Tuesday, September 15, 2009

நான் சென்னைவாசியான தினம்!

நாசர் என்றொரு நண்பர்... அவர் சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கிறார்... நான் அங்கிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வளசரவாக்கம் பகுதியில் இருக்கிறேன். இந்த விஞ்ஞான யுகத்தில் கிலோமீட்டரெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பீர்கள். உண்மைதான்... அவருடைய எண் என்னிடம் இருக்கிறது. என்னுடைய எண் அவரிடம் இருக்கிறது.

ஆனால், நாங்கள் பேசிக் கொண்டது ஓராண்டுக்கு முன்... நான் விகடனை விட்டு வெளியே வந்தது அவருக்குத் தெரியாது! நியாயமாக நான் விகடனை விட்டு விலகப் போகிறேன் என்பதை ஆசிரியர் அசோகனிடம் சொல்லும் முன் எம்.டி-யிடம் சொல்லும் முன் நாசரிடம்தான் நான் சொல்லியிருக்க வேண்டும்...

இந்த இடத்தில் ஒரு ப்ளாஷ்பேக் வரப் போகிறது என்பதை யூகித்திருப்பீர்களே... உங்கள் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே தயாராகிவிடுங்கள்.

அது 1994-ம் ஆண்டு... ‘சென்னைக்கு வா... ஆயிரம் வேலைகள் உனக்காகக் காத்திருக்கிறது...’ என்ற நம்பிக்கை வார்த்தைகளோடு என்னை சென்னைக்கு அழைத்து வந்தவர்கள் நாசரும் இஸ்மாயிலும். நாசர் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக இருந்தார். அவரோடு தங்கியிருந்த இஸ்மாயில் மேலூரார், வெங்கட், வேத்து எல்லோரும் என்னை ஸ்வீகரித்துக் கொண்டனர்.

கையில் இருந்த காசைக் கொண்டு ஒரு மாதம் எந்த கஷ்டமும் இல்லாமல் காலம் கழிந்தது. அதற்குள் ஒரு வேலை தேடிவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அதற்கான முயற்சி எதுவும் எடுக்கவில்லை.

என்ன மாதிரி வேலை தேடலாம் என்றுகூட எனக்கு ஐடியா இல்லை. நாசர்தான் சொன்னார், ‘பாபு... நீங்க விகடன் மாணவ நிருபரா இருந்தவர்தானே... மேலூர் காரன் கம்பெனியில் ஒரு பிஸினஸ் பத்திரிகை பண்றாங்க... ஜாயின் பண்ணுங்களேன்...’ என்றார்.

‘ஓகே என்று பத்திரிகையாளனானேன். அதன்பிறகுதான் விகடனுக்குப் போய் பழைய நண்பர்களைப் பார்க்கவே தோன்றியது.

’பொருளாதாரம்’ என்ற பெயரில் வெளியான அந்தப் பத்திரிகையின் பணி என் பொருளாதாரத்தைப் பெரிதாக உயர்த்தவில்லை. நேர்முகத் தேர்வில் என்ன சம்பளம் எதிர்பார்க்கறீங்கனு கேட்டால் 1500 ரூபாய் சொல்லுங்க என்று நாசர்தான் சொல்லிக் கொடுத்தார். அதற்கே அதிர்ந்து போன ஆசிரியர் 900 ரூபாய் தருவதாகச் சொன்னார். எந்த கணக்கும் பார்க்கத் தெரியாத நான் சம்மதித்து வேலையில் சேர்ந்தேன்.

ஒரேமாதத்தில் ஒரு சிக்கல் வந்தது. நடுவே விகடனுக்கு நண்பர்களைப் பார்க்கப் போனபோது, பத்திரிகை வேலைன்னா விகடனுக்கு வந்திடலாமேனு சொன்னாங்க. ஆனால் விகடனில் ஆரம்பத்தில் பங்களிப்பாளனாகத்தான் சேரமுடியும். அதாவது என் கட்டுரைகள் பிரசுரமானால் அதற்கு சன்மானம் கிடைக்கும். சம்பளம் ஏதும் கிடையாது.

என்ன செய்வது என்று குழப்பம். முதல் தேதி கிடைக்கும் 900 ரூபாயா... விகடனா?

நாசர்தான் சொன்னார்... ‘பாபு... காலை டிபன், காபி மத்த தேவைகளுக்கு அண்ணாச்சி கடையில் கணக்கு ஆரம்பிச்சுடுங்க... ராத்திரியும் ஞாயிற்றுக் கிழமையிலும் வீட்டுக்கு சாப்பாடு கொண்டு வரும் அம்மாவிடம் உங்களுக்கும் சேர்த்து சொல்லிடலாம். மதியம் மட்டும் உங்க பொறுப்பு.

இதில் அண்ணாச்சி கடைக்கு பணம் கிடைக்கும்போது செட்டில் பண்ணிக்கலாம்... சாப்பாட்டுக்கார அம்மாவுக்கும், வீட்டு வாடகைக்கும் நாங்க பார்த்துக்கறோம். அதனால், வருமானத்தைப் பற்றி யோசிக்காதீங்க... உங்க எதிர்காலத்தை மனசில் வெச்சு முடிவு பண்ணுங்க’ என்று நாசர் சொன்ன வார்த்தைகளை வைத்து விகடனில் சேர்ந்தேன்.

முதல் மாதத்திலேயே 1500 ரூபாய் சன்மானம். என் ஓட்டம் அதிகமானது. ஒருகட்டத்தில் என் சன்மானத் தொகையில் மிரண்டு போன விகடன் நண்பர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். நிறுவனம் என்னை ஊழியனாக்கியது.

அப்போது நாசர் சொன்னார்.

‘பாபு... நம்ம ரூமுக்கு புதுசா ஒரு பொடியன் வந்திருக்கான்... அவன் செட்டில் ஆகற வரைக்கும் நாமதான் செலவுகளைப் பார்த்துக்கணும். அதனால், உங்க ஷேருக்கு மேல் 500 ரூபாய் கொடுங்க...’ சந்தோஷமாகக் கொடுத்தேன்.

விகடனில் நிரந்த ஊழியரின் பெயரைத்தான் நிருபர் குழு பட்டியலில் போடுவார்கள். என் பெயர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றபோது அந்த அறையே உற்சாகப் பெருக்கெடுத்து ஓடியது.

அதன்பிறகு என் உயரத்தை அவர் விகடன் மூலமே அறிந்துகொள்வார். என்ன பாபு... ஜூ.வி--க்கு போயிட்டீங்க போலிருக்கு... அடடே... சீனியர் சப் எடிட்டராகிட்டீங்களா? என்று என் வளர்ச்சியை அவர் தொடர்ந்து கொண்டேயிருந்தார்.

அப்படிப் பட்டவரிடம் சொல்லிவிட்டுத்தானே நான் விகடனை விட்டு வெளியேறி இருக்கவேண்டும். ஆனால், யாருக்கும் தகவல் சொல்ல அவகாசம் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ்-ஸில் புதிய எண்ணை அனுப்பி வைத்தேன். அதன்பிறகு கிடைத்த அவகாசத்தில் மெசேஜ் கிடைத்ததா என்று தொழில் ரீதியான தொடர்பில் இருப்பவர்களுக்கெல்லாம் விசாரித்தேன்.

கடந்த ஞாயிறன்று தென்காசியில் இருந்து நண்பன் சுப்புராஜ் போன் செய்தான். ‘டேய்... நாசர் உன்னோடு பேசணுமாம்...’ என்றான்.

மொபைலில் தெரியாது என்றாலும் என் தலை தானாகக் கவிழ்ந்துகொண்டது.

‘என்ன பாபு... நீங்க விகடனில் இல்லையாமே... சுப்பு சொன்னான். நான் நேத்து ஊருக்கு வந்தேன். அக்காவுக்கு கேன்சர்... சென்னையில் என் வீட்டில் வெச்சுத்தான் பார்த்தோம்... ஒருவருஷ போராட்டத்துக்கு பலனில்லாமல் நேத்து இறந்துட்டாங்க...’ என்றார்.

மொத்தமாக அதிர்ந்து போனேன்.

‘ஒருவருஷமாவா... ஒரு வார்த்தை சொல்லலையே..?’ என்றேன்.

என்ன பண்றது பாபு... நாம சென்னைவாசிகளாகிட்டோமே!’ என்றார்.

அவர் என்னை சென்னைக்கு அழைத்து வந்தார்... ஆனால், நான் சென்னைவாசி ஆகிவிட்டேன்!

2 comments:

Unknown said...

arumaiyaana padhivu..thodarungalll..nandri

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நகைசுவையான நடை.........
முடிக்கும் பொது நெகிழவைத்துவிட்டிர்கள் ....

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்