இப்போது நினைத்துப் பார்த்தால் சி.எஸ். சாரின் முகம் நினைவுக்கு வரமறுக்கிறது. ஆனால், எப்போது ஜனகராஜ் முகத்தை திரையில் பார்த்தாலும் சி.எஸ், சார் முகம்போலத் தோன்றும். எனக்கு ஆறாங்கிளாஸ் வரலாறு பாடம் நடத்திய சி.சுப்பிரமணியன் சார் பள்ளியில் ஏக பிரபலம். பிரபலத்துக்குக் காரணம் அவருடைய அப்பாவித்தனம். லேசாக மூக்கை விடைத்து அழுத்தி மூச்சு விட்டுக் கொண்டே இருப்பார். ரப்பர் செருப்பு வார் அறுந்திருக்கிறதோ என்று நினைக்கும் வகையில் லேசாக காலைத் தேய்த்துத் தேய்த்துதான் நடப்பார். எப்போதும் ஏதோ சிந்திப்பது போலவே இருக்கும் முகம். கொல்லைக்குப் போகும்போது குளிக்கப் போகும்போதெல்லாம்கூட எதிரே தன்னைப் பார்த்துவிட்டால் வணக்கம் வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில் பள்ளியில் வைத்து வணக்கம் சொன்னால்கூட புன்னகையோடு நெற்றியில் ஒட்டிய விரல்க்ளை எடுத்துவிட்டு விட்டுப் போவார்.
எப்போதுமே முழுக்கைச் சட்டைதான் அணிந்திருப்பார். அதில் இடது கை முழுக்கையின் கஃப் பட்டன் போட்டு இருப்பார். வலது கையை முழங்கைக்கு மேலே வரையில் ஏற்றிவிட்டிருப்பார். பாடம் நடத்தும்போது போர்டில் சாக்பீஸால் எழுத வேண்டும் என்பதால் கையைச் சுருட்டி விட்டிருக்கிறார் என்று நினைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், பஸ்ஸை விட்டு இறங்கும்போதே சட்டை அப்படித்தான் இருக்கும். பேண்ட் நழுவுவது போல இருக்கும். அதை அடிக்கடி இழுத்து இழுத்து விட்டுக் கொள்வார். ஒருநாள் இழுத்து விடாமல் அவர்பாட்டுக்கு நடமாடிக் கொண்டிருந்தார். என்னவென்று பார்த்தால் முதல் பெஞ்சில் இருந்தவன், ‘டேய்... சி.எஸ். சார் சணலை பெல்ட் மாரி கட்டிருக்காருடா..!’ என்றான். அப்போதுதான் கவனித்தோம். இடுப்பை இறுக்கியிருந்தது சணல்!
வரலாறுதான் அவருடைய சப்ஜெக்ட்... ஆனால், காலாண்டு, அரையாண்டு பரீட்சை முடிந்த பிறகு உள்ளே நுழையும்போத ‘கணக்கு பேப்பர் குடுத்துட்டாங்களாடே..?’ என்பார். ஏனென்றால் கணக்கு டீச்சருக்கு அப்படியே எதிர்குணம். பெயரிலும் அப்படி ஒரு பொருத்தம். கணக்கு டீச்சரின் பெயர் எஸ்.சி டீச்சர்! டீச்சர் பெயர் செண்பக வள்ளி என்றாலும் எல்லோரும் எஸ்.சி டீச்சர் என்றுதான் சொல்வார்கள். வரலாறு பரீட்சையில் எல்லாருமே நல்ல மார்க் வாங்கிவிடுவோம். சி.எஸ். சாரின் தாராள மனசு ஒருபக்கம் காரணம் என்றாலும் வரலாறு என்று வந்தால் நாங்களெல்லாம் பக்கம் பக்கமா எழுதுவோம். ‘கணக்கு பேப்பர் குடுத்துட்டாங்களாடே..?’ என்று அவர் கேட்கும்போதே எங்களுக்கு குஷி பிறந்துவிடும்.
