Tuesday, October 29, 2013

மாரியப்பன் டெய்லர்!

 
எங்கள் வீட்டுக்கு தீபாவளி எப்போதுமே டெய்லர் சித்தப்பா மூலமாகத்தான் வரும்! அப்பா துணி எடுத்துவிட்டு வந்து இறங்கும்போதே, ‘மாரியப்பா... வீட்டுக்கு வா..!’ என்பார். கையில் டேப்போடு வந்துவிடுவார்.

துணியின் நிறத்தை வைத்தே அது எனக்கு எடுக்கப்பட்டதா இல்லை அண்ணனுக்கு எடுக்கப்பட்டதா என்பதைச் சொல்லிவிடும் சாமர்த்தியம் எப்போதுமே அவருக்கு உண்டு. கரெக்டாக துணியை எடுத்து அளந்து பார்த்துவிட்டு, ‘பாபு... வாடே..’ என்றபடி அளவெடுப்பார். உயரத்தை அளந்துகொண்டிருக்கும்போதே, பார்வை அப்பா பக்கம் போகும். அவர் போதும் என்று சொல்லும் வரையில் அளவு நீண்டுகொண்டேபோகும். முழுக்கை வேண்டாம் என்று ஈனஸ்வரத்தில் முனகுவேன். ‘துணி வீணாப் போயிரும்... முழுக்கை வெச்சிரு...’ என்பார் அப்பா.

ரெண்டு பாக்கெட்... மூடி வெச்ச பாக்கெட் என்று நான் சொல்லும் மாடலைவிட, ‘ரவுடிப் பயலுக்கு தைக்க மாரி தைச்சுறாத... படிக்க புள்ள போடுத சட்ட... பாத்து தை...’ என்ற அப்பாவின் வார்த்தைகள்தான் எடுபடும்.

அளவெல்லாம் எடுத்து முடித்த பிறகு தலையைச் சொறிவார் டெய்லர். ‘கேன்வாஸ் வாங்கணும்... பட்டன் வாங்கணும்... தீவாளி செலவு இருக்கு...’ என்ற டெய்லரின் வாயை நூறு ரூபாயால் அடைப்பார் அப்பா.

நம்பர் கடை பக்கம் பார்த்தேன்... தொலைச்சுருவேன்...’ என்ற அப்பாவுக்கு தெரியும், அந்த நூறு ரூபாய் எங்கே மாற்றப்படும் என்று..!எனக்கும் தெரியும் எந்தச் சமயத்தில் போனால் அளவு மாறும் என்று..! தீபாவளி அன்று அப்பா கண்டுபிடித்துவிடுவார்... ஆனால், அன்று டெய்லரிடம் போய்ப் பேசமுடியாது. ஏனெறால் அவர் கேட்கும் நிலையில் இருக்கமாட்டார்.

ஒருகட்டத்துக்குப் பிறகு டெய்லர் கடை எங்கள் சங்கமாகிவிட்டது. அங்கேதான் அரட்டை..! முன்னால் கடை... பின்னால் வீடு என்று டெய்லருக்கும் தொழிலும் குடும்பமும் ஒன்றாகவே இருந்தது. கடையையும் வீட்டையும் பிரிக்கும் நடையில் அமர்ந்துதான் பீடி சுற்றுவாள் வள்ளி சித்தி... டெய்லர் சித்தப்பாவின் மனைவி.

கண் பார்க்கும் வேலைய கை செய்யணும்டே... அதுதான் கலை..!’ என்பார் அடிக்கடி. அது உண்மைதான் என்பது போல அவருடைய கைகள் துணியில் நாட்டியமாடும். ஆளைப் பார்த்தே அளவெடுத்துவிடுவார். ஆனால், எதுவாக இருந்தாலும் சாயங்காலம் ஆறு மணிவரைதான். அதன்பிறகு அளவெல்லாம் இழவாகிவிடும். கோடி ரூபாய் கொடுத்தால்கூட லுங்கியைக்கூட மூட்டமாட்டார்.

ஊருக்குள் எல்லா நல்லது கெட்டதுகளுக்கும் அவர்தான். கொஞ்சநாளில் இன்னும் சில தையல் கடைகள் எங்கள் ஊருக்குள் முளைத்தன. சட்டென்று பெரிய ரேக் செய்து கடையில் வைத்து துணிகளை வாங்கி வைத்து விற்கத் தொடங்கினார். ஆனால், ஊருக்குள் இழவு விழுந்தால் கோடித் துணி வாங்க மட்டுமே அவரிடம் போனார்கள். அதனால் எல்லா துணிகளையும் விற்றுவிட்டு கடையில் அந்த கண்ணாடி ரேக்கையும் விற்றுவிட்டார்.

எனக்கு முதன்முதலாக பேண்ட் அவர்தான் தைத்தார். டவுசர் வரைக்கும் ஓகே... நான் பேண்டை தென்காசியிலே தைச்சுக்கிறேனே என்றபோது யூனிஃபார்ம்தானே... மாரியப்பன்கிட்டேயே குடு என்று அப்பா அதட்டல் போட துணி கைமாறியது.

ஆனால், அவர் பேண்ட் தைத்துக் கொடுத்ததுபோல அத்தனை கச்சிதமான பேண்ட் இதுவரையில் எனக்கு அமையவில்லை. என் உடலோடு ஒட்டியும் இருந்தது. உட்கார கொள்ள வசதியாகவும் இருந்தது. ஆனாலும் அடுத்தடுத்த பேண்ட்களை தென்காசியில் கொண்டுபோய்க் கொடுத்தேன்.

கால சுழற்சியில் சாராயம் குடித்துக் கொண்டிருந்த மாரியப்பன் டெய்லர் கசாயத்துக்கு இறங்கினார். அதுவும் பகலிலேயே..! அப்போது யாரோ சில பெண்கள் அவரிடம் ஜாக்கெட் தைக்கக் கொடுத்துக் கொண்டிருந்தனர். நூல் கோர்க்க முடியாத அளவுக்கு கைகள் நடுங்கின.

வள்ளி சித்தி பீடி சுற்றலில் அந்த குடும்பம் சுழலத் தொடங்கியது. ஊருக்குள் யாரோ இறந்தபோது நானும் பாடை தூக்கி வருவேன் என்று பிடிவாதமாக தொங்கிக் கொண்டே வந்தார். ‘சின்யா... ஒன்ன தனியா ஒருநா தூக்கிட்டுப் போறோம்யா... விடுய்யா...’ என்று வேடிக்கையாகச் சொன்னபோதுகூட விடவில்லை.

அவம் குடிச்சுட்டு அழுவுதான்னு நினைக்காத... இன்னைக்கு பகல்குடிகாரனாகிட்டாங்கறது வாஸ்தவம்தான்... ஆனா, மெட்ராஸ்ல தொழில் பழகிட்டு வந்து கட வெச்சப்ப இவருதான முத சட்டையக் குடுத்தாரு... அது அவன் நினைப்புல இருக்கும்லா... என்று மயானக் கரையில் ஒருவர் சொல்லக் கேட்டபோது எனக்கு மாரியப்பன் டெய்லர் பகலிலேயே குடிக்கத் தொடங்கிய நாள் நினைவுக்கு வந்தது.

அன்றுதான் வெளியூர் சென்று திரும்பிய நண்பன் ஒருவன் தான் வாங்கி வந்த ரெடிமேட் சட்டைகளை கடையில் வைத்து எங்களிடம் காட்டினான்.

Wednesday, October 23, 2013

வெளியூரிலும் விலைபோகாத சி.எஸ். சார்..!

இப்போது நினைத்துப் பார்த்தால் சி.எஸ். சாரின் முகம் நினைவுக்கு வரமறுக்கிறது. ஆனால், எப்போது ஜனகராஜ் முகத்தை திரையில் பார்த்தாலும் சி.எஸ், சார் முகம்போலத் தோன்றும். எனக்கு ஆறாங்கிளாஸ் வரலாறு பாடம் நடத்திய சி.சுப்பிரமணியன் சார் பள்ளியில் ஏக பிரபலம். பிரபலத்துக்குக் காரணம் அவருடைய அப்பாவித்தனம். லேசாக மூக்கை விடைத்து அழுத்தி மூச்சு விட்டுக் கொண்டே இருப்பார். ரப்பர் செருப்பு வார் அறுந்திருக்கிறதோ என்று நினைக்கும் வகையில் லேசாக காலைத் தேய்த்துத் தேய்த்துதான் நடப்பார். எப்போதும் ஏதோ சிந்திப்பது போலவே இருக்கும் முகம். கொல்லைக்குப் போகும்போது குளிக்கப் போகும்போதெல்லாம்கூட எதிரே தன்னைப் பார்த்துவிட்டால் வணக்கம் வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில் பள்ளியில் வைத்து வணக்கம் சொன்னால்கூட புன்னகையோடு நெற்றியில் ஒட்டிய விரல்க்ளை எடுத்துவிட்டு விட்டுப் போவார்.
எப்போதுமே முழுக்கைச் சட்டைதான் அணிந்திருப்பார். அதில் இடது கை முழுக்கையின் கஃப் பட்டன் போட்டு இருப்பார். வலது கையை முழங்கைக்கு மேலே வரையில் ஏற்றிவிட்டிருப்பார். பாடம் நடத்தும்போது போர்டில் சாக்பீஸால் எழுத வேண்டும் என்பதால் கையைச் சுருட்டி விட்டிருக்கிறார் என்று நினைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், பஸ்ஸை விட்டு இறங்கும்போதே சட்டை அப்படித்தான் இருக்கும். பேண்ட் நழுவுவது போல இருக்கும். அதை அடிக்கடி இழுத்து இழுத்து விட்டுக் கொள்வார். ஒருநாள் இழுத்து விடாமல் அவர்பாட்டுக்கு நடமாடிக் கொண்டிருந்தார். என்னவென்று பார்த்தால் முதல் பெஞ்சில் இருந்தவன், ‘டேய்... சி.எஸ். சார் சணலை பெல்ட் மாரி கட்டிருக்காருடா..!’ என்றான். அப்போதுதான் கவனித்தோம். இடுப்பை இறுக்கியிருந்தது சணல்!
வரலாறுதான் அவருடைய சப்ஜெக்ட்... ஆனால், காலாண்டு, அரையாண்டு பரீட்சை முடிந்த பிறகு உள்ளே நுழையும்போத கணக்கு பேப்பர் குடுத்துட்டாங்களாடே..?’ என்பார். ஏனென்றால் கணக்கு டீச்சருக்கு அப்படியே எதிர்குணம். பெயரிலும் அப்படி ஒரு பொருத்தம். கணக்கு டீச்சரின் பெயர் எஸ்.சி டீச்சர்! டீச்சர் பெயர் செண்பக வள்ளி என்றாலும் எல்லோரும் எஸ்.சி டீச்சர் என்றுதான் சொல்வார்கள். வரலாறு பரீட்சையில் எல்லாருமே நல்ல மார்க் வாங்கிவிடுவோம். சி.எஸ். சாரின் தாராள மனசு ஒருபக்கம் காரணம் என்றாலும் வரலாறு என்று வந்தால் நாங்களெல்லாம் பக்கம் பக்கமா எழுதுவோம். ‘கணக்கு பேப்பர் குடுத்துட்டாங்களாடே..?’ என்று அவர் கேட்கும்போதே எங்களுக்கு குஷி பிறந்துவிடும்.
ஒவ்வொருவரின் பேப்பரையும் வாங்கி ஒருதடவைக்கு நாலுதடவை படிப்பார். எங்கேயாவது அரைமார்க் விடுதல் இருந்தால்கூட, ‘என்னடே படிச்சிருக்கா உங்க டீச்சர்... ஒரு கூட்டல், கழித்தல் தெரியலை... இவ எப்படிடே கணக்கு சொல்லிக் குடுப்பா... கொண்டுபோய் ஹெட்மாஸ்டர்கிட்டே கேளுங்கடே... இப்படி சொல்லிக் குடுத்தா பிள்ளைகள் எப்படிடே உருப்படும்...’ என்று அன்று முழுக்க பேசிக் கொண்டே இருப்பார். அவர் திருத்திய பேப்பரில் அப்படி யாரும் எந்தக் குறையும் சொல்லிவிட முடியாது. வரலாறில் வரைமுறையை எப்படி வகுப்பது?! ஆனால், கணக்குப் பாடமாக இருந்தாலும் செய்முறைக்கு கொஞ்சம் மார்க் போடலாம்... விடை மட்டும் தப்பு என்றால் அதற்குரிய மார்க்கை மட்டும் குறைக்கலாமே என்பது அவருடைய வாதம். கடைசிவரையில் பள்ளிக்கூடத்தில் அவர் வாதம் எடுபடவில்லை. ஹெட் மாஸ்டராக இருந்தவர் கணக்கு வாத்தியாராக இருந்தால் எப்படி எடுபடும்.
ஆறாங்கிளாஸ் படிக்கும் காலத்தில் யாருடைய பின்னணியையும் முழுசாகத் தெரிந்து வைத்திருக்க நியாயமில்லை என்றாலும் சி.எஸ். சாருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் கணக்குப் பரீட்சையில் பெயிலானதால் அந்த மகனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகவும், அதனால்தான் இவரும் அரைவட்டு போல சுத்திக் கொண்டிருப்பதாகவும் கதைகள் உலவும். நானே அதை பலருக்கு பரப்பியிருக்கிறேன்.
எங்களிடத்தில் மிகுந்த கனிவோடு இருப்பவர் அவர். அவருடைய உடைகளிலும் செருப்பிலும் ஏழ்மையின் சாயல் தெரியும். ஆனாலும், எங்களோடு படித்த சங்கரபாண்டியன் பரீட்சை ஃபீஸ் கட்டமுடியாமல் நின்றபோது அவர்தான் பணத்தைக் கட்டினார். ராஜ்தூத், யமஹா பைக்குகளில் வந்த எல்லா ஆசிரியர்களும் கைகட்டி வெறுமனேதான் நின்று கொண்டிருந்தார்கள். அவருடைய வகுப்பில் எப்போதும் யாராவது ஒருவன் கடைசி பெஞ்சில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பான். ‘மண்டையிடி சார்...’ என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும்... கடைசி பெஞ்சில் போய் படுத்துக் கொள்ளலாம். சிலர் பொய்யாகச் சொல்லிவிட்டுப் போய் படுத்தாலும் ஒருநாளும் அவர் உண்மையா என்பதை சோதித்து கூடப் பார்த்ததில்லை.
பரீட்சை நேரத்தில் அவர் கண்காணிப்பாளராக வந்தால் காப்பி அடிக்கலாம் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், யாராவது பிட் வைத்திருந்தாலோ அல்லது பேப்பரை மாற்றியிருந்தாலோ அவன் அருகிலேயே போய் உட்கார்ந்து அவனை நடுநடுங்க வைத்து காலில் விழ வைத்துவிடுவார். அப்போதுகூட அந்த பிட்டை வாங்கிக் கொண்டு மேற்கொண்டு எழுத வைப்பாரே தவிர, நான் எப்படி மடக்கிப் பிடித்தேன் பார் என்று வீரம் காட்டும் வேலையில் இறங்கமாட்டார்.
சி.எஸ். சாரின் ஃபேவரிட் டயலாக்... நீ எந்த ஊருடா..? என்பதுதான். ஒருவனை எழுப்பி அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டாரென்றால் அன்று முழு வகுப்பும் அவன்தான் பலியாடு! எல்லாக் கேள்விகளையும் அவனிடம்தான் கேட்பார். ஒவ்வொரு கேள்விக்குப் பிறகும் தவறாமல் இந்தக் கேள்வியையும் கேட்பார்... நீ எந்த ஊருடா..? அவன் எங்கள் பள்ளிக்கூடம் இருந்த இலஞ்சியையோ அல்லது அருகில் உள்ள எங்கள் ஊரான கொட்டாகுளம் அல்லது அங்கிருந்து கூப்பிடுதூரத்தில் இருக்கும் அய்யாபுரத்தையோ சொன்னால் பிழைத்தான். மாறாக தென்காசி என்றோ செங்கோட்டை என்றோ சொன்னால் செத்தான். முன்னந்தலையிலேயே அடிவிழும்.
நீ கள்ள மாடுடா... நல்ல மாடுன்னா உள்ளூர்லயே விலை போயிருப்பே... அங்கே விலை போகலை... தென்காசியிலே எத்தனை பள்ளிக்கூடம் இருக்கு... அங்கே உன்னை ஏன் சேர்க்கலை... ஏன்னா நீ கள்ள மாடு... அதான், உன்னைப் பத்தி முன்னே பின்னே தெரியாத இந்த ஊருக்கு வந்திருக்கே...’ என்று திட்டிக் கொண்டே அடிப்பார். அதேபோல அரசு ஊழியரின் குழந்தை என்றாலும் சிக்கல்தான். குறிப்பாக ஆசிரியர் மகன் என்றால் மொத்தமாக தொலைந்தான். ‘உங்க தகப்பனார் பேரை காப்பத்த வேண்டாமா...?’ என்று கேட்டுக் கொண்டே அடிப்பார்.
எட்டாங்கிளாஸ் வரையில்தான் அவர் பாடம் எடுக்கமுடியும். அதனால் பள்ளிக்கூட ஹெட் மாஸ்டராக அவர் வர வாய்ப்பில்லை என்றாலும் எட்டு வரையிலான டீச்சர்களின் தலைமை பொறுப்பாக ஒரு உதவி தலைமை ஆசிரியர் பொறுப்பு எங்கள் பள்ளியில் இருந்தது. அந்த இடத்துக்கு வருவதற்கான சீனியாரிட்டி அவருக்கு இருந்தது. அவர் அப்படி வந்தால் பள்ளிக்கூடத்தில் நல்ல மாற்றங்கள் வரலாம் என்ற ஆசை எங்களுக்கு இருந்தது. ஆனால், கடைசிவரையில் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை! அவர் சிரித்த முகத்துடனேதான் நடமாடிக் கொண்டிருந்தார்.
படிக்காத மாணவனை ஒருநாள் அடிக்கும்போது கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த ஒருவன், ‘சாரும் கள்ளமாடுதாண்டா... அதான், தென்காசில இருக்கற ஸ்கூலை எல்லாம் விட்டுட்டு இங்கே வேலைக்கு வந்திருக்காரு...’ என்றான். அவருக்கும் அது கேட்டிருக்கும்தான். ஆனால், எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அமைதியாக போய் உட்கார்ந்துவிட்டார். கொஞ்சநேரம் கழித்து அவரை கமெண்ட் அடித்தவனிடம் கேட்டார்... ‘நீ எந்த ஊருடா? சில மாடுகள் வெளியூர்லகூட விலைபோகாதுடா!’ என்றார். அவருக்கு உதவி தலைமை ஆசிரியர் ஆகமுடியவில்லையே என்ற வருத்தம் ஒருநாளும் இருந்ததில்லை என்றுதான் அதுவரையில் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.

Sunday, October 20, 2013

ஆச்சி!

என் அப்பாவின் அத்தை அவள். ‘என்னல... ஆச்சிய மரியாத இல்லாம அவ இவங்கெ..?’ என்ற என் அம்மாவை ஒரே அதட்டலில் அமர்த்திவிட்டாள். ‘எங்க அய்யா... இல்லிக் கண்ணும் குணுக் குணுக்னு நடையுமா அப்படியே எங்க அய்யாவக் கொண்டிருக்கான்... அவன அப்படியே பேச விடு... சும்மா அதட்டி புள்ளய பயங்காட்டாத... நீ என்ன வா போன்னே கூப்புடு ராசா..’ என்பாள்.

சின்ன வயசில் அவ்வப்போது எங்க வீட்டுக்கு வந்து செல்வாள். ரவிக்கை அணியாத உடம்பில் ரவிக்கை நீளத்துக்கு பசை ஒளிரும். மாநிறம் தான் ஆச்சி. ஆனாலும் மச்சை எடுப்பாகவே இருக்கும். கோலம் போலவும் ஒரு சமயம் மயில் போலவும் தோனறும் பச்சைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் சிரிப்பாள். ‘அதெல்லாம் தெரியாது... ஒருநா ஒரு குறத்தி வந்தா... ஒரு கைக்கு குத்த குருணி அரிசினு கேட்டா... நாங்க நெல்லுக் குத்தி ஒதுக்கி வெச்சிருந்த அரிசியைக் குடுத்து பச்ச குத்திட்டோம்... ஒங்க ஆச்சிக்காரிக்கு ஆங்காரம்... என் புருசன் உழைப்பெல்லாம் குறத்திகிட்டே போவுதே... பக்கத்துல கட்டிக் குடுத்தா இப்படித்தான் பகுமானமா வந்துருவாளுக...’னு புலம்பிகிட்டிருந்தா... நாங்க ரெண்டு கையிலயும் தோள்ல இருந்து மணிக்கட்டு வரைக்கும் அடுக்கட்டுக்கா குத்திட்டுதான் விட்டோம் என்று சிரிப்பாள் ஆச்சி.

ஒங்க ஆச்சிக்காரி என்று அவள் சொன்னது எங்க அப்பாவைப் பெத்த ஆச்சியை. இத்தனைக்கும் அவளும் தோளில் தொடங்கி மணிக்கட்டு வரைக்கும் பச்சை குத்தியிருப்பாள். ‘எங்க... அதைச் சொல்லிப் பாரு... ‘ம்... எங்க மாமா ஆசையா எனக்கு குத்தச் சொல்லி கொறத்திய வண்டி வச்சுல்லா கூட்டிகிட்டு வந்தாவோனு பவுசு கொழிப்பா... எங்க மாமன் மவ... சொந்தம் விட்டுறப்பிடாதுனு எங்க அண்ணனுக்கு கட்டி வெச்சோம். அவ எங்களையே விரட்டிப் பார்த்தா... நடக்குமா... ‘... சவத்து மூதி... சும்மா கெட... நீ வேணுங்கத அள்ளிட்டு போத்தானு எங்க அண்ணன் போதும் போதுங்க அளவுக்கு கட்டிக் குடுக்கும். ஒங்க ஆச்சிக்காரிக்குதான் வயறு கெடந்து பயறு அவிக்கும். அதுக்காக நாங்க பெறந்த வீட்டு பெருமய அள்ளிக்கட்டாம போ முடியுமா..?’ என்பாள்.

எனக்கு விவரம் தெரிந்து நான் ஒன்பதாங்கிளாஸ் படிக்கையில்தான் ஆச்சி வீட்டுக்குப் போனேன். எங்க ஊரில் இருந்து 20 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் கடையநல்லூர்தான் அவள் வாக்கப்பட்டு போன ஊர். எங்க ஊரில் ஏதோ துஷ்டி. யாருக்கெல்லாம் தந்தி குடுக்கணும்... யாருக்கெல்லாம் நேர்ல சொல்லணும்ங்கற லிஸ்டை வாங்கிக் கொண்டு நானும் நண்பனும் தென்காசி வந்தோம். அங்கிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரம்தான்... வண்டியை ஒரு அழுத்து அழுத்தி விடலாமே என்று கடையநல்லூருக்கு அழுத்திவிட்டோம். ஆச்சி வீட்டுக்குப் போய் கதவைத் தட்டியதும் பெரிய மாமாதான் கதவைத் திறந்தார். துஷ்டியைச் சொன்னோம். ‘அதுக்காடே இப்படி நேரங்கெட்ட நேரத்துல வந்துருக்கிய... நல்ல புள்ளகளப்பா...’ என்ற மாமாவின் குரல் கேட்டு எழுந்து வெளியே வந்தாள் ஆச்சி. அப்போதுதான் மணியைப் பார்த்தோம். இரவு பதினொன்றே முக்கால்!

உன் பேரன்தான் துஷ்டி சொல்லி வந்திருக்கான்...’ என்று மாமா சொல்லிவிட்டு உள்ளே திரும்ப, ஆச்சி உள்ள வா...’ என்றபடி தட்டை எடுத்து வைத்தாள். ‘நான் சாப்டுட்டேன்... வீட்ல சாப்டதுக்கும் மேல கடையில் நாலு ரொட்டி வேற சாப்டுட்டேன்... வேண்டாம்என்று நான் சொல்லிக் கொண்டே இருக்க, பழையதைப் பிழிந்து தட்டில் வைத்தபடி, அமர்ந்துவிட்டாள். வேறு வழியில்லாமல் நானும் உட்கார்ந்தேன்.

அதன்பிறகு பலமுறை கடையநல்லூருக்குச் சென்றிருக்கிறேன். எங்கள் குலதெய்வம் கோவில் கடைநல்லூரில்தான் இருக்கிறது. கிடா வெட்டு என்றால் வண்டி கட்டிக் கொண்டு போவோம். அப்படி ஒருமுறை சென்றபோது ஏதோ எடுக்க மறந்துவிட்டது. அப்பா என்னை வண்டியை விட்டு இறக்கி, ‘ஆச்சி வீட்டுல போய் வாங்கிட்டு வா... நாங்க பூசை சாமானெல்லாம் வாங்கிட்டு நிக்கோம்என்றார். தேங்காய் திருகும் திருவலக் குத்தி என்பதாக ஞாபகம். ஒரே ஓட்டமாக ஓடினேன். ஆச்சி வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள். மூச்சிறைக்க, ‘ஆச்சி... திருவலக்குத்தி வேணும்... எல்லாரும் கோயிலுக்கு போறோம்...’ என்றேன். உள்ளே நுழைந்து முதல் வேலையாக தட்டைத்தான் கையில் எடுத்தாள். ஒரு கை பழையதைப் போட்டு உட்கார வைத்துவிட்டு, திருவலக் குத்தி, சின்ன கத்தி, ரெண்டு அகப்பை எல்லாம் எடுத்து ஒரு பையில் போட்டு பக்கத்தில் வைத்தாள். காலைல ஏழு மணிக்கு பழையதா என்று நினைத்தாலும் சோற்றைப் பார்த்ததும் லேசாக கள்ளப் பசி எடுத்தது. அவுக் அவுக் என்று அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடினேன். ஈரக் கையை டவுசரில் துடைத்தபடி வந்த என்னைப் பார்த்த அப்பா, ‘என்ன... உங்க ஆச்சி சோத்தை திங்க வெச்சுட்டாளாக்கும்... யார் போனாலும் இந்தக் கூத்தை விட மாட்டா...’ என்று மண்டையில் தட்டினார்.

ஒருமுறை ஏதோ கல்யாணப்பத்திரிகையை எடுத்துக் கொண்டு போனேன். அப்போது மாலை சுமார் நாலு மணியிருக்கும். தலையைக் கண்டதும், தட்டை எடுத்தாள். ‘ஆச்சி... மணி நாலு... எனக்கு டீ குடிக்க நேரம் இது...’ என்று நான் பேசிக் கொண்டே இருக்க, அவள் பாட்டுக்கு பழையதைப் பிழிந்து தட்டில் வைத்து பழைய குழம்புச் சட்டியையும் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள். அப்போது அவளுக்கும் மாமாவுக்கும் ஏதோ மனத் தாங்கல்... மாமா எதிர் குச்சிலில் அத்தை பிள்ளைகளோடு இருக்க, இவள் தனியே இருந்தாள்.

ஒருபோதும் அவள் என்னை சாப்டியா... என்று கேட்டதில்லை. அப்போது நேரம் என்னவாக இருக்கிறது... இது சாப்பாட்டு நேரமா... சாப்பாட்டுக்கு பதில் வேறு ஏதாவது கொடுக்கலாமா என்றெல்லாம் அவள் யோசித்ததே இல்லை. எப்போது போனாலும் வாய் வாய்யா...’ என்று உபசரிக்கும். கைகள் தானாக தட்டையும் பழையது பானையையும் தேடும். நாலைந்து வாய் சாப்பிட்ட பிறகுதான் கேட்பாள்... ‘எப்ப ஊர்ல இருந்து வந்த... எத்தன நாள் லீவு... உனக்கு எப்ப கலியாணம் மூய்க்கப் போறான் உங்கப்பா?’என்றெல்லாம்!

என் கல்யாணப்பத்திரிகையைக் கொடுக்கச் சென்றபோது ஆள் தளர்ந்து விட்டிருந்தாள். பெரும்பாலான நேரம் படுக்கையில்தான்... ஒருநாளைக்கு ரெண்டு மூணு தரம் எழுந்து ஒண்ணுக்கு போனாலே பெரிய விஷயம் என்கிற அளவுக்கு ஒடுங்கியிருந்தாள். அப்போது சண்டையெல்லாம் முடிந்து மாமாவுடன் சமாதானம் ஆகியிருந்தாள். அத்தைதான் அவளுக்கு பொங்கிக் குடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘கல்யாணத்துக்குள்ள உடம்ப தேத்திரு... நீ வந்து திருநாறு பூசணும்லா...’ என்றபடி நான் அவள் அருகே போய் உட்கார, தனக்கு சாப்பிட வைத்திருக்கும் தட்டை எடுத்து என் பக்கம் நகர்த்தி வைத்தாள். கண்கள் அத்தையைப் பார்த்தன. அன்றும் நான் நாலு வாய் சாப்பிட்ட பிறகுதான், ‘என் பேத்தி இத்தன நாளா எந்த ஊர்ல ஒளிஞ்சுகிட்டிருந்தா..?’ என்றாள். சொன்ன சொல்லை தட்டாமல் கல்யாணத்தன்னிக்கு வந்து திருநாறு பூசிவிட்டாள்.

அதன்பிறகு ஆச்சியைப் பார்க்க அவகாசம் கிடைக்கவில்லை. ஊருக்குப் போவதே பெரும்பாடாக ஆகிவிட்டது. ‘பாப்பாத்தி ஆச்சி நம்மள விட்டுப் போயிட்டா...’ என்று அம்மா போனில் சொன்ன நாளில் நான் வேலைக்காக ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு தெருவில் அலைந்து கொண்டிருந்தேன். விசேஷமெல்லாம் கழிந்து ஒருநாள் ஆச்சி வீட்டுக்கு துஷ்டி கேட்கச் சென்றேன். சோகமெல்லாம் கரைந்து ஓரளவுக்கு இயல்பாகி இருந்தது வீடு. அத்தை டீ போட்டுக் கொடுத்தார். குடித்துவிட்டு மாமாவிடம் துஷ்டி கேட்டுவிட்டு வந்தேன்!

Tuesday, October 8, 2013

சு(த)ந்தரம் பெரியப்பா!

போனவாரம் ஊரிலிருந்து சுந்தரம் பெரியப்பா வந்திருந்தார். ஒரு போன்கூட செய்யவில்லை. ஏன் என்று அவரைக் கேட்க முடியாது. ‘என்னல சொல்லுத... மவன் வீட்டுக்கு அப்பன் வாரதுக்கு போன் பண்ணி அப்பாயின்மெண்ட் வாங்கணுமோடே!’ என்பார். ‘இல்ல பெரியப்பா... ஷூட்டிங், அதுஇதுனு எங்கனயாச்சும் போயிருந்தா... அதுக்குதான் கேட்டேன்...’ என்றால், அடுத்த நொடியே பதில் வரும்... ‘அதுக்கென்னல... மருமவ, புள்ளைய வீட்டுலதான இருப்பாங்க...’ என்பார்.
நான் ஷூட்டிங், மீட்டிங் என்று அலையும் தருணங்களில் மனைவிதான் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கும் கடைகளுக்கும் அழைத்துக் கொண்டு அலைவாள். அப்படியொரு நேரத்தில் இந்த பெரியப்பா வந்திருந்தால், ‘வீட்டப் பாத்துக்கறத விட மருமகளுக்கு அப்படி என்னடே வேல...’ என்பார். அவரைப் பொறுத்த அளவில் அவர் வரும்போதெல்லாம் கையில் செம்போடும் துண்டோடும் காத்திருக்கும் பெரியம்மாதான் சரியாக வீட்டைப் பார்த்துக் கொள்கிறவள். காய்கறி வாங்கக் கூட படியை விட்டு இறங்காத அவள்தான் வீட்டைப் பார்த்துக்கறவள்.
நல்லவேளையாக பெரியப்பா வந்த அந்த காலை நேரத்தில் நான் வீட்டில் இருந்தேன். முதல்நாள் இரவு லேட்டாக வந்து தூங்கியதால் ஏதோ கனவில் காலிங்பெல் அடிப்பது போலத்தான் இருந்தது. பக்கத்தில் படுத்திருந்த மனைவி முதல்நாள் மளிகைக்கடை, காய்கறிக் கடை, அந்தக் கடை இந்தக் கடை என்று சுற்றிய அலுப்பில் படுத்திருந்தாள். யாருனு பாருங்க... பால்காரர்னா நாளைக்கு பால் வேணாம்னு சொல்லுங்க...’ என்றாள்.
நான் அரைத் தூக்கத்தோடுதான் கதவைத் திறந்தேன்... ‘என்னடே... இப்பந்தான் எந்திரிக்கியோ..?’ என்ற வார்த்தைகள் முன்னே வர விடுவிடுவென்று உள்ளே நுழைந்தார் பெரியப்பா. ‘அவளை எங்கடே..? இந்த சோபாவை எதுக்குடே வாங்கியிருக்க... பேப்பர் போட்டு வைக்கதுக்கா..?’ என்றபடி சோபாவில் கிடந்த பேப்பர்களை எடுத்து அடுக்கத் தொடங்கிவிட்டார்.
அதுதான் பெரியப்பா... அவருக்கு எல்லாமே வைத்த இடத்தில் இருக்க வேண்டும். பெரிய டைம் டேபிளே வைத்திருப்பார். காலையில் ஆறரை மணிக்கு மேல படுக்கையிலே படுத்திருக்கக் கூடாது. ரெண்டுமுறை குரல் கொடுப்பார்... மூன்றாவது முறை கன்னத்தில் கொடுப்பார். பல் விளக்க பத்து நிமிஷம்... குளிக்க பத்து நிமிஷம், சாப்பிட பத்துநிமிஷம் என்று அவர் டைம் டேபிளில் எல்லாத்துக்குமே பத்து நிமிஷம்தான்!
‘என்னங்க… பால்காரன்கிட்டே சொல்லிட்டீங்களா..?’ என்ற மனைவியை உலுக்கி எழுப்பி, ‘இல்லே… நீ பாத்ரூம்ல இருக்கேனு சொல்லியிருக்கேன்…; என்றதும் கன்ஃப்யூஸ் ஆகி கண்ணை விழித்தாள். பெரியப்பா வந்திருக்கும் விஷயத்தைச் சொல்லி அவளை பாத்ரூமுக்குள் தள்ளினேன். முகத்தைக் கழுவிக் கொண்டு வெளியே வந்தாள். அதற்குள் பெரியப்பா இன்னொரு பாத்ரூமில் காலைக் கடமைகளை முடித்துவிட்டு குளித்திருந்தார். (கரெக்ட்… பத்து நிமிடத்தில்தான்!)
‘என்னடே… ஒரு மனுஷன் வந்திருக்கானே… ஊர்ல பெரியம்ம எப்படி இருக்கா… மேலுகாலெல்லாம் சும்மா இருக்கானு ஒரு வார்த்தை கேட்கணும்னு தோணலையோ… என்ன புள்ள நீ…’ என்ற பெரியப்பா, ‘என்னம்மா… ஊர்ல அம்மா அப்பா சும்மா இருக்காங்களா… என்ன டிபன் பண்ணப் போறே…?’ என்றபடி பெட்ரூமை எட்டிப் பார்த்தார். பிள்ளைகள் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தன.
‘என்னம்மா… நீ கோழிகூப்புட எந்திரிச்சா போதுமா… பிள்ளைகளையும் எழுப்பி விட்டு பழக்கணும்… அப்பதானே நாளைப்பின்னே நம்ம புள்ளைகளும் நல்லா வளரும்…’ என்றபடி உள்ளே நுழைந்து பிள்ளைகளின் முதுகில் ரெண்டு போட்டு எழுப்பி விட்டார். கிடுகிடுவென்று போர்வைகளை இழுத்துப் போட்டு மடித்து வைத்தார். கையில் டீயுடன் வந்த மனைவி, ‘நீங்க எதுக்கு மாமா இதையெல்லாம் பண்ணிகிட்டு…’ என்றாள். அந்த அடிகளெல்லாம் என் முதுகில் விழுந்த காலம் நினைவில் வந்து போனது. அவர் கடிகாரத்துக்குதான் நாங்களெல்லாம் கட்டுப்பட வேண்டும்.
‘இதென்ன காபியா… காலைல நான் நீராகாரம்தான் குடிப்பேன்… ஒரு சொம்பு கரிக்க உப்பு போட்டு கொண்டா…’ என்றார். ‘இது க்ரீன் டீ பெரியப்பா… ஆண்டி ஆக்ஸிடைன்ஸ் இருக்கு… உடம்புக்கு நல்லது…’ என்றேன். ‘சமாளிக்கியாக்கும்… வீட்டுல நீராகாரம் இருக்கறதுதாண்டா சம்சாரி வீட்டுக்கு லெச்சணம்…’ என்றார். எங்களுக்கு காலை சாப்பாடு நீராகாரத்தில்தான் தொடங்கும்.
ஏழு மணிக்கு எழுப்பியபோதே பாதி ராத்தியில் எழுப்பியது போல மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்ற பிள்ளைகள் கையில் பால் தம்ளரை திணித்தாள் மனைவி.
‘அதை இங்க கொண்டா... பல் தேய்க்காம பால் குடிக்கது என்ன பழக்கம்... பேரப்புள்ளைகளா... வாங்க இங்க...’ என்று இழுத்துக் கொண்டு போய் பால்கனியில் நிறுத்தி பல்லை விளக்கிவிட்டார். ‘அம்மா... இங்கனயே குளிக்க ஊத்திரட்டுமா... டவுரசக் கழற்றுடே...’ என்று என் மகனின் டவுசரைக் கழற்றி குளிக்க வைத்து துடைத்து வழிய வழிய எண்ணெய்யைத் தேய்த்துவிட்டார். திருத்தமாக விபூதி வேறு!
மனைவி பிள்ளைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கட்டி வைக்க, அதைத் திறந்து பார்த்த பெரியப்பா, ‘என்னம்மா... காக்காய்க்கு சோறு வைக்க மாரி கொறைய வச்சிருக்க... வளர்ற புள்ளைக நல்லாச் சாப்புட வேண்டாமா... நல்லா அள்ளி வை... என் மவன் படிக்கையிலே அவன் கொண்டு போற தூக்குச் சட்டி எப்படி இருக்கும் தெரியுமா..? என்ன புள்ள நீ...’ என்றவர், ‘இப்பம் சாப்புட என்ன வச்சிருக்க..?’ என்றார். என் மனைவி கெலாக்ஸ் பால் ஊத்தி என்று சொன்னது அவளுக்கே கேட்டிருக்குமா என்று தெரியவில்லை.
நான் பிள்ளைகளைக் கொண்டு போய் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வரும்போது பெரியப்பாவைக் காணவில்லை. ‘காய் வாங்கப் போயிருக்கார்...’ என்றாள் மனைவி.
எப்போதுமே வீட்டில் காய்கறி வாங்குவது அவர் வேலை. பச்சைப் பசேல் என்று அன்று விளைந்த காய்கள்தான் அவர் சாய்ஸ்! எங்க பெரியப்பா வந்து சொல்லும் வரையில் அன்று என்ன சமையல் என்று பெரியம்மாவுக்கே தெரியாது.
பெரிய மூட்டை போல காய்கறிகளோடு உள்ளே நுழைந்த பெரியப்பா, ‘யம்மா... பிஞ்சு கத்தரிக்காயா கிடந்துது... இதை நாலா வகுந்துபோட்டு எண்ணக் குழம்பு வெச்சிரு... தொட்டுக்கிட இந்த தடியங்காயப் போட்டு கடலைப்பருப்பு கூட்டு வெச்சிரு... முடிஞ்சா முட்டைக் கோஸை பொரிச்சிரு...’ என்றார்.
‘யப்பா... இன்னிக்கு ஒருநாள் சிப்ஸ் வெச்சு சாப்டுக்கறீங்களா...’ என்று கேட்கும் மனைவி திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றாள். நான் அவசரமாக பாத்ரூமுக்குள் நுழைந்தேன்.
பெரியப்பாவின் விஜயத்துக்கான காரணம் சாயங்காலம்வரை தெரியவில்லை. சாயங்காலமாக வீடு திரும்பியபோது வீடே தலைகீழாக இருந்தது.
‘பிள்ளைகள் இன்னைக்கு என்கூட படுக்கட்டும்... தாத்தா கதை சொல்றேன்...’ என்று அழைத்துக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தார் பெரியப்பா. பத்து நிமிஷத்துல தூங்கிறணும் என்ற பெரியப்பாவின் குரலும் சின்னவளின் அழுகையும் கேட்டது.
‘என்னங்க... ரொம்ப நாளா உங்க பிரவுன் சாக்ஸை காணோம்னு தேடிகிட்டிருந்தீங்களே... அது பீரோவுக்கு மேலே கிடந்துச்சு...’ என்றாள் என் மனைவி. ‘அங்கே உனக்கு என்ன வேலை..?’ என்றேன். ‘நானா... உங்க பெரியப்பா... வீட்டையே தூசி தொடைக்கிறேன்னு துவம்சம் பண்ணிட்டார்... எனக்கே கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு... கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க மாமானு கேட்டதுக்கு, ‘இந்த வயசுல என்னம்மா ரெஸ்ட் வேண்டியிருக்கு’னுட்டார்.... மாமாவுக்கு இப்ப என்ன வயசு?’ என்றாள். ‘இந்த கார்த்திகை வந்தா எழுபது முடியுது...’ என்று சொல்லிவிட்டுப் படுத்தேன்.
அடுத்தநாள் அலாரம் வைத்து எழுந்து வெளியே வரும்போது பிள்ளைகள் ரெண்டு பேரும் யூனிபார்முடன் உறங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். ‘பார்த்தியா... ஒரேநாள்ல எப்படி மாறிட்டாங்கனு... இன்னைக்கு ஆளுக்கு நாலு இட்லியைக் குடு... ஜம்முனு சாப்பிட்டுட்டு போவாங்க...’ என்றதும் என் பிள்ளைகள் அடைந்த அதிர்ச்சியை வாழ்நாளில் முதன்முறையாகப் பார்த்தேன்.
என் மனைவி மெதுவாக வாய்திறந்து, ‘அவங்களுக்கு இட்லி புடிக்காது...’ என்றாள். பெரிதாகச் சிரித்த பெரியப்பா, ‘புள்ளைகளுக்கு எது நல்லது கெட்டதுனு எப்படித் தெரியும்... நாம குடுக்கறதை நம்ம புள்ளைகள் சாப்பிடணும்... அதான் சரி...’ என்றார். நான் அவசரமாக பேண்ட்டை மாட்டிக் கொண்டு பைக்கை எடுக்க கீழிறங்கினேன்.
ஊரில் யாரோ ஒருவரின் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்களாம். அந்த மாப்பிள்ளை எப்படிப்பட்டவர் என்று விசாரிக்கத்தான் வந்திருக்கிறார். என்னை அழைத்தார். நான் ஷூட்டிங் இருக்கேப்பா... என்றதும் ஊர்ல இருக்கறவங்க நம்ம சொல்ற வார்த்தையை நம்பி இருக்காங்க... நாம உதவலைன்னா எப்படி... உன் கல்யாணத்துல அவன் ரெண்டுநாள் மண்டபத்து ஆக்குப்பறைல கிடையாக் கெடந்தான்... தெரியுமா..? என்றார். எனக்கு இந்த ஈக்வேஷன் புரியவில்லை.
பெரியப்பா அவராகவே போய்விட்டார். முழுக்க விசாரித்து முழு திருப்தியோடு ஊருக்கு கிளம்பினார். புறப்படும்போது பிள்ளைகளை அழைத்துக் கொண்டுபோய் அதிரசம் வாங்கிக் கொடுத்து கூட்டி வந்தார். ‘என்ன்லே... இந்தப் பயலுவ கடைக்குள்ள போனதும் கலர் கலரா சிப்ஸ் பாக்கெட்டை பெறக்குதானுவ... நாம வாங்கிக் குடுக்கதைத் திங்க பழக வேண்டாமா... அதான் அதிரசம் வாங்கிக் குடுத்தேன்...’ என்றவர், என் மனைவி பக்கம் திரும்பினார்.
‘என்னம்மா... இப்ப சரஸ்வதி பூசை லீவு வரும்லா... நாலு நாளைக்கு புள்ளைகளக் கூட்டிட்டு வாயேன்... மிசினு மாரி இல்லாம நினைச்சபடிக்கு சுதந்திரமா இருந்துட்டு வரலாம்ல...’ என்றார் சுந்தரம் பெரியப்பா.