Thursday, July 8, 2021

வீடுபேறு! 08/16

 பள்ளிக்கூட காலத்தில் எல்லோருக்கும் யாராவது ஒருவர் ஹீரோவாக இருப்பார். சைக்கிளில் வருவதே சாகசம் என்று பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவனுக்கு மோட்டார் வைத்த சைக்கிளில் வருபவர்தானே ஹீரோவாக இருக்க முடியும். அப்படித்தான் ராமலிங்கம் அண்ணனை முதன்முதலாகப் பார்த்தேன். அவருடைய வண்டி சைக்கிள் ஸ்டாண்டில் வந்து நிற்பதே அத்தனை ஸ்டைலாக இருக்கும்.

பள்ளி முடிந்த பிறகு கல்லூரிப் படிப்பு… எங்கள் ஊரின் அருகில் உள்ள கல்லூரி என்றால் அது ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரிதான். ராமலிங்கம் அண்ணன் அந்தக் கல்லூரியில் சேர்ந்தார். அடுத்த வருடம் அங்கு எனக்கு இடம் கிடைக்காமல் போக நான் திருநெல்வேலி சேவியர் கல்லூரிக்குப் போய்விட்டேன். ஆனாலும் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது கல்லூரி மாணவர் தலைவனாக ராமலிங்கம் அண்ணன் தேர்தலில் வென்றதைக் கேள்விப்பட்டபோது இன்னொருமுறை ஹீரோவாகத் தெரிந்தார்.

மூன்றாவதாக அவருடைய புல்லட்டும் ஜீப்பும் அவரை எனக்கு ஹீரோவாகக் காட்டின. தென்காசி நகருக்குள் சர்புர் என்று ஜீப்பிலும் புல்லட்டிலும் பறப்பார். டிவியே பிரபலமாகாத காலத்தில் அவரும் அவர் அண்ணனும் வீடியோ லைப்ரரி நடத்தினார்கள்.

ஒருவர் எப்போது நமக்கு ஹீரோ ஆகிறார் என்றால் நாம நினைச்ச மாதிரி அவரு வாழுறார் இல்லே என்று நினைக்கும்போதுதான்!

இடைப்பட்ட காலத்தில் நான் சென்னைக்குப் பெயர்ந்தபோது ராமலிங்கம் அண்ணனைப் பற்றிய விஷயங்கள் எதுவும் காதில் விழவில்லை. கிட்டத்தட்ட அவரைத் தொலைத்துவிட்ட நிலைதான்! மீட்டெடுக்க உதவியது முகநூல்..! அப்போது அவர் மணிவண்ணன் ஆகியிருந்தார்.

இலக்கிய உலகிலும் கட்டுமானத் துறையிலும் பலப்பல நண்பர்களைக் கொண்டவராக இருந்த ராமலிங்கம் அண்ணன் அப்போது மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தின் சொந்தக்காரர். (அவருடைய அண்ணனும் இவரும் பங்குதாரர்கள்) உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தம்பி… நல்லா எழுதறேடா..! என்று போன் செய்வார். அந்த மூன்று வார்த்தைகளைச் சொல்லும்போதே பல நேரங்களில் நாக்கு தடித்திருக்கும். தம்பி… வீட்டுக்கு வாடா… என்றார் ஒருநாள். நிச்சயமா வர்றேன்ணே என்றேன்.

ஆனாலும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஏனென்றால் நான் இருக்கும் வளசரவாக்கத்துக்கும் அவர் இருக்கும் வேளச்சேரிக்கும் வடதுருவ தென் துருவ பந்தம்! இந்த உறவு புதுப்பிக்கப்பட்ட காலத்தில் நானும் பத்திரிகையாளர் பணியை விட்டு சினிமாவுக்குள் நுழைந்துவிட்டேன். அதனாலும் அவகாசம் வாய்க்கவில்லை.

சொல்லி மிக நீண்டகாலத்துக்குப் பிறகு சென்னையில் உள்ள அவர் வீட்டில் ஒருநாள் அவரைச் சந்தித்தேன். அண்ணே… அட்ரஸ் அனுப்புங்க என்றேன். டேய்… மூணாவது மாடி… மூச்சு திணறாம ஏறிடுவியா..? என்றார். சிரித்துக் கொண்டே ஏறிடுவேன், நின்னு நின்னாவது… நீங்க அட்ரஸைக் குடுங்க என்றேன். அனுப்பி வைத்தார்.

கூகுள் மேப் உதவியுடன் வீட்டைக் கண்டுபிடித்தேன். அபார்ட்மெண்ட் வாசலில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது அவருடைய புல்லட்! அப்போதே உள்ளுக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நிற்காமல் ஒரே மூச்சில் மூன்றாம் மாடியில் ஏறி நின்றேன்.

கதவு திறந்தவர், ‘வாடா தம்பி…’ என்றார்.

இரண்டு படுக்கை வீடு, மூன்று படுக்கை வீடு, டியூப்ளக்ஸ் வீடு என்றெல்லாம் சனிக்கிழமை செய்தித் தாள் விளம்பரம் போல எல்லா வகையிலும் வீடுகளைப் பார்த்துப் பழகிய எனக்கு காணக் கிடைக்காத ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் வீட்டைக் காட்டினார் ராமலிங்கம் அண்ணன். அவர் வீடு அப்படிப்பட்ட ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்!

மிக நீண்ட கறுப்பு நிற சோபா, அதன் எதிரே மறைப்பாக இருந்த கம்ப்யூட்டர் டேபிள், இந்த மறைப்புக்கு அந்தப்பக்கம் பரந்து விரிந்து கிடக்கும் கிங் சைஸ் படுக்கை, அதன் எதிரே கதவுகளால் மூடப்பட்ட அலமாரி என்று வீடு தொடங்கும் முன்னே முடிந்து போகும் அளவுக்கு சிறிய வீடு. அந்த அலமாரியை ஒட்டி சிறு படி ஏறினால் வலது பக்கம் பாத்ரூம், அதையடுத்து சிறிய கிச்சன்..! அவ்வளவுதான் வீடு! இடதுபக்கம் இருக்கும் பால்கனி பகுதியை வலையடித்து டைனிங் டேபிளைப் போட்டு வைத்திருக்கிறார். இந்த குருவிக் கூடு போன்ற வீட்டில் பறவைகளுக்கும் அணில்களுக்கும் கொஞ்சம் இடம் கொடுத்திருக்கிறார்.

என்னடா சாப்பிடுறே..? என்றார். அவர் சாப்பிடும் எதுவும் நான் சாப்பிடுவதில்லை. இல்லண்ணே… வீட்டில் சாப்பிட்டுட்டுதான் வந்தேன் என்றேன்.

எப்படி அண்ணே… தனியா… பொழுது எப்படிப் போகுது என்று கேட்டேன், ஒருமுறை தொலைபேசி உரையாடலின்போது! என்னடா தனியா… ராமலிங்கத்துக்கு துணையா மணிவண்ணன் இருக்கான்… மணிவண்ணனுக்கு துணையா ராமலிங்கம் இருக்கான்… என்றார்.

திடீரென்று ஒருநாள் மகிழ்ச்சியோடு தொலைபேசுவார், டேய்… என் மகன் தனுஷ் வந்திருக்காண்டா..! என்று… ஒரு தந்தையின் குரலை அன்று நான் கேட்பேன். அதன்பின்னர் பேசும்போது தனுஷ் என்ன பண்றான் என்பேன். தனியா இருக்கேண்டா என்பார். அது வீடாக இருப்பதும் வேறாக இருப்பதும் அவர் குரலில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். இப்போது சில காலமாக எல்லா தொலைபேசியிலும் சிரிப்பு தெறிக்கிறது. தனுஷ் பற்றி அதிகம் பேசுகிறார். வேறாக இருந்தது அவனால் வீடாகி இருக்கிறது இப்போது!

முன்பெல்லாம் பெரும்பான்மையான நாட்கள் அவர் தனியாக இருந்ததில்லை. அந்த வீட்டுக்கு அதிதிகளாக வந்து செல்பவர்களின் எண்ணிக்கை வேளச்சேரி மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும். ஆண்கள், பெண்கள் என்று பேதமில்லாத நட்பு வட்டம் அவருடையது.

ஆனாலும் அவருக்குள் ஒரு தீராத வருத்தம் இருக்கிறது, தம்பி… எல்லாரும் என் வீட்டுக்கு வந்திருக்காங்க… மனுஷ்யபுத்திரனும் வரணும்னு ஆசைப்படுறார்… ஆனால், என் வீட்டில் லிஃப்ட் இல்லை… ஆனாலும் ஒருநாள் நிச்சயம் வருவேன்னு சொல்லியிருக்கிறார். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன், என்னை எப்போதும் வரவேற்கும் மனுஷை என் வீட்டில் வரவேற்க! என்றார்.

நிச்சயம் வருவார்… படிகளெல்லாம் நம் மனதில் தானே அண்ணா இருக்கு!  

No comments: