Wednesday, December 25, 2013

இலக்கை விட்டுத் தராதீர்கள்?!


ஜெயசீலன்... ஒருமுறைதான் இவரை சந்தித்தேன்... சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொள்ள திருச்சியில் இருந்து வந்திருந்தார். திருச்சிக்கு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து ஆராய்ச்சி படிப்பின் மீதே ஆர்வமாக இருந்து பல தடைகளைக் கடந்து இங்கிலாந்து வரை சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆச்சரிய மனிதர்!

எப்போதுமே விருந்தினரை அழைப்பதில் இரண்டு வகை இருக்கும். முதலாவது வகை வரப் போகிறவரை எதிர்பார்த்து யூனிட்டே காத்திருக்கும். ஏக மரியாதையோடு வாசலில் போய் அழைத்து வந்து அரங்கில் அமர வைத்து படப்பிடிப்பை நடத்தி அனுப்புவது. பெரும்பாலும் சினிமா பிரபலங்களுக்கு இந்த வரவேற்பு எப்போதுமே கிடைக்கும்.

அடுத்தகட்ட விருந்தினர்களை சூரியவணக்கம் குழுவுக்கு மட்டுமே தெரியும். மற்ற டெக்னீஷியன்கள், ‘யார் சார் இவரு..? என்ன செய்திருக்காரு..?’ என்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வந்தபோது, ‘சார்... டிவி ஷூட்டிங்குக்கு வர்றாரு... சட்டைகூட போடாம வந்துட்டாரு..?’ என்றார் ஒரு டெக்னீஷியன். (அப்போது நாங்கள் சிரித்துக் கொண்டோம்... பேட்டியின் முடிவில் இவர்தான் முதல் ஆளாக நம்மாழ்வாரோடு நின்று படம் எடுத்துக் கொள்வார் என்று. அது நடக்கவும் செய்தது!)

ஆனால், பேட்டி முடிந்து செல்லும்போது, எல்லோரும் வலிக்க வலிக்க கைகுலுக்கி வாசல்வரை சென்று வழியனுப்புவார்கள். ஏனென்றால் அவர்கள் செய்திருக்கும் சாதனை அப்படிப்பட்டது.

ஜெயசீலனும் அப்படித்தான். இளமையான மெலிந்த தோற்றம்... இப்படித்தான் இருப்பேன் என்ற பிடிவாதத்துடன் இழுத்து கட்டப்பட்ட வேட்டி என்று முதல் பார்வையில் எந்த ஈர்ப்பும் இல்லாமல் இருந்தார். ஆனால், பேசி முடித்தபோது பெரும் பிரமிப்பு ஏற்பட்டுப் போனது எல்லோருக்கும்!

கல்லூரி காலத்திலேயே டாப் அப் செல் கார்டுகள் விற்று பணம் ஈட்டிய அவருடைய உழைப்பையும் லண்டன் சென்றபிறகுகூட அங்கே ஒரு உணவகத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டே படித்ததும் பஸ் கட்டணத்தை மிச்சப்படுத்த கொட்டும் பனியில் சைக்கிள் மிதித்த கதையையும் அவர் விவரித்தபோது எல்லோருக்குமே சிலிர்ப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பின் முடிவில் தொகுப்பாளர்கள் இன்னும் சிலர் அவரோடு படம் எடுத்துக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக அவரை அழைத்தபோது, ‘அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை...’ என்றார். அப்ப கொஞ்சகாலம் காத்திருக்கலாமா என்றேன். நான் காத்திருப்பேன்... ஆனா, அப்பா நிலைமை தெரியலை... நான் கேட்க வந்தது, படப்பிடிப்பு முடிந்து சீக்கிரமே அதை ஒளிபரப்ப முடியுமா என்றுதான்... வேண்டுகோளாகத்தான் கேட்கிறேன் என்றார்.

திங்கட்கிழமை படப்பிடிப்பு நடத்தி அதை புதன்கிழமை ஒளிபரப்பினோம். அன்று போன் செய்தார் ஜெயசீலன். ‘ரொம்ப நன்றி சார்... நான் பத்தாங்கிளாஸ் படிச்சப்ப நானூற்று ஐம்பதுக்கு மேல மார்க் வாங்கினேன். அதை போன்ல சொன்னப்ப பாஸாகிட்டேல்ல என்றுதான் கேட்டார். அதுதான் அவருக்கு தெரிந்தது. அடுத்து நான் படித்த பட்டப்படிப்போ மேற்படிப்போ என் ஆராய்ச்சியோ அவரை தொடவே இல்லை. ஆனா, இன்னிக்கு பேட்டி பார்த்ததும் கண்ணு கலங்கிட்டாரு... எனக்குத் தெரிஞ்சு நான் எங்கப்பாவை இன்னிக்கு தொட்டுட்டேன்...’ என்றார். நிறைவாக இருந்தது.

அடுத்த வாரம் செவ்வாய் கிழமை மறுபடியும் ஜெயசீலனின் போன்... காலைல அப்பா தவறிட்டாரு சார்... அவரை கடைசியா சந்தோஷப்படுத்துனது உங்க பேட்டிதான்... என் அப்பாவுக்கு சந்தோஷம் தரமுடிஞ்சது... நன்றி சார்...’ என்றார். இந்த நன்றியை என்ன செய்வது..?

சூரிய வ|ணக்கம் பேட்டியின்போது ஜெயசீலன் சொன்ன வார்த்தைகள் இவைதான்... எதற்காகவும் இலக்கை விட்டுத் தராதீர்கள்... விட்டுத் தந்தால் வாழ்க்கை முழுக்க அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது என்று! தான் பேட்டி அளிக்க முன்வந்தபோதுகூட அவர் இலக்கு வைத்திருந்தார், தன் அப்பா இந்த பேட்டியை பார்க்க வேண்டும்... அதற்காகத்தான் பேட்டி என்று! அந்த இலக்கை எட்டிவிட்டார்!

அவர் தந்தையும் சொல்லும் சேதி இதுதான்... இலக்கை விட்டுத் தராதீர்கள்... அதை அடையும் வரை எந்த இழப்பும் உங்களுக்கு வராது என்று!

No comments: