Wednesday, July 14, 2021

வீடுபேறு! 9/16

வீடு என்பது திண்ணை, முற்றம், படுக்கையறை, அடுக்களை என்று எல்லாமும் சேர்ந்ததுதானே… ஆனால், சில வீடுகளின் திண்ணை மட்டுமே வீடென அறியப்படும். அவை எல்லாமே ஆசிரியர்களின் வீடுகள். அவர்கள் வீட்டுத் திண்ணையில் நடக்கும் டியூஷன் வகுப்புகள்தான் நமக்கு அந்தத் திண்ணையையே டியூஷன் சார் வீடு என்று அடையாளப்படுத்தும். அதிகபட்சம் போனால் யாரேனும் ஒருவருக்கு அடுக்களையில் போய் தவலைப்பானையில் தண்ணீர் மோக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.

எனக்கு அதில் கூடுதலான வாய்ப்பாகக் கிடைத்தது நான் ஆறாங்கிளாஸில் டியூஷன் படித்த ஏ.சி. சார் வீட்டில்! பள்ளிக்கூடத்தில் ஏ.சி. சார்… வெளியே வந்துவிட்டால் ஏ.சி. சித்தப்பா! என் அம்மாவின் அத்தை மகன்..! எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரான இலஞ்சியில் இருந்தது நான் படித்த பள்ளிக்கூடம். பள்ளிக்கூடம் முடிந்ததும் நேராக டியூஷனுக்குப் போவோம். பையைத் தூக்கி திண்ணையில் போட்டுவிட்டு வீட்டுக்கு பக்கத்தில் கிடக்கும் காலி மனையில் விளையாடிக் கொண்டிருப்போம்.

எங்களுக்குப் பிறகு பள்ளிக்கூடத்தில் இருந்து வரும் ஏசி சார், பேண்ட் சட்டையை மாற்றி கைகால் முகமெல்லாம் கழுவிவிட்டு துண்டால் துடைத்தபடியே குரல் கொடுப்பார். ஓடிப் போய் உட்கார்ந்து வீட்டுப் பாடமோ இல்லை ஏதேனும் கணக்கோ போட்டுக் காட்டி விட்டு கொஞ்சநேரம் படித்துவிட்டு புறப்படுவோம். பெரும்பாலும் இருட்டும் முன் கிளம்புங்க என்று அனுப்பிவிடுவார். ஏனென்றால், குளத்துக் கரை வழியே நடந்து வீட்டுக்குப் போக வேண்டும்.

எப்போதாவது சில நேரங்களில் கிளம்பும்போது பாபு… அந்த கல்யாண வீட்டுக்கு அம்மா மட்டும் வர்றாங்களா… இல்லை, அப்பாவும் வர்றாங்களா..? என்பது போன்ற குடும்ப விஷயங்கள் பேசும்போது மட்டும் தெரியலை சித்தப்பா என்று பதில் சொல்லுவேன். மற்றபடி எல்லா மாணவர்களையும் போல சார்தான்! அதேபோல அபூர்வமான சில சமயங்களில் சித்தி ஏதேனும் ஒரு தின்பண்டத்தை ஒளித்துக் கொடுப்பார். வாங்கி பைக்குள் போட்டுக் கொள்வேன். சித்தப்பாவுக்கு தெரிந்தால் சித்திக்கு திட்டு விழும். எல்லாமே சின்னப் புள்ளைங்க… அவனுக்கு மட்டும் கொடுத்தா என்ன அர்த்தம்? என்பார்.

அந்தத் திண்ணையே வாய்ப்பாடுகளாலும் பிரசண்ட் டென்ஸ், பாஸ்ட் டென்ஸ்களாலும் அதிரும். அந்த அளவுக்கு கத்திக் கத்தி படிப்போம். சும்மா சம்பிரதாயத்துக்கு ஒரு பிரம்பு பக்கத்தில் வைத்திருப்பார். அதேபோல, யாரிடமும் ஏண்டா ஃபீஸ் கொண்டு வரலை என்று அதட்டிய நினைவு இல்லை. கொடுத்தால் வாங்கிக் கொள்வார்.

பிறகொரு நாளில் என் அண்ணனின் திருமணப் பத்திரிகையைக் கொடுக்கச் சென்றிருந்தபோதும் அதே ஓரோண் ஒண்ணு… மூவெட்டா இருவத்தி நாலு என்று திண்ணை சுவர்கள் வாய்ப்பாடு கேட்டுக் கொண்டுதான் இருந்தன.

அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்து மாறி ஒன்பதாம் வகுப்புக்கு ஆய்க்குடி என்ற ஊருக்குப் போனேன். அந்தப் பள்ளிக்கூடத்தில் முதன் முதலில் நடந்த தேர்வில் ஆங்கிலத்தில் ஃபெயில். ஆங்கிலம் என்றால் என்னவென்றே தெரியவில்லை என்னும் ரேஞ்சுக்கு இருந்தது நிலைமை.

ஒருநாள் விடியற்காலையில் வீட்டுக்கு வந்திருந்த ஒரு விருந்தினர் என்ன படிக்கிறே..? என்றார். நான் நைன்த் என்றேன். (ஒழுங்காக ஒன்பதாங்கிளாஸ் என்று சொல்லியிருக்கலாம்) என் ஆங்கிலத்தில் வியந்து, ஓ… நைஸ்… வாட் இஸ் யுவர் ஃபாதர்? என்றார். எனக்குப் புரியவில்லை. மை ஃபாதர் இஸ் எ ரிவர் என்றேன். அவர் அப்பா எங்கே என்று கேட்டதாக நினைத்துக் கொண்டு, அவர் ஆற்றுக்கு குளிக்கப் போயிருக்கிறார் என்று பதில் சொன்னேன். (என் அப்பாவை நன்கு அறிந்த அந்த நபர் எதற்காக உன் அப்பா என்ன செய்கிறார்? என்று கேட்கப் போகிறார் என்பது என் எண்ணம்) அவர் சிரித்துக் கொண்டே போய்விட்டார்.

என் ஆங்கிலப் புலமை சிரிப்பாகச் சிரித்தது அன்றுதான். அப்பா வந்ததும் அம்மா நடந்ததைச் சொல்ல, அன்று மாலையே நான் கணேசன் சார் வீட்டை நோக்கி நடந்தேன், ஆங்கிலம் கற்றுக் கொள்ள! அவர் என்னைப் பார்த்து சிரிக்கவில்லை. மாறாக ஏபிசிடியில் தொடங்கி கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். ஆங்கிலத்தின் மீதிருந்த வெறுப்பு மறைந்து நட்பு பிறந்தது. ஆங்கிலத்தில் ஓரளவு மதிப்பெண் எடுக்கத் தொடங்கினேன்.

கணேசன் சார் வீட்டில் பெரும்பாலும் காலையில்தான் டியூஷன் இருக்கும். அவர் வீட்டுக்கு எதிரே இருந்த அறைதான் டியூஷன் நடக்கும் இடம். நாங்கள் அதிகாலையில் டியூஷனுக்குப் போய்விடுவோம். அப்போது அந்த அறையில் கணேசன் சார் பையன் தலைவரை போர்த்திக் கொண்டு படுத்து உறங்கிக் கொண்டிருப்பான். அவனைச் சுற்றி அமர்ந்திருப்போம். வேகமாக வரும் சார், எதையாவது தூக்கி உறங்குபவன் மீது வீசுவார். அவன் வாரிச் சுருட்டி எழுந்திருப்பான். ஆக்கங்கெட்டாப்ல, ஒருத்தனை மூடிப் போட்டு சுத்தி உக்காந்திருக்கீங்க… வந்ததும் தடிமாட்டை எழுப்பி விடவேண்டியதுதானே என்பார்.

கணேசன் சார் பொயட்ரி படிக்கச் சொல்கிறார் என்றால் குளிக்கப் போகிறார் என்று அர்த்தம்… ஒரு மார்க் கேள்வி எழுதச் சொல்கிறார் என்றால் சாப்பிடப் போகிறார் என்று அர்த்தம். அதேபோல வீட்டில் இருக்கும்போது செய்யது பீடி, ஸ்கூலுக்குப் போகும்போது கத்தரி சிகரெட்..! இதுதான் கணேசன் சாரின் அடையாளம். இன்று ஏதோ ஓரளவு ஆங்கிலம் வருகிறது என்றால் அது கணேசன் சார் தயவால்தான்!

அங்கிருந்து கிளம்பி பத்தாங்கிளாஸ் செங்கோட்டையில் வேறொரு பள்ளிக்கூடம்… வேறொரு டியூஷன்..! அந்தப் பள்ளிக்கூடத்தில் எல்லா மாணவர்களும் ஏதாவது ஒரு ஆசிரியரிடம் டியூஷன் படித்தாக வேண்டும். அதிலும் குறிப்பாக ஒரு கண்டிப்பு வாத்தியார் கட்டளையே போடுவார். யாரிடம் டியூஷன் படிக்கிறே என்று கேட்டு நாம் ஒருவரிடமும் இல்லை என்று சொன்னால், நாளை முதல் டியூஷன் வா என்று சொல்வார். அதனாலேயே நான் அவரை சமாளிக்க இன்னொரு சாரிடம் டியூஷன் சேர்ந்தேன்.

அவர்தான் ராமச்சந்திரன் சார்… எந்த அதட்டலும் இருக்காது, கண்டிப்பும் இருக்காது. சந்தேகம் கேட்டால் சொல்லிக் கொடுப்பார். இல்லையென்றால் நாமாகப் படித்துக் கொள்ளலாம். அவர் வீட்டிலும் திண்ணையில்தான் டியூஷன். அவர் மகனும் எங்களோடுதான் படிக்க உட்காருவான். ஒருநாள் அவன் வரவில்லை என்றாலும் எங்கே அவன் என்று எங்களைத்தான் கேட்பார்… ஒருவேளை அவங்கப்பா ஃபீஸ் குடுக்க முடியாம நிறுத்திட்டாரோ என்னவோ..? என்று உள்ளுக்குள்ளேயே சொல்லிச் சிரித்துக் கொள்வோம்.

டியூஷன் சார் வீட்டுக்குப் போய் மற்ற மாணவர்கள் வருவதற்கு முன்னால் சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் அவர் சொல்லும் நியூஸ் பேப்பர் வாங்கி வரவேண்டும். அது என் வேலை. அதில் சொதப்பினால் மட்டும் கடுமையான கோபம் வரும். மற்றபடி டியூஷனுக்கு வரும் மாணவர்களே ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொடுத்துக் கொள்வோம்… படித்துக் கொள்வோம். சில நேரங்களில் சார் மகன் அப்பா இந்தக் கேள்வி எல்லாம் குறிச்சுக் கொடுத்தாரு என்பான். அதைப் படிப்போம்.

அப்போதெல்லாம் தேர்வு முடிவுகள் பேப்பரில்தான் வெளியாகும். நம் நம்பர் பேப்பரில் இருந்தால் பாஸ்… இல்லையென்றால் ஃபெயில். என ரிசல்ட் வந்த பேப்பரோடு ராமச்சந்திரன் சாரைப் பார்க்கப் போனேன். இது என்னடே புது பேப்பர்… வழக்கமா வாங்கறது கிடைக்கலையா..? என்றார்.

அன்று பத்தாங்கிளாஸ் ரிசல்ட் என்பது அவருக்கு நினைவில் இல்லையா… அல்லது நீயெல்லாம் பேப்பர் பார்த்துதான் ரிசல்ட் தெரிஞ்சுக்கணுமா… என்கிட்டே டியூஷன் படிச்சதனாலேயே பாஸ் ஆகிட மாட்டியா என்று சொல்லாமல் சொன்னாரா..? தெரியவில்லை!

No comments: