Wednesday, February 5, 2014

நெல்லை பொங்கல்!

பொங்கல்னா என்னப்பா..?

நெல்மணியைத் தந்ததற்காக

உழவர்கள் சூரியனுக்கு நன்றி சொல்ற நாள்..

சூரியன்னா என்னப்பா..?

சும்மா தொணதொணக்காம டிவியைப் பாரு..!


நகரத்து அப்பாவும் மகனும் பேசிக் கொள்வதுபோல இருக்கும் இந்தக் கவிதை எங்கேயோ எப்போதோ படித்தது... புத்தாண்டு பிறக்கும்போதே மனதுக்குள் ஓரத்தில் இந்தக் கவிதையும் வந்து உட்கார்ந்து கொள்ளும். முன்னேயெல்லாம் வாழ்த்து அட்டைகள் இருந்தன... பொங்கலுக்கு ஒருவாரம் முன்பே அந்த அட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பி, கிடைத்த வாழ்த்து அட்டைகளுக்கு நன்றி சொல்லி அட்டை அனுப்பி என்றெல்லாம் பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்த காலம் முன்பு இருந்தது என்று பழங்கதை பேசும் நோக்கமில்லை!

தோப்பு துரவுகளெல்லாம் எங்கோ தென்கோடி கிராமத்தில் கிடக்க, நகரத்து வாழ்க்கையில் முடங்கிக் கிடக்கும் ஒரு விவசாய குடும்பத்து கடைக்குட்டியின் நிறைவுகூறல் மட்டுமே இது!

வெள்ளையடிக்கும் படலமே ஒருவாரம் நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறையாக வெள்ளை அடிக்க ஒவ்வொரு அறையின் கதவுகளையும் சுத்தப்படுத்தும் வேலையில் தொடங்கும் எங்கள் பொங்கல் கொண்டாட்டம். சாதாரண நாட்களில் குளங்களில் குளிக்க முடியாது. ஆனால், கதவுகளை சுத்தப்படுத்துவதற்காக கழற்றிக் கொண்டு குளத்துக்கு ஓடுவோம். கதவே கட்டுமரமாக குளத்து நீரின் மேல் கும்மாளமடிப்போம்!

சின்னஞ்சிறு பெண்பிள்ளைகள் இருக்கும் வீடுகளை மார்கழியில் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வீட்டு வாசலில் கோலத்துக்கு நடுவே செம்பருத்தியோ பூசணியோ சாணியில் பூத்திருக்கும். தினம் தினம் புத்தம் புது பூவாக வைக்கப்பட்டு மாலையில் வரட்டியாக தட்டி வைக்கப்படும்! பொங்கலுக்கு முதல்நாள் வாசலில் முற்றத்தில் ஓர் ஓரத்தை ஒதுக்கித் தருவார்கள். அங்கே சின்னதாக மண்ணில் சுவர் வைத்து சிறுவீடு கட்டுவோம். சிறு வீடென்றாலும் அங்கேயும் ஹால், படுக்கையறை, சமையல் அறை என்று எல்லாமும் இருக்கும்.

பொங்கல் தினத்தன்று அந்தச் சிறு வீட்டின் முன்னாலும் காய்கறிகள் படைத்து அரிசிப் பொங்கலிட்டு படைப்போம். (இதில் சிறுவீட்டுக்கு தனியாக பால் காய்ச்சும் வைபவம் வேறு நடக்கும்!) பொங்கலுக்குப் பிறகு சில நாட்கள் அந்த சிறுவீட்டில் விளையாடுவோம்!

சிறுவீட்டுப் பொங்கலை விடுங்கள்பெரிய வீட்டுப் பொங்கல் இன்னும் சுவாரஸ்யம்! பொங்கல் என்றால் என்ன..? என்ற ஐந்து மதிப்பெண் கேள்விக்கு என்ன பதில் எழுதினோமோ அதை அப்படியே செயலிலும் காட்டுவோம். எங்கள் வயலில் விளைந்த நெல்லைக் குத்தி அரிசியாக்கி, எங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் படைத்து, எங்கள் வீட்டு வாசலில் நின்று பொங்கலிட்டு இயற்கையின் தலைமகனான சூரியனுக்கு நன்றி சொல்வோம். (கரும்பும் சில காய்கறிகளும் மட்டும் கடைச் சரக்காக வாங்குவோம்!) பொங்கலுக்கு அடுப்பெரிக்க பனையோலைகள்கூட எங்கள் காட்டில் இருந்துதான் வரும்.

எல்லா திசைகளுக்கும் பொதுவாக பானை வைத்து அதில் அரிசி களைந்த நீரை நிறைத்து அடுப்பில் ஏற்றினாலும் கிழக்கே பால் பொங்கினால் அந்த வருஷம் அமோகமாக இருக்கும் என்பதால் எங்கள் ஆசை கிழக்கு நோக்கித்தான் பொங்கத் துடிக்கும். அனேகமாக எல்லா ஆண்டுமே கிழக்கு நோக்கித்தான் பால் பொங்கும். எங்கள் எல்லோருடைய வேண்டுதலையும் இயற்கை நிறைவேற்றுகிறதோ இல்லையோ எங்கள் ஆச்சி பானையை லேசாக கிழக்கு பக்கம் சரித்து வைத்து சாதிப்பார். அதில் விசேஷம் என்னவென்றால் பால் கிழக்கே பொங்கினால் முதல் குலவை அவரிடமிருந்துதான் வரும்! அத்தனை சந்தோஷம் தெரியும் முகத்தில். போதும் போதாதற்கு அடுப்பை வேறு கிழக்கே சூடு பறக்கும் வகையில் ஓலையை கிழக்கு பக்கமாக வெளியில் இழுத்து வைத்தே எரிப்பார்.

தலையில் முளைத்த கரும்புக் கட்டுகளோடு பொங்கல் படி எடுத்துக் கொண்டு சீர் செய்யச் செல்லும் மச்சினர்களைச் சுமந்தபடி எல்லா திசைகளிலும் கார்கள் விரைந்து கொண்டிருக்கும்.

எங்கள் பகுதியில் ஜல்லிக்கட்டு பழக்கமில்லை. ஆனால், பொங்கல் என்றால் விளையாட்டுப் போட்டிகள் என்பது எழுதப்படாத சட்டம். எவர்சில்வர் சோப்பு டப்பாக்களும் தட்டு தம்ளர்களும்தான் பரிசு என்றாலும் அடுத்த பொங்கல் வரைக்கும் பேசிப் பேசி மாய்வதற்கு கிடைக்கும் வாய்ப்புதான் அந்த விளையாட்டுப் போட்டிகள்! ஒரு கைலி பரிசுக்காக முற்றிலும் பழுக்காத வாழைப்பழத்தையும் ஒரு தட்டு நிறைய பொட்டுக் கடலையையும் விக்கி விக்கிச் சாப்பிட்ட சங்கரன் மாமாவின் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படாமல் சச்சின் சாதனை போல இருக்கிறது! அரை கிளாஸ் தண்ணீரை மீதம் வைத்திருந்தது அவருடைய தனிப்பட்ட சாமர்த்தியம்!

பொங்கல் அன்று கையில் ஒரு முழும் கரும்பும் இன்னொரு கையில் சிறுவீட்டுக்காக வைத்த சாணி வராட்டிகளுமாக ஆற்றை நோக்கி புறப்படுவோம். கூடவே சர்க்கரைப் பொங்கலும் தேங்காய் பழமும் இருக்கும். ஆற்றில் போய் சாணி வராட்டியை வைத்து அதன்மீது இலை வைத்து சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சில்லு, வாழைப்பழத் துண்டு வைத்து தண்ணீரில் விட்டால் கொஞ்ச தூரத்தில் மீன்கள் தாவி வந்து அதை கவ்விச் செல்லும். அதோடு செத்துப் போன ஆச்சிக்கு மூலைக்கு வைத்து கும்பிடுவதற்காக எடுத்த சேலையை நனைத்துப் பிழிந்து கையில் எடுத்துக் கொண்டு வீடு திரும்புவோம்.

அது என்ன மூலைக்கு வெச்சுக் கும்பிடுவது என்பதுதானே உங்கள் அடுத்த கேள்வி. இறந்து போன மூதாதையர்களுக்குகுறிப்பாக கன்னிப் பெண் இறந்து விட்டிருந்தால் ஆண்டுக்கு ஒரு சேலை வாங்கி பொங்கல் அன்று விளக்கு அருகே மூலையில் வைத்து இறந்தவர்களுக்கு பிடித்ததையும் படைத்து அவர்களை நினைத்து வழிபடுவது. அந்தப் பெண் யார் மீதாவது வந்து இறங்கி நல்ல வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போவதுண்டு.

உங்க வீட்டுச் சாமி என்ன சொல்லுச்சுஏதாச்சும் குத்தம் குறை உண்டா என்று பரஸ்பரம் விசாரித்துக் கொள்வார்கள். எங்கள் ஊரில் ஒரு தாத்தாவுக்கு வேட்டி வைத்து கும்பிடுவார்கள். அந்த வீட்டு அத்தை மேலதான் அந்த தாத்தா வருவாரு. அரைமணி நேரத்துல ரெண்டு சுருட்டு குடிச்சுருவா அந்த அத்தைஇல்லேகுடிச்சிருவாரு அந்த தாத்தா! மத்த நேரமெல்லாம் பீடி வாசனைகூட பிடிக்காத அந்த அத்தை சுருட்டு குடிக்கறது ஆச்சரியமா இருக்கும். ஆனாலும் தாத்தாவே இறங்கி வரும் நம்பிக்கை முன்னால் அத்தையின் சுருட்டு சுவாரஸ்யமில்லாத விஷயமாகிவிட்டது.

பொங்கலில் தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று பல வகைகள் இருப்பதுபோல அந்த வரிசையில் நகரத்து பொங்கலும் சேர்ந்திருக்கிறது. பிடிவாதமாக வீட்டு வாசலில் வைத்து பொங்கலிடும் எங்கள் நடவடிக்கை எங்கள் அபார்ட்மெண்டில் சிறப்பு நிகழ்ச்சிகளாகவே பார்க்கப்படும். நாங்கள் நகரத்துக்குள் விழுந்துவிடாமல் கிராமத்தின் எல்லையில் நிற்பதாகவே தோன்றுகிறது.

புதிதாக அபார்ட்மெண்டில் வீடு வாங்கியபோது வீடு பார்க்க வந்திருந்த அப்பா சொன்னார்ஏண்டாஉன் வீட்டு தரை கீழ்வீட்டுக் காரனோட கூரைஉன் வீட்டு கூரை மேல்வீட்டுக்காரனோட தரைஇந்தப் பக்கத்து சொவரு பக்கத்து வீட்டுக்காரனோடதுஅந்தப் பக்கத்து சொவரு அந்தப் பக்கத்து வீட்டுக் காரனோடது. ஒரு கதவையும் சாவியையும் வெச்சுகிட்டு வீடு வாங்கிட்டேன்னு சொல்றே..? என்ற அப்பாவின் வார்த்தைகளுக்கு என்னிடம் பதில் இல்லை!

அந்த வீட்டையே வீடென்று ஒப்புக் கொள்ளாதவர் கிச்சனில் கேஸ் ஸ்டவ்வில் குக்கரில் பொங்கும் நகரத்து பொங்கலைப் பார்த்தால் என்ன சொல்வார்!

தி இந்து பொங்கல் மலர்













No comments: