திருப்பாங்க போல!

ஆனால், நான் சினிமாவை விட்டுவிட்டு பத்திரிகைத் துறைக்கு வந்தபோது செல்லதுரை தாத்தாவுக்கு பெரிய சந்தோஷம். உன் கனவுக்கும் உங்க அம்மா அப்பா எதிர்பார்ப்புக்கும் ஏத்த மாதிரி ஒரு துறையப் புடிச்சிட்டியே… சந்தோஷம்னு சொன்னாங்க!

எனக்குத் திருமணம் ஆனபிறகு கூட மனைவியோடு தாத்தா வீட்டுக்குப் போனால், பேத்திப் பொண்ணு… நீதான் மாப்பிள்ளை கூட நாளெல்லாம் இருக்கப் போறியே… அவனை என்கூட கொஞ்சநேரம் தனியா விட்டுரு… நாங்க பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு…னு சிரிச்சுகிட்டே சொல்வாங்க. என் மனைவியும் லட்சுமி ஆச்சியும் செட் சேர்ந்துக்குவாங்க.

என்னிடம் பழகுவதைத் தாண்டி நான் செல்லதுரை தாத்தாவிடம் வியந்து பார்த்த விஷயம் அவங்களோட நட்புதான். அவங்ககிட்டே இஸ்மாயில்னு ஒரு தாத்தா உதவியாளரா இருந்தாங்க. லட்சுமி ஆச்சி இல்லாமல் கூட சில நாள் தாத்தா இருந்துடுவாங்க… இஸ்மாயில் தாத்தா இல்லைன்னா கை உடைஞ்ச மாதிரி ஆகிடும். எந்த விஷயமா இருந்தாலும், இஸ்மாயில்… என்ன சொல்லுதே என்று ஒரு வார்த்தை கேட்பாங்க… அதிலும் அவங்க இஸ்மாயில் என்பதை ஸ்மால் என்பது போலச் சொல்லும் தொனி கேட்கவே அழகாக இருக்கும்.

இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் என்று நான்கு பிள்ளைகள். அனைவருக்குமே திருமணம் முடித்து வைத்து மகன்களிடம் தொழிலை ஒப்படைத்த பிறகு ஒருவித ஓய்வு மனநிலைக்கு வந்துட்டாங்க தாத்தா. பழைய பரபரப்பு இல்லாததால் கொஞ்சம் பலவீனமாகி விட்டது போல எனக்குத் தெரிந்தது.

ஒருமுறை போய்ப் பார்த்தபோது மலர்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தாங்க. ரொம்ப நாளாச்சு பாபு இப்படிப் பேசி… சந்தோஷமா இருக்கு… நீ அடிக்கடி வந்து பார்த்துட்டுப் போ என்று சொன்னாங்க. லட்சுமி ஆச்சியும் தாத்தா சத்தம் ரொம்ப நாளைக்குப் பிறகு இன்றைக்குதான் கேட்டுச்சுனு சொன்னாங்க.

அதன்பிறகு அடிக்கடி மருத்துவம் பார்க்க வேண்டும் என்றானது தாத்தாவின் உடல்நிலை. அதனால் தென்காசியில் மகன் வீட்டில் வந்து தங்கினாங்க. அங்கு போய்ப் பார்த்தபோதும் அந்த மலர்ச்சி முகத்தில் இருந்தது.

பிறகொரு நாளில் போன் வந்தது, செல்லதுரை தாத்தா நம்மள விட்டுட்டுப் போயிட்டாங்க என்று! இன்னமும் நான் அந்த வீட்டுக்குப் போகவில்லை. என் கனவு வீட்டின் கதவுகளைத் திறக்கும் புன்னகைச் சாவியைத் தொலைத்துவிட்டு நிற்கிறேன்!

No comments: