Thursday, November 26, 2009

மன்மோகன் சிங்கைக் கடித்த பாம்பைச் சுட்ட விஜய்!


செக்கச் செவேலென அந்தப்புரம் சினிமாவில் வருவது போன்ற செவ்வக் காட்டின் நடுவே எங்கள் வீடு... இப்போ இருக்கும் வீடு இல்லை... இதைக் கட்டுவதற்கு முன்பு இருந்த வீடு. காரை பெயர்ந்தும் லேசாக செம்மண் வழிந்தும் இருக்கும் வீடு... அந்த வீட்டில் எனக்கு மிகவும் பிடித்த இடமான முன்பக்கத்து குச்சிலில் உட்கார்ந்து நேற்று புதிதாக வாங்கிய கார்போன் மொபைலில் பேசிக் கொண்டிருந்தேன்.

ஜன்னலோரமாக நின்று பேசிக் கொண்டிருந்த என் கவனத்தை ஈர்த்தாள் என்னோடு அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் படித்த கிருஷ்ணம்மாள். இப்போ போலீஸ் வேலையில் இருக்கிறாள். ஆனால் நான் பார்த்தபோது அவள் யூனிஃபார்மில் இல்லை. நைட்டி போல ஒரு உடையை அணிந்துகொண்டு என்னை நோக்கி வந்தாள். ஜன்னல் வழியே கைகளை வெளியே நீட்டி அவள் கரங்களைப் பிடித்து நலம் விசாரித்தேன்.

மலர்ந்த கண்களோடு கைகளை எட்டிப் பிடித்தவள், சட்டென்று கணநேரத்தில் முகம் மாறி கண்களில் நீரோடு கைகளை விடுவித்துக் கொண்டு போனாள். சற்று தள்ளி இரண்டு காவலர்களும் ஒரு காவலப் பெண்ணும் சீருடையில் இருக்க, கிருஷ்ணம்மாளும் சீருடை அணிந்தபடி அழுத கண்களோடு அவர்கள் பின்னால் நடந்து சென்றாள்.

நான் கைபேசி உரையாடலைத் தொடர்ந்தபடி அண்ணாந்து பார்த்தேன். சிதிலமகி இருந்த என் வீட்டுக் குச்சிலுக்கு மேலே படர்ந்திருந்த பெரிய மரத்தின் கிளையில் பெரிய பாம்பொன்று நகரமுடியாமல் நகர்ந்து கீழிறங்கிக் கொண்டிருந்தது. நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்த கணத்தில் குச்சிலுக்கு உள்ளே நுழைந்த என் தாயும் அந்தப் பாம்பைப் பார்த்துவிட்டார்.

நம்ம வீட்டு பாம்புதான் அது என்று அம்மா எனக்கு அந்தப் பாம்பை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த நொடியில் அந்தப் பாம்பு மரத்தில் இருந்த மிகப் பெரிய பொந்துக்குள் தன்னை நுழைக்கத் தொடங்கியிருந்தது.

நம்ம வீட்டுப் பாம்பு அதுக்குள்ளே போகாதே... இது வேற ஏதோ பாம்பு! என்று பதறிய அம்மா, குச்சிலுக்குக் கீழே இருந்த பங்கருக்குள் படுத்திருந்த அப்பாவை எழுப்பச் சொன்னாள். அப்பா என் பிள்ளைகளுக்காக வாங்கிப் போட்டிருந்த இரண்டு அடுக்குக் கட்டிலின் கீழ் பாகத்தில் படுத்திருந்தார். மேலே உள்ள கட்டிலில் தலைவரையில் போர்த்திக் கொண்டு படுத்திருந்தது யார் என்று தெரியவில்லை.

சின்னதாகக் குரல் எழுப்பியும் சைகை காட்டியும் அப்பாவை எழுப்பிவிட்டேன். மேலே பொந்துக்குள் நுழைந்த பாம்பு அதன் வழியாகக் கீழிறங்கி கட்டிலில் நகரத் தொடங்கியது. மேல் கட்டிலில் படுத்திருந்தவரின் அருகில் நீளமாகக் கிடந்த பாம்பு புஸ் புஸ் என்று மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது.

பங்கரை விட்டு வெளியே வந்த அப்பாவிடம் பாம்பு பற்றிச் சொன்னதும் அய்யோ என் பை என்றபடி மறுபடியும் பங்கருக்குள் நுழைந்து தன் பையை எடுத்துக் கொண்டு வெளியேறும்போது தன்னையறியாமல் கட்டிலை அசைத்ததோடு லேசாக கத்தியும் விட்டார்.

அப்பா போட்ட சத்தத்தில் மேல் கட்டிலில் படுத்திருந்தவர் போர்வையை விலக்க... அட... தலை டர்பன், தாடி சகிதம் மன்மோகன் சிங்! போர்வையை விலக்கிப் பார்த்த மன்மோகன் சிங் மூக்கருகே இருந்த பாம்பு படக்கென்று அவர் மூக்கைக் கடித்துவிட்டது.

என்ன நினைத்ததோ கடித்தவேகத்தில் சரசரவென்று கீழிறங்கத் தொடங்கியது. நானும் அப்பாவும் வேகமாக மேலேறி வந்து பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு பார்க்க, என் வீட்டு குச்சிலின் வாசலில் நின்ற இளைய தளபதி விஜய் அந்தப் பாம்பை தன் கைத்துப்பாக்கியால் பட்டென்று சுட்டு வீழ்த்தினார்.

இந்தத் துப்பாக்கி சத்தம் கேட்டு நான் கண்விழித்தபோது மணி மூன்றரை! நான் திடுக்கிட்டு எழுந்த சத்தத்தில் விழித்த மனைவி என்ன கனவா..? என்றார்.

ஆமா... பாம்பு கனவு? என்றேன்.

கனவுல வந்த பாம்பு கடிச்சுதா, இல்லை போயிடுச்சா... ஏன்னா, கனவுல பாம்பு கடிச்சாத்தான் நல்லது நடக்கும்பாங்க!” என்றார்.

கடிச்சுடுச்சு! என்று சொல்லிவிட்டு மொடக்கென்று தண்ணீரைக் குடித்தேன்.

அப்போ நல்ல விஷயம் நடக்கும் என்று சொல்லிவிட்டு தூக்கத்தைத் தொடர்ந்தார் என் மனைவி.

யாருக்கு நல்ல விஷயம்... கனவு கண்ட எனக்கா, இல்லை கடிபட்ட மன்மோகன் சிங்குக்கா?!

Wednesday, November 11, 2009

கதையின் கதை - 2

இலையில் உட்கார்ந்து நிமிர்ந்து பார்த்தேன். கை வைத்த பனியன், சமையலறை அழுக்கு வேட்டி, துண்டுடன் கையில் கேசரி வாளியோடு பரிமாறக் காத்திருந்தார் கந்தன் சித்தப்பா, அதே குறுஞ்சிரிப்போடு!

சம்சாரி கதையின் முத்தாய்ப்பான வார்த்தைகள் இவை. அந்தக் கதையில் வலி நிறைந்த வார்த்தைகளும் அவைதான்! ஆனால், அந்த வரிகள் நூறு சதவிகிதம் நிஜம். அதிலும் கந்தன் சித்தப்பாவை அந்தக் கோலத்தில் நான் பார்த்தது என் சகோதரனின் திருமணத்தில்!

கந்தன் சித்தப்பாவின் சகோதரர் வீட்டில் இருந்து கொஞ்சநாளிலேயே மாற்றிக் கொண்டு மீண்டும் எங்கள் கிராமத்துக்கு வந்துவிட்டாலும் அந்தக் காம்பவுண்டில் இருந்த அத்தனை வீடுகளிலும் எங்கள் உறவு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அந்த வகையில் அந்த காம்பவுண்டில் எல்லோருடைய வீட்டுக்கும் பத்திரிகை வைத்துவிட்டுத்தான் வந்திருந்தோம். ஆனால், அவர் அப்போது சமையல் காண்ட்ரக்டரிடம் பறிமாறுபவராக வேலை பார்க்கும் விஷயம் தெரியாது. அதே சமையல் காண்ட்ராக்டரை நாங்கள் எங்கள் வீட்டு திருமணத்துக்கு அழைக்க, அவரை கெடுபிடி செய்து பறிமாற அழைத்து வந்துவிட்டார் சமையல்காரர்.

பத்திரிகை வைத்து அழைத்திருந்தாலும் அவரால் பந்தியில் உட்கார்ந்து சாப்பிடமுடியவில்லை. இந்தக் கதையில் ஒரு விவசாயி வீழ்ந்து போன சோகத்தைப் பதிவு செய்யும் நோக்கத்தில் சம்பவங்களை அமைத்துவிட்டேன். ஆனால், கல்யாணத்துக்கு முந்தையநாள் இரவும், பறிமாறும் வாளியோடு அவர் தயாரான தருணத்திலும் அவருடைய உள்மன போராட்டங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் பதிவு செய்யமுடியவில்லை.

