Saturday, September 28, 2013

குத்தாலிங்கமும் கூப்ட வேலையும்!

மற்றும் பலர்!
என் நண்பன் ராஜ்முருகன் ஒருமுறை தன் சகோதரனை அறிமுகம் செய்து வைத்தபோது, ‘இவன் இல்லைன்னா 12பி படமே இல்லை’ என்றான். அந்த முகத்தை அப்போதுதான் பார்க்கவே செய்கிறேன். 12 பி படத்தின் நாயகன் ஷாம்... அவருடைய நண்பர்கள் பட்டாளத்தில்கூட இந்த முகத்தைப் பார்க்கவில்லை. படத்தின் இயக்குனர்கூட ஒளிப்பதிவாளர் ஜீவா. ஒருவேளை அவருக்கு இந்தக் கதையைச் சொன்னவராக இருக்குமோ என்ற எண்ணத்தோடு பார்த்தேன். படத்தில் பஸ்ஸுல டிராவல் பண்ற ஷாம் பர்ஸை இவந்தான் பிக்பாக்கெட் அடிப்பான்... இவனைப் புடிக்க பஸ்ஸை விட்டு ஷாம் இறங்கறப்பதான் படம் ரெண்டு டிராக்ல பிரியும் என்றார் ராஜுமுருகன். அப்போதுதான் சினிமா தாகத்தோடு சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிக்கும் ஆள் என்பது புரிந்தது. இத்தனைக்கும் 12 பி படத்தில் நடிகர்கள் பட்டியலில்கூட அவர் பெயர் இடம் பிடித்திருக்குமா என்பது சந்தேகம்தான். மற்றும் பலர் என்ற பொதுப் பிரிவில் அவரும் ஒருவர்!
எல்லாருடைய வாழ்க்கையிலுமே அப்படியொரு மற்றும் பலர் பட்டியல் இருக்கும். நம் வாழ்க்கையின் முக்கியமான திருப்பத்தைத் தந்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு நம் வாழ்வில் பெரிய இடம் இருக்காது. மற்றும் பலர்தான்! அப்படி என் வாழ்வில் இருக்கும் பட்டியலில் கொஞ்சத்தை திரும்பிப் பார்க்கும் முயற்சி இது!
குத்தாலிங்கமும் கூப்ட வேலையும்!
சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோது குத்தாலிங்கத்தைப் பார்த்தேன். நான் பார்த்தேன் என்பதைவிட அவன் என்னைப் பார்த்தான் என்பதுதான் சரி! பஸ்ஸை விட்டு இறங்கிய கணம் வேகமாக நடந்து கொண்டிருந்த குத்தாலிங்கம் சட்டென்று நின்றுவிட்டான். ‘ஏ... பாபு... எப்டி இருக்கே..? இப்பந்தான் வாரியா..?’ என்றான். நான் ஊருக்குப் போனால் இது ஒரு வேலையாகவே இருக்கும். ‘எப்ப வந்தே..?’ என்று கேட்பவர்களிடம் ஒரே பதிலாக நேத்துதான் என்றும் ‘எப்ப ஊருக்கு..?’ என்று கேட்பவர்களிடம் நாளைக்கு என்றும் ஸ்டாண்டர்டாக ஒரே பதிலைச் சொல்லி வைப்பேன். ஆனால், பையும் கையுமா என்னைப் பார்த்த குத்தாலிங்கம் இப்பதான் வாரியா என்றதும் ஆமாம் என்று தலையசைத்தேன்.
குத்தாலிங்கம் என் பள்ளிக்கூட நண்பன். பள்ளிக்கூடத்தில் அவன் பெயர் குத்தாலிங்கம் என்று இருந்தாலும் நாங்கள் அவனை அரி என்றுதான் அழைப்போம். அவனை நண்பன் என்றெல்லாம் சொல்லமுடியாது. என்கூடப் படித்தான்... எங்கள் தெருக்கார பையன்... எனக்கு தூரத்து சொந்தம். என்ன உறவு என்றுகூட சொல்லத் தெரியாது. ஆனால், டெய்லர் சுந்தரம் தாத்தா பையன் என்ற அளவோடு நிறுத்திக் கொள்வேன். அவனும் கம்பவுண்டர் மாமா பையன் என்றுதான் என்னைச் சொல்வான். அந்த அளவில்தான் எங்கள் உறவுமுறை. நான் மூன்றாவது முடித்து நான்காவது போனபோது அவன் இன்னொரு வருடம் மூன்றாவதே படிக்க முடிவு எடுத்திருந்தான். அடுத்து நான் ஆறாவது வேறு பள்ளிக்கூடம் போனபோது அவன் பழைய பள்ளிக்கூடத்தை விட மனசில்லாதவன் போல அங்கேயே நாலாவதுல ரெண்டு வருஷம், ஐந்தாவதுல ரெண்டு வருஷம் என்று பெஞ்சைத் தேய்த்துக் கொண்டிருந்தான்.
முழு ஆண்டு விடுமுறையில் வேலைக்குச் செல்வது என்பது எங்கள் ஊரில் பல பிள்ளைகளுக்கு பழக்கம். ஊரில் பாதி பேர் கொத்தனார் என்பதால் சித்தாள் வேலைக்குச் செல்வார்கள் சிறுவர்கள். அதில் கிடைக்கும் சம்பளம், ஸ்கூல் திறக்கும்போது புத்தகம் வாங்க பயன்படும் என்பதால் எல்லோருமே வேலை பார்க்கத் தயாராகவே இருப்பார்கள். (என்னைப் போல சிலர் மட்டுமே முழு ஆண்டு லீவுக்கு ஆச்சிவீட்டுக்குச் செல்லும் அதிஷ்டம் வாய்க்கப் பெற்றவர்கள்.) அப்படியொரு முழு ஆண்டு முடிந்து எல்லோரும் பள்ளிக்கூடத்துக்குத் திரும்பிய நாளில் குத்தாலிங்கம் பள்ளிக்கு வரவில்லை.
எங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊர் பள்ளிக்குதான் ஆறாம் வகுப்புக்குச் செல்ல வேண்டும். அந்தப் பள்ளியில் ஆறாவது சேர்க்க ஒரு நுழைவுத் தேர்வு வைப்பார்கள். அந்த நுழைவுத் தேர்வுக்கு பயந்தோ என்னவோ அரி தன் படிப்பை ஐந்தாவதோடு முடித்துக் கொண்டான். அதன்பிறகு பல நேரங்களில் சிமெண்ட் படிந்த உடலும் சிரிப்புமாக அவ்வப்போது எதிர்படுவான். ‘என்னடே... எப்படி இருக்க..?’ என்பான். பதிலைக்கூட எதிர்பார்க்காத கேள்வியாகத்தான் இருக்கும் அது.
நான் கல்லூரிக்குப் போன பிறகு ஒருநாள் திடீரென்று அவனைப் பார்த்தேன். ‘என்ன அரி... ஆளையே பாக்க முடியலை..?’ என்றேன். ‘நீ திருநவேலிக்கு படிக்கப் போயிட்டு என்னக் கேக்கியோ..?’ என்றான் சிரிப்போடு. சிரிப்பு அவனுக்கு டிரேட் மார்க். ‘நான் ஊருக்கு வந்து நாலைஞ்சு நாளாச்சு... உன்னைப் பாக்கலையேனு கேட்டேன்..?’ என்றதும், ‘இப்பம் நா கேரளாவுல வேல பாக்கேன்... ஒரு அறுப்பு மில்லுல... நல்ல சம்பளம்... சாப்பாடும் வத்தனையா போடுதானுவ... அலப்பரை இல்லாம போவுது...’ என்றான். அதுதான் அரி. எதையும் அலுப்போடு சொல்லமாட்டான்.
நான் சென்னைக்கு வந்து வேலையில் செட்டில் ஆன பிறகு ஒருமுறை ஊருக்குப் போயிருந்தேன். பையைக் கொண்டுபோய் வீட்டுக்குள் வைத்துவிட்டு கைலியை மாற்றிக் கொண்டு வாசலுக்கு வந்தால் பக்கத்து வீட்டுக்கு எதிரே இருந்த குச்சில் வாசலில் உட்கார்ந்து காபியை ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்தான் அரி. என்னைப் பார்த்ததும் முகம் கொள்ளாத சிரிப்பு.
‘ஏ... எப்படி இருக்க... இதென்ன செம்மறி ஆட்டுக்கு வளர்ந்தது கணக்கா தாடி மொளச்சிருக்கு... ஒண்ணு முழுசா வைக்கணும்... இல்லை, சிரைக்கணும்... இதென்னடே...?’ என்றான் எடுத்த எடுப்பிலேயே! நூறு ரூபாய் கொடுத்து ஒவ்வொரு முடியாக செதுக்கி வைத்த ஃபிரெஞ்ச் பியர்ட்டை ஒரே வரியில் ஆட்டுத்தாடி என்றுவிட்டான். தாடியை தடவிக் கொண்டே, ‘எப்படி இருக்கே... இங்க என்னடே..?’ என்றேன். குச்சிலுக்கு உள்ளே இருந்து ஒரு இளம்பெண் எட்டிப் பார்த்தாள். ‘இங்க வா... இது நம்ம பாபு... மெட்ராஸ்ல இருக்கான்... ரெண்டு பேரும் ஒண்ணாப் படிச்சோம்... இது என் பொண்டாட்டி...’ என்று பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தான். அவனுக்கு கல்யாணம் ஆன விஷயமே எனக்கு அப்போதுதான் தெரியவந்தது.
‘தையில எனக்கு கல்யாணம் முடிச்சு வைக்கியா இல்லையானு ஒத்தக் கால்ல நின்னுட்டான்... என்ன கிறுக்கோ தெரியலை... கல்யாணத்துக்குனு சேர்த்ததுனு சொல்லி அம்பதாயிரம் ரூபாயைத் தூக்கி அவ்வப்பா மடியில போட்டுட்டான். அந்த மாமாவும் எம்புட்டோ சொல்லிப் பாத்தாவோ. கேக்கலை... சரினு முடிச்சு வெச்சுட்டாவோ. அந்த மட்டுக்கும் வந்த மகராசி நல்லவ... அவன் கொண்டாறதை வெச்சு கட்டு செட்டா கழிக்கா...’ என்றாள் அம்மா.
அன்றைக்கு சாயங்காலம் வாசலில் உட்கார்ந்து கைகால்களுக்கு எண்ணெய் தடவிக் கொண்டிருந்தான் அரி. என்னைப் பார்த்ததும் அழகான சிரிப்போடு, ‘என்ன வேலை பார்க்க மெட்ராஸ்ல..? எம் பொண்டாட்டி கேட்டா... சொல்லத் தெரியலை எனக்கு...’ என்றான். ‘பத்திரிகை ஆபீஸ்ல வேலை...’ என்றேன். ‘அங்க உனக்கு வாரச் சம்பளமா... டெய்லி சம்பளமா..?’ என்றான். ஒருகணம் ஆடிப் போய்விட்டேன். மாசச் சம்பளம் என்ற ஒரு விஷயமே அவனுக்கு தெரியவில்லை. நான் சொன்னதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சீட்டு கீட்டு போட்டு துட்டு சேக்கியா... நாளைக்கு கல்யாணம் முடிக்கையிலே வேணும்லா... என்றான். அவன் உலகம் எனக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.
நீ என்ன வேலை பார்க்கிறே..? என்றேன். கூப்ட வேலைக்குப் போறேன்... என்றான். எனக்குப் புரியவில்லை. ‘இன்னைக்கு கொத்தனார் வேலை இருக்குனு சொன்னா பெரியாள் வேலைக்குப் போவேன்... சாந்து குழைக்கறது... செங்கல் சுமக்கறதுனு வேலை இருக்கும்... இல்ல, அறுப்பு மில்லுல வேலைன்னா அதுக்கு போவேன்... தடி தள்ளணும்... ரீப்பர் கட்டணும்னு வேலை இருக்கும். இல்லைன்னா மம்பட்டி வேலைக்கு போவேன்... வரப்பு தரிக்கது, புல்லு சீவுததுனு வேலை இருக்கும்... கூப்ட வேலை... நமக்கு பொழுது விடிஞ்சு பொழுது போனா கையில் சம்பளம் நிக்கணும்...’ என்றான். கொஞ்சம் மலைப்பாகத்தான் இருந்தது.
அந்த அரிதான் என்னை பஸ்ஸில் இருந்து இறங்கும்போது பார்த்துவிட்டான், எப்டி இருக்க? என்று கேட்டும் விட்டான். அவனுடைய அடுத்த கேள்வி இதுவாகத்தான் இருக்கும்... என்ன வேலை பாக்க? என்ன பதில் சொல்வது?
நீ கொத்தனார் வேலை பார்ப்பது போல... அறுப்பு மில் வேலை பார்ப்பது போல... மம்பட்டி வேலை பார்ப்பது போல நானும் பத்திரிகைகளுக்கு எழுதுகிறேன்... தொலைக்காட்சிகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதுகிறேன்... சினிமாவுக்கு வசனம் எழுதுகிறேன்... இணைய தளங்களில் பத்தி எழுதுகிறேன் என்றெல்லாம் சொல்லலாமா... அவனுக்குப் புரியுமா? என்று யோசித்த நேரத்தில் அந்தக் கேள்வியைக் கேட்டான்...
‘என்ன பாபு... இப்பம் என்ன வேலை பாக்க?
‘கூப்ட வேலைக்குப் போறேன்..!’

www.tamizhulagam.com இணைய இதழில்

Wednesday, September 11, 2013

காயத்ரி அக்கா!

‘‘அம்மா வாளி இருந்தா வாங்கிட்டு வரச் சொன்னாங்க...’’ என்றபடி கதவைத் தட்டியபோதுதான் காயத்ரி அக்காவை முதன்முதலாகப் பார்த்தேன்... நாங்கள் குடிபோன வளைவு வீட்டு வரிசையில் நாலாவது வீடு காயத்ரி அக்காவின் வீடு. எட்டு வீடுகள் இருந்த் அந்த வரிசையில் முதல் வீடு எங்களுடையது. அடுத்து ஒரு வீட்டில் பீடிக் கடை இருந்தது. அடுத்த வீட்டில் ஒரு டீச்சர் குடியிருந்தார்கள். நாலாவது வீடு காயத்ரி அக்கா வீடு. அடுத்த இரண்டு வீடுகளில் ஓனர் குடியிருக்க எட்டாவது வீடு காலியாக இருந்தது.
வாளியைக் கையில் எடுத்து கையில் கொடுத்துவிட்டு பின்னாலேயே வந்துவிட்டாள் காயத்ரி அக்கா. அப்போது அவள் பெயர் காயத்ரி என்று தெரியாது. தன் வீட்டில் இருந்து இன்னொரு துடைப்பம் எடுத்துக் கொண்டு வந்து அம்மாவோடு சேர்ந்து வீடெல்லாம் கழுவி விட்டாள். தொணதொணவென்று பேசிக் கொண்டே இருந்தாள்.
வாடகை எழுபத்தைந்து ரூபாய் என்பதில் இருந்து கமலுக்கு எப்பவுமே கரெக்டான ஜோடி ஸ்ரீதேவிதான் என்பது வரை எல்லாம் பேசினாள். நாளைக்கு பார்க்கப் போவதில்லை... பேசப் போவதில்லை... அதனால் இன்றே பேசி முடித்துவிட வேண்டும் என்பதாக இருந்தது அவளுடைய பேச்சு!
காயத்ரி அக்காவின் அப்பாவுக்கு ஈபியில் லைன் மேன் வேலை! வீட்டில் இருக்கும் நேரங்களில்கூட காக்கி கலர் டவுசர்தான் போட்டிருப்பார். ஆரம்பத்தில் அவருடைய காக்கி கலர் டவுசரைப் பார்த்து போலீஸோ என்று சந்தேகப்பட்டிருக்கிறேன். பின்னாளில் ஒருமுறை அவரை போஸ்ட் கம்பத்தில் பார்த்த பிறகு பயம் தெளிந்திருக்கிறது.
காயத்ரி அக்காவுக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கை... அண்ணன் ரமேஷ் எங்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் கிராஃப்ட் வாத்தியாராக இருந்தார். பள்ளிக்கூட ஆசிரியர் சம்பளமாக இல்லாமல் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நியமித்த டீச்சர் என்பதால் அறுநூறோ என்னவோதான் வாங்கினார். அதில் நூறை எடுத்துக் கொண்டு மிச்சம்தான் வீட்டுக்கு தருவார். அப்பாவின் சம்பளம் பிடித்தமெல்லாம் போக ஆயிரத்துக்குள் வரும். அதில்தான் எல்லா செலவுகளுமே!
ஒருநாள் காயத்ரி அக்கா காடா துணியில் தைத்த பிரேசியர் போட்டிருந்ததைப் பார்த்துவிட்டு அம்மா, ‘என்ன காயத்ரி... இந்த சின்ன வயசுல நாடா வெச்ச பிரா போடாம காடா துணியிலே போட்டிருக்கே?’ என்று கேட்டபோது அக்கா சொன்ன தகவல்கள் இவை!
இந்த காடாதுணி பிரேசியர் கூட மச்சு வீட்டு அக்கா பாவாடை, தலகாணி உறை தைக்க காடா துணி குடுத்ததுல மிச்சம் பிடிச்சு தெச்சேன் என்று காயத்ரி அக்கா சொன்னபோது அம்மா பாவம் என்றாள்.
காயத்ரி அக்காவுக்கு இத்தனை பேச்சு எங்கே இருந்து வந்தது என்பது அந்த அக்காவின் அம்மாவைப் பார்த்தபோது தெரிந்தது. தினத்தந்தியை முதல் பக்கத்தில் இருந்து கடைசிபக்கம் வரை படித்தது போல எல்லா தகவல்களையும் கொட்டினாள் அந்த அத்தை. ஆனால் இருவருக்கும் இருந்த பெரிய வித்தியாசம் அத்தையின் பேச்சில் அது இல்லை இது இல்லை என்ற பஞ்சப்பாட்டு கிடையவே கிடையாது. ‘ஒரு ரசம் வெச்சேன்... ஒரு அப்பளம் பொறிச்சேன்... மழைக்கும் அதுக்கும் சுடச்சுட கூட ரெண்டு வாய் உள்ளே போச்சு என்பாள் அத்தை. அதுவே காயத்ரி அக்கா என்றால்வீட்டுல காய்ங்கற பொறப்பே இல்லை... வேற வழியில்லாம ரசம் வெச்சு அப்பளம் பொறிக்க வேண்டியதாப் போச்சுஎன்பாள்.
காயத்ரி... இல்லே இல்லேனு சொன்னா இல்லாமலேயே போயிரும்... இருக்குனு சொல்லிப் பழகு...’ என்று ஒருமுறை அம்மா சொன்னபோதுகூட வெறுஞ்சட்டியை எப்படிக்கா நிறைஞ்சிருக்குனு சொல்ல முடியும் என்று அலுத்துக் கொண்டுதான் பேசினாள் அக்கா.
நல்ல மழைநாளில் திண்ணையை ஒட்டியபடியே ஓட்டுச் சாய்ப்பில் ஒண்டிக்கொண்டு சுவரை உரசியபடியே லேசாக நனைந்து கொண்டு வந்தாள் காயத்ரி அக்கா. ஒரு குடை கிடையாது... குளிருக்கு உடுத்திக்க கனமான ஸ்வெட்டர் கிடையாது என்று சொல்லிக் கொண்டே நிமிர்ந்த காயத்ரி அக்காவுக்கு அதிர்ச்சி. அம்மா அப்பாவின் முழுக்கைச் சட்டையை சேலைக்கு மேலே போட்டுக் கொண்டிருந்தாள்.
நீயும் உங்கப்பா சட்டையையோ உங்க அண்ணன் சட்டையையோ போட்டுக்கோ... குளிருக்கு இதமா இருக்கும்... கல்யாணத்துக்கு முன்னே நானும் அப்படித்தான்...’ என்ற அம்மாவை ஆச்சரியமாகப் பார்த்த காயத்ரி அக்கா, ‘எங்கப்பா சட்டை அக்குள்ல கிழிஞ்சிருக்கும்... எங்க அண்ணன் சட்டைல சிகரெட் வாசனை அடிக்கும் என்று அதற்கும் ஒரு குறை சொல்லிவிட்டுத்தான் சென்றாள்.
காயத்ரி அம்மா... காயத்ரிக்கு மாப்பிள்ளை பாக்கறதுக்குள்ளே உங்களுக்கு நாக்கு தள்ளிப் போயிரும்... எதையெடுத்தாலும் குறை சொல்றாளே... நீங்க இந்திரனையே பார்த்தாலும் இவ பல்லு சரியில்லை... பார்வை கோளாறா இருக்குனு நொட்டை சொல்வா...’ என்ற அம்மாவிடம், ‘எங்க வசதிக்கு எங்கே போய் மாப்பிள்ளை தேடுறது... எங்க அண்ணன் மகன் தாலுகா ஆபீஸ்ல ஆர் ஐயா இருக்கான்... அவனுக்கு இந்த ஐப்பசி வந்தா ரெட்டிச்ச வயசு முடிஞ்சு 29 வந்துடும்... அதனால தையிலே கல்யாணத்தை வெச்சுட வேண்டியதுதான்...’ என்றாள் அத்தை.
காயத்ரி அக்காவின் மனசு போலவே அவள் கல்யாணத்தில் மூன்றாம் பந்தியில் பாயாசம் இல்லை... நான்காம் பந்தியில் கூட்டு பொரியல் இல்லை... ஐந்தாம் பந்திக்கு சோறே இல்லை... மிச்சம் இருந்த சாம்பாரையும் அவியலையும் அள்ளிக்கொண்டு வீட்டுக்கு வந்தார்கள். மறுவீடு வந்த அக்காவோடு சாம்பாரும் அவியலும் வந்தது. அம்மா போய் மறுவீட்டு பலகாரத்தோடு கொஞ்சம் சுண்ட கறியும் வாங்கி வந்தாள்.
காயத்ரி அக்கா வீட்டு மாமா லேசாக முன் வழுக்கை வாங்கியிருந்தார். அக்காவுக்கு குறை சொல்ல ஒரு காரணம் கிடைத்துவிட்டது. அடுத்த முறை வரும்போது கேட்டால், ‘என்ன ஆர் ஐயா இருந்து என்ன பிரயோஜனம்... சிவகுமார் மாதிரி நெத்தியிலே விழுறதுக்கு முன் மண்டையிலே முடி இல்லையே!’ என்பாள் நிச்சயம்.
காயத்ரி அக்கா மாமா வீட்டோடு போன பிறகு மழை பெய்து வெறித்த மாதிரி ஆகிவிட்டது எங்கள் வளவு. அக்கா குடியிருந்த கோவில்பட்டிக்கு ஒருதரம் நாங்க குடும்பத்தோடு போனோம். அப்பாவுக்கு நாலுநாள் லீவு கிடைக்க, கன்னியாகுமரி போய்விட்டு வருவோம் என்று பிளான் போட்டோம். போகிற வழியில் அக்கா வீட்டில் இறங்கி அரை நாள் இருந்துவிட்டுப் போகலாம் என்று திட்டம்.
தலையைக் கண்டதும் உலையை வைனு சொல்ற மாதிரி சாம்பார், ரசம், அவியல் பொரியல்னு அசத்திட்டா காயத்ரி அக்கா. ஆனா, அடுக்களைதான் ஏதோ இரண்டாம் உலகப் போர் நடந்த ஜப்பான் மாதிரி ஏக களேபரமாக் கிடந்தது. சிங்க் தொட்டி நிறைய சோற்றுப் பருக்கை... பருக்கைன்னா ஒண்ணு ரெண்டுனு ஆகிடும்... சோறே கொட்டிக் கிடந்துச்சு!
என்ன காயத்ரி... இவ்ளோ சோறு சிந்தியிருக்கு?’ என்று அம்மா கேட்டதும், ‘பொங்கறதுக்கு பானை வேணும்ல... அதான், பழசு கிடந்ததை கொட்டிட்டேன்... பழசு பட்டையை யாரு திங்கறது... எனக்கு ஆகமாட்டேங்குது...’ என்று காயத்ரி அக்கா சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது.
கஞ்சிக்கு வழியில்லாதவர் என்று குறையாகச் சொல்லக் கூடாது என்றாலும் காயத்ரி இருந்த இருப்பென்ன... இப்ப கொழிக்கறது என்ன என்று அம்மா கன்னியாகுமரியில் இருந்து திரும்பற வரைக்கும் புலம்பிக் கொண்டே வந்தாள்.
ஆடி, தலை தீபாவளினு கூட காயத்ரி அக்கா பிறந்த வீட்டுக்கு வருவதில்லை. அங்க வந்தா உங்க தரித்திரம் எனக்கும் ஒட்டிக்கும் என்று சொல்லி வருவதைத் தவிர்த்து விட்டதாக காயத்ரி அக்காவின் அம்மா வந்து அழுதுவிட்டுச் செல்வாள். ஆனால், அவர்கள் போகும்போதெல்லாம் புடவையாக அள்ளிக் கொடுத்து அனுப்புவாள். எல்லாமே அவள் கட்டி அவிழ்த்த புடவை!
எங்கண்ணன் மவன் ரெண்டு கையிலேயும் சம்பாதிக்கறான்... புதுசு ஒண்ணு எடுத்துக் குடுத்தா என்ன குறைஞ்சுடுவா... இதெல்லாம் எனக்கு புடிக்கலை... நாலுதரம் கட்டுனா அலுத்துடுதுனு சொல்லி அவுத்துக் குடுக்கா என் செல்ல மவ...’ என்று அந்த அத்தை கண்ணீர் வடிக்கும்போது கஷ்டமாக இருந்தது.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் கல்யாணத்துக்கு பத்திரிகை வைப்பதற்காக காயத்ரி அக்கா வீட்டுக்குப் போனேன். புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் எல்லாம் நடத்தி விட்டிருந்தாள்.
வெளிவேலைக்கு ஒரு ஆள், வீட்டு வேலைக்கு ஒரு ஆள் என்று ஆட்களை வைத்திருந்தாள். ‘சாப்பிட்டுட்டுதான் போகணும்... தம்பிக்கும் சேர்த்து சாப்பாடு வெச்சுடு...’ என்று வேலையாளிடம் சொல்லிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றாள் அக்கா. வீடு நன்றாகவே இருந்தது.
ஒவ்வொரு அறையாக சுற்றிக் கொண்டே வந்தபோது, ‘இதுதான் என் ரூம்...’ என்றபடி கதவைத் திறந்தாள். கட்டிலுக்கு கீழே ஐம்பதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் நாகரீகமான நாடா வைத்த உள்ளாடைகள் குவிந்து கிடந்தன!
சூரிய கதிர் செப்டம்பர் 13 இதழில்