Friday, September 18, 2009

ஒரு கதையின் கதை!



ஒரு சிறுகதை புதிய நண்பர்களை தேடித் தரும் என்று சொல்லத் தகுந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. ஆனந்த விகடனில் மரியா கேண்ட்டீன் கதை வெளியான தினம் இரவு நான் சொந்த ஊருக்குப் பயணமாகிக் கொண்டிருந்தேன். புதிய எண் ஒன்றிலிருந்து அழைப்பு... ‘சார்... நீங்கதான் முருகேஷ் பாபுவா... மரியா கேண்ட்டீன் கதையை நீங்கதான் எழுதினீங்களா..?’ என்று கொஞ்சம் மிரட்டலாகவே கேட்டது ஒரு குரல்.

ஆமாம் சார்... நான் சேவியர்ஸில் படிச்சவன்...’ என்று சொன்ன நொடியில் அந்தப்பபக்கமிருந்து குரலே வரவில்லை. சிறிது இடைவெளிக்குப் பிறகு, ‘நான் ஜான்ஸ்... எங்க பசங்க எல்லாருக்கும் சொல்லிட்டேன்... எல்லாரும் உங்களுக்குப் பேசுவாங்க... தயவு செய்து தொந்தரவா நினைக்காதீங்க... உங்க ஆபீஸில் கெஞ்சி உங்க போன் நம்பரை வாங்கியிருக்கேன். சார்... ராத்திரி முழுக்க தூங்க முடியாது சார்... நீங்க செய்தது பெரிய விஷயம்...’ சிக்னல் கட்டாகும்வரை பேசிக் கொண்டே போனார்.

அதிகாலையில் மீண்டும் அதே எண்கள்... சார் ஊருக்குப் போய்ச் சேர்ந்துட்டீங்களா... என் பிரெண்ட்ஸ் உங்ககிட்டே பேசணும்னு சொன்னாங்க... நீங்க டிராவல் பண்றதைச் சொல்லி வெயிட் பண்ணச் சொன்னேன். பேசச் சொல்லட்டுங்களா...’ என்றார்.

கல்லூரிக் காலங்களில் ஜான்ஸ் காலேஜ் என்றால் எங்களுக்கு பாகிஸ்தான் மாதிரி. அப்போது முறைத்துக் கொண்டு திரிந்த முஷரப்புகள் இப்போது எனக்காக வெயிட்டிங். சின்ன கர்வம் மனதில் எழ, மரியா கேண்ட்டீன் எல்லோருக்கும் பொதுதானே... என்ற பொது உணர்வு மண்டையில் தட்ட, உடனே நம்பர் அனுப்புங்க... நானே பேசறேன் என்றேன்.

சேச்சே... அது மரியாதையாக இருக்காது... என்ற அந்த நண்பர் போனை அணைக்க, அடுத்த நிமிடம் லைனில் வந்தார் வேறொருவர்.

‘சார்... எங்கக்கா நேத்து கோயமுத்தூரில் இருந்து பேசினாங்க... டேய், உங்க மரியா கேண்ட்டீனைப் பத்தி ஒரு கதை விகடனில் வந்திருக்குடா...னு சொன்னாங்க. மரியா கேண்ட்டீனைப் பத்தி என்ன இருக்கு எழுதனு நினைச்சேன். ஆனால், சார்... இனி மரியா கேண்ட்டீனுக்கு சாவே கிடையாது சார்... காலத்தில் அதை நிக்க வெச்சுட்டீங்க...’ என்றார்.

ஒரு கதையின் தீவிரத்தை நான் அப்போதுதான் உணர்ந்தேன்.

இன்னொரு நண்பர் போன் செய்தார்.

அந்த மரியா கேண்ட்டீன் இருந்த இடத்தை வாங்கிடணும்னு எவ்வளவோ டிரை பண்ணினோம். ஆனா, அதிலே அரசியல் தலையீடு அதிகமாக இருந்ததால் எங்களால் முடியலை. வாங்கியிருந்தா அதை தாஜ்மஹால் மாதிரி மாத்தியிருப்போம் என்றார்.

வியப்பாக இருந்தது. வேறு யாருடைய வாழ்க்கையிலாவது இது போல ஒரு பொது இடம் சிம்மாசனம் போட்டு இருந்திருக்குமா தெரியவில்லை.

அதற்காக ஒரு சங்கம் அமையவிருந்தது... பொது நிதி திரட்டி அதை காப்பாற்ற முயற்சி நடந்திருக்கிறது. அதை நினைவுச் சின்னமாக்கும் திட்டம் இருந்திருக்கிறது. இது எதுவுமே நடக்காமல் போன விரக்தியில் இருந்தவர்களுக்கு இந்தக் கதை வடிவம் ஆறுதலாக இருந்தது.

இருக்கும்போது அப்பா அம்மாவின் மதிப்பு தெரியாது என்பது போல, நாட்கணக்கில் அங்கேயே காத்துக் கிடந்த நாங்கள், அதை ஒரு புகைப்படமாகக் கூட எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. அவன் எடுத்திருக்கிறான்... இவன்கிட்டே இருக்கு என்பது போல பேச்சுதான் அடிபடுகிறது.

இத்தனை நினைவுகளைக் கிளறிவிட்ட கதையைத் தேடி எடுத்தேன்.


மரியா கேண்ட்டீன்

‘‘ஒரு மரியா கேன்ட்டீன்...’’ என்று கேட்ட என்னைச் சின்ன சிரிப்போடு பார்த்தார் கண்டக்டர்.

‘‘சேவியர்ஸா, இல்லை ஜான்ஸா?’’

‘‘சேவியர்ஸ்... எய்ட்டி செவன் & நைன்ட்டி செட்!’’ என்றேன் பரவசமாக.

ஏதோ அன்டார்டிகாவில் சொந்தக்காரனைப் பார்த்தது போல ஒரு சந்தோஷம். ஆனால், என் பதிலைக் கேட்க அவகாசமில்லாமல் இடித்து மிதித்துக்கொண்டு ஏறிய கும்பலை நோக்கி, ‘‘உள்ளே போங்க... உள்ளே போங்க...’’ என்று கத்தத் தொடங்கிவிட்டார்.



மரியா கேன்ட்டீன், திருநெல்வேலியில் அழிக்க முடியாத ஓர் அடையாளம். பாளையங்கோட்டை

பஸ் ஸ்டாண்டைத் தாண்டி ஹைகிரவுண்ட் செல்லும் வழியில், சேவியர் கல்லூரிக்கும் ஜான்ஸ் கல்லூரிக்கும் இடையே தனித்த அடையாளத்தோடு நிற்கும் கட்டடம்.

நெல்லையின் எல்லா கல்லூரி மாணவர்களுக்கும் அதுதான் ஸ்பாட்... டாப்பு. அன்றைய கல்லூரி நடவடிக்கைகள் அங்கேதான் தீர்மானிக்கப்படும். ஸ்டிரைக் அடிக்கப் போகிறார்கள் என்றால், நெல்லை கமிஷனருக்கு முன்னால் மரியா கேன்ட்டீன் சேட்டனுக்குத் தெரிந்துவிடும்.

அந்த ஊரில் எந்தக் கல்லூரியில் படித்தவனாக இருந்தாலும் ஒருமுறையாவது மரியா கேன்ட்டீனில் சமோசா, டீ சாப்பிட்டிருப்பான். பெண்கள் மட்டும் இதில் விதிவிலக்கு. அதிலும் விதிவிலக்காக வெண்ணிலா என்னோடு மரியா கேன்ட்டீன் வந்திருக்கிறாள்.

‘‘என்னய்யா இடம் இது..? ஒரு ரூம்... வெளியே மூணு பக்கமும் வராண்டா. நாலு டேபிள் சேர். ஒரு ரெஸ்டாரென்ட் மாதிரியே தெரிய-லியே!’’ என்று ஆச்சர்ய பாவம் காட்டினாள். நான் அவளை ஒரு காபி சாப்பிடப் போகலாமா என்று கேட்டதும், ஏதோ பெரிய ரெஸ்டாரென்ட்டுக்கு அழைத்துச் செல்வேன் என்று நினைத்துவிட்டாள்.

‘‘இதுதான் எங்க ஃபேவரிட் ஸ்பாட். அநேகமாக இங்கே வர்ற முதல் பொண்ணு நீயாதான் இருப்பே!’’ என்று சிரித்தேன்.

அது உண்மைதான் என்பது போல டீ சப்ளை செய்யும் சேட்டன், வெண்ணிலாவை உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை பார்த்தான்.

வெண்ணிலா எதுவும் கேட்காமலே கேக் கொண்டு வந்து கொடுத்தான். எனக்கு வழக்கம்போல எந்தக் கேள்வியும் இல்லாமல் ஒரு பிளேட் சமோசா, ஒரு டீ, அரை பாக்கெட் சிகரெட்!

‘‘ஓ... ஆர்டர் பண்ணாமலே எல்லாம் வருதுன்னா, ஐயா இங்கே ரெகுலர் கஸ்டமரா?’’

‘‘எப்பவுமே எல்லாருக்கும் இங்கே ஆர்டர் பண்ணாமலே எல்லாம் கிடைக்கும். சமோசா, டீ ரெகுலர். யாருக்கு எந்த சிகரெட்டுங்கிறது எல்லாம் ஒரே வாரத்தில் பழகிடும். ஒருதடவை எங்கப்பாவும் நானும் இங்கே வந்தோம். அப்பவும் இதே-போல சிகரெட்டைக் கொண்டு வந்து வெச்சுட்டான்..!’’ என்று சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்திவிட்டு டீயை உறிஞ்சினேன்.

‘‘என்ன, அந்த சிகரெட் பாக்கெட்டை உங்கப்பா எடுத்துக்கிட்டாரா..? இப்படி ஏதாவது மொக்கையா ஜோக் அடிக்காதே!’’ என்று சிரித்த வெண்ணிலா, என்னையே கடிப்பது போல சமோசாவைக் கடித்தாள்.

‘‘இல்லல்ல... நான் பதறின வேகத்தைப் பார்த்துட்டு, கல்லாவில் இருந்தவர் ஓடி வந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்துட்டு, ‘இதுக்கு முன்னால காபி சாப்பிட்ட கஸ்டமர் கேட்டதை பையன் இப்போ கொண்டு வந்து கொடுத்துட்டான். ஸாரி சார்!’னு சமாளிச்சுட்டார். டீ எப்படி இருக்கு?’’ என்றேன்.

‘‘எங்க ஹாஸ்டல் மெஸ்ஸைவிட நல்லா இருக்கு’’ என்றாள். வெண்ணிலா, மெடிக்கல் காலேஜ் மாணவி.

எனக்குக் கல்லூரி முடிந்ததும் அடித்துப் பிடித்து ஹாஸ்டலுக்கு ஓடி, சோப்புப் போட்டு முகம் கழுவி, சட்டை& பேன்ட் மாற்றி, டவுன் பஸ்ஸைப் பிடித்து ஹைகிரவுண்டில் போய் இறங்குவேன். அங்குதான் மெடிக்கல் காலேஜும், வெண்ணிலா தங்கியிருந்த தனியார் ஹாஸ்டலும் இருந்தன.

வெண்ணிலாவும் கிட்டத்தட்ட தயாராக இருப்பாள். இருவரும் பேசிக்கொண்டே தினம் ஒரு திசையில் நடப்போம். அப்படி ஒரு தினத்தில்தான் அவளை மரியா கேன்ட்டீனுக்கு அழைத்து வந்தேன். அதன் பிறகு அடிக்கடி அவள் என்னுடன் மரியா கேன்ட்டீன் வரத் தொடங்கினாள்.

‘‘ஏம்ப்பா... வர லேட்டாகும்னு முன்னாடியே சொல்லியிருந்தா, நானும் லேட்டாவே வந்திருப்பேன்ல. நீ வந்திடுவேனு நம்பி கேன்ட்டீனுக்கு வந்து உட்கார்ந்துட்டேன். உங்க சேட்டன் பழக்கதோஷத்துல சமோசா, டீயோடு அரை பாக்கெட் சிகரெட்டையும் வெச்சுட்டுப் போயிட்டார். பக்கத்து டேபிள் பார்ட்டிங்க தெறிச்சுட்டாங்க தெரியுமா?’’ என்று ஒரு நாள் வெண்ணிலா சொன்னபோது சிரிப்பு பீறிட்டது.

வெண்ணிலாவை ரத்த தான முகாம் ஒன்றில்தான் சந்தித்தேன். எங்கள் கல்லூரியில் நான் சேர்மன். கூடவே என்.எஸ்.எஸ். தலைவர். அதனால், கல்லூரி ஏற்பாடு செய்த ரத்த தான முகாமை என்னை துவக்கி வைக்கச் சொல்லிவிட்டார் பிரின்சிபல்.

துவக்கிவைப்பது என்றால் ரிப்பன் வெட்டுகிற சமாசாரம் இல்லையே... ரத்தம் கொடுப்பது பற்றி எனக்குள் ஆயிரம் தயக்கங்கள் இருந்தன. மருத்துவக் கல்லூரி டீமில் வந்து இறங்கிய வெண்ணிலாதான், ரத்தம் கொடுப்பதில் எந்தச் சிக்கலும் வராது என்பதை விளக்கமாகச் சொன்னாள்.

சேர்மன் பதவிக்காக இல்லையென்றாலும், என்.எஸ்.எஸ். தலைவர் என்பதற்காக இல்லாவிட்டாலும், பிரின்சிபல் சொன்னதற்காக இல்லை என்றாலும்... வெண்ணிலாவுக்காக ரத்தம் கொடுக்கத் தயாரானேன். எத்தனை பாட்டில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று தாராளமாக அறிவித்தேன். மையமாகச் சிரித்தாள்.

என்னுடைய ரத்த தானச் சாதனைப் புகைப்படம், அடுத்த நாள் தினசரி பேப்பர்களில் வெளியானது. எங்கள் கல்லூரி சார்பாக ரத்தம் கொடுத்தவர்களுக்கான சர்டிஃபிகேட்டுகளுடன் வந்த வெண்ணிலா, ‘‘போட்டோவில் நீ ஒண்ணும் பயந்த மாதிரி தெரியலையே...’’ என்றாள். அப்படித்தான் ஆரம்பித்தது நட்பு.

‘‘இனிமேல் சகட்டுமேனிக்கு யார் கேட்டாலும் ரத்தம் கொடுக்கப் போய் நிற்காதே..!’’ என்றாள்.

‘‘அடப்பாவி... இப்படித் தொழிலுக்கே துரோகம் பண்றியே. உனக்கே இது நல்லாயிருக்கா?’’ என்றேன் பொய்க் கோபத்தோடு.

‘‘அதுக்கில்லைப்பா... உன்னோடது ரொம்ப ரேர் குரூப். தேவைப் படும்போது மட்டும் கொடுக்க வேண்டிய ரத்தம். இன்னும் சொல்லப் போனா, ராயல் பிளட் குரூப்’’ என்றாள். அதில் என் சாதனை ஏதும் இல்லை என்றா லும், பெருமையாக இருந்தது. அதன் பிறகு ஒன்றரை வயதுக் குழந்தைக்கு ஆபரேஷன் என்று ஒருமுறை அவளே அழைத்தாள்.





அன்றைய தினம் மிகவும் முக்கிய மானது. அன்றுதான் வெண்ணிலாவிடம் என் காதலைச் சொன்னேன், அதுவும் எங்கள் நட்புக்கு சாட்சியாக இருந்த அதே மரியா கேன்ட்டீனில்.

நான் சொன்னதைக் கேட்டு நிமிர்ந்த வெண்ணிலாவின் கண்கள் நீரில் பளபளத்தன. ‘‘நீ இதை ஒரு நாள் சொல்வேனு எனக்குத் தெரியும்’’ என்றாள். ‘‘நீ சொல்லாத வரைக்கும் இன்னிக்குத் தப்பிச்சுட் டேன்னு ஒரு நிம்மதி பிறக்கும். இப்போ அதைக் கெடுத்துட்டே...’’ என்று வெண்ணிலா பேசிக்கொண்டே போக, எனக்குள் குழப்பம்!

ஒருவனுடைய காதல் விண்ணப் பம், ஒரு பெண்ணுக்கு சந்தோஷத் தைக் கொடுக்கும்; அல்லது, கோபத்-தைக் கொடுக்கும். இப்படி ஒரு துயரத்தைக் கொடுக்குமா..? அறி-முகமே இல்லாத ஒருவன் என்றாலும் பரவாயில்லை; என்னைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும்... ஏன்?

‘‘இல்லை, நான் சொல்லலைன்னே நினைச்சுக்கோ. நிதானமா யோசிச்சு முடிவு பண்ணு’’ என்று வெண்ணிலாவை பஸ் ஏற்றிவிட்டு, ஹாஸ்டலுக்குத் திரும்பினேன். ‘காதலைச் சொல்லி ஒரு பெண்ணைக் குழப்பிவிட்டோமோ..?’ என்று குழப்பம் எனக்கு.

அடுத்த நாளும் மரியா கேன்ட்டீனில் எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம்.

‘‘நான் வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு நொந்து போயிருக்கேம்ப்பா! எனக்கு உள்ளுக்குள்ள ஒரு கனவு ஓடிட்டிருக்கு. நான் டாக்டர் ஆகியே தீரணும். என் கன-வைக் கலைச்சுடாதே! உன்னைக் காதலிக்கிறேன்னு சொன்னா, படிப்பு தடுமாறிடுமோன்னு பயந்து பயந்து உள்ளுக்குள் வெச்சுக்கிட்டு தவிச் சுட்டு இருந்தேம்ப்பா! ஆனா, நீயே சொன்னதுக்குப் பிறகு, மறுக்க முடியலை. கடைசி வரைக்கும் என்னோடு ஆதரவா, உறுதியா நிக்கணும். நிப்ப தானே? இல்லேன்னா நான் சுக்கல் சுக்கலா நொறுங்கிப் போயிடுவேன்’’ என்றபோது, வெண்ணிலா கண்களில் வெள்ளமாக நீர்.

சட்டென்று அவளுடைய கண்களைத் துடைத்துவிட்டு, கைகளைப் பற்றிக்கொண்டேன்.

‘‘என்ன வெண்ணிலா, என்ன பேசறே..? உன்னை நான் எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா..? இந்த மரியா கேன்ட்டீன் சாட்சியா சொல்றேன்... உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்!’’

‘ப்பீய்ங்...’ என்ற விசில் சத்தத்துக்கு வண்டி குலுங்கி நின்றது.

‘‘சார்... நீங்க கேட்ட ஸ்டாப்பிங் வந்துடுச்சு!’’ என்ற கண்டக்டரின் உலுப்பலில் சுதாரித்து பஸ்ஸைவிட்டு இறங்கினேன்.

பஸ் நகர்ந்து போக, மரியா கேன்ட்டீன் இருந்த இடத்தை என் கண்கள் துழாவின. சுத்தமாக இடித்துச் சமதளமாக்கி காம்பவுண்ட் போட்டு வைத்திருந்தார்கள்.

சாட்சி இல்லையென்றாலும், குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா என்ன?

11 comments:

Rekha raghavan said...

அருமையா எழுதி இருக்கீங்க. மிகவும் ரசித்துப் படித்தேன்.

ரேகா ராகவன்.
http://www.rekharaghavan.blogspot.com/

selventhiran said...

விகடனில் வெளியானபோதே ரசித்துப் படித்த நல்ல சிறுகதை. மீள்வாசிப்பிலும் சுவை குறையவில்லை.

ESMN said...

அண்ணாச்சி,
நீங்க சொல்ற கேண்டீன் எங்க இருக்க்னு தெரியாது. ஆனால் போன தடவை ஊருக்கு போனப்ப கிருஷ்ணா ஆஸ்பத்திரிக்கு போக வேண்டியது இருந்தது. பாளை பஸ்ஸாண்டில் ஹைகிரண்ட் போற பஸ் ஏறி போகனும். ஆனால் எனக்கு பஸ்ஸ்டாப் பேரு தெரியாது. உடனே நண்பன் சொன்னான். கேண்ட்டீன் ஸ்டாப் 2 என்று டிக்கெட் எடுக்க சொன்னான். நான் ஸ்டாபில் எறங்கியவுடன் கேண்ட்டீனை தான் தேடினேன்.ஆனால் கிருஷ்ணா ஆஸ்பத்திரியும் 4 கடகளும் தான் இருந்தன. நண்பணிடம் கேட்டேன்’ எங்கடா கெஏண்டீன் இருக்கு. ஆஸ்பத்திரி தான் ஏ இருக்கு. ஏன் கேண்ட்டீனு டிக்கெட் கேட்கிற’.அவனுக்கு பதில் தெரியவில்லை. ‘ சின்ன வயசிலிருந்து இப்படி தான் டிக்கெட் எடுக்கிறேன்’ என்றான்.
ஒரு வேளை நீங்கள் சொன்ன மரியா கேண்ட்டீனா?. பாளை பஸ்ஸாண்டிலிருந்து ஹைகிராஉண்ட், சாமதான் புரம் பிரியும் இடத்தில் ஜாண்ஸ் கல்லூரி பக்கம் உள்ளது அந்த பஸ்ஸாடாப்.

சி. முருகேஷ் பாபு said...

கரெக்டா சொன்னீங்க எ...! பேரைச் சொல்ல கொஞ்சம் சங்கடமா இருக்கு. அந்த கிருஷ்ணா ஆஸ்பத்திரி பக்கத்துல கடைக இருக்குன்னு சொன்னீங்களே... அந்த இடத்தில்தான் கேண்டீன் இருந்தது.
வருகைக்கு நன்றி!

க. தங்கமணி பிரபு said...

வணக்கம் சார், நலமா? எங்கியோ நூல் பிடிச்சு உங்க ப்ளாக்குக்கு வந்து ஒரு குட்டி ரவுண்டு அடிச்சேன். பிரமாதம்! குறிப்பா மரியா கேண்டீன்! என்ன எங்க கோவை சிஐடி ஹாஸ்டல் பயலுகளுக்கு நிர்மல் பேக்கரி மாதிரி, பிஎஸ்ஜி மக்களுக்கு NMB என்கிற நேஷனல் மாடர்ன் பேக்கரி மாதி நினைச்சேன். உங்க மரியா பேக்கரி கொஞ்சம் கூடத்தான் போல. யாரோ ஒருத்தரோட கடை, அப்பவேவோ லேட்டாவோ காசு கொடுத்தாகனும், எதுக்கோ இடிச்சாங்க! ஆனாலும் திருநெல்வேலி பஸ்ஸ்டாண்ட் தவிர எதையும் பார்க்காத எனக்கு வலிக்குதுங்க! மீடியா கீடீயான்னு இல்லாம பேங்க், ரயில்வேன்னு பிக்கப் ஆகி போயிட்டே இருந்திருக்கனும்னு நினைக்கிறேன். வீடூ காரூ லோனுன்னு இருந்திருக்கலாம்! நான் 3 வருடம் தங்கியிருந்த ஹாஸ்டல் பழசாகி இடிஞ்சு போச்சாம்! போய் பார்க்கற தைரியம் கூட இல்லைங்க! சும்ம சொல்லக்கூடாது எழுத்துல மனச கலைச்சு போட்டுட்டீங்க!

Unknown said...

அப்பம்(அப்போது)ஒண்ணாதானய்யா இருந்தோம்.சேர்மனா இருந்தது தெரியும்.ரத்தம் குடுத்தது தெரியும்.ஆனா அந்த வெண்ணிலா விசயத்த மட்டும் அமாவாசையா ஆக்கிபுட்டியே ஏன்?

சி. முருகேஷ் பாபு said...

ஏம்பா சிவா, கதைனு சொன்னப்புறம் வெண்ணிலாவைக் காட்டுனு கேட்டா நான் எங்கே போவேன்... (நம்புங்கப்பா ப்ளீஸ்... நான் அப்போதே திறந்த புத்தகம்தானே!)

nellai ram said...

superb!

Arputharaj Samuel said...

பாளையங்கோட்டை கல்லூரி மாணவர்களுக்கான சொர்க்கபுரியாக மரியா கேண்டீன் இருந்து வந்தது என்பதில் ஐயமில்லை. பாளை செல்லும் போதெல்லாம் அந்த இடத்தைப் பார்க்கும் போது இப்போ மரியா கேண்டீனின் இடத்தை நிரப்புவது எது என்ற எண்ணம் எழும். இப்போது சேவியர்ஸ் காம்ப்ளக்ஸ் அந்த இடத்தை நிரப்பிவிட்டதாக உணருகிறேன், ஆனாலும் மரியா கேண்டீனின் வசதிகள் இப்போ கிடையாது.
ப்ழசை நினைக்க உதவியமைக்கு நன்றிகள்

nesam said...

வணக்கம், பல நாட்கள் தேடி உங்களுடைய இந்த கதையை கண்டுபிடித்தேன்... நான் விகடனில் படித்து விட்டு இந்த கதையை தனியாக பத்திரப்படுத்தி வைத்தேன் ஆனால் ஒரு பயணத்தின் பொழுது அது என்னிடமிருந்து தொலைந்து போனது... பல நாட்கள் கழித்து இன்று உங்கள் பதிவில் கிட்டிய பொழுது மிகவும் சந்தோசமாக உணர்கிறேன்...

உங்கள் கதையில் என்னை மிகவும் பாதித்த வரிகள்

சாட்சி இல்லையென்றாலும் குற்றம் இல்லையென்று ஆகி விடுமா ஏன்ன?

நான் இதோடு என் கற்பனையையும் இணைத்து எழுதியது..

சாட்சி இல்லையென்றாலும் குற்றம் இல்லையென்று ஆகி விடுமா ஏன்ன?

சில பிரிவுகள் வருத்தம் தந்தாலும் மன அழுத்தமும்
தருகிறது

உன்னை நினைக்கும் பொழுதெல்லாம் நான் யோசிக்கும்
வாசகம் இது.....

அன்புடன்
வைகுண்டராமன்.

Ramachandranwrites said...

நண்பா,
விகடனில் படித்தது. நீங்களும் 87 - 90 செட் தானா ? சேவியர்ஸ் ஆ ? என்ன மேஜர் ? நான் அதே காலத்தில் ஜோன்ஸ். Physics

சாட்சி இல்லையென்றாலும், குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா என்ன?- இந்த ஒரு வரி பற்றி நானும் எனது வக்கீல் நண்பர் ஒருவரும் இரண்டு மணி நேரம் விவாதம் செய்தோம்.

அன்புடன்
ராமசந்திரன்