என்னைப் பார்த்ததும் கந்தன் சித்தப்பா, ‘ஏய் பாபு... எப்படியிருக்கே... மெட்ராஸ்ல வேலை பாக்கியாமே... அண்ணாச்சி சொன்னாவோ! என்னடே இப்படிப் பாக்கே... வெள்ளை வேட்டி சட்டை பொட்டுகிட்டு நின்னா அழுக்காயிரும்லா!” என்றார் அதே குறுஞ்சிரிப்போடு! அந்தச் சிரிப்பு என்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தியது.

எத்தனை கந்தன் சித்தப்பாக்கள் விவசாயத்தைக் கைவிட்டு (அல்லது விவசாயம் அவர்களைக் கைவிட்டு) இப்படி நிற்கிறார்களோ..!

(இந்தக் கதை விகடனில் வந்த விஷயம் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு பிரதி வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். என்னுள் குறுகுறுக்கும் குற்ற உணர்வைப் போல அவரிடம் பத்திரமாக இருக்கிறது அந்தக் கதை!)

Monday, November 9, 2009

சம்சாரி





கதிரேசன் பத்திரிகை கொடுத்ததுமே முடிவு செய்து விட்டேன், அவன் கல்யாணத்துக்கு அவசியம் செல்ல வேண்டும். காரணம், கல்யாணம் நடக்க இருப்பது ஆய்க்குடியில்!

ஆய்க்குடி.... என் பால்யத்தின் பள்ளி நாட்கள் கழிந்தது அந்த ஊரில்தான். கோலி, செல்லாங் குச்சி, பம்பரம் என எல்லா விளை யாட்டுக்களையும் கற்றுத்தந்தது அந்த ஊர்தான்.



என் தந்தைக்கு அரசாங்க உத்தியோகம். அடிக்கடி இடம் மாற்றம் வந்துகொண்டே இருக்கும். ஒரு முறை, விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்த என்னை அழைத்துக்கொண்டு ஆய்க்குடியில் போய் இறங்கினார் அப்பா. ''இனி மூணு வருஷத்துக்கு இந்த ஊர்தான்!'' என்று சொல்ல, எனக்கு பழைய நண்பர்களிடம் விடை பெறக்கூட முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம்.

நாற்றங்காலில் இருந்து பிடுங்கப்பட்டு வயலில் நடப்பட்ட நாற்று, முதல் நாளில் வாடி, அடுத்த நாள் துளிர்க்குமே... அது போல, ஒரே வாரத்தில் ஆய்க்குடியுடன் ஐக்கியமாகிவிட்டேன்.


கிராமத்துக்கும் பெரிய கிராமத்துக்கும் இடைப்பட்ட ஊர் ஆய்க்குடி. ஒரு சிவன் கோயில், ஒரு முருகன் கோயில், தெளிவாக ஓடும் ஒரு நதி, ஒரு பள்ளிக்கூடம், ஓர் ஆஸ்பத்திரி எல்லாம் இருந்தாலும், கிராமத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது டூரிங் டாக்கீஸ். திருநெல்வேலியில் ரிலீஸாகி, செகண்ட் ரிலீஸாக தென்காசிக்கு வந்து ஓடித் தேய்ந்துபோன படங்களைத்தான் திரையிடுவார்கள். என்றாலும், அந்த ஊருக்கு டூரிங் டாக்கீஸ் தனி கம்பீரத்தைத் தந்தது.

ஆய்க்குடிக்குப் போய்ச் சேர்ந்த அன்றைக்கே அந்த டூரிங் டாக்கீஸில் படத்துக்கு கூட்டிப் போனார் அப்பா. கூடவே அம்மா, அப்பாவின் அத்தை, அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் என்று பாதி கொட்டகைக்கு நாங்களே இருந்தோம்.

வசதியான வீடு பார்த்துக்கொள்ளும் வரையில், தன் வீட்டில் இருக்கச் சொல்லியிருந்தாள் அப்பாவின் அத்தை, சோளச் சோறு, கேழ்வரகுக் கூழ், அகத்திக் கீரை என்று நான் பார்த்தறியாத உணவுப் பண்டங்களை ருசித்தது அங்கேதான்.

அத்தைக்கு அதிகச் சிரமம் கொடுக்கக் கூடாது என்று அப்பா வேலை நேரம் போக, மீதி நேரமெல்லாம் தீவிரமாக வீடு தேடினார். அவருடைய சிரமத்தைக் குறைக்க, என் பங்குக்கு நானும் வீடு தேடினேன். என் வகுப்புத் தோழன் ஒரு வீடு பற்றிச் சொல்ல, அதை என் அப்பாவிடம் சொன்னேன். அன்றைக்குச் சாயங்காலமே இருவரும் அந்த வீட்டைப் பார்க்கப் போனோம்.

ஒற்றை அறை, அதை ஒட்டி ஒரு சமையலறை, அதைத் தாண்டி சந்து வழியாகச் கொஞ்ச தூரம் நடந்தால் டாய்லெட், பாத்ரூம் என்று மிகவும் சிறிய வீடு. பார்த்ததும் எனக்கே பிடிக்கவில்லை.

''நம்ம ஊரில் கிடக்கும் உன் கட்டிலைக் கொண்டு வந்தால், இங்கே போட இடமிருக்காது. வேறு வீடு பார்க்கலாம்'' என்று அப்பா சொல்லிக்கொண்டே வர, திரும்பி நடந்தோம்.

''அண்ணாச்சி, வீடு தேடுதியளோ..?'' என்று ஒரு குரல் எங்களைத் தடுத்து நிறுத்தியது. வைக்கோல் போரே தலையாக எங்களுக்குப் பின்னால் நின்றிருந்த ஒரு மனிதர், எங்கள் பதிலை எதிர்பார்க்காமல், ''எங்க அண்ணன் ஒரு வீடு கட்டியிருக்காரு. வாடகைக் குதான் கொடுக்கணும்னு சொல் லிட்டிருந்தாரு. பாருங்களேன்!'' என்று தொடர்ந்து பேசிக் கொண்டே போனார்.

அப்படித்தான் கந்தன் சித்தப்பா எனக்கு அறிமுகமானார். இப்போ தும் கந்தன் சித்தப்பாவை நினைத் தால், வைக்கோல் போர் தலையராக அவர் நின்ற காட்சிதான் மனதில் தோன்றும்.

''என்ன அண்ணாச்சி..! ஆறாங்கிளாஸ் படிக்கும் பையன் கூப்பிட்டான்னு இத்தாம் பெரிய ஆள் வீடு பாக்க வந்திருக்கியளே..!'' என்று பேசியபடி, கிடுகிடுவென்று முன்னால் நடந்தார்.

வீடு அமைப்பாகவே இருந்தது.. நாலு பத்தி வீடு. எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. புதிய வீடு என்பதால், மனசுக்கும் சந்தோஷமாக இருந்தது.

''எல்லாம் சரிதான்... எதுத்தாப்புல மாடு கட்டியிருக்காங்களே..'' என்றாள் அம்மா.

''மதினி..! நீங்க ஏன் கவலைப்படுதிய? நீங்க குடி வார அன் னைக்கு மாடுகளை என் தொழுவுல கட்டிக்கிருதேன்'' என்று உரிமையாக உறவு கொண்டாடத் தொடங்கினார் கந்தன் சித்தப்பா.

''பால் காய்ச்சணும்னு கடைக்கு கிடைக்கு பால் வாங்கப் போயிடாதீய. நம்ம வீட்லயே நாலு பால் மாடு நிக்கு'' என்ற கந்தன் சித்தப்பா கையோடு ஒரு சொம்பு பாலையும் கொண்டுவந்து கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் புது பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் எடுத்துக்கொண்டு வந்தாள் முருகம்மா சித்தி.

''பால் காய்ச்சுற வீட்டுக்கு கம்மா வர முடியுமா.. அதான், கடை திறந்ததும் இதெல்லாம் வாங்கிட்டு ஓடியாறேன்'' என்ற முருகம்மா சித்தி, பால் காய்ச்சிய பாத்திரம், தம்ளர்களை விளக்கிக் கழுவி ஓரமாக அடுக்கிவைத்தாள்.

நாங்கள் குடிவந்த காம்பவுண்டிலேயே அடுத்த வீடுதான் கந்தன் சித்தப்பா வீடு. அவர் வீட்டில் மூன்று பிள்ளைகள் இருந்தது என் விளையாட்டுக்குத் தோதாக இருந்தது.

''ஏடே! இன்னிக்கு எங்கூட குளிக்க வாரியா? மதினி, இவனையும் வயக்காட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்'' என்று வராண்டாவில் கிடந்த துண்டை எடுத்து எனக்கு மாலையாகப் போட்டு அழைத்துக் கொண்டு போனார்.

கந்தன் சித்தப்பாவின் வயற்காட்டில் எனக்குப் பிடித்தது அந்த வட்டக் கிணறுதான். அவர் தந்த செவ்விளநியை விட, கண்ணை நிறைத்த நெல்வயலைவிட, மீன்கள் துள்ளும் கிணறுதான் கவர்ச்சியாக இருந்தது.

