Wednesday, September 11, 2013

காயத்ரி அக்கா!

‘‘அம்மா வாளி இருந்தா வாங்கிட்டு வரச் சொன்னாங்க...’’ என்றபடி கதவைத் தட்டியபோதுதான் காயத்ரி அக்காவை முதன்முதலாகப் பார்த்தேன்... நாங்கள் குடிபோன வளைவு வீட்டு வரிசையில் நாலாவது வீடு காயத்ரி அக்காவின் வீடு. எட்டு வீடுகள் இருந்த் அந்த வரிசையில் முதல் வீடு எங்களுடையது. அடுத்து ஒரு வீட்டில் பீடிக் கடை இருந்தது. அடுத்த வீட்டில் ஒரு டீச்சர் குடியிருந்தார்கள். நாலாவது வீடு காயத்ரி அக்கா வீடு. அடுத்த இரண்டு வீடுகளில் ஓனர் குடியிருக்க எட்டாவது வீடு காலியாக இருந்தது.
வாளியைக் கையில் எடுத்து கையில் கொடுத்துவிட்டு பின்னாலேயே வந்துவிட்டாள் காயத்ரி அக்கா. அப்போது அவள் பெயர் காயத்ரி என்று தெரியாது. தன் வீட்டில் இருந்து இன்னொரு துடைப்பம் எடுத்துக் கொண்டு வந்து அம்மாவோடு சேர்ந்து வீடெல்லாம் கழுவி விட்டாள். தொணதொணவென்று பேசிக் கொண்டே இருந்தாள்.
வாடகை எழுபத்தைந்து ரூபாய் என்பதில் இருந்து கமலுக்கு எப்பவுமே கரெக்டான ஜோடி ஸ்ரீதேவிதான் என்பது வரை எல்லாம் பேசினாள். நாளைக்கு பார்க்கப் போவதில்லை... பேசப் போவதில்லை... அதனால் இன்றே பேசி முடித்துவிட வேண்டும் என்பதாக இருந்தது அவளுடைய பேச்சு!
காயத்ரி அக்காவின் அப்பாவுக்கு ஈபியில் லைன் மேன் வேலை! வீட்டில் இருக்கும் நேரங்களில்கூட காக்கி கலர் டவுசர்தான் போட்டிருப்பார். ஆரம்பத்தில் அவருடைய காக்கி கலர் டவுசரைப் பார்த்து போலீஸோ என்று சந்தேகப்பட்டிருக்கிறேன். பின்னாளில் ஒருமுறை அவரை போஸ்ட் கம்பத்தில் பார்த்த பிறகு பயம் தெளிந்திருக்கிறது.
காயத்ரி அக்காவுக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கை... அண்ணன் ரமேஷ் எங்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் கிராஃப்ட் வாத்தியாராக இருந்தார். பள்ளிக்கூட ஆசிரியர் சம்பளமாக இல்லாமல் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நியமித்த டீச்சர் என்பதால் அறுநூறோ என்னவோதான் வாங்கினார். அதில் நூறை எடுத்துக் கொண்டு மிச்சம்தான் வீட்டுக்கு தருவார். அப்பாவின் சம்பளம் பிடித்தமெல்லாம் போக ஆயிரத்துக்குள் வரும். அதில்தான் எல்லா செலவுகளுமே!
ஒருநாள் காயத்ரி அக்கா காடா துணியில் தைத்த பிரேசியர் போட்டிருந்ததைப் பார்த்துவிட்டு அம்மா, ‘என்ன காயத்ரி... இந்த சின்ன வயசுல நாடா வெச்ச பிரா போடாம காடா துணியிலே போட்டிருக்கே?’ என்று கேட்டபோது அக்கா சொன்ன தகவல்கள் இவை!
இந்த காடாதுணி பிரேசியர் கூட மச்சு வீட்டு அக்கா பாவாடை, தலகாணி உறை தைக்க காடா துணி குடுத்ததுல மிச்சம் பிடிச்சு தெச்சேன் என்று காயத்ரி அக்கா சொன்னபோது அம்மா பாவம் என்றாள்.
காயத்ரி அக்காவுக்கு இத்தனை பேச்சு எங்கே இருந்து வந்தது என்பது அந்த அக்காவின் அம்மாவைப் பார்த்தபோது தெரிந்தது. தினத்தந்தியை முதல் பக்கத்தில் இருந்து கடைசிபக்கம் வரை படித்தது போல எல்லா தகவல்களையும் கொட்டினாள் அந்த அத்தை. ஆனால் இருவருக்கும் இருந்த பெரிய வித்தியாசம் அத்தையின் பேச்சில் அது இல்லை இது இல்லை என்ற பஞ்சப்பாட்டு கிடையவே கிடையாது. ‘ஒரு ரசம் வெச்சேன்... ஒரு அப்பளம் பொறிச்சேன்... மழைக்கும் அதுக்கும் சுடச்சுட கூட ரெண்டு வாய் உள்ளே போச்சு என்பாள் அத்தை. அதுவே காயத்ரி அக்கா என்றால்வீட்டுல காய்ங்கற பொறப்பே இல்லை... வேற வழியில்லாம ரசம் வெச்சு அப்பளம் பொறிக்க வேண்டியதாப் போச்சுஎன்பாள்.
காயத்ரி... இல்லே இல்லேனு சொன்னா இல்லாமலேயே போயிரும்... இருக்குனு சொல்லிப் பழகு...’ என்று ஒருமுறை அம்மா சொன்னபோதுகூட வெறுஞ்சட்டியை எப்படிக்கா நிறைஞ்சிருக்குனு சொல்ல முடியும் என்று அலுத்துக் கொண்டுதான் பேசினாள் அக்கா.
நல்ல மழைநாளில் திண்ணையை ஒட்டியபடியே ஓட்டுச் சாய்ப்பில் ஒண்டிக்கொண்டு சுவரை உரசியபடியே லேசாக நனைந்து கொண்டு வந்தாள் காயத்ரி அக்கா. ஒரு குடை கிடையாது... குளிருக்கு உடுத்திக்க கனமான ஸ்வெட்டர் கிடையாது என்று சொல்லிக் கொண்டே நிமிர்ந்த காயத்ரி அக்காவுக்கு அதிர்ச்சி. அம்மா அப்பாவின் முழுக்கைச் சட்டையை சேலைக்கு மேலே போட்டுக் கொண்டிருந்தாள்.
நீயும் உங்கப்பா சட்டையையோ உங்க அண்ணன் சட்டையையோ போட்டுக்கோ... குளிருக்கு இதமா இருக்கும்... கல்யாணத்துக்கு முன்னே நானும் அப்படித்தான்...’ என்ற அம்மாவை ஆச்சரியமாகப் பார்த்த காயத்ரி அக்கா, ‘எங்கப்பா சட்டை அக்குள்ல கிழிஞ்சிருக்கும்... எங்க அண்ணன் சட்டைல சிகரெட் வாசனை அடிக்கும் என்று அதற்கும் ஒரு குறை சொல்லிவிட்டுத்தான் சென்றாள்.
காயத்ரி அம்மா... காயத்ரிக்கு மாப்பிள்ளை பாக்கறதுக்குள்ளே உங்களுக்கு நாக்கு தள்ளிப் போயிரும்... எதையெடுத்தாலும் குறை சொல்றாளே... நீங்க இந்திரனையே பார்த்தாலும் இவ பல்லு சரியில்லை... பார்வை கோளாறா இருக்குனு நொட்டை சொல்வா...’ என்ற அம்மாவிடம், ‘எங்க வசதிக்கு எங்கே போய் மாப்பிள்ளை தேடுறது... எங்க அண்ணன் மகன் தாலுகா ஆபீஸ்ல ஆர் ஐயா இருக்கான்... அவனுக்கு இந்த ஐப்பசி வந்தா ரெட்டிச்ச வயசு முடிஞ்சு 29 வந்துடும்... அதனால தையிலே கல்யாணத்தை வெச்சுட வேண்டியதுதான்...’ என்றாள் அத்தை.
காயத்ரி அக்காவின் மனசு போலவே அவள் கல்யாணத்தில் மூன்றாம் பந்தியில் பாயாசம் இல்லை... நான்காம் பந்தியில் கூட்டு பொரியல் இல்லை... ஐந்தாம் பந்திக்கு சோறே இல்லை... மிச்சம் இருந்த சாம்பாரையும் அவியலையும் அள்ளிக்கொண்டு வீட்டுக்கு வந்தார்கள். மறுவீடு வந்த அக்காவோடு சாம்பாரும் அவியலும் வந்தது. அம்மா போய் மறுவீட்டு பலகாரத்தோடு கொஞ்சம் சுண்ட கறியும் வாங்கி வந்தாள்.
காயத்ரி அக்கா வீட்டு மாமா லேசாக முன் வழுக்கை வாங்கியிருந்தார். அக்காவுக்கு குறை சொல்ல ஒரு காரணம் கிடைத்துவிட்டது. அடுத்த முறை வரும்போது கேட்டால், ‘என்ன ஆர் ஐயா இருந்து என்ன பிரயோஜனம்... சிவகுமார் மாதிரி நெத்தியிலே விழுறதுக்கு முன் மண்டையிலே முடி இல்லையே!’ என்பாள் நிச்சயம்.
காயத்ரி அக்கா மாமா வீட்டோடு போன பிறகு மழை பெய்து வெறித்த மாதிரி ஆகிவிட்டது எங்கள் வளவு. அக்கா குடியிருந்த கோவில்பட்டிக்கு ஒருதரம் நாங்க குடும்பத்தோடு போனோம். அப்பாவுக்கு நாலுநாள் லீவு கிடைக்க, கன்னியாகுமரி போய்விட்டு வருவோம் என்று பிளான் போட்டோம். போகிற வழியில் அக்கா வீட்டில் இறங்கி அரை நாள் இருந்துவிட்டுப் போகலாம் என்று திட்டம்.
தலையைக் கண்டதும் உலையை வைனு சொல்ற மாதிரி சாம்பார், ரசம், அவியல் பொரியல்னு அசத்திட்டா காயத்ரி அக்கா. ஆனா, அடுக்களைதான் ஏதோ இரண்டாம் உலகப் போர் நடந்த ஜப்பான் மாதிரி ஏக களேபரமாக் கிடந்தது. சிங்க் தொட்டி நிறைய சோற்றுப் பருக்கை... பருக்கைன்னா ஒண்ணு ரெண்டுனு ஆகிடும்... சோறே கொட்டிக் கிடந்துச்சு!
என்ன காயத்ரி... இவ்ளோ சோறு சிந்தியிருக்கு?’ என்று அம்மா கேட்டதும், ‘பொங்கறதுக்கு பானை வேணும்ல... அதான், பழசு கிடந்ததை கொட்டிட்டேன்... பழசு பட்டையை யாரு திங்கறது... எனக்கு ஆகமாட்டேங்குது...’ என்று காயத்ரி அக்கா சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது.
கஞ்சிக்கு வழியில்லாதவர் என்று குறையாகச் சொல்லக் கூடாது என்றாலும் காயத்ரி இருந்த இருப்பென்ன... இப்ப கொழிக்கறது என்ன என்று அம்மா கன்னியாகுமரியில் இருந்து திரும்பற வரைக்கும் புலம்பிக் கொண்டே வந்தாள்.
ஆடி, தலை தீபாவளினு கூட காயத்ரி அக்கா பிறந்த வீட்டுக்கு வருவதில்லை. அங்க வந்தா உங்க தரித்திரம் எனக்கும் ஒட்டிக்கும் என்று சொல்லி வருவதைத் தவிர்த்து விட்டதாக காயத்ரி அக்காவின் அம்மா வந்து அழுதுவிட்டுச் செல்வாள். ஆனால், அவர்கள் போகும்போதெல்லாம் புடவையாக அள்ளிக் கொடுத்து அனுப்புவாள். எல்லாமே அவள் கட்டி அவிழ்த்த புடவை!
எங்கண்ணன் மவன் ரெண்டு கையிலேயும் சம்பாதிக்கறான்... புதுசு ஒண்ணு எடுத்துக் குடுத்தா என்ன குறைஞ்சுடுவா... இதெல்லாம் எனக்கு புடிக்கலை... நாலுதரம் கட்டுனா அலுத்துடுதுனு சொல்லி அவுத்துக் குடுக்கா என் செல்ல மவ...’ என்று அந்த அத்தை கண்ணீர் வடிக்கும்போது கஷ்டமாக இருந்தது.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் கல்யாணத்துக்கு பத்திரிகை வைப்பதற்காக காயத்ரி அக்கா வீட்டுக்குப் போனேன். புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் எல்லாம் நடத்தி விட்டிருந்தாள்.
வெளிவேலைக்கு ஒரு ஆள், வீட்டு வேலைக்கு ஒரு ஆள் என்று ஆட்களை வைத்திருந்தாள். ‘சாப்பிட்டுட்டுதான் போகணும்... தம்பிக்கும் சேர்த்து சாப்பாடு வெச்சுடு...’ என்று வேலையாளிடம் சொல்லிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றாள் அக்கா. வீடு நன்றாகவே இருந்தது.
ஒவ்வொரு அறையாக சுற்றிக் கொண்டே வந்தபோது, ‘இதுதான் என் ரூம்...’ என்றபடி கதவைத் திறந்தாள். கட்டிலுக்கு கீழே ஐம்பதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் நாகரீகமான நாடா வைத்த உள்ளாடைகள் குவிந்து கிடந்தன!
சூரிய கதிர் செப்டம்பர் 13 இதழில்

No comments: