Tuesday, February 25, 2014

எனக்கு வேலை போய்விட்டது - 02

சீக்கிரம் வாய்யா... ஆளெல்லாம் காத்துகிட்டிருக்கில்லா...’ என்று தலையில் வைத்து தூக்கிக் கொண்டு செல்லாத குறையாக வயலுக்கு கூட்டிக் கொண்டு போவார்கள். தளதளவென்று கலங்கி நிற்கும் தொழி(சேறு)யில் எல்லாம் தயாராக இருக்க, நான் கம்பீரமாகப் போய் வயலில் இறங்குவேன்.
‘நல்லா சாமியக் கும்பிட்டுக்கோ... இந்தா..’ என்று ஒரு கொட்டானைக் கையில் கொடுப்பார்கள். அதற்குள் இடதுகையை விட்டு கைநிறைய விதை நெல்லை அள்ளி அப்படியே வயலில் தூவுவேன்.
சின்னவன் கையால விதை நெல்ல அள்ளி வீசுனம்னா ரெண்டு போகம் செழிக்க செழிக்க வரும்லா...’ என்று என்னை உச்சி மோந்து முத்தமிட்டு வீட்டுக்குக் கூட்டி வருவார்கள். அதேபோல அறுவடை நாளிலும் முதல் கதிரை அறுத்து அறுவடையைத் தொடங்கி வைப்பேன். அப்பேர்ப்பட்ட ராசிக்காரன் நான். அப்படி இருக்கும்போது படித்து முடித்துவிட்டு சும்மா இருக்கலாமா..?
‘அப்பா... நான் விவசாயம் பாக்கலாம்னு இருக்கேன்...’ என்ற என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார் அப்பா. ‘அதுல உனக்கு என்னடே தெரியும்... பம்பு செட்ல குளிக்கதத் தவிர்த்து எதுக்கும் நீ போனதில்லையே..?’ என்றார். இல்லப்பா... நான் சில பிளான் வெச்சிருக்கேன்... நல்லா பண்ணிருவேன்... என்றேன்.
‘சரி, உன் பிளானச் சொல்லு..!’ என்றார் என் அப்பா. ’கார், பிசானம்... ரெண்டு போகத்துக்கும் நடுவுல இருக்கற காலத்துல சின்ன வெங்காயம் போடலாம்னு பிளான்... நல்லா வரும்...’ என்று நானே சொன்னேன். இந்தப் பருவத்துக்கு சரியா வராதே என்று தயங்கினார். நம்மை விவசாயியாக ஆகவிடாமல் தடுக்க திட்டமிடுகிறார் என்று எண்ணிய நான் உறுதியான குரலில், எல்லாம் சரியா வரும்பா என்றேன்.
சரி, உன் பட்ஜெட்டைச் சொல்லு என்றார். சொன்னேன். வங்கியிலே லோன் தர்ற மேனேஜர் மாதிரி சில பல கேள்விகளைக் கேட்டுவிட்டு, அப்ரூவ் பண்ணினார். பரபரப்பாக களத்தில் இறங்கினேன்.
வயலில் பாத்தி கட்டி வெங்காய விதைகளை வாங்கி பாவினேன். பம்ப் செட்டில் இருந்து தண்ணீர் பாய்ச்சி, ஊடுபயிராக காய்கறிகளெல்லாம் போட்டு பக்கா விவசாயியாகவே மாறிவிட்டேன்.
விவசாயத்தில் மட்டுமல்ல... வயலோரம் உட்கார்ந்து சாப்பிடுவது, பம்பு செட்டில் குளிப்பது, உரம் பூச்சி மருந்து என்றே பேசுவது என்|று நானும் விவசாயியாகவே ஆகிவிட்டேன்.
வெங்காயம் நல்ல பதத்துக்கு வந்துவிட்டது. மார்க்கெட்டில் விலையை விசாரித்துக் கொண்டு பிடுங்க வேண்டியதுதான் என்ற நேரத்தில் பிடித்தது மழை. வெங்காயத்தை மண்ணிலேயே விட்டால் அழுகிவிடும்... பிடுங்கி எடுத்தாலும்   விலை இல்லை... என்ன செய்யலாம் என்ற குழப்பத்தில் இருந்தேன்.
மண்ணிலே விடுவதில் பயனில்லை என்பதால் பிடுங்கிவிட்டேன். வயலை ஒட்டிய தோப்புக்குள் சாக்கு விரித்து வெங்காயத்தைக் கொட்டி வைத்தேன். ஈரம் ஒழுகிக் கொண்டிருந்தது. வியாபாரி அங்கேயே வந்து எடை போட்டு எடுத்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தார். ஈர எடையைக் கழித்து வியாபாரி சொன்ன விலையில் கொஞ்சம் மயக்கம் வந்துவிட்டது. ஆனாலும் வழியில்லை. எடைக்குப் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
அப்பா கேட்டார். கணக்குச் சொன்னேன். கூட்டிக் கழிச்சு பார்த்தால் கையில் கொஞ்சம் லாபம் நின்றது. உன் உழைப்புக்கு கூலி..? என்றார். என்னிடம் பதில் இல்லை.
சரி, அடுத்த பூவு(பருவம்)க்கு என்ன பிளான்..? என்றார். உங்க வயல்... நீங்க முடிவு பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட்டேன். ஒரு பருவத்து விவசாயத்திலேயே சலித்துவிட்டது.
ஆமாம்... எனக்கு வேலை போய்விட்டது!

Friday, February 14, 2014

எனக்கு வேலை போய்விட்டது! 01

பெரியவனைப் பத்தி கவலையில்லை... எப்படியும் என்ஜினியர் ஆகிடுவான். சின்னவனும் டாக்டராகிட்டாம்னா நாம கவலையத்து இருக்கலாம்...’ என்ற அப்பா அம்மாவின் ஆசையில் என் பத்தாங்கிளாஸ் மார்க் பெரிய மண்ணாக விழுந்தது. 280 மார்க்குக்கு ஃபர்ஸ்ட் குருப்பே கிடைக்காது என்ற நிலையில் அக்கவுண்டன்சி சேர்ந்தேன். அதுக்கென்ன... இதை முடிச்சா பிகாம்... அப்படியே சிஏ.. இல்லன்னாக் கூட பேங்க் எக்ஸாம் எழுதி வேலைக்குப் போயிறலாம்ல! என்று தங்கள் கனவைக் கொஞ்சம் ஆல்டர் பண்ணிக் கொண்டார்கள். அறுநூற்று சொச்சம் மார்க் எடுத்து அங்கேயும் ஒரு செக் வைத்தேன். பிஏ எகனாமிக்ஸ் கிடைத்தது.

நம்மூர்ல லாயரே கிடையாது தெரியும்ல... நம்மூர் வம்பு வழக்குகளைப் பார்த்துகிட்டு இருந்தாக் கூட நாளெல்லாம் வேலை இருக்கும்... மரியாதையான தொழில் அது என்று அவர்கள் அடுத்த கனவுக்கு போக, நான் பிஏவை இரண்டாம் வகுப்பில் பாஸ் பண்ணி அவர்களைத் திகைக்க வைத்தேன். அவர்களும் விடுவதாக இல்லை. எம்.. சேர்த்தார்கள்.

அப்படியே எம் ஏ முடிச்சு, எம்ஃபில் முடிச்சுட்டா காலேஜ்ல வாத்தியார் ஆகிடலாம். இன்னைக்கெல்லாம் என்ன மரியாதை தெரியுமா..? என்று விடாமல் விரட்டிக் கொண்டு வந்தார்கள் அம்மாவும் அப்பாவும்! எம் ஏ படிக்கும்போதே பத்திரிகை பக்கம் கவனம் திரும்ப, அதன்பிறகு தொலைதூரக் கல்வியில் சேர்ந்த எம்ஃபில் அப்படியே தொலை தூரத்திலேயே தேங்கிவிட்டது.

இவன் என்ன ஆகப் போகிறான் என்ற கவலையோடு அம்மாவும் அப்பாவும் இருக்க, நான் என்னவெல்லாமோ செய்தேன்... இன்னமும் செய்துகொண்டிருக்கிறேன்.

என்ஜினியரிங் முடித்த என் சகோதரர் என்ஐஐடியில் படித்துவிட்டு ஊரில் ஒரு கம்ப்யூட்டர் செண்டர் தொடங்க, நானும் அங்கே அவ்வப்போது தலைகாட்டத் தொடங்கினேன். அவர் கிளாஸுக்குப் போகும் நேரத்தில் செண்டரைப் பார்த்துக் கொள்வதுதான் என் வேலை. ஆனால், முதல் வேலையாக விசிட்டிங் கார்டு அச்சடித்து அந்த செண்டரில் நானும் ஓர் அங்கம் என்று காட்டிக் கொண்டேன்.

அந்தச் சமயத்தில்தான் ப்ராஜெக்ட் தயாரித்து தரமுடியுமா என்று கேட்டு கல்லூரி மாணவியர் இருவர் வர, என் சகோதரர் சின்ன யோசனையோடு இருந்தார். நான் தான், ‘ஆர்டர் எடுப்போம்... வருஷத்துக்கு ஒரு தடவை கிடைக்கற வாய்ப்பு... கிளாஸ் எடுக்கற நேரம் போக எக்ஸ்ட்ராவா இருக்கற நேரத்தில் செய்யலாமே... கூடுதலா காசு கிடைக்குமே..?’ என்றேன். ஓகே என்றார்.

பகலெல்லாம் கம்ப்யூட்டர் செண்டரில் பாடம் நடத்தும் பணி போகும். மாலையானதும் ஆளுக்கொரு கம்ப்யூட்டராக எடுத்துக் கொண்டு பசங்க ப்ராஜெக்ட் டைப்பிங்கில் இறங்குவார்கள். இதில் வசதி என்னவென்றால் பத்து பேர் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் செய்வார்கள். அதனால், ஒரே புத்தகத்தை பத்து காப்பி எடுத்துக் கொடுக்க வேண்டும்.

அதற்கென ஒரு பிராஜெக்ட் தயாரித்தோம். ஒவ்வொரு சேப்டர் தொடங்கும்போதும் ஒரு தலைப்பு இருக்கும். அதற்கு ஏற்ப ஒரு டிசைனைப் பிடித்து அதை அழகாக வடிவமைத்து ஒரே ஒரு பிரிண்ட் எடுத்து அதை பல காப்பிகள் ஜெராக்ஸ் எடுத்தோம். அங்கே கொஞ்சம் கமிஷன், புக் பைண்டிங்கில் கொஞ்சம் கமிஷன் என்று பக்காவாக பிளான் பண்ணி வேலையில் இறங்கினோம். பத்து பேருக்கு பத்து புத்தகங்கள் என்னும்போது எல்லாருக்கும் ஒரே மாதிரியான கட்டணங்கள். அதில் கொஞ்சம் கமிஷன் என்று சகல வகையிலும் திட்டம் போட்டேன்.

ஜெராக்ஸ் எடுத்துவிட்டு ஒரிஜினல் அளவுக்கு சார்ஜ் செய்தால் நியாயமா என்று கேட்ட என் சகோதரருக்கு அதெல்லாம் தொழில் தர்மம் என்று வகுப்பு எடுத்தேன். இரவும் பகலுமாக பிரிண்டிங், பைண்டிங், டைப்பிங் எல்லாம் ஓடியது. மொத்த பிராஜெக்டும் முடிந்து கணக்கு போட்டுப் பார்த்தபோது அந்த சீசனில் கணிசமான ஒரு தொகை கையில் நின்றது.

ஆனால், இந்த காலகட்டத்தில் காதில் விழுந்த ஃபாக்ஸ்ப்ரோ, லோட்டஸ், சி ப்ளஸ் போன்ற வார்த்தைகளும் அதற்கான குறியீடுகளும் மண்டையைச் சூடாக்கியிருந்தது.

அடுத்து என்ன செய்யலாம் என்றார் என் சகோதரர். அந்த கல்லூரி ப்ராஜெக்ட் சீசனில் கிடைத்த பணத்தில் எனக்கு ஒரு தொகையைக் கணக்கு போட்டு எடுத்துக் கொண்டு, இந்த சிஸ்டத்தை வெச்சு அடுத்தடுத்து பிக்கப் பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்! ஏனென்றால் அந்த பிராஜெக்ட் முடிந்துவிட்டால் எனக்கு அங்கே எந்த வேலையும் இல்லை.

ஆமாம்... எனக்கு வேலை போய்விட்டது!

Wednesday, February 5, 2014

நெல்லை பொங்கல்!

பொங்கல்னா என்னப்பா..?

நெல்மணியைத் தந்ததற்காக

உழவர்கள் சூரியனுக்கு நன்றி சொல்ற நாள்..

சூரியன்னா என்னப்பா..?

சும்மா தொணதொணக்காம டிவியைப் பாரு..!


நகரத்து அப்பாவும் மகனும் பேசிக் கொள்வதுபோல இருக்கும் இந்தக் கவிதை எங்கேயோ எப்போதோ படித்தது... புத்தாண்டு பிறக்கும்போதே மனதுக்குள் ஓரத்தில் இந்தக் கவிதையும் வந்து உட்கார்ந்து கொள்ளும். முன்னேயெல்லாம் வாழ்த்து அட்டைகள் இருந்தன... பொங்கலுக்கு ஒருவாரம் முன்பே அந்த அட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பி, கிடைத்த வாழ்த்து அட்டைகளுக்கு நன்றி சொல்லி அட்டை அனுப்பி என்றெல்லாம் பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்த காலம் முன்பு இருந்தது என்று பழங்கதை பேசும் நோக்கமில்லை!

தோப்பு துரவுகளெல்லாம் எங்கோ தென்கோடி கிராமத்தில் கிடக்க, நகரத்து வாழ்க்கையில் முடங்கிக் கிடக்கும் ஒரு விவசாய குடும்பத்து கடைக்குட்டியின் நிறைவுகூறல் மட்டுமே இது!

வெள்ளையடிக்கும் படலமே ஒருவாரம் நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறையாக வெள்ளை அடிக்க ஒவ்வொரு அறையின் கதவுகளையும் சுத்தப்படுத்தும் வேலையில் தொடங்கும் எங்கள் பொங்கல் கொண்டாட்டம். சாதாரண நாட்களில் குளங்களில் குளிக்க முடியாது. ஆனால், கதவுகளை சுத்தப்படுத்துவதற்காக கழற்றிக் கொண்டு குளத்துக்கு ஓடுவோம். கதவே கட்டுமரமாக குளத்து நீரின் மேல் கும்மாளமடிப்போம்!

சின்னஞ்சிறு பெண்பிள்ளைகள் இருக்கும் வீடுகளை மார்கழியில் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வீட்டு வாசலில் கோலத்துக்கு நடுவே செம்பருத்தியோ பூசணியோ சாணியில் பூத்திருக்கும். தினம் தினம் புத்தம் புது பூவாக வைக்கப்பட்டு மாலையில் வரட்டியாக தட்டி வைக்கப்படும்! பொங்கலுக்கு முதல்நாள் வாசலில் முற்றத்தில் ஓர் ஓரத்தை ஒதுக்கித் தருவார்கள். அங்கே சின்னதாக மண்ணில் சுவர் வைத்து சிறுவீடு கட்டுவோம். சிறு வீடென்றாலும் அங்கேயும் ஹால், படுக்கையறை, சமையல் அறை என்று எல்லாமும் இருக்கும்.

பொங்கல் தினத்தன்று அந்தச் சிறு வீட்டின் முன்னாலும் காய்கறிகள் படைத்து அரிசிப் பொங்கலிட்டு படைப்போம். (இதில் சிறுவீட்டுக்கு தனியாக பால் காய்ச்சும் வைபவம் வேறு நடக்கும்!) பொங்கலுக்குப் பிறகு சில நாட்கள் அந்த சிறுவீட்டில் விளையாடுவோம்!

சிறுவீட்டுப் பொங்கலை விடுங்கள்பெரிய வீட்டுப் பொங்கல் இன்னும் சுவாரஸ்யம்! பொங்கல் என்றால் என்ன..? என்ற ஐந்து மதிப்பெண் கேள்விக்கு என்ன பதில் எழுதினோமோ அதை அப்படியே செயலிலும் காட்டுவோம். எங்கள் வயலில் விளைந்த நெல்லைக் குத்தி அரிசியாக்கி, எங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் படைத்து, எங்கள் வீட்டு வாசலில் நின்று பொங்கலிட்டு இயற்கையின் தலைமகனான சூரியனுக்கு நன்றி சொல்வோம். (கரும்பும் சில காய்கறிகளும் மட்டும் கடைச் சரக்காக வாங்குவோம்!) பொங்கலுக்கு அடுப்பெரிக்க பனையோலைகள்கூட எங்கள் காட்டில் இருந்துதான் வரும்.

எல்லா திசைகளுக்கும் பொதுவாக பானை வைத்து அதில் அரிசி களைந்த நீரை நிறைத்து அடுப்பில் ஏற்றினாலும் கிழக்கே பால் பொங்கினால் அந்த வருஷம் அமோகமாக இருக்கும் என்பதால் எங்கள் ஆசை கிழக்கு நோக்கித்தான் பொங்கத் துடிக்கும். அனேகமாக எல்லா ஆண்டுமே கிழக்கு நோக்கித்தான் பால் பொங்கும். எங்கள் எல்லோருடைய வேண்டுதலையும் இயற்கை நிறைவேற்றுகிறதோ இல்லையோ எங்கள் ஆச்சி பானையை லேசாக கிழக்கு பக்கம் சரித்து வைத்து சாதிப்பார். அதில் விசேஷம் என்னவென்றால் பால் கிழக்கே பொங்கினால் முதல் குலவை அவரிடமிருந்துதான் வரும்! அத்தனை சந்தோஷம் தெரியும் முகத்தில். போதும் போதாதற்கு அடுப்பை வேறு கிழக்கே சூடு பறக்கும் வகையில் ஓலையை கிழக்கு பக்கமாக வெளியில் இழுத்து வைத்தே எரிப்பார்.

தலையில் முளைத்த கரும்புக் கட்டுகளோடு பொங்கல் படி எடுத்துக் கொண்டு சீர் செய்யச் செல்லும் மச்சினர்களைச் சுமந்தபடி எல்லா திசைகளிலும் கார்கள் விரைந்து கொண்டிருக்கும்.

எங்கள் பகுதியில் ஜல்லிக்கட்டு பழக்கமில்லை. ஆனால், பொங்கல் என்றால் விளையாட்டுப் போட்டிகள் என்பது எழுதப்படாத சட்டம். எவர்சில்வர் சோப்பு டப்பாக்களும் தட்டு தம்ளர்களும்தான் பரிசு என்றாலும் அடுத்த பொங்கல் வரைக்கும் பேசிப் பேசி மாய்வதற்கு கிடைக்கும் வாய்ப்புதான் அந்த விளையாட்டுப் போட்டிகள்! ஒரு கைலி பரிசுக்காக முற்றிலும் பழுக்காத வாழைப்பழத்தையும் ஒரு தட்டு நிறைய பொட்டுக் கடலையையும் விக்கி விக்கிச் சாப்பிட்ட சங்கரன் மாமாவின் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படாமல் சச்சின் சாதனை போல இருக்கிறது! அரை கிளாஸ் தண்ணீரை மீதம் வைத்திருந்தது அவருடைய தனிப்பட்ட சாமர்த்தியம்!

பொங்கல் அன்று கையில் ஒரு முழும் கரும்பும் இன்னொரு கையில் சிறுவீட்டுக்காக வைத்த சாணி வராட்டிகளுமாக ஆற்றை நோக்கி புறப்படுவோம். கூடவே சர்க்கரைப் பொங்கலும் தேங்காய் பழமும் இருக்கும். ஆற்றில் போய் சாணி வராட்டியை வைத்து அதன்மீது இலை வைத்து சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சில்லு, வாழைப்பழத் துண்டு வைத்து தண்ணீரில் விட்டால் கொஞ்ச தூரத்தில் மீன்கள் தாவி வந்து அதை கவ்விச் செல்லும். அதோடு செத்துப் போன ஆச்சிக்கு மூலைக்கு வைத்து கும்பிடுவதற்காக எடுத்த சேலையை நனைத்துப் பிழிந்து கையில் எடுத்துக் கொண்டு வீடு திரும்புவோம்.

அது என்ன மூலைக்கு வெச்சுக் கும்பிடுவது என்பதுதானே உங்கள் அடுத்த கேள்வி. இறந்து போன மூதாதையர்களுக்குகுறிப்பாக கன்னிப் பெண் இறந்து விட்டிருந்தால் ஆண்டுக்கு ஒரு சேலை வாங்கி பொங்கல் அன்று விளக்கு அருகே மூலையில் வைத்து இறந்தவர்களுக்கு பிடித்ததையும் படைத்து அவர்களை நினைத்து வழிபடுவது. அந்தப் பெண் யார் மீதாவது வந்து இறங்கி நல்ல வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போவதுண்டு.

உங்க வீட்டுச் சாமி என்ன சொல்லுச்சுஏதாச்சும் குத்தம் குறை உண்டா என்று பரஸ்பரம் விசாரித்துக் கொள்வார்கள். எங்கள் ஊரில் ஒரு தாத்தாவுக்கு வேட்டி வைத்து கும்பிடுவார்கள். அந்த வீட்டு அத்தை மேலதான் அந்த தாத்தா வருவாரு. அரைமணி நேரத்துல ரெண்டு சுருட்டு குடிச்சுருவா அந்த அத்தைஇல்லேகுடிச்சிருவாரு அந்த தாத்தா! மத்த நேரமெல்லாம் பீடி வாசனைகூட பிடிக்காத அந்த அத்தை சுருட்டு குடிக்கறது ஆச்சரியமா இருக்கும். ஆனாலும் தாத்தாவே இறங்கி வரும் நம்பிக்கை முன்னால் அத்தையின் சுருட்டு சுவாரஸ்யமில்லாத விஷயமாகிவிட்டது.

பொங்கலில் தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று பல வகைகள் இருப்பதுபோல அந்த வரிசையில் நகரத்து பொங்கலும் சேர்ந்திருக்கிறது. பிடிவாதமாக வீட்டு வாசலில் வைத்து பொங்கலிடும் எங்கள் நடவடிக்கை எங்கள் அபார்ட்மெண்டில் சிறப்பு நிகழ்ச்சிகளாகவே பார்க்கப்படும். நாங்கள் நகரத்துக்குள் விழுந்துவிடாமல் கிராமத்தின் எல்லையில் நிற்பதாகவே தோன்றுகிறது.

புதிதாக அபார்ட்மெண்டில் வீடு வாங்கியபோது வீடு பார்க்க வந்திருந்த அப்பா சொன்னார்ஏண்டாஉன் வீட்டு தரை கீழ்வீட்டுக் காரனோட கூரைஉன் வீட்டு கூரை மேல்வீட்டுக்காரனோட தரைஇந்தப் பக்கத்து சொவரு பக்கத்து வீட்டுக்காரனோடதுஅந்தப் பக்கத்து சொவரு அந்தப் பக்கத்து வீட்டுக் காரனோடது. ஒரு கதவையும் சாவியையும் வெச்சுகிட்டு வீடு வாங்கிட்டேன்னு சொல்றே..? என்ற அப்பாவின் வார்த்தைகளுக்கு என்னிடம் பதில் இல்லை!

அந்த வீட்டையே வீடென்று ஒப்புக் கொள்ளாதவர் கிச்சனில் கேஸ் ஸ்டவ்வில் குக்கரில் பொங்கும் நகரத்து பொங்கலைப் பார்த்தால் என்ன சொல்வார்!

தி இந்து பொங்கல் மலர்