''நம்ம வயல் எது சித்தப்பா?'' என்றேன். பழகிய பத்தே நாட்களில் எனக்கும் அந்த உரிமை வந்துவிட்டது.

''இந்த ஒரு கிணத்துப் பாசனமும் நம்ம வயல்தாண்டே. இன்னைக்கு கிணத்தைத் தூர் அள்ளப் போறோம். மோட்டார்ல ஆசை தீரக் குளிப்பியேனுதான் கூட்டிட்டு வந்தேன். சாயங்காலம்தான் வீட்டுக்கு'' என்று டவுசரை அவிழ்த்துவிட்டார். இரண்டு மோட்டார் பம்புகள் ஓடத் தொடங்கின. இரண்டிலும் ஓடி ஒடிக் குளித்தேன். வேலையாட்களை விரட்டிக்கொண்டே தென்னந் தோப்பின் நடுவே பாத்தி கட்டித் தண்ணீரை நிரப்பினார்.

மூன்று மணி நேர ஓட்டத்துக்குப் பிறகு கிணறு தரை தெரியவும், முருகம்மா சித்தி பெரிய தலைச்சுமையோடு வந்து சேரவும் சரியாக இருந்தது.

''அதுக்குள்ள வத்தவெச்சுட்டியளாக்கும்! நான் கொஞ்சம் துணி சோப்பு போட்டுறலாம்னு பார்த்தேன்'' என்று சித்தி சொல்ல,

''அடி இவளே! வயலுக்குப் பாயுற தண்ணியில சோப்பு போடப் போறியா..? அழுக்கைத் தூக்கிக்கிட்டு ஆத்துக்குப் போக வேண்டியதுதானே..?'' என்றபடி அவள் தலைச்சுமையை இறக்கினார் சித்தப்பா.

''அண்ணாச்சி! விறால் எல்லாத்தையும் புடிச்சிரவா..?'' என்று கிணற்றுக்குள் இருந்து குரல் வர, ''எலேய்! அடுத்தாப்புல மீன் திங்க ஆசையில்லையா? எண்ணி பத்து விறாலுக்கு மேல புடிக்கப்படாது'' என்று கிணற்று விளிம்பில் நின்று கத்தினார் சித்தப்பா.

கிணற்றுக்குள் இருந்து கேட்ட குரலும், பதிலுக்கு சித்தப்பா பேசியதன் எதிரொலியும் வித்தியாசமாகப் பட, கிணற்றை எட்டிப் பார்த்தேன். ஈர வாசனை ஜிலீர் என்று முகத்தை வருடியது.

''உள்ளே இறங்கிப் பாக்கியா..? உங்க வீட்டு ஃபிரிட்ஜ் மாதிரி ஜில்லுனு இருக்கும்!'' என்று சித்தப்பா என் இடுப்பில் கயிற்றைக் கட்டி உள்ளே இறக்கினார்.

ஈரம் கசியும் ஊற்றுகளும், பாசி படிந்த சுவர்களும் அடிவயிற்றைப் பயமாகக் கவ்விப்பிடிக்க, மெதுவாகக் கிணற்றுக்குள் இறங்கினேன். இறங்கிய நொடியில் பயம் போய்விட, ஓடி ஓடி மீன் பிடித்தேன்.

என்னை இறக்கிய கயிற்றில் மீன்களைப் போட்ட வாளியைக் கட்டிவிட, சரசரவென்று மேலே இழுத்த சித்தப்பா, பத்து நிமிட இடைவெளியில் வாளியைக் கீழே இறக்கி என்னை அதில் உட்காரச் சொல்லி, மேலே தூக்கிவிட்டார்.

பத்து நிமிடம் பாதாள உலகத்தைப் பார்த்துவிட்டு வந்தது போலப் பரவசமாக இருந்தது. சித்தப்பா கட்டி வைத்திருந்த பாத்தியில் நீந்திக்கொண்டு இருந்த விறால்களை ஒவ்வொன்றாகப் பிடித்து உரசி, கழுவி நறுக்கத் தொடங்கினாள் சித்தி.

என்னை அழைத்துக் கொண்டு வயலைச் சுற்றி வந்த சித்தப்பா, ''ஏய்.. என்னப்பா தண்ணி அடைக்கீங்க..? கீழக் கடைசியில ஒரு துண்டு காஞ்சு கிடக்கு. அடுத்த மோட்டாருல முதல் தண்ணியை இங்க திருப்புங்க!'' என்று குரல் கொடுத்தார்.

வயலைச் சுற்றிய அரை மணி நேரத்தில் மணக்க மணக்க மீன் குழம்பு தயாராகி இருந்தது. ''கை காலைக் கழுவிட்டு உட்காருடே..!'' என்று சொல்லிவிட்டு, வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து இலை அறுத்துக்கொண்டுவந்தார் சித்தப்பா.

''அவனுக்குக் காட்டுக்குள்ள எல போட்டுச் சாப்பிடத் தெரியாதுனு தட்டு கொண்டாந்திருக்கேன். நீங்க முதல் சோறு சுடுசோறு வாங்கிட்டுப் பிறகு பழையது வாங்குதியளா..?'' என்றபடி, தட்டில் சோற்றைத் தோண்டினாள் சித்தி.

சித்தப்பா, ''எனக்குப் பழையது போதும்'' என்று சொல்லிக்கொண்டே தரையில் பள்ளம் பறித்து, அதில் வாழை இலையைப் பதித்தார். சித்தி பழையதும் நீச்சத் தண்ணியுமாக அதில் சாப்பாட்டைப் போட்டு, மீன் துண்டைத் தனியாக ஒரு இலையில் எடுத்துவைத்தாள்.

''சித்தி.. எனக்கும் பழையது. அதுவும் இலை போட்டு'' என்றேன்.

''ஆத்தி.. கிணத்து தண்ணியில இந்த ஆட்டம் ஆடியிருக்கே! அதுக்கு மேல பழையது தின்னா அக்காளுக்கு யாரு பதில் சொல்லுறது? சித்தப்பா கணக்கா இலை வேணா போட்டுக்கோ!'' என்று எனக்குப் பள்ளம் பறித்து இலைபோட்டு சுடுசோறு பரிமாறினாள் சித்தி.

''சாப்பாடு மட்டும்தான் சித்தப்பா மாதிரினு ஆசையா, இல்லை சம்சாரி ஆகணும்னும் ஆசையா?'' என்று குறுஞ் சிரிப்போடு கேட்டார் சித்தப்பா.

வயல்களிடையே அவர் கம்பீரமாக நடைபோடுவதையும், வீடெல்லாம் நிறைந்து கிடக்கும் நெல் தானியங்களையும், மாடுகளுக்குத் தீவனமாக வைக்கோல் சுமப்பதையும், எல்லாவற்றுக்கும் மேலாக எப்போதும் குறுஞ்சிரிப்போடு வாழும் அவர் இயல்பையும் பார்த்தபோது சம்சாரி (விவசாயி) ஆகவும் ஆசை வந்தது.

ஆனால், யதார்த்தம் என்னை கம்ப்யூட்டர் இன்ஜினீயராக்கி, சென்னையில் இருந்துகொண்டு அமெரிக்காக்காரனின் பிரச்னைக்குத் தீர்வு சொல்ல வைத்துவிட்டது.

தென்காசியில் ரயிலைவிட்டு இறங்கி, குளித்துத் தயாராகி ஆய்க்குடிக்கு புறப்பட்டேன். கதிரேசன் தாலி கட்டியதும் கந்தன் சித்தப்பா வீட்டுக்குப் போய்விட வேண்டும். இப்போதாவது வீடு, குடும்பம் என்று இருக்கிறாரோ... இல்லை மாடு, வயல் என்று அலைகிறாரோ! என்னைப் பார்த்தால் அதிர்ந்து விடுவார். முருகம்மா சித்திக்கு என்னை அடையாளம் தெரியுமா என்று பார்க்கலாம்!

மண்டபத்தில் நுழைந்தவுடன், ''மாப்பிள்ளையும் பொண்ணும் தாலி கட்டக் கோயிலுக்குப் போயிருக்காங்க. அவங்க வர்றதுக்குள் டிபன் சாப்பிட்டுடலாமே!'' என்று ஒருவர் உபசரித்து டைனிங் ஹாலுக்கு அழைத்துப் போனார். இலையில் உட்கார்ந்து நிமிர்ந்து பார்த்தேன். கை வைத்த பனியன், சமையலறை அழுக்கு வேட்டி, துண்டுடன் கையில் கேசரி வாளியோடு பரிமாறக் காத்திருந்தார் கந்தன் சித்தப்பா, அதே குறுஞ்சிரிப்போடு!


இந்தக் கதையை வாசித்துப் பாருங்கள்... இந்தக் கதையின் கதை இன்னொரு சந்தர்ப்பத்தில்!

Wednesday, November 4, 2009

என் மகனும் என் மதமும்!


நேற்றிரவு படுக்கையில் இருந்தபோது என் மகன் தீபன் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினான். ’அப்பா... என் பிரெண்ட் ஆகாஷ் கிரிஸ்டியனாம்... நான் யார்?’ என்றான். அவனுக்கு விளக்கங்கள் சொல்லத் தயாராகிக் கொண்டே, ‘நீ இந்து!’ என்றேன். அவனிடமிருந்து அடுத்த கேள்வியாக, ‘எப்படி நான் இந்து?’ என்று வரும் என்ற எதிர்பார்ப்போடு, அதற்கான பதிலைத் தயார் செய்து கொண்டேன். ஆனால், அவனோ, ‘அப்ப நீ?’ என்றான். நான் இந்துங்கறதாலதாண்டா நீ இந்து’ என்றெல்லாம் சொல்லாமல் கேள்விக்கு மட்டும் பதிலாக ’நானும் இந்துதான்... என்றேன். அடுத்தடுத்து அப்போ அம்மா, அப்போ தர்ஷினி (என் மகள்) என்று எல்லோரையும் கேட்டுக் கொண்டான்.

சிறிது நேரம் மவுனமாக இருந்தவன், ‘ச்சே... மிஸ் ஆகிப் போச்சு!’ என்றான் சின்ன வருத்தத்தோடு!

என்னடா மிஸ் ஆச்சு? என்றேன்.

‘எங்க மிஸ் யாரு இங்கே இந்துனு கேட்டாங்க... ஒருத்தன்தான் கையைத் தூக்கினான். நான் இந்துனு தெரிஞ்சிருந்தா கையைத் தூக்கியிருக்கலாம். மிஸ் ஆகிடுச்சு!’ என்றவன், அடுத்து நான் முதலில் எதிர்பார்த்த கேள்வியைக் கேட்டான்.

‘இந்துனா எப்படித் தெரியும்?’ என்றான்.

‘நம்ம வீட்டிலே பூஜை ரூமில் பிள்ளையார், ராகவேந்திரா, ஆண்டாள் எல்லா படங்களும் இருக்குதில்லையா... அதை நீ கும்பிடுறே இல்லையா... அந்தச் சாமியைக் கும்பிடுறவங்க இந்து’ என்றேன்.

’அப்போ கிரிஸ்டியன்?’ என்றான்.

‘அவங்க ஜீஸஸைக் கும்பிடுவாங்க! நாம முன்னே இருந்த வீட்டுக்கு எதிரில் இருந்ததே சர்ச்... அதுதான் அவங்க கோவில்’ என்றேன்.

‘நாமகூட அங்கே போய் சாமி கும்பிட்டிருக்கோமே... கேண்டில் எல்லாம் ஏத்தினோமே... அப்போ நாம எப்படி இந்து?’ என்றான்.

‘இல்லைடா... எல்லா சாமியும் ஒண்ணுதான்...’ என்றேன்.

‘அப்போ வேற என்ன வித்தியாசம்?’ என்றான்.

‘இந்துனா தீபாவளி, பொங்கல் எல்லாம் கொண்டாடுவாங்க!” என்றேன்.

‘அப்போ கிரிஸ்டியன் என்ன கொண்டாடுவாங்க?’ என்றான்.

‘கிருஸ்துமஸ் கொண்டாடுவாங்க... ஸ்டார் எல்லாம் கட்டுவாங்க!’ என்றேன்.

‘நம்ம வீட்டுலயும் கிருஸ்துமஸ் ஸ்டார் கட்டினோமே...’ என்றான்.

’தம்பிக்கு ஸ்டார் பிடிக்குமேனு கட்டினேன்... அதோட ஸ்டார் போட்டப்ப வீடு எவ்ளோ அழகா இருந்தது... அதுவும் ஒரு காரணம்’ என்றேன்.

கொஞ்சநேரம் மவுனமாக இருந்தான்.

‘சரி, கிரிஸ்டியன், இந்து மாதிரி இன்னும் என்னவெல்லாம் இருக்கு? என்றான் அடுத்ததாக!

‘அது நிறைய இருக்கு...’ என்றேன்.

‘ஏதாவது சொல்லு என்றான் விடாப்பிடியாக.

‘முஸ்லிம், சீக், சமணம், புத்தம்னு நிறைய இருக்கு’ என்றேன்.

‘முஸ்லிம் எனக்குத் தெரியும்... என் பிரெண்ட் அர்ஷத் முஸ்லிம்தான்...’ என்றான்.

‘உனக்கு எப்படித் தெரியும், அவன் முஸ்லிம்னு’ என்றேன். அதற்கு பதில் அவனுக்குத் தெரியவில்லை.

‘ஆனால், அவன் என் பெஸ்ட் ஃபிரெண்ட் தெரியுமா? ரெண்டுபேரையும் எங்க மிஸ் சேட்டை பண்ணினோம்னு நிக்க வெச்சிருக்காங்க...’ என்றவன், தொடர்ந்து, ‘சீக்னா எப்படி இருப்பாங்க?’ என்றான்.

’டர்பன் கட்டி தாடி வெச்சு!’ என்றதும் நம்ம மினிஸ்டர் மாதிரியா? என்றான்.

அவனுடைய அப்சர்வேஷன் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

‘எனக்கு அது ரொம்பப் பிடிக்கும் என்றான்.

சமணம் பற்றியும் புத்தம் பற்றியும் அவனிடம் எந்தக் கேள்விகளும் இல்லை. என்னிடமும் விளக்கங்கள் இல்லை.

உறங்கப் போகும் முன் திடீரென்று ‘நல்லவேளை, நான் எஸ்கேப்... மிஸ் யாரு இந்துனு கேட்டப்போ நான் கை தூக்கலை!’ என்று சொல்லிவிட்டுத் தூங்கிவிட்டான்.

நான் யாரு என்று அவன் கேட்டபோது, ‘நீ இந்து என்று சொல்லியிருக்கக் கூடாதோ என்று தோன்றியது!

ஆனால், வேறு என்ன சொல்வது?

Friday, September 18, 2009

ஒரு கதையின் கதை!



ஒரு சிறுகதை புதிய நண்பர்களை தேடித் தரும் என்று சொல்லத் தகுந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. ஆனந்த விகடனில் மரியா கேண்ட்டீன் கதை வெளியான தினம் இரவு நான் சொந்த ஊருக்குப் பயணமாகிக் கொண்டிருந்தேன். புதிய எண் ஒன்றிலிருந்து அழைப்பு... ‘சார்... நீங்கதான் முருகேஷ் பாபுவா... மரியா கேண்ட்டீன் கதையை நீங்கதான் எழுதினீங்களா..?’ என்று கொஞ்சம் மிரட்டலாகவே கேட்டது ஒரு குரல்.

ஆமாம் சார்... நான் சேவியர்ஸில் படிச்சவன்...’ என்று சொன்ன நொடியில் அந்தப்பபக்கமிருந்து குரலே வரவில்லை. சிறிது இடைவெளிக்குப் பிறகு, ‘நான் ஜான்ஸ்... எங்க பசங்க எல்லாருக்கும் சொல்லிட்டேன்... எல்லாரும் உங்களுக்குப் பேசுவாங்க... தயவு செய்து தொந்தரவா நினைக்காதீங்க... உங்க ஆபீஸில் கெஞ்சி உங்க போன் நம்பரை வாங்கியிருக்கேன். சார்... ராத்திரி முழுக்க தூங்க முடியாது சார்... நீங்க செய்தது பெரிய விஷயம்...’ சிக்னல் கட்டாகும்வரை பேசிக் கொண்டே போனார்.

அதிகாலையில் மீண்டும் அதே எண்கள்... சார் ஊருக்குப் போய்ச் சேர்ந்துட்டீங்களா... என் பிரெண்ட்ஸ் உங்ககிட்டே பேசணும்னு சொன்னாங்க... நீங்க டிராவல் பண்றதைச் சொல்லி வெயிட் பண்ணச் சொன்னேன். பேசச் சொல்லட்டுங்களா...’ என்றார்.

கல்லூரிக் காலங்களில் ஜான்ஸ் காலேஜ் என்றால் எங்களுக்கு பாகிஸ்தான் மாதிரி. அப்போது முறைத்துக் கொண்டு திரிந்த முஷரப்புகள் இப்போது எனக்காக வெயிட்டிங். சின்ன கர்வம் மனதில் எழ, மரியா கேண்ட்டீன் எல்லோருக்கும் பொதுதானே... என்ற பொது உணர்வு மண்டையில் தட்ட, உடனே நம்பர் அனுப்புங்க... நானே பேசறேன் என்றேன்.

சேச்சே... அது மரியாதையாக இருக்காது... என்ற அந்த நண்பர் போனை அணைக்க, அடுத்த நிமிடம் லைனில் வந்தார் வேறொருவர்.

‘சார்... எங்கக்கா நேத்து கோயமுத்தூரில் இருந்து பேசினாங்க... டேய், உங்க மரியா கேண்ட்டீனைப் பத்தி ஒரு கதை விகடனில் வந்திருக்குடா...னு சொன்னாங்க. மரியா கேண்ட்டீனைப் பத்தி என்ன இருக்கு எழுதனு நினைச்சேன். ஆனால், சார்... இனி மரியா கேண்ட்டீனுக்கு சாவே கிடையாது சார்... காலத்தில் அதை நிக்க வெச்சுட்டீங்க...’ என்றார்.

ஒரு கதையின் தீவிரத்தை நான் அப்போதுதான் உணர்ந்தேன்.

இன்னொரு நண்பர் போன் செய்தார்.

அந்த மரியா கேண்ட்டீன் இருந்த இடத்தை வாங்கிடணும்னு எவ்வளவோ டிரை பண்ணினோம். ஆனா, அதிலே அரசியல் தலையீடு அதிகமாக இருந்ததால் எங்களால் முடியலை. வாங்கியிருந்தா அதை தாஜ்மஹால் மாதிரி மாத்தியிருப்போம் என்றார்.

வியப்பாக இருந்தது. வேறு யாருடைய வாழ்க்கையிலாவது இது போல ஒரு பொது இடம் சிம்மாசனம் போட்டு இருந்திருக்குமா தெரியவில்லை.

அதற்காக ஒரு சங்கம் அமையவிருந்தது... பொது நிதி திரட்டி அதை காப்பாற்ற முயற்சி நடந்திருக்கிறது. அதை நினைவுச் சின்னமாக்கும் திட்டம் இருந்திருக்கிறது. இது எதுவுமே நடக்காமல் போன விரக்தியில் இருந்தவர்களுக்கு இந்தக் கதை வடிவம் ஆறுதலாக இருந்தது.

இருக்கும்போது அப்பா அம்மாவின் மதிப்பு தெரியாது என்பது போல, நாட்கணக்கில் அங்கேயே காத்துக் கிடந்த நாங்கள், அதை ஒரு புகைப்படமாகக் கூட எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. அவன் எடுத்திருக்கிறான்... இவன்கிட்டே இருக்கு என்பது போல பேச்சுதான் அடிபடுகிறது.

இத்தனை நினைவுகளைக் கிளறிவிட்ட கதையைத் தேடி எடுத்தேன்.


மரியா கேண்ட்டீன்

‘‘ஒரு மரியா கேன்ட்டீன்...’’ என்று கேட்ட என்னைச் சின்ன சிரிப்போடு பார்த்தார் கண்டக்டர்.

‘‘சேவியர்ஸா, இல்லை ஜான்ஸா?’’

‘‘சேவியர்ஸ்... எய்ட்டி செவன் & நைன்ட்டி செட்!’’ என்றேன் பரவசமாக.

ஏதோ அன்டார்டிகாவில் சொந்தக்காரனைப் பார்த்தது போல ஒரு சந்தோஷம். ஆனால், என் பதிலைக் கேட்க அவகாசமில்லாமல் இடித்து மிதித்துக்கொண்டு ஏறிய கும்பலை நோக்கி, ‘‘உள்ளே போங்க... உள்ளே போங்க...’’ என்று கத்தத் தொடங்கிவிட்டார்.



மரியா கேன்ட்டீன், திருநெல்வேலியில் அழிக்க முடியாத ஓர் அடையாளம். பாளையங்கோட்டை

பஸ் ஸ்டாண்டைத் தாண்டி ஹைகிரவுண்ட் செல்லும் வழியில், சேவியர் கல்லூரிக்கும் ஜான்ஸ் கல்லூரிக்கும் இடையே தனித்த அடையாளத்தோடு நிற்கும் கட்டடம்.

நெல்லையின் எல்லா கல்லூரி மாணவர்களுக்கும் அதுதான் ஸ்பாட்... டாப்பு. அன்றைய கல்லூரி நடவடிக்கைகள் அங்கேதான் தீர்மானிக்கப்படும். ஸ்டிரைக் அடிக்கப் போகிறார்கள் என்றால், நெல்லை கமிஷனருக்கு முன்னால் மரியா கேன்ட்டீன் சேட்டனுக்குத் தெரிந்துவிடும்.

அந்த ஊரில் எந்தக் கல்லூரியில் படித்தவனாக இருந்தாலும் ஒருமுறையாவது மரியா கேன்ட்டீனில் சமோசா, டீ சாப்பிட்டிருப்பான். பெண்கள் மட்டும் இதில் விதிவிலக்கு. அதிலும் விதிவிலக்காக வெண்ணிலா என்னோடு மரியா கேன்ட்டீன் வந்திருக்கிறாள்.

‘‘என்னய்யா இடம் இது..? ஒரு ரூம்... வெளியே மூணு பக்கமும் வராண்டா. நாலு டேபிள் சேர். ஒரு ரெஸ்டாரென்ட் மாதிரியே தெரிய-லியே!’’ என்று ஆச்சர்ய பாவம் காட்டினாள். நான் அவளை ஒரு காபி சாப்பிடப் போகலாமா என்று கேட்டதும், ஏதோ பெரிய ரெஸ்டாரென்ட்டுக்கு அழைத்துச் செல்வேன் என்று நினைத்துவிட்டாள்.

‘‘இதுதான் எங்க ஃபேவரிட் ஸ்பாட். அநேகமாக இங்கே வர்ற முதல் பொண்ணு நீயாதான் இருப்பே!’’ என்று சிரித்தேன்.

அது உண்மைதான் என்பது போல டீ சப்ளை செய்யும் சேட்டன், வெண்ணிலாவை உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை பார்த்தான்.

வெண்ணிலா எதுவும் கேட்காமலே கேக் கொண்டு வந்து கொடுத்தான். எனக்கு வழக்கம்போல எந்தக் கேள்வியும் இல்லாமல் ஒரு பிளேட் சமோசா, ஒரு டீ, அரை பாக்கெட் சிகரெட்!

‘‘ஓ... ஆர்டர் பண்ணாமலே எல்லாம் வருதுன்னா, ஐயா இங்கே ரெகுலர் கஸ்டமரா?’’

‘‘எப்பவுமே எல்லாருக்கும் இங்கே ஆர்டர் பண்ணாமலே எல்லாம் கிடைக்கும். சமோசா, டீ ரெகுலர். யாருக்கு எந்த சிகரெட்டுங்கிறது எல்லாம் ஒரே வாரத்தில் பழகிடும். ஒருதடவை எங்கப்பாவும் நானும் இங்கே வந்தோம். அப்பவும் இதே-போல சிகரெட்டைக் கொண்டு வந்து வெச்சுட்டான்..!’’ என்று சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்திவிட்டு டீயை உறிஞ்சினேன்.

‘‘என்ன, அந்த சிகரெட் பாக்கெட்டை உங்கப்பா எடுத்துக்கிட்டாரா..? இப்படி ஏதாவது மொக்கையா ஜோக் அடிக்காதே!’’ என்று சிரித்த வெண்ணிலா, என்னையே கடிப்பது போல சமோசாவைக் கடித்தாள்.

‘‘இல்லல்ல... நான் பதறின வேகத்தைப் பார்த்துட்டு, கல்லாவில் இருந்தவர் ஓடி வந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்துட்டு, ‘இதுக்கு முன்னால காபி சாப்பிட்ட கஸ்டமர் கேட்டதை பையன் இப்போ கொண்டு வந்து கொடுத்துட்டான். ஸாரி சார்!’னு சமாளிச்சுட்டார். டீ எப்படி இருக்கு?’’ என்றேன்.

‘‘எங்க ஹாஸ்டல் மெஸ்ஸைவிட நல்லா இருக்கு’’ என்றாள். வெண்ணிலா, மெடிக்கல் காலேஜ் மாணவி.

எனக்குக் கல்லூரி முடிந்ததும் அடித்துப் பிடித்து ஹாஸ்டலுக்கு ஓடி, சோப்புப் போட்டு முகம் கழுவி, சட்டை& பேன்ட் மாற்றி, டவுன் பஸ்ஸைப் பிடித்து ஹைகிரவுண்டில் போய் இறங்குவேன். அங்குதான் மெடிக்கல் காலேஜும், வெண்ணிலா தங்கியிருந்த தனியார் ஹாஸ்டலும் இருந்தன.

வெண்ணிலாவும் கிட்டத்தட்ட தயாராக இருப்பாள். இருவரும் பேசிக்கொண்டே தினம் ஒரு திசையில் நடப்போம். அப்படி ஒரு தினத்தில்தான் அவளை மரியா கேன்ட்டீனுக்கு அழைத்து வந்தேன். அதன் பிறகு அடிக்கடி அவள் என்னுடன் மரியா கேன்ட்டீன் வரத் தொடங்கினாள்.

‘‘ஏம்ப்பா... வர லேட்டாகும்னு முன்னாடியே சொல்லியிருந்தா, நானும் லேட்டாவே வந்திருப்பேன்ல. நீ வந்திடுவேனு நம்பி கேன்ட்டீனுக்கு வந்து உட்கார்ந்துட்டேன். உங்க சேட்டன் பழக்கதோஷத்துல சமோசா, டீயோடு அரை பாக்கெட் சிகரெட்டையும் வெச்சுட்டுப் போயிட்டார். பக்கத்து டேபிள் பார்ட்டிங்க தெறிச்சுட்டாங்க தெரியுமா?’’ என்று ஒரு நாள் வெண்ணிலா சொன்னபோது சிரிப்பு பீறிட்டது.

வெண்ணிலாவை ரத்த தான முகாம் ஒன்றில்தான் சந்தித்தேன். எங்கள் கல்லூரியில் நான் சேர்மன். கூடவே என்.எஸ்.எஸ். தலைவர். அதனால், கல்லூரி ஏற்பாடு செய்த ரத்த தான முகாமை என்னை துவக்கி வைக்கச் சொல்லிவிட்டார் பிரின்சிபல்.

துவக்கிவைப்பது என்றால் ரிப்பன் வெட்டுகிற சமாசாரம் இல்லையே... ரத்தம் கொடுப்பது பற்றி எனக்குள் ஆயிரம் தயக்கங்கள் இருந்தன. மருத்துவக் கல்லூரி டீமில் வந்து இறங்கிய வெண்ணிலாதான், ரத்தம் கொடுப்பதில் எந்தச் சிக்கலும் வராது என்பதை விளக்கமாகச் சொன்னாள்.

சேர்மன் பதவிக்காக இல்லையென்றாலும், என்.எஸ்.எஸ். தலைவர் என்பதற்காக இல்லாவிட்டாலும், பிரின்சிபல் சொன்னதற்காக இல்லை என்றாலும்... வெண்ணிலாவுக்காக ரத்தம் கொடுக்கத் தயாரானேன். எத்தனை பாட்டில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று தாராளமாக அறிவித்தேன். மையமாகச் சிரித்தாள்.

என்னுடைய ரத்த தானச் சாதனைப் புகைப்படம், அடுத்த நாள் தினசரி பேப்பர்களில் வெளியானது. எங்கள் கல்லூரி சார்பாக ரத்தம் கொடுத்தவர்களுக்கான சர்டிஃபிகேட்டுகளுடன் வந்த வெண்ணிலா, ‘‘போட்டோவில் நீ ஒண்ணும் பயந்த மாதிரி தெரியலையே...’’ என்றாள். அப்படித்தான் ஆரம்பித்தது நட்பு.

‘‘இனிமேல் சகட்டுமேனிக்கு யார் கேட்டாலும் ரத்தம் கொடுக்கப் போய் நிற்காதே..!’’ என்றாள்.

‘‘அடப்பாவி... இப்படித் தொழிலுக்கே துரோகம் பண்றியே. உனக்கே இது நல்லாயிருக்கா?’’ என்றேன் பொய்க் கோபத்தோடு.

‘‘அதுக்கில்லைப்பா... உன்னோடது ரொம்ப ரேர் குரூப். தேவைப் படும்போது மட்டும் கொடுக்க வேண்டிய ரத்தம். இன்னும் சொல்லப் போனா, ராயல் பிளட் குரூப்’’ என்றாள். அதில் என் சாதனை ஏதும் இல்லை என்றா லும், பெருமையாக இருந்தது. அதன் பிறகு ஒன்றரை வயதுக் குழந்தைக்கு ஆபரேஷன் என்று ஒருமுறை அவளே அழைத்தாள்.





அன்றைய தினம் மிகவும் முக்கிய மானது. அன்றுதான் வெண்ணிலாவிடம் என் காதலைச் சொன்னேன், அதுவும் எங்கள் நட்புக்கு சாட்சியாக இருந்த அதே மரியா கேன்ட்டீனில்.

நான் சொன்னதைக் கேட்டு நிமிர்ந்த வெண்ணிலாவின் கண்கள் நீரில் பளபளத்தன. ‘‘நீ இதை ஒரு நாள் சொல்வேனு எனக்குத் தெரியும்’’ என்றாள். ‘‘நீ சொல்லாத வரைக்கும் இன்னிக்குத் தப்பிச்சுட் டேன்னு ஒரு நிம்மதி பிறக்கும். இப்போ அதைக் கெடுத்துட்டே...’’ என்று வெண்ணிலா பேசிக்கொண்டே போக, எனக்குள் குழப்பம்!

ஒருவனுடைய காதல் விண்ணப் பம், ஒரு பெண்ணுக்கு சந்தோஷத் தைக் கொடுக்கும்; அல்லது, கோபத்-தைக் கொடுக்கும். இப்படி ஒரு துயரத்தைக் கொடுக்குமா..? அறி-முகமே இல்லாத ஒருவன் என்றாலும் பரவாயில்லை; என்னைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும்... ஏன்?

‘‘இல்லை, நான் சொல்லலைன்னே நினைச்சுக்கோ. நிதானமா யோசிச்சு முடிவு பண்ணு’’ என்று வெண்ணிலாவை பஸ் ஏற்றிவிட்டு, ஹாஸ்டலுக்குத் திரும்பினேன். ‘காதலைச் சொல்லி ஒரு பெண்ணைக் குழப்பிவிட்டோமோ..?’ என்று குழப்பம் எனக்கு.

அடுத்த நாளும் மரியா கேன்ட்டீனில் எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம்.

‘‘நான் வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு நொந்து போயிருக்கேம்ப்பா! எனக்கு உள்ளுக்குள்ள ஒரு கனவு ஓடிட்டிருக்கு. நான் டாக்டர் ஆகியே தீரணும். என் கன-வைக் கலைச்சுடாதே! உன்னைக் காதலிக்கிறேன்னு சொன்னா, படிப்பு தடுமாறிடுமோன்னு பயந்து பயந்து உள்ளுக்குள் வெச்சுக்கிட்டு தவிச் சுட்டு இருந்தேம்ப்பா! ஆனா, நீயே சொன்னதுக்குப் பிறகு, மறுக்க முடியலை. கடைசி வரைக்கும் என்னோடு ஆதரவா, உறுதியா நிக்கணும். நிப்ப தானே? இல்லேன்னா நான் சுக்கல் சுக்கலா நொறுங்கிப் போயிடுவேன்’’ என்றபோது, வெண்ணிலா கண்களில் வெள்ளமாக நீர்.

சட்டென்று அவளுடைய கண்களைத் துடைத்துவிட்டு, கைகளைப் பற்றிக்கொண்டேன்.

‘‘என்ன வெண்ணிலா, என்ன பேசறே..? உன்னை நான் எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா..? இந்த மரியா கேன்ட்டீன் சாட்சியா சொல்றேன்... உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்!’’

‘ப்பீய்ங்...’ என்ற விசில் சத்தத்துக்கு வண்டி குலுங்கி நின்றது.

‘‘சார்... நீங்க கேட்ட ஸ்டாப்பிங் வந்துடுச்சு!’’ என்ற கண்டக்டரின் உலுப்பலில் சுதாரித்து பஸ்ஸைவிட்டு இறங்கினேன்.

பஸ் நகர்ந்து போக, மரியா கேன்ட்டீன் இருந்த இடத்தை என் கண்கள் துழாவின. சுத்தமாக இடித்துச் சமதளமாக்கி காம்பவுண்ட் போட்டு வைத்திருந்தார்கள்.

சாட்சி இல்லையென்றாலும், குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா என்ன?

Tuesday, September 15, 2009

நான் சென்னைவாசியான தினம்!

நாசர் என்றொரு நண்பர்... அவர் சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கிறார்... நான் அங்கிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வளசரவாக்கம் பகுதியில் இருக்கிறேன். இந்த விஞ்ஞான யுகத்தில் கிலோமீட்டரெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பீர்கள். உண்மைதான்... அவருடைய எண் என்னிடம் இருக்கிறது. என்னுடைய எண் அவரிடம் இருக்கிறது.

ஆனால், நாங்கள் பேசிக் கொண்டது ஓராண்டுக்கு முன்... நான் விகடனை விட்டு வெளியே வந்தது அவருக்குத் தெரியாது! நியாயமாக நான் விகடனை விட்டு விலகப் போகிறேன் என்பதை ஆசிரியர் அசோகனிடம் சொல்லும் முன் எம்.டி-யிடம் சொல்லும் முன் நாசரிடம்தான் நான் சொல்லியிருக்க வேண்டும்...

இந்த இடத்தில் ஒரு ப்ளாஷ்பேக் வரப் போகிறது என்பதை யூகித்திருப்பீர்களே... உங்கள் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே தயாராகிவிடுங்கள்.

அது 1994-ம் ஆண்டு... ‘சென்னைக்கு வா... ஆயிரம் வேலைகள் உனக்காகக் காத்திருக்கிறது...’ என்ற நம்பிக்கை வார்த்தைகளோடு என்னை சென்னைக்கு அழைத்து வந்தவர்கள் நாசரும் இஸ்மாயிலும். நாசர் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக இருந்தார். அவரோடு தங்கியிருந்த இஸ்மாயில் மேலூரார், வெங்கட், வேத்து எல்லோரும் என்னை ஸ்வீகரித்துக் கொண்டனர்.

கையில் இருந்த காசைக் கொண்டு ஒரு மாதம் எந்த கஷ்டமும் இல்லாமல் காலம் கழிந்தது. அதற்குள் ஒரு வேலை தேடிவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அதற்கான முயற்சி எதுவும் எடுக்கவில்லை.

என்ன மாதிரி வேலை தேடலாம் என்றுகூட எனக்கு ஐடியா இல்லை. நாசர்தான் சொன்னார், ‘பாபு... நீங்க விகடன் மாணவ நிருபரா இருந்தவர்தானே... மேலூர் காரன் கம்பெனியில் ஒரு பிஸினஸ் பத்திரிகை பண்றாங்க... ஜாயின் பண்ணுங்களேன்...’ என்றார்.

‘ஓகே என்று பத்திரிகையாளனானேன். அதன்பிறகுதான் விகடனுக்குப் போய் பழைய நண்பர்களைப் பார்க்கவே தோன்றியது.

’பொருளாதாரம்’ என்ற பெயரில் வெளியான அந்தப் பத்திரிகையின் பணி என் பொருளாதாரத்தைப் பெரிதாக உயர்த்தவில்லை. நேர்முகத் தேர்வில் என்ன சம்பளம் எதிர்பார்க்கறீங்கனு கேட்டால் 1500 ரூபாய் சொல்லுங்க என்று நாசர்தான் சொல்லிக் கொடுத்தார். அதற்கே அதிர்ந்து போன ஆசிரியர் 900 ரூபாய் தருவதாகச் சொன்னார். எந்த கணக்கும் பார்க்கத் தெரியாத நான் சம்மதித்து வேலையில் சேர்ந்தேன்.

ஒரேமாதத்தில் ஒரு சிக்கல் வந்தது. நடுவே விகடனுக்கு நண்பர்களைப் பார்க்கப் போனபோது, பத்திரிகை வேலைன்னா விகடனுக்கு வந்திடலாமேனு சொன்னாங்க. ஆனால் விகடனில் ஆரம்பத்தில் பங்களிப்பாளனாகத்தான் சேரமுடியும். அதாவது என் கட்டுரைகள் பிரசுரமானால் அதற்கு சன்மானம் கிடைக்கும். சம்பளம் ஏதும் கிடையாது.

என்ன செய்வது என்று குழப்பம். முதல் தேதி கிடைக்கும் 900 ரூபாயா... விகடனா?

நாசர்தான் சொன்னார்... ‘பாபு... காலை டிபன், காபி மத்த தேவைகளுக்கு அண்ணாச்சி கடையில் கணக்கு ஆரம்பிச்சுடுங்க... ராத்திரியும் ஞாயிற்றுக் கிழமையிலும் வீட்டுக்கு சாப்பாடு கொண்டு வரும் அம்மாவிடம் உங்களுக்கும் சேர்த்து சொல்லிடலாம். மதியம் மட்டும் உங்க பொறுப்பு.

இதில் அண்ணாச்சி கடைக்கு பணம் கிடைக்கும்போது செட்டில் பண்ணிக்கலாம்... சாப்பாட்டுக்கார அம்மாவுக்கும், வீட்டு வாடகைக்கும் நாங்க பார்த்துக்கறோம். அதனால், வருமானத்தைப் பற்றி யோசிக்காதீங்க... உங்க எதிர்காலத்தை மனசில் வெச்சு முடிவு பண்ணுங்க’ என்று நாசர் சொன்ன வார்த்தைகளை வைத்து விகடனில் சேர்ந்தேன்.

முதல் மாதத்திலேயே 1500 ரூபாய் சன்மானம். என் ஓட்டம் அதிகமானது. ஒருகட்டத்தில் என் சன்மானத் தொகையில் மிரண்டு போன விகடன் நண்பர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். நிறுவனம் என்னை ஊழியனாக்கியது.

அப்போது நாசர் சொன்னார்.

‘பாபு... நம்ம ரூமுக்கு புதுசா ஒரு பொடியன் வந்திருக்கான்... அவன் செட்டில் ஆகற வரைக்கும் நாமதான் செலவுகளைப் பார்த்துக்கணும். அதனால், உங்க ஷேருக்கு மேல் 500 ரூபாய் கொடுங்க...’ சந்தோஷமாகக் கொடுத்தேன்.

விகடனில் நிரந்த ஊழியரின் பெயரைத்தான் நிருபர் குழு பட்டியலில் போடுவார்கள். என் பெயர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றபோது அந்த அறையே உற்சாகப் பெருக்கெடுத்து ஓடியது.

அதன்பிறகு என் உயரத்தை அவர் விகடன் மூலமே அறிந்துகொள்வார். என்ன பாபு... ஜூ.வி--க்கு போயிட்டீங்க போலிருக்கு... அடடே... சீனியர் சப் எடிட்டராகிட்டீங்களா? என்று என் வளர்ச்சியை அவர் தொடர்ந்து கொண்டேயிருந்தார்.

அப்படிப் பட்டவரிடம் சொல்லிவிட்டுத்தானே நான் விகடனை விட்டு வெளியேறி இருக்கவேண்டும். ஆனால், யாருக்கும் தகவல் சொல்ல அவகாசம் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ்-ஸில் புதிய எண்ணை அனுப்பி வைத்தேன். அதன்பிறகு கிடைத்த அவகாசத்தில் மெசேஜ் கிடைத்ததா என்று தொழில் ரீதியான தொடர்பில் இருப்பவர்களுக்கெல்லாம் விசாரித்தேன்.

கடந்த ஞாயிறன்று தென்காசியில் இருந்து நண்பன் சுப்புராஜ் போன் செய்தான். ‘டேய்... நாசர் உன்னோடு பேசணுமாம்...’ என்றான்.

மொபைலில் தெரியாது என்றாலும் என் தலை தானாகக் கவிழ்ந்துகொண்டது.

‘என்ன பாபு... நீங்க விகடனில் இல்லையாமே... சுப்பு சொன்னான். நான் நேத்து ஊருக்கு வந்தேன். அக்காவுக்கு கேன்சர்... சென்னையில் என் வீட்டில் வெச்சுத்தான் பார்த்தோம்... ஒருவருஷ போராட்டத்துக்கு பலனில்லாமல் நேத்து இறந்துட்டாங்க...’ என்றார்.

மொத்தமாக அதிர்ந்து போனேன்.

‘ஒருவருஷமாவா... ஒரு வார்த்தை சொல்லலையே..?’ என்றேன்.

என்ன பண்றது பாபு... நாம சென்னைவாசிகளாகிட்டோமே!’ என்றார்.

அவர் என்னை சென்னைக்கு அழைத்து வந்தார்... ஆனால், நான் சென்னைவாசி ஆகிவிட்டேன்!

Sunday, September 13, 2009

ஹேப்பி பர்த் டே!

ஆறேழு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள்... கிராமத்தில் எங்கள் வீடே பரபரப்பாக இருந்தது. விடிந்தால் அப்பாவுக்கு அறுபது வயது பூர்த்தி ஆகிறது. நானும் மனைவி குழந்தையும் முதல்நாளே போய்விட்டோம். நாங்கள் போய்ச் சேர்ந்த தினத்தின் மாலையில் தங்கையும் அத்தானும் குழந்தைகளோடு வந்து சேர்ந்தார்கள். அண்ணன் முக்கியமான வேலை இருப்பதால் காலை வெள்ளனே வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தார்.

சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லிவிட்டிருந்தோம். சித்தப்பா குழந்தைகள் எல்லாம் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வந்துவிட்டது. அப்பாவுக்கும் அம்மாவுக்குமான உடைகளை எடுத்து வைத்துக் கொண்டோம்.

கோவில் எல்லாம் வேண்டாம்... வீட்டில் விளக்கு முன்னால் அமர்ந்து எல்லோருக்கும் ஆசி வழங்கினால் போதும் என்று முடிவு செய்திருந்தோம். கோவில்களுக்குப் போய் விமரிசையாகச் செய்து கொண்டால் அத்தனை திருப்திகரமாக வாழ்க்கை தொடர்வதில்லை என்று சிலர் சொன்னதால் இந்த ஏற்பாடு!

‘ஏங்க... மாமாவும் அத்தையும் ஆசீர்வாதம் பண்ணும்போது வெறுங்கையோடு பண்ணினா நல்லாவா இருக்கும்...’ என்று என் மனைவி சொல்ல, நாங்களும் தங்கையும் அடித்து பிடித்து ஆட்டோ எடுத்துக் கொண்டு தென்காசிக்கு ஓடினோம்.

‘கொடுக்கற பொருள் காலத்துக்கும் பேர் சொல்ற மாதிரி இருக்கணும்...’ என்று பேசிக் கொண்டே போய், கடைசியில் பாத்திரக் கடையில் புகுந்து எல்லோருக்கும் அடுக்கு ஜாடிகளை வாங்கிக் கொண்டோம்.

அடுத்த நாள் பொழுது விடிந்தது... அப்பா குளித்து முடித்து புதிய ஆடைகள் அணிந்து வந்தர்... அம்மாவும் புதிய சேலை கட்டியிருந்தார். அண்ணனும் அண்ணியும் குழந்தைகளோடு வந்து சேர பேரக் குழந்தைகளால் வீடே கலகலப்பானது.

அப்பாவும் அம்மாவும் முதன்முதலாக தாத்தா ஆச்சி (அம்மாவின் அப்பா அம்மா) காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள, தாத்தாவும் ஆச்சியும் அறுபது ஸ்பெஷல் மோதிரம் அணிவித்தார்கள். அடுத்து ஒவ்வொருவராக அப்பா அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம். ஒவ்வொருவருக்கும் பரிசுகளை எடுத்துக் கொடுக்கும்போது அப்பா அம்மா முகத்தில் அத்தனை பெருமிதம்.

இதுவரையில் எங்கள் ஊரில் அப்படி யாரும் செய்ததில்லை. ஆனால், ஆசி பெற்றவர்கள் திருப்தி முகமாக நிமிர்வதைப் பார்த்தபோது என் மனைவியை நன்றியோடு பார்த்தேன். எங்களுக்கும் விபூதி பூசி பரிசு கொடுத்தார்கள் அப்பாவும் அம்மாவும்.

அண்ணன் மிகுந்த மகிழ்ச்சியோடு அப்பாவுக்கு அறுபது ஸ்பெஷல் மோதிரம் அணிவித்தார். அப்பாவுக்கு பெருமிதமாக இருந்தது. அவருடைய ரிட்டயர்ட்மெண்ட் தினத்துக்கு நாங்கள் யாரும் போகமுடியாத சூழல் இருந்ததை இந்த நிகழ்ச்சி மறக்க வைத்துவிட்டது.

எல்லோருக்கும் சுவையான சூப்பரான சாப்பாடு போட்டோம். அன்று நாள் முழுக்க அம்மா ஈரங்கசிந்த கண்களோடு நடமாடிக் கொண்டிருந்தார். இரவில் ஏன் என்று கேட்டபோது, ‘பிள்ளைகள் எல்லாம் கூடி அறுபதாவது பிறந்த நாள் கொண்டாட உங்கப்பாவுக்கு கொடுத்து வெச்சிருக்கு’ என்றார்.

இது பழைய கதை...
இன்று என் அம்மாவுக்கு அறுபது வயது பூர்த்தியாகிறது. அம்மா கிராமத்தில்... நான் சென்னையில்... என் சகோதரி சேலம்- ஆத்தூரில்... என் சகோதரர் சுவிட்சர்லாந்தில்!

காலையில் போன் செய்தேன்... ஹேப்பி பர்த் டே அம்மா என்றேன்... நீ வீடு கிரஹப் பிரவேசத்துக்கு எடுத்துக் கொடுத்த சேலையைக் கட்டாம வெச்ச்ருக்கேன்... அதைத்தாண்டா இன்னிக்கு கட்டப் போறேன்... எல்லாருக்கும் இங்கேருந்தே என் ஆசீர்வாதங்கள்’ என்றார்.

அதுதான் அம்மா!

Thursday, August 27, 2009

அதென்ன பேரு... மரியா கேண்டீன்?


பெருங்கூட்டமாக வந்து வரிசையில் நின்று ஆதரவுக் கரம் நீட்டிய அத்தனை பிளாகர்களுக்கும் நன்றி (அதான் பத்திரிகைகாரன்னு சொன்னோமுல்ல... கொஞ்சம் கூட்டி குறைச்சுத்தான் சொல்வோம்!)
அந்த கும்பலில் பெரும்பான்மையானோரின் குரல் அதென்ன பேரு... மரியா கேண்டீன் என்பதாக இருந்தது.

தாஜ்மஹாலைப் போய் ஏன் இந்தப் பேருனு கேட்பீங்களா?

திருநெல்வேலியிலே சேவியர்ஸ் காலேஜுக்கும் ஜான்ஸ் காலேஜுக்கும் நடுவிலே முக்குல இருந்த கேண்டீனுக்குப் பேருதான் மரியா கேண்டீன்!
அங்கே ஒரு அட்டெண்டஸ் வைத்தால் நிச்சயமாக நூறு சதவிகித அட்டெண்டன்ஸ் கிடைக்கும். அந்த அளவுக்கு பிஸியாக இருக்கும் கேண்டீன் அது.

நடுவே ஓர் அறை... சுற்றிலும் மூன்று பக்கமும் ஓட்டுச் சாய்ப்பு... அதில் சில நாற்காலி மேஜைகள், அறைக்குள்ளே சில மேஜை நாற்காலிகள்... ஒருபக்கம் சேட்டனின் கல்லா!

சாயாவும் சமோசாவும்தான் பேமஸ்! இந்த இரண்டையும் ஆர்டர் பண்ணினால் கூடவே சிகரெட்டையும் கொண்டு வந்து வைப்பார். யாருக்கு என்ன பிராண்ட் என்பதை காலேஜ் அட்மிஷன்போது அப்ளிகேஷனில் எழுதிக் கொடுத்திருப்போமோ என்று சந்தேகம் வரும் அளவுக்கு மிகச் சரியாக இருக்கும். (ஹாஸ்டலில் இருந்த என்னைப் பார்க்க வந்த அப்பாவை அழைத்துக் கொண்டு ஒருமுறை மரியா கேண்டீனுக்குப் போனேன்... பழக்க தோஷத்தில் சிகரெட்டைக் கொண்டு வந்து வைத்துவிட்டார் சேட்டன். அதன்பிறகு என் அப்பா என் செலவுக்கான பணத்தில் நூறு ரூபாயை அதிகப்படுத்திவிட்டார்)

கல்லூரியில் சஸ்பெண்ட் ஆன நண்பர்களுக்கு அதுதான் கிளாஸ் ரூம்... அங்கு உட்கார்ந்து அத்தனை பாடங்களையும் நோட்ஸ் எடுத்துக் கொள்வார்கள். எல்லா கல்லூரிகளும் சேர்ந்து ஏதாவது போராட்டம் நடத்தலாம் என்றால் அதற்கான ஆலோசனை அங்குதான் நடக்கும். ஜான்ஸ் கல்லூரி மாணவனைப் போட்டுத் தாக்கிடலாம்னு சேவியர்ஸ் காலேஜ் கும்பல் ஒரு டேபிளிலும் சேவியர்ஸ் பயலை ஒரு காட்டு காட்டிறணும்னு ஜான்ஸ் காலேஜ் பசங்க இன்னொரு டேபிளிலும் உட்கார்ந்து சதியாலோசனை செய்வது இந்த கேண்டீனில் வைத்துதான்! ஆனால், இதெல்லாம் தனக்கு சம்பந்தமில்லாத விஷயம்... என் கடன் சமோசா பண்ணிக் கிடப்பதே! என்பது போல கருமமே கண்ணாக இருப்பார் சேட்டன்.

இதெல்லாம் நடந்து முடிந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு நானும் நண்பர்கள் முருகவேள், ஆனந்த் ஆகியோரும் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தபோது மரியா கேண்டீனைப் பற்றி பேச்சு வந்தது.

‘டேய்... மரியா கேண்டீனை இடிச்சுட்டாங்க தெரியுமா?’ என்றான் ஆனந்த். நான் நொறுங்கிப் போனேன். அந்த உரையாடலை அப்படியே நிறுத்திவிட்டு வேகமாக வீட்டுக்கு வந்து என் பிளாக் ஸ்பாட்டைத் திறந்து அதன் பெயரை மரியா கேண்டீன் என்று மாற்றினேன். (கூடவே ஆனந்த விகடனில் மரியா கேண்டீன் என்ற தலைப்பில் ஒரு சிறுகதையும் எழுதினேன்)

இனி சேவியர்ஸ் , ஜான்ஸ் கல்லூரி மாணவர்கள் மனதில் என்றுமே அது ’மரியா’ கேண்டீன்தான்!

நீண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளி..!


எங்காத்துக்காரரும் சந்தைக்குப் போறாருங்கற மாதிரி நானும் பிளாக் எழுதறேன்னு ஆரம்பிச்சேன்... ரொம்ப சுமாரா ஒரு டிசைனை வெச்சுகிட்டு என்ன செய்றதுனு புரியாததாலும் சோம்பேறித்தனத்தாலும் அப்படியே அதை கிடப்பில் போட்டு வெச்சுட்டேன்..!

எழுதறதுக்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கு..! இப்போ நிறைய நேரமும் இருக்கு! எழுத ஆரம்பிக்கலாம்னு பிள்ளையார் சுழி போட்டிருக்கேன்!

அதுக்கு முன்னே என்னைப் பத்தி கொஞ்சம் சொல்லிடறேன்... ஏன்னா, விசிட் அடிக்கும் எல்லோருக்கும் என்னைப் பத்தி தெரியும்னு நினைச்சா பூனை கண்ணை மூடிகிட்ட கதைதான்!

நான் முருகேஷ் பாபு...

விகடன் என்னுடைய எழுத்து அடையாளம்... இப்போது விலாசம் மாறி இருக்கிறேன்...

இப்போ தெனாலினு ஒரு இணைய தள பத்திரிகையில் இருக்கேன்...

நாளையில் இருந்து எழுதலாம்னு ஐடியா... வேணும், உங்க ஆசீர்வாதம்... அப்புறமா எதிர்வாதம்!