Sunday, January 28, 2024

’கதை சொல்லி’ பழனி ஆச்சி!

 ஒரு ஊர்ல ஒரு அண்ணன் தங்கச்சி… அந்தப் பொம்பளப் புள்ள பொறக்கயிலயே அவங்களோட அம்மாவும் அப்பாவும் செத்துப் போயிட்டாங்க… குடியிருக்க ஒரு குச்சிலு மட்டும்தான் சொந்தம்… அந்த அண்ணன் காரன் தான் தங்கச்சிய வளத்தான்… சின்னப் பய… அவனுக்கு என்ன முடியுமோ அதைக் கொண்டாந்தான்… காடு கரைனு போயி கையில கிடைக்கிற கீரைய எல்லாம் பறிச்சுகிட்டு வந்தான்… வழியில இருக்கிற குசக் குடியிலே ஒரு சட்டி யாசகம் கேட்டு வாங்கிட்டு வந்தான்… தோப்புக்காடுகள்ல பெறக்குன வெறகுகளைக் கொண்டாந்து போட்டு அடுப்பெரிச்சு அந்த கீரைய சட்டில போட்டு அவிச்சு தங்கச்சிக்கும் குடுத்து தானும் சாப்பிடுவான்… அதுதான் அவங்களுக்கு சாப்பாடு!

அடுத்த நாளு… அதுக்கு மறுநாளுனு அதுதான் சாப்பாடா இருந்துச்சு… ஒருநாள் என்ன செஞ்சான்… எப்பவும் போல கீரைய ஆஞ்சு கொண்டாந்து சட்டில வச்சு அவிச்சுட்டு, கொஞ்சம் ஆறட்டும்… அதுக்குள்ள குளிச்சுட்டு வந்துருவோம்னு குளிக்கப் போனான்.

நெதம் அண்ணந்தான நமக்கு கீர கடஞ்சு தாரான்… ஒருநாளு நாம அவனுக்கு கடஞ்சு குடுப்போம்னு கீர மத்தை எடுத்துகிட்டு போய் கீரச் சட்டியத் தூக்குனா தங்கச்சி… சூடு பொறுக்காம சட்டிய டொம்முனு தரையில வச்சுட்டா… சட்டி ஒடஞ்சிருச்சு…

குளிச்சுட்டு அண்ணன் காரன் பசியோட வந்தான். தங்கச்சி அழுதுகிட்டே நின்னா… அடுப்பங்கரையில சட்டி ஒடைஞ்சு கீர பூராம் கொட்டியிருந்ததப் பாத்தான். நிமிசத்துல கோபம் மூக்குக்கு ஏறிருச்சு. கீர மத்தை எடுத்து தங்கச்சி மேல எறிஞ்சான். அதே வேகத்துல அவளத் திரும்பிக் கூட பாக்காம வெளில போயிட்டான்… அது அவ நெத்திப் பொட்டுல கீறிட்டு. குபுகுபுனு ரெத்தம்… அழுதுகிட்டே நின்னா!

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து ஆளுக ஓடியாந்தாங்க… அம்மா இல்லாத புள்ளைய இப்படிப் போட்டா அடிப்பான் மனுசன்னு அவளக் கூட்டிகிட்டு போனாங்க… அவளும் அண்ணன் மேல இருந்த கோவத்துல அழுதுகிட்டே போயிட்டா. கோவத்தோட போன அண்ணன் ஊரெல்லாம் சுத்திட்டு ராத்திரி போல ரெண்டு கெழங்கக் கையில புடிச்சுகிட்டு வீட்டுக்கு வந்தான்.

வெளக்குப் பொருத்தாம வீடு இருட்டிக் கெடந்துது. தங்கச்சி பேரச் சொல்லி கூப்டுகிட்டே வந்தான். அவ இல்ல… எங்க போனானு தெரியலையேனு அக்கம்பக்கத்துல விசாரிச்சான்.. அங்க போனா இங்க போனானு சொன்னாங்களே தவிர யாருக்கும் சரியாச் சொல்லத் தெரியல… அப்பதான் ஊர்கார கெழவி ஒருத்தி புள்ள இல்லாத ஒரு புருசன் பொண்டாட்டி இங்க சத்துரத்துல இருந்தாங்க… அழுதுகிட்டு நின்ன புள்ளைய நாங்க வளக்கோம்னு சொல்லி கூட்டிட்டுப் போயிட்டாங்கனு சொன்னா. அண்ணனுக்கானா அழுகை அழுகையா வருது. எந்த ஊரு… என்ன லெக்குல போனாங்கனு விசாரிக்கான். யாருக்கும் தெரியல… பித்துப் புடிச்சாப்ல அலையுதாம். பொறவு அந்த ஊர்லயே இருக்கப் புடிக்காம வெளியூரு போயிருதான்.

வெளியூர்ல போயி கெடைச்ச வேலையப் பாக்காம்… அந்தத் தொழில் புடிபடுது… வேலைய விட்டுட்டு சொந்தமா தொழில் பண்ணுதாம்… நல்ல சம்பாத்தியம் கெடைக்கி… அந்த ஊருல ஒரு பெரிய மனுசனாகிருதாம். அவன்கிட்ட பத்து பேரு வேலை பாக்க அளவுக்கு வளர்ந்துருதான். மச்சு வீடெல்லாம் கட்டி வேலைக்கு ஆளு, போக வரு வண்டி வசதினு உண்டாக்கிட்டான்…

அப்ப அவன்கிட்ட வேலை பாக்க பெரியவரு ஒருத்தரு, இப்படியே இருந்தா எப்டி மொதலாளி… ஒரு கல்யாணம் முடிக்கலாம்லானு கேக்காரு… அவனும் சரி பொண்ணப் பாருங்கனு சொல்லிருதான்… அவரும் ஆளுகளுமா கூடமாட சேந்து ஒரு பொண்ணப் பாக்காங்க. இப்பம் இவன் தகுதிக்கு நா நீனு போட்டி இருந்தாலும் நல்ல குணமுள்ளவளா பாத்து கல்யாணம் முடிக்காங்க.

கல்யாணம் முடிஞ்ச மறுநாளு அவன் பொண்டாட்டி தலைக்கு குளிச்சுட்டு தலைய காயப்போட்டுகிட்டு மச்சுல நிக்கா… இவன் கீழ உக்காந்து யாருகூடவோ பேசிகிட்டிருந்தான்… மேல நிழலு விழுததப் பாத்து நிமுந்து பாக்கான்.. பொண்டாட்டி தலைகாயப் போட்டுகிட்டு நிக்கா… தலைக்கு பின்னால சூரிய வெளிச்சம் விழ அப்படியே மினுங்குதா… அப்டியே உத்துப் பாக்கான்… மஞ்சள் பூசுன மூஞ்சியிலே கண்ணுக்கு மேலே நெத்தியிலே ஒரு தழும்பு இருந்துச்சு.

அவனுக்கு மொழுக்குனு இருந்துச்சு… மச்சுக்கு ஓடுனான்… அந்த தழும்பக் காட்டி, இது எப்டி பட்டுச்சுனு கேட்டான்.. சின்ன வயசுல கீர கடையயில எங்கண்ணன் கீர மத்தைக் கொண்டு  மண்டையில அடிச்சுட்டான்னா… அவனுக்கு கிறுகிறுனு வந்திருச்சு…’’

’’ஏச்சி.. புள்ளையள்ட சொல்லுத கதையா இது.. வேல மெனக்கெட்டு இத ஒரு கதனு சொல்லிகிட்டிருக்கியே… என்று அம்மா ஆச்சியைக் கண்டித்துவிட்டு எங்களை முதுகில் ஒரு போடு போட்டு துரத்தி விடுவாங்க.

ஆச்சி பேரப் புள்ளைகளுக்கு கதை சொல்றது ஒண்ணும் புதுசு இல்ல… பெரும்பாலும் எல்லாருமே ஒரு ஊர்ல ஒரு ராஜானுதான் கதை சொல்லியிருப்பாங்க… ஆனா, எங்க பழனி ஆச்சி ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த, அனாதையாக தங்கையுடன் வாழ்கிற, தங்கை காணாமல் போன பிறகு வாழப் பிடிக்காமல் ஊரை விட்டு ஓடிப் போகிற, ஏதோ ஒரு தொழிலில் தன்னை நுழைத்துக் கொண்டு உழைத்து முன்னேறுகிற இளைஞனின் கதையைச் சொல்லுவாள்!

அப்பாவைப் பெற்ற ஆச்சியான பழனியாச்சி என் அம்மாவுக்கும் ஆச்சிதான். எங்கம்மாவுக்கு என் அப்பா தாய்மாமா முறை. அண்ணனும் தங்கையும் தங்களின் சுயம் அறியாமல் வேறு வேறு பின்னணியில் வளர்ந்து அவர்களே திருமணம் செய்து கொண்ட கதை எனக்கு அந்த நாட்களில் புரியவில்லை. அம்மா ஏன் இந்தக் கதைக்கு இவ்வளவு கோவப்படுறாங்க என்றும் தெரியவில்லை.

ஆச்சிக்கும் புரட்சிகரமான கதையைச் சொல்லிவிட வேண்டும் என்ற நோக்கமெல்லாம் இருந்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளைகளுக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். அவளுக்குத் தெரிந்த ஒரு கதையைச் சொல்வாள்.

ஆனால் கல்யாணம் செய்து கொண்ட அந்த ஜோடி அண்ணன் தங்கை என்பது தெரிந்த பிறகு அவர்கள் என்னவானார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆச்சியிடம் எப்போது மிச்சக் கதையச் சொல்லு என்றாலும், போ அங்குட்டு… ஒங்கம்மா கிழியாக் கிழிப்பா..? என்பாள். இன்றுவரையில் அந்தக் கதையின் முடிவு என்னவென்று தெரியவில்லை.

ஆனால், ஆச்சி எங்கிருந்து இந்தக் கதைகளை எடுக்கிறாள் என்பது புரியாத விஷயம். வயல் வேலைகளுக்கு ஆட்களைக் கூட்டிச் செல்வாளே, அப்போதா… சில பல ஆச்சிகளோடு அமர்ந்து புளி திருத்துவாளே, அப்போதா… வயலில் விளைந்த காய்கறிகளைப் பெட்டியில் போட்டுக் கொண்டு தெருத்தெருவாக கூவி விற்று வருவாளே, அப்போதா… எப்போது சேகரிப்பாள் என்றே தெரியாது!

ஆச்சியின் பூர்வீகம் தென்காசிக்கு அருகில் உள்ள ஆய்க்குடி என்ற சிறிய ஊருக்கு அருகில் இருக்கும் சின்னஞ்சிறு கிராமமான கம்பிளி! தன் ஊரின் கதைகளை ஆச்சி சொல்லிக் கேட்டதே இல்லை..! சொந்தம் விட்டுப் போயிறக் கூடாதுனு ஒங்க ஆச்சிய ஒங்க தாத்தாவுக்கு கெட்டி வெச்சாங்க… இல்லன்னா  அவரு தரத்துக்கு பொண்டாட்டியா இவ… என்று ஆச்சியின் நாத்தனார்காரிகள் உதட்டைச் சுழிப்பார்கள். ஆனால், அப்பாவுக்குப் பிறகு பிறந்த ஒரு டசன் பிள்ளைகளின் வரவு சொல்லும், ஆச்சியும் தாத்தாவும் எப்படி வாழ்ந்தார்கள் என்று! (அப்பாவைத் தவிர யாருமே தங்கவில்லை என்பது தனி சோகம்)

பழனியாச்சி வெள்ளந்தியானவள்… அவளை ஆங்கிலம் பேச வைத்து ரசிப்போம் நாங்கள். ஆச்சி… போஸ்ட் ஆபீஸ் சொல்லு..? என்றால் போட்டாபீஸ் என்பாள். ஸ்டாம்ப் சொல்லு என்றால் சாம்ப் தாளு என்பாள். ஆனால், போஸ்ட் ஆபீஸ் பற்றியும் அங்கு விற்பனை ஆகும் ஸ்டாம்ப் பற்றியும் அவள்தான் விவரம் கேட்டுக் கேட்டு தெரிந்து கொள்வாள்.

தாத்தா ரயில்வேயில் வேலை பார்த்தவர். சர்வீஸில் இருக்கும்போதே இறந்துவிட, ஆச்சிக்கு பென்ஷன் கிடைக்கத் தொடங்கியது. கூடவே பணியாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்கும் என்ற அடிப்படையில் ஃபார்மஸி படித்த என் தந்தை அந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். சம்பிரதாயமான மனுவாக, என் தந்தையின் வேலையை எனக்குத் தந்தால் என் குடும்பம் பிழைக்கும் என்று கருணை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரிக்க, ரயில்வேயில் இருந்து அதிகாரி ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அம்மா… ஐயா இறந்து போனதுல உங்க குடும்பம் கஷ்டப்படுதா என்று கேட்க, அவுக இல்லேங்கறதத் தவிர வேற குறை இல்லை… கடவுள் புண்ணியத்துல வயல், வீடு, தோப்பு துறவுனு நல்லாத்தான் இருக்கோம்.. என்று சொல்லிவிட, அந்த அதிகாரி, இந்த வேலை வழங்கப்படாவிட்டாலும் இன்னாருடைய குடும்பத்துக்கு எந்த கஷ்டமும் வராது என்று அறிக்கை அனுப்பிவிட்டார். ஆச்சியின் ஒரே பதில், நா உள்ளதத் தானே சொன்னேன் என்பதுதான்!

ஆச்சி ஒருதடவை என் பேரன் பாஸ் ஆகிட்டா அவன் கையால ஒனக்கு பூக்கூடை கொண்டாறேன் என்று வேண்டிக் கொண்டாள். எஞ்சினியரிங் முடித்து இன்று பெரிய வேலையில் இருக்கும் என் சகோதரன் பரீட்சையில் பாஸ் ஆக வேண்டும் என்று என் ஆச்சி வேண்டிக்கொண்டது அவருடைய ஒண்ணாங்கிளாஸ் பரீட்சையின்போது! என் அம்மா ஆச்சியை சத்தம் போட்டு அடுத்தடுத்து அவள் மொட்டை போடுவது அதுஇதுவென்று முன்னேறிச் சென்று விடாமல் தடுத்த விட்டார்கள்.

ஒரே மகன் தான்… ஆனாலும் அவளுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி பிணக்கு வரும்… வீட்டை விட்டு வெளியேறி எதிரே இருக்கும் குச்சிலில் தனி சமையல் செய்வாள். முறைப்பாகத் திரிவாள். திடீரென்று பாத்திர பண்டங்களை அள்ளிக் கொண்டு வந்து அடுக்களையில் போட்டுவிட்டு ஒன்றாகச் சாப்பிடுவாள். அதனாலேயே அம்மா அவள் செல்லும்போதும் ஏனென்று கேட்பதில்லை… மீண்டும் வரும்போதும் ஏதும் சொல்வதில்லை.

தோள்பட்டை தொடங்கி மணிக்கட்டு வரையிலும் இரண்டு கைகளிலும் பச்சை குத்தியிருந்த ஆச்சி அந்தக் கை முழுக்க சுருக்கங்கள் படர்ந்த நேரத்தில் பாத்திர பண்டங்களோடு பேங்க் பாஸ்புக்கையும் சேர்த்து எடுத்துக் கொண்டு வந்து போட்டாள். என்னைக் கொண்டு முடியல… இந்தா… நான் இருக்கையிலேயே பணத்த எடுத்துரு… செத்துட்டம்னா அதை எடுக்க செரமப்படுவீங்க… என்றாள். சொன்னபடியே அவளால் எந்தச் சிரமமும் இருக்கவில்லை.

நிறை வாழ்வு வாழ்ந்தவள்தானே… பேரன்கள் எல்லாருமாகச் சேர்ந்து மேளதாளம் வைத்து வழியனுப்பலாமே என்றார்கள். ஒரு மரணத்தை எப்படிக் கொண்டாட முடியும்… அதோடு, தன் தங்கை என்பதை அறியாமலே திருமணம் செய்து கொண்டவன் அந்த உண்மை தெரிந்த பிறகு என்ன செய்தான் என்பதைத் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு சென்றவளின் விடைபெறுதலில் சிறு வருத்தம் இருக்கத்தானே செய்யும்!

Sunday, January 21, 2024

டிரைவர் தாத்தா வீட்டு ஆச்சி!

 எங்க ஊர்ல (கொட்டாகுளம், தென்காசி மாவட்டம்) டிரைவர் தாத்தா வீட்டு ஆச்சினு ஒருத்தி இருந்தா! (ஒருமை எல்லாமே உரிமைதான்!) அந்த வீட்டுத் தாத்தா ரயில்வேயிலே டிரைவரா இருந்ததால அந்த ஆச்சி டிரைவர் தாத்தா வீட்டு ஆச்சி! அவளுக்கு வேறு சில பெயர்களும் இருந்தன. சுளுக்கு தடவுத ஆச்சி… பார்வை பாக்குற ஆச்சி என்பது போல… கூடவே பெத்தவங்க வெச்ச பேரான பொன்னம்மா ஆச்சி என்ற பெயரும் இருந்தது!

பொதுவாக இரட்டைப் பிள்ளைகளைப் பெறும் அம்மாக்களுக்கு சுளுக்குத் தடவும் திறன் வந்துவிடுவதாக ஊர்பக்கம் ஒரு நம்பிக்கை! அந்த ஆச்சிக்கும் இரட்டைப் பிள்ளைகள் இருந்தனர். ராமலட்சுமி சித்தியும் லட்சுமண மாமாவும்! அந்த இருவரும் கடைக்குட்டிகள்… அவர்களுக்கு முன்னதாக சண்முக ஆச்சியில் (ஆமா… அம்மாவும் ஆச்சி… மகளும் ஆச்சி…) தொடங்கி அரி மாமா வரையில் மூணு நாலு பொம்பளைப் புள்ளைகள்… ரெண்டு மூணு ஆம்பளைப் புள்ளைகள்!

சிறு வயதில் மரங்களில் ஏறுவது, குளங்களில் தாவுவது, வயக்காடுகளில் ஓடுவது போன்றவற்றுக்கு நடுவே பள்ளிக்கூடமும் போய் வந்து கொண்டிருந்தேன். அதனால் அடிக்கடி எனக்கு சுளுக்குப் பிடித்துக் கொள்ளும். அம்மா பொன்னம்மா ஆச்சி வீட்டுக்குத்தான் கூட்டிப் போவார்.

இந்த இடத்தில் டிரைவர் தாத்தா பற்றிய சிறு குறிப்பு… நான் முதன்முதலில் சட்டைக் கைப் பகுதியில் தங்க பித்தான் வைத்து போட்டிருந்ததைப் பார்த்த முதல் மனிதன் அவர்தான். எனக்கு விவரம் தெரிந்த காலத்திலேயே அவர் ரிட்டயர்ட் ஆகிவிட்டார். ஆனாலும் டிரைவர் என்பதுதான் அவர் அடையாளம். முன் பற்கள் கொட்டிப் போய் நாக்கை வைத்து அந்தப் பள்ளத்தை மறைத்துக் கொண்டேதான் பேசுவார்.

கூடவே இடைவிடாமல் கையில் சிகரெட் புகைந்து கொண்டே இருக்கும். அதனாலும் இருமலுக்கு நடுவே பேசுவதால் அவருடைய பேச்சில் தெளிவு இருக்காது. ஆனால், கிண்டல் செய்கிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரியும்.

‘என்னடே… மாசத்துக்கு ஒரு தரவ எம் பொண்டாட்டி ஒன்னத் தடவிக் குடுக்கணுமோ… கூட்டுப் போய் கூட வச்சுக்கிட வேண்டியதுதான… என்பார். அந்த வயதில் எனக்குப் புரியாது. ஒங்களுக்கு வேணும்னா நீங்களும் தடவச் சொல்லுங்க… என்பேன். சுற்றி இருக்கும் எல்லாரும் சிரிப்பார்கள். அதுவும் எதற்கு என்று எனக்குப் புரியாது. என்ன சொல்லுதாவோ ஒங்க தாத்தா என்றபடி அடுக்களையில் இருந்து ஈரக் கையைச் சேலையில் துடைத்தபடி வருவாள் ஆச்சி.

அவளுக்கு முன்னே வரும் அவளுடைய சிரிப்பு. சின்ன சத்தம் எல்லாம் இல்லை… ஹா… ஹா… என்றாள் என்றால் பத்து தெரு தாண்டி இருக்கும் பஸ் ஸ்டாண்டில் எஸ்.ஏ.டி. ஹார்ன் அடித்தது போல இருக்கும். சத்தம் தெருவுக்கு கேட்கும் வகையில் இடியாகச் சிரிப்பது அவள் இயல்பு.

தாத்தா தங்கப் பித்தான் என்றால் ஆச்சி சின்ன ஜரிகைக் கரை வைத்த பட்டுப் போன்ற சேலைதான் கட்டுவாள். பெரும்பாலும் அடர் நிறத்தில் இருக்கும் சேலையாகத்தான் இருக்கும். எப்போது போனாலும் துலக்கமாக இருப்பாள்.

சிறு பிள்ளைகளுக்கு குடல் ஏறிவிட்டது என்றால் ஆச்சியிடம்தான் தூக்கிக் கொண்டு ஓடி வருவார்கள். என்னன்னே தெரியல… வயத்தால நிக்காம போவுது… என்று வரும் தாயை முதலில் பிள்ளைக்கும் தாய்க்கும் விபூதி பூசி விட்டு சமாதானப்படுத்துவார். ‘ஒண்ணுஞ் செய்யாது… முதல்ல புள்ளையத் தூக்கி நிக்க வை… என்பாள். பிள்ளையின் முன்னால் குத்துக்கால் வைத்து அமர்ந்து கொண்டு தன் முன்னங்கால்களைக் கொண்டு நிற்க வைக்கப்பட்ட பிள்ளையின் கால்களை அழுத்தி மிதித்துக் கொள்வாள்.

அடி வயிற்றில் இடமும் வலுமாக தட்டிப் பார்ப்பாள். ஏதோ ஒரு பக்கத்தில் பொத் பொத்தென்று சத்தம் வரும். அந்த இடத்தைக் குறித்துக் கொள்வாள். எண்ணையைத் தொட்டு மெதுவாக மேலே இருந்து பெருவிரலால் அழுத்தி கீழ் நோக்கி இழுப்பாள். பிள்ளை மூச்சுத் திணறும். முறுக்கிக் கொள்ள முயற்சிக்கும். ஆனால், காலை நகர்த்தவே முடியாமல் ஆச்சியில் முன்னங்கால் அழுத்தியிருக்கும்.

‘குன்னுதாம் பாரு… எங்கனயோ தலைகுப்புற விழுந்திருக்கான்… அதான், குடலு ஏறியிருக்கு…’ என்பாள். அந்தப் பிள்ளையைப் பெத்தவளுக்கு அப்போதுதான் ஞாபகம் வரும். ஆமா ஆச்சி… நேத்து சாய்ங்காலம் நா டிவி பாத்துகிட்டு இருந்தேன்… இந்தப் பய பின்னாடிகூடி சேருல ஏறுனான்… அப்டியே கொட சாஞ்சுட்டான்… தல தரையில அடிக்கதுக்குள்ள தூக்கிட்டேன்… அப்பம் புடிச்சு பாலுகூட குடிக்கல… அதான் கொடல் ஏத்தம் போலுக்கு! என்றபடி பிள்ளையைப் பிடித்துக் கொண்டு நிற்பாள்.

நல்லா கம்முகூட்டுக்குள்ள கையக் குடுத்து அத்தாசமா தூக்கிப் புடி… வில்லா வளையுதாம் பாரு… என்றபடி பொத் பொத்தென்று சத்தம் வரும் பகுதியில் இடது உள்ளங்கையை தொடுவது போல வைத்துக் கொண்டு அந்தப் புறங்கையில் வலது கையால் லேசாகக் குத்தியபடி மேலே இருந்து கீழே இறக்குவாள்.

முக்கிக் கொண்டும் முனங்கிக் கொண்டும் இருந்த பிள்ளை மெதுவாகச் சிரிக்கும். ஒரு துண்டு அச்சுவெல்லத்தை எடுத்து கையில் கொடுத்து, தூக்கிட்டுப் போ… நல்லா அழவிட்டு பாலக் குடு… வயத்தால போறது புடிச்சிரும்… என்று இன்னொரு முறை விபூதியைப் பூசி அனுப்பி விடுவாள். ஒரு பைசா ஃபீஸ் கிடையாது! அவர்களிடம் எல்லாம் எதுவும் சொல்லாத டிரைவர் தாத்தா என்னிடம் மட்டும் எசலுவார்.

ஏடே… ஒங்கப்பன்கிட்ட ரூவா வாங்கியாந்திருக்கியா… சும்மா சும்மா எம் பொண்டாட்டிட்ட வந்து சட்டையக் கழட்டிட்டு நிக்கியே… என்னடே நெனைச்சுகிட்டிருக்க…’ என்பார். எனக்கு அவர் விளையாட்டாகக் கேட்கிறாரா… சீரியஸாகக் கேட்கிறாரா என்று ரொம்ப நாளுக்குத் தெரியாமல் இருந்தது.

மார் முழுக்கச் சளி படர்ந்து இருமலுக்குக் கூட தெம்பில்லாமல் தவித்து மிகவும் சிரமப்பட்டார் தாத்தா. அந்த தங்க பித்தான் சட்டைக்கு மேலே கம்பளிச் சட்டை போட்டு காதை மறைத்து கம்பளித் துண்டு கட்டியிருந்தாலும் கூட அவரால் குளிரைச் சமாளிக்க முடியவில்லை.

உடல் ஒருபக்கம் படுத்தி எடுக்க மனதை வருத்தும் விதமாக மருமகன்கள் இருவரின் அடுத்தடுத்த மரணம் தாத்தாவை இன்னும் பலவீனமாக்கியது. சம்பிரதாயம் என்ற பெயரில் மகள்கள் அணிந்திருந்த வெள்ளைச் சேலை இருவரையும் உலுக்கி விட்டது. படுக்கையே வீடானது தாத்தாவுக்கு. அவருடைய உடல் உபாதை எல்லாரையும் வருத்தியது. ஒருநாள் எல்லோர் வருத்தமும் தீர அவர் விடைபெற்றுக் கொண்டார். தாத்தாவின் காலத்துக்குப் பிறகு ஆச்சியின் கோலம் வெள்ளையாகி விட்டது.

தொடர்ந்த வாழ்வில் மருமகப் பிள்ளைகளின் அடுத்தடுத்த மரணங்கள் நிகழ்ந்த போதே மரணம் குறித்த அவள் சிந்தனை விரிந்திருக்க வேண்டும். தாத்தாவின் மரணம் அந்தச் சிந்தனையை இன்னும் ஆழமாக்கியது. மூத்த மருமகனில் தொடங்கிய வரிசை எதிர்பாராத தருணங்களில் அடுத்தடுத்த மருமகன்களின் உயிரில் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆச்சியும் சிந்தனையின் ஆழங்களுக்குச் சென்று கொண்டே இருந்தாள். துக்கம் என்றாலும் மகிழ்ச்சி என்றாலும் சின்னதாகக் கண்கள் கசியும்… அவ்வளவுதான் என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டாள் ஆச்சி.

பிள்ளைகளின் வளர்ச்சி… பேரக் குழந்தைகளின் கல்யாணம் என்று பலதும் பார்த்து ஓய்ந்து வாழ்க்கையின் இறுதிக்கு வந்துவிட்டாள் ஆச்சி. இந்த காலகட்டத்தில் அவள் சிந்தனை சலனமில்லாத ஆழத்துக்குள் சென்றுவிட்டது. பேச்சு குறைந்து எல்லாவற்றையுமே வேறு உலகத்தில் இருந்து பார்க்கும் பார்வையுடனே அணுகத் தொடங்கினாள்.

ஆச்சிக்கு உடலும் நலிந்து விட்டது. ஒருநாள் அழைத்து, நாளைக்கு விடியக் காலைல எல்லாப் படத்துக்கும் பூப் போட்ருங்க… வெளக்கு எல்லாம் தேய்ச்சு வைச்சிருங்க… சக்கரப் பொங்கலு வெச்சிருங்க… என்றெல்லாம் சொல்லிவிட்டு, கட்டில் வேண்டாம்… படுக்கைய தரையில கிழமேலா விரிச்சுப் போடுங்க என்று சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கிறாள். எல்லோரும் விசும்பி அழ, யாரும் அழப்படாது… நா ஒண்ணும் கையிலயும் இடுப்புலயுமா நண்டு சிண்டுகள விட்டுட்டுப் போவல… எல்லாம் அனுபவிச்சுட்டுதான் போறேன்… சுத்தியிருந்து எல்லாரும் ஓம் நமச்சிவாய சொல்லுங்க… போற வழிக்கு கேட்டுகிட்டே போறேன்… என்றவள், தூங்குவது போல கண்களை மூடிக் கொண்டாள்.

சொன்னது போலவே ஊரே கூடி எல்லோரும் ஓம் நமச்சிவாய பாட, சிரித்த முகத்தோடு இந்த உலகை விட்டு விடைபெற்றுச் சென்றாள், டிரைவர் வீட்டு ஆச்சி என்று அழைக்கப்பட்ட, சுளுக்கு தடவுத ஆச்சி என்று அழைக்கப்பட்ட, தொக்கம் எடுக்க ஆச்சி என்று அழைக்கப்பட்ட, பொன்னம்மா ஆச்சி!