Tuesday, March 29, 2011

நானும் விகடனும்! 03

விகடனின் பலம் வாசகர் கடிதங்கள்! அதில் இருந்து கிடைக்கும் ஐடியாக்கள் எப்போதுமே தனித்துவம் மிக்கதாக இருக்கும். அப்படி ஒரு கடிதம்தான் இந்த கட்டுரையின் ஆதாரம். ‘சென்னை .............. (அரசு அலுவலகத்தைக் குறிப்பிட்டிருந்தார்) கேஷியராகப் பணிபுரியும் என் கணவரை கடந்த ஒருவாரமாகக் காணவில்லை. கடந்த வாரம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அலுவலகத்தில் கேட்டால் பணத்தைக் கையாடி விட்டு ஓடிவிட்டதாகச் சொல்கிறார்கள். அவர் அப்படிப்பட்ட நபரில்லை. எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று ஒரு பெண் எழுதிய கடிதம் எனக்கு அசைன்மெண்டாகத் தரப்பட்டது.

நானும் அந்தப் பெண்மணியைப் பார்த்து விசாரித்து அந்த அலுவலகத்தில் விசாரித்து ஜூனியர் விகடனில் கட்டுரை ஆக்கினேன். ஆனால், அந்த நபர் திரும்ப வரவில்லை. தலைமைச் செயலகம்வரை சென்று பார்த்து அந்த ஊழியரைப் பற்றி விசாரித்தேன். மீண்டும் ஒரு ஃபாலோ அப் செய்தியைக் கொடுத்தேன். மூன்றாவது முறையாக அந்தப் பெண்மணி அலுவலகத்துக்கு வந்தார். எனக்கு அவரை நேரில் சந்திக்கவே சங்கடமாக இருந்தது. என்ன பதில் சொல்வது அந்த அபலைப் பெண்ணுக்கு..? என்ற கேள்வி என்னைக் குடைய சிறு தயக்கத்தோடு ரிசப்ஷனுக்குச் சென்றேன். தன் மகளுடன் வந்திந்தார் அந்தப் பெண்மணி.

‘உங்க கணவர் பற்றிய எந்த புது தகவலும் என்னிடம் இல்லை என்று தாழ்ந்த குரலில் தொடங்கினேன். ‘இல்லை சார்... நான் அதுக்கு வரலை. அவர் இருந்தபோதும் குடும்பத்துக்காக பெரிசா எதுவும் கொட்டிக் கொடுக்கலை. இப்போ அவர் இல்லை. அதனாலும் எனக்கு நஷ்டமில்லை. என் குடும்பத்துக்கு தலைவராக இருந்த மனிதர் இப்போ காணாமல் போயிட்டார். இதுவரை எந்தத் தகவலும் சொல்லாத அந்த ஆளைப் பற்றி பேசறதுக்காக நான் வரலை. ஆனா, என் பொண்ணு நிலைமையைப் பாருங்க...’ என்று அருகில் இருந்த பெண்ணிடம் கையை நீட்ட, அந்தப் பெண் பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொடுத்தார்.

அது +2 தேர்வு மதிப்பெண் பட்டியல்... 90%-க்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்திருந்தார் அந்தப் பெண். ‘மேலே என்ன படிக்கப் போறேம்மா..?’ என்றேன்.

‘அதுக்குத்தான் வந்திருக்கேன், உங்க உதவியைத் தேடி! அவளுக்கு என்ஜினியரிங் படிக்கணும்னு ஆசை. மெரிட்ல இடம் கிடைக்கும். என்னால், அவளுக்கு சாப்பாடு போட்டு காலேஜுக்கு அனுப்பவும் முடியும். ஆனால், கட்டணம்... ஆயிரக்கணக்கில் செலவாகுமே... இதுல அடுத்த பொண்ணு வேற +1 படிக்கிறா...’ என்றார் அந்தப் பெண்மணி. கையில் மதிப்பெண் பட்டியலுடம் நின்றிருந்த அந்தப் பெண்மணியைப் பார்த்தபோது எனக்கு ஒருகணம் ஒன்றுமே தோன்றவில்லை. சட்டென்று அதைக் கையில் வாங்கிக் கொண்டு படியேறி ஜே.எம்.டி (இப்போதைய எம்.டி. ஸ்ரீனிவாசன் சார்) அறைக் கதவைத் தட்டினேன்.

உள்ளே நுழைந்து மொத்த விஷயத்தையும் சுருக்கமாகச் சொன்னேன். எவ்ளோ கட்டணம் ஆகும் நாலு வருஷத்துக்கும் சேர்த்து? என்றார். சுமார் 40,000 ரூபாய் ஆகும்னு சொல்றாங்க என்றேன். கொடுத்திடலாம். நாலு வருஷத்துக்கும் சேர்த்து! கட்டண விவரத்தையும் காலேஜுக்கு செக் கொடுக்க வேண்டிய பெயரையும் சொல்லச் சொல்லுங்கள் என்றார். எனக்கு அந்த கணத்தில் என் பிள்ளைக்கு என்ஜினியரிங் கிடைத்தது போல சந்தோஷம் பிறந்தது. அதன்பிறகு நான் விலகிக் கொள்ள விகடன் பி.ஆர்.ஓ (ரேவதி மேடம்... இப்போது அவள் அணியில் இருக்கிறார்) அவர்களிடம் விவரங்களை வாங்கி வேண்டிய உதவிகளைச் செய்தார்.

அடுத்த ஆண்டு திடுமென்று என்னை அழைத்த ஜே.எம்.டி. அந்த குடும்ப தலைவர் மிஸ் ஆன கேஸ் என்னாச்சு என்று விசாரித்தார். ஆள் கிடைக்கவில்லை. ஹேபியஸ் கார்பஸ் போட்டிருக்கிறார்கள். போலீஸ் தேடுகிறது என்று சொன்னதும் அந்த பெண் என்ன படிக்கிறார் என்றார். நான் விசாரித்த மறுநாள் செமஸ்டர் மதிப்பெண் பட்டியலோடு அந்த அம்மா அலுவலகத்துக்கு வந்துவிட்டார். ஜே.எம்.டியிடம் கொடுத்தேன். அடுத்த மகள் பற்றி விசாரித்தார். அவருக்கும் என் ஜினியரிங்தான் விருப்பம் என்றால் பணம் செலுத்த நான் தயார் என்றார். அப்படியே செய்யவும் செய்தார்.

நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. நானும் அந்தக் குடும்பத்தை மறந்துவிட்டேன். திடுமென்று ஒருநாள் அந்தப் பெண்மணி தன் மகளுடன் வந்திருந்தார். கையில் பெரிய தாம்பாளம்... அதில் பழங்கள்... இனிப்புகள்! அதைவிட இருவர் முகத்திலும் சந்தோஷம்! ஜே.எம்.டி-யிடம் அழைத்துச் சென்றேன். கீழே விழுந்த வணங்கிய அந்தப் பெண் படிப்பை முடித்துவிட்டதாகவும் கேம்பஸ் தேர்வில் .......... கம்பெனியில் வேலை கிடைத்திருப்பதாகவும் சொன்னாள் அந்தப் பெண். ‘முதல் மாத சம்பளத்தில் நீங்கள் கொடுத்த 40,000 ரூபாயைக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்று பணக் கட்டை எடுத்து தாம்பாளத்தில் வைத்து ஜே.எம்.டி-யிடம் நீட்டினாள் அந்தப் பெண். அந்தத் தட்டில் இருந்து ஒரு இனிப்பை எடுத்துக் கொண்ட ஜே.எம்.டி. எல்லோரையும் உட்காரச் சொல்லிவிட்டு, ‘நான் உங்களுக்குக் கடன் கொடுக்கவில்லை. இந்தப் பணத்தைத் திரும்ப வாங்கிக் கொள்வதற்கு! இது உங்களுக்கு நான் செய்திருக்கும் உதவி. நீங்கள் வேறொரு நபருக்குச் செய்யுங்கள். ஒன்றாக இருக்கும் உதவி பத்தாகப் பெருக வேண்டும் என்றார். அந்தப் பெண் தன் செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.

இப்போது தன் கணவருடன் அமெரிக்காவில் இருக்கிற அந்தப் பெண் நிச்சயம் அதை பத்தாகப் பெருகச் செய்திருப்பாள். கூடவே, அடுத்த ஆண்டு படிப்பு முடித்து கேம்பஸில் தேர்வான அவளுடைய தங்கையும் தன் பங்குக்கு பத்தாக்கி இருப்பாள். நான் பதினொன்றாக்கிக் கொண்டிருக்கிறேன்!

Thursday, March 3, 2011

நானும் விகடனும்! 02

விகடன் எனக்கு என்ன கொடுத்தது என்ற யோசனையில் இருந்தபோது சட்டென்று நினைவுக்கு வந்த விஷயம் இது. அது என்ன என்பதற்கு முன்னால் மறுபடியும் விகடன் எடிட்டோரியல் மீட்டிங்..!

புதிய பகுதிகளாக என்னவெல்லாம் கொண்டுவரலாம் என்பது பற்றிய ஒரு விவாதத்தில் எம்.டி. ஒரு ஐடியாவை முன் வைத்தார். அவர் அதிகமாக கடவுள் பற்றி சிலாகித்துப் பேசமாட்டார். ஆனால், அவர் சொன்ன ஐடியாவின் தலைப்பு ஒரு தெய்வம் நேரில் வந்தது. அந்த ஐடியாவுக்கான பின்னணி கதையையும் சொன்னார்.

எம்.டி. பறவைகளை நேசித்து பராமரிக்கும் படப்பை பண்ணையில் விளிம்பு வரை ததும்பும் கிணறு ஒன்று இருக்கிறது. அந்த கிணறைத் தோண்டும் முயற்சியில் பல்வேறு இடங்களில் நீரோட்டம் பார்த்திருக்கிறார்கள். சில இடங்களில் கொஞ்சம் தோண்டவும் செய்திருக்கிறார்கள். எங்கேயுமே தண்ணீர் கிடைக்கவில்லை. எல்லோருமே களைத்துப் போய் அடுத்து என்ன செய்யலாம்... கிணறு தோண்டும் முயற்சியைக் கைவிட்டுவிடலாமா என்ற யோசனையில் இருந்தபோது அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு நபர் அங்கு வந்து கிணறு தோண்டப் போறீங்களா... இந்த இடத்தில் தோண்டிப் பாருங்க என்று ஒரு இடத்தைக் கைகாட்டியிருக்கிறார். அவநம்பிக்கையோடு தோண்ட ஆரம்பித்த தொழிலாளிகள் உற்சாகமாகிவிட்டார்கள். சில அடிகளிலேயே நீர் கசிவைப் பார்த்துவிட்ட அவர்கள், பரபரப்பாகத் தோண்டுவதைத் தொடர, எம்.டி. இடத்தைக் கைகாட்டிய ஆளைத் தேடியிருக்கிறார்.

‘கையில் கம்பு வைத்திருந்ததால் அவரை மாடு மேய்ப்பவர் என்று நினைத்துக் கொண்டோம். உண்மையில் அங்கே எந்த மாடுமே இல்லை. சரி, பக்கத்து ஊர்காரராக இருப்பார் என்ற நினைப்பில் ஆட்களை அனுப்பி பக்கத்து ஊர்களில் எல்லாம் தேடிவிட்டோம். அப்படி ஒரு ஆளே இல்லை. அப்படியானால் வந்தவர் யார்? எப்படி அவரால் இன்றளவும் வற்றாமல் இருக்கும் கிணறைத் தோண்ட இடத்தைக் காட்ட முடிந்தது... கிட்டத்தட்ட முயற்சியைக் கைவிட்ட நேரத்தில் வந்து வழிகாட்டிய அவரைத் தெய்வம் என்று கொள்ளலாமா? அதுபோல பலரும் ஒரு மனிதனை தெய்வமாக உணர்ந்திருப்பார்களே... அந்த அனுபவங்களை எழுதலாமா?’ என்றார். எல்லோரும் ஒப்புக் கொள்ள ஒரு தெய்வம் நேரில் வந்தது..? என்ற தலைப்பில் வாரம் ஒரு பிரபலம் எழுதினார்கள்.

அந்தப் பகுதிக்காக பாடகி வாணி ஜெயராமைப் பேட்டி காணச் சென்றிருந்தேன். போனிலேயே கருத்தைச் சொல்லியிருந்ததால் சம்பவத்தை நினைவுபடுத்தி கோர்வையாக்கி வைத்திருந்தார்.

‘இமயமலைச் சாரலில் நடந்த இசை நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தபோது பாதை பழுதாகிவிட்டது. கார் அதற்கு மேல் செல்லாது என்ற நிலை. நிகழ்ச்சிக்கு அரைமணிநேரம்தான் இருக்கிறது. எப்படிச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த நேபாளி இளைஞர் ஒருவர், என் கையைப் பிடிச்சுகிட்டு வாங்க என்று என்னை மலைப்பாதையில் அழைத்துக் கொண்டு போய் சரியான நேரத்தில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குக் கொண்டுபோய் உட்கார வைத்தார். எல்லோரும் தயங்கிக் கொண்டிருந்தபோது அவர் மட்டும் எப்படி முன் வந்தார். நான் எப்படி முகம் தெரியாத அந்த இளைஞரை நம்பிச் சென்றேன் என்பது இதுவரை விடை தெரியாத கேள்விகள்... என்னைப் பொறுத்த அளவில் தெய்வம் நேரில் வந்து என்னை அழைத்துச் சென்றதாகத்தான் நினைக்கிறேன்’ என்று வாணி ஜெயராம் சொல்லிமுடித்தார்.

நிருபராக எனக்கு வேண்டியது கிடைத்துவிட்டது. ஆனால், விகடன் எனக்குக் கொடுத்ததாக நினைக்கும் விஷயம் அடுத்து நடந்ததுதான்!

பேட்டிக்குப் பிறகு பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் பாடிய மேகமே... மேகமே..! என் ஆல்டைம் ஃபேவரிட் என்றேன். சிறு தயக்கம்கூட இல்லாமல் இந்த ஒற்றை ரசிகனுக்காக