Tuesday, April 8, 2014

எனக்கு வேலை போய்விட்டது! 03

அண்ணனின் கம்ப்யூட்டர் செண்டரில் படிக்க வந்தவர்களில் சிலர் தென்காசியில் இருந்த ஆனந்தா கிளாசிக் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட், ஹவுஸ் கீப்பிங் வேலைகளில் இருந்தார்கள். அவர்களில் ரவி என்பவர், ‘எங்க ஹோட்டல்ல வழக்கம் போல இந்த சீசனுக்கும் ரெஸ்டாரண்ட் தொடங்கப் போறாங்கஅப்ளை பண்ணுங்களேன்…’ என்றார். பண்ணலாமே என்றேன்எங்க பாஸ்கிட்டே பேசிட்டு நாளைக்கு சொல்றேன் என்றார். அடுத்தநாளே வந்து பார்க்கச் சொன்னார் என்ற தகவலையும் சொன்னார்.

போனேன். பார்த்தேன். சேர்த்துக் கொண்டார்கள். ஒரு சுபயோக சுபதினத்தில் ரெஸ்டாரெண்ட் மேனேஜர் ஆகிவிட்டேன். மேனேஜர் என்றால் கேஷியர் வேலை. பில்லிங்கிற்கு ஒரு பையன் சேர, மாஸ்டர், சர்வீஸ் ஆட்கள் என்று எல்லோரும் தயார். ஹோட்டலைத் திறக்க வேண்டியதுதான்கூட்டம் களைகட்ட வேண்டியதுதான்

கடந்தமுறை சீசனுக்கு ஹோட்டல் நடத்தியபோது இருந்த மாஸ்டர்தான். நல்ல ருசியாக சமைக்கக் கூடிய ஆள் என்றார்கள். ஆளும் அதை நம்பலாம் என்பதுபோலத்தான் இருந்தார்.

முதல்நாள் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை. இன்னும் சொல்லப் போனால் கூட்டமே வரவில்லை. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த ஹோட்டல் பில் போட்டு தாக்கிருவாங்களோ என்ற பயத்தைக் கொடுத்தது. அங்கு தங்கியிருப்பவர்கள் மட்டும் சாப்பிட வந்தார்கள். அடுத்த நாளில் இருந்து கொஞ்சம் கூட்டத்தை இழுக்கத் தொடங்கினோம்.

பஸ்ஸில் குற்றாலம் குளிக்க வருபவர்களை மடக்கி அப்படியே உள்ளே திருப்பினோம். சாப்பாடு ஓகேயாக இருக்க, விலையும் சராசரியாக இருக்க, வந்தவர்கள் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு திரும்பினார்கள். உள்ளே ஆள் நடமாட்டம் இருப்பதைப் பார்த்திவிட்டு அந்த வழியாகச் சென்ற சாதாரண மக்களும் வர, ஹோட்டல் பிக்கப் ஆனது.

குற்றால சீசன் காலமான ஜூன், ஜூலை மாதங்களில் ஓரளவுக்கு ஹோட்டல் பிஸியாக இருந்தது. அங்கு நானும் இன்னொரு நண்பரும் மேனேஜர்களாக இருந்தோம். காலை ஆறுமணிக்கு தொடங்கும் ரெஸ்டாரெண்டில் ஒருவருக்கு டியூட்டி. இன்னொருவர் இரண்டு மணிக்கு வந்து அவரை ரிலீவ் பண்ணிவிட்டு இரவு பத்துமணி வரை டியூட்டி பார்க்க வேண்டும்.

ஆயிரம் ரூபாய் சம்பளம்டியூட்டி நேரத்தில் அங்கு சாப்பிட்டுக் கொள்ளலாம்நான் காலை டியூட்டி பார்த்தால் டிபன் சாப்பிடுவேன். ரெண்டு மணிக்கு ஷிப்ட் முடிந்து ரிலீவர் வந்ததும் வீட்டுக்குப் போய்த்தான் சாப்பிடுவேன். அதேபோல மதிய ஷிப்ட் என்றால் வீட்டில் சாப்பிட்டுவிட்டுதான் வருவேன். பெரும்பாலும் பத்துமணிக்கு ரெஸ்டாரண்டை மூடிவிட்டு கணக்குவழக்குகளை (ஆமாம்வழக்குதான்இன்னிக்கு மாஸ்டர் இப்படி சொதப்பினார்சர்வீஸ் செய்தவர் ஒரு பில்லை மிஸ் பண்ணிவிட்டார் என்பன போன்ற வழக்குகளையும் டீல் பண்ண வேண்டும்) ஒப்படைத்துவிட்டு சாப்பிட வீட்டுக்கு போய்விடுவேன். அபூர்வமாகத்தான் அங்கே சாப்பிடுவேன்.

வழக்கமான ஆண்டுகளைப் போலத்தான் இந்த வருடமும் வியாபாரம் நடக்கிறது என்று சொல்லிக் கொண்டார்கள். ஜூன் ஜூலை மாதங்களில் சீசன் நன்றாக இருந்ததால் வியாபாரத்துக்கு குறைவில்லை. ஆகஸ்டில் கொஞ்சம் டல் அடிக்கத் தொடங்கியது. ரெஸ்டாரண்டுக்கு ஆயுள் அவ்வளவுதான் என்பது தெரிந்தது. ஆனால், தொடர்ந்து நடத்திதான் ஆகவேண்டும்ஏனென்றால் பெரிய முதலாளி ஊரில் இல்லை. அவர் வரும்வரை நாமாக எந்தமுடிவும் எடுக்கமுடியாது என்றார்கள்.

ஒருநாள் மாலை நேரம்ஹோட்டலில் ஆளே இல்லை. ரிசப்ஷனில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது போன் அடித்தது. எடுத்தால் முதலாளிஎல்லா நிலவரங்களும் கேட்டுவிட்டு ரெஸ்டாரெண்ட் நிலவரத்தை விசாரித்தார். ரிசப்ஷனிஸ்ட் கூட்டம் பெரிதாக இல்லை என்று சொல்ல, நான் பேசட்டுமா என்று கேட்டேன். இதோ ரெஸ்டாரெண்ட் மேனேஜர் இருக்காரு என்று சொல்லிவிட்டு என்னிடம் போனைக் கொடுத்தார்.

சார்சீசன் முடியப் போகுதுஇனிமே நம்ம ரெஸ்டாரெண்டைக்கு கூட்டம் வராது. மூடிடலாம்லாபத்துல கணக்கை முடிச்சதா இருக்கும். நாளையில் இருந்தே நஷ்டக் கணக்குதான்…’ என்றேன். ஒருகணம் யோசித்தவர், போனை ரவிகிட்டே கொடு என்றார். ஹோட்டல் ரிசப்ஷனிஸ்டிடம், ‘ரெஸ்டாரெண்ட்ல எல்லாருக்கும் கணக்கு முடிச்சுடுஇந்தப் பையனை மட்டும் ஒருவாரம் கழிச்சு வந்து பார்க்கச் சொல்லுஎன்றார்.

ஒருவாரம் கழித்து சென்றேன். இத்தனை வருட அனுபவத்தில் இந்த வருடம் மட்டும்தான் ரெஸ்டாரண்டை லாபக் கணக்கோடு மூடியிருக்கோம். பொதுவா இங்கே வேலை பார்க்கிற எல்லாருமே, கொஞ்சம் வெயிட் பண்ண பார்க்கலாம்னுதான் சொல்வாங்க. நானும் வெயிட் பண்ணி வெயிட் பண்ணி நஷ்டப்பட்டிருக்கேன். நீதான் தைரியமா மூடிடலாம்னு சொன்னே…’ என்றார்.

ஒரு தொழிலை நஷ்டப்படாமல் மூடுவதற்கு தைரியமாக முன் வந்ததற்காக என்னைப் பாராட்டினார். இந்த தைரியம் எங்கே போனாலும் உனக்கு கைகொடுக்கும் என்று கைகுலுக்கி வழியனுப்பினார். எனக்கு வேலை போய்விட்டது.