ஒவ்வொருவரின் பேப்பரையும் வாங்கி ஒருதடவைக்கு நாலுதடவை படிப்பார். எங்கேயாவது அரைமார்க் விடுதல் இருந்தால்கூட, ‘என்னடே படிச்சிருக்கா உங்க டீச்சர்... ஒரு கூட்டல், கழித்தல் தெரியலை... இவ எப்படிடே கணக்கு சொல்லிக் குடுப்பா... கொண்டுபோய் ஹெட்மாஸ்டர்கிட்டே கேளுங்கடே... இப்படி சொல்லிக் குடுத்தா பிள்ளைகள் எப்படிடே உருப்படும்...’ என்று அன்று முழுக்க பேசிக் கொண்டே இருப்பார். அவர் திருத்திய பேப்பரில் அப்படி யாரும் எந்தக் குறையும் சொல்லிவிட முடியாது. வரலாறில் வரைமுறையை எப்படி வகுப்பது?! ஆனால், கணக்குப் பாடமாக இருந்தாலும் செய்முறைக்கு கொஞ்சம் மார்க் போடலாம்... விடை மட்டும் தப்பு என்றால் அதற்குரிய மார்க்கை மட்டும் குறைக்கலாமே என்பது அவருடைய வாதம். கடைசிவரையில் பள்ளிக்கூடத்தில் அவர் வாதம் எடுபடவில்லை. ஹெட் மாஸ்டராக இருந்தவர் கணக்கு வாத்தியாராக இருந்தால் எப்படி எடுபடும்.
ஆறாங்கிளாஸ் படிக்கும் காலத்தில் யாருடைய பின்னணியையும் முழுசாகத் தெரிந்து வைத்திருக்க நியாயமில்லை என்றாலும் சி.எஸ். சாருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் கணக்குப் பரீட்சையில் பெயிலானதால் அந்த மகனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகவும், அதனால்தான் இவரும் அரைவட்டு போல சுத்திக் கொண்டிருப்பதாகவும் கதைகள் உலவும். நானே அதை பலருக்கு பரப்பியிருக்கிறேன்.
எங்களிடத்தில் மிகுந்த கனிவோடு இருப்பவர் அவர். அவருடைய உடைகளிலும் செருப்பிலும் ஏழ்மையின் சாயல் தெரியும். ஆனாலும், எங்களோடு படித்த சங்கரபாண்டியன் பரீட்சை ஃபீஸ் கட்டமுடியாமல் நின்றபோது அவர்தான் பணத்தைக் கட்டினார். ராஜ்தூத், யமஹா பைக்குகளில் வந்த எல்லா ஆசிரியர்களும் கைகட்டி வெறுமனேதான் நின்று கொண்டிருந்தார்கள். அவருடைய வகுப்பில் எப்போதும் யாராவது ஒருவன் கடைசி பெஞ்சில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பான். ‘மண்டையிடி சார்...’ என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும்... கடைசி பெஞ்சில் போய் படுத்துக் கொள்ளலாம். சிலர் பொய்யாகச் சொல்லிவிட்டுப் போய் படுத்தாலும் ஒருநாளும் அவர் உண்மையா என்பதை சோதித்து கூடப் பார்த்ததில்லை.
பரீட்சை நேரத்தில் அவர் கண்காணிப்பாளராக வந்தால் காப்பி அடிக்கலாம் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், யாராவது பிட் வைத்திருந்தாலோ அல்லது பேப்பரை மாற்றியிருந்தாலோ அவன் அருகிலேயே போய் உட்கார்ந்து அவனை நடுநடுங்க வைத்து காலில் விழ வைத்துவிடுவார். அப்போதுகூட அந்த பிட்டை வாங்கிக் கொண்டு மேற்கொண்டு எழுத வைப்பாரே தவிர, நான் எப்படி மடக்கிப் பிடித்தேன் பார் என்று வீரம் காட்டும் வேலையில் இறங்கமாட்டார்.
சி.எஸ். சாரின் ஃபேவரிட் டயலாக்... நீ எந்த ஊருடா..? என்பதுதான். ஒருவனை எழுப்பி அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டாரென்றால் அன்று முழு வகுப்பும் அவன்தான் பலியாடு! எல்லாக் கேள்விகளையும் அவனிடம்தான் கேட்பார். ஒவ்வொரு கேள்விக்குப் பிறகும் தவறாமல் இந்தக் கேள்வியையும் கேட்பார்... நீ எந்த ஊருடா..? அவன் எங்கள் பள்ளிக்கூடம் இருந்த இலஞ்சியையோ அல்லது அருகில் உள்ள எங்கள் ஊரான கொட்டாகுளம் அல்லது அங்கிருந்து கூப்பிடுதூரத்தில் இருக்கும் அய்யாபுரத்தையோ சொன்னால் பிழைத்தான். மாறாக தென்காசி என்றோ செங்கோட்டை என்றோ சொன்னால் செத்தான். முன்னந்தலையிலேயே அடிவிழும்.
‘நீ கள்ள மாடுடா... நல்ல மாடுன்னா உள்ளூர்லயே விலை போயிருப்பே... அங்கே விலை போகலை... தென்காசியிலே எத்தனை பள்ளிக்கூடம் இருக்கு... அங்கே உன்னை ஏன் சேர்க்கலை... ஏன்னா நீ கள்ள மாடு... அதான், உன்னைப் பத்தி முன்னே பின்னே தெரியாத இந்த ஊருக்கு வந்திருக்கே...’ என்று திட்டிக் கொண்டே அடிப்பார். அதேபோல அரசு ஊழியரின் குழந்தை என்றாலும் சிக்கல்தான். குறிப்பாக ஆசிரியர் மகன் என்றால் மொத்தமாக தொலைந்தான். ‘உங்க தகப்பனார் பேரை காப்பத்த வேண்டாமா...?’ என்று கேட்டுக் கொண்டே அடிப்பார்.
எட்டாங்கிளாஸ் வரையில்தான் அவர் பாடம் எடுக்கமுடியும். அதனால் பள்ளிக்கூட ஹெட் மாஸ்டராக அவர் வர வாய்ப்பில்லை என்றாலும் எட்டு வரையிலான டீச்சர்களின் தலைமை பொறுப்பாக ஒரு உதவி தலைமை ஆசிரியர் பொறுப்பு எங்கள் பள்ளியில் இருந்தது. அந்த இடத்துக்கு வருவதற்கான சீனியாரிட்டி அவருக்கு இருந்தது. அவர் அப்படி வந்தால் பள்ளிக்கூடத்தில் நல்ல மாற்றங்கள் வரலாம் என்ற ஆசை எங்களுக்கு இருந்தது. ஆனால், கடைசிவரையில் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை! அவர் சிரித்த முகத்துடனேதான் நடமாடிக் கொண்டிருந்தார்.
படிக்காத மாணவனை ஒருநாள் அடிக்கும்போது கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த ஒருவன், ‘சாரும் கள்ளமாடுதாண்டா... அதான், தென்காசில இருக்கற ஸ்கூலை எல்லாம் விட்டுட்டு இங்கே வேலைக்கு வந்திருக்காரு...’ என்றான். அவருக்கும் அது கேட்டிருக்கும்தான். ஆனால், எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக போய் உட்கார்ந்துவிட்டார். கொஞ்சநேரம் கழித்து அவரை கமெண்ட் அடித்தவனிடம் கேட்டார்... ‘நீ எந்த ஊருடா? சில மாடுகள் வெளியூர்லகூட விலைபோகாதுடா!’ என்றார். அவருக்கு உதவி தலைமை ஆசிரியர் ஆகமுடியவில்லையே என்ற வருத்தம் ஒருநாளும் இருந்ததில்லை என்றுதான் அதுவரையில் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.
No comments:
Post a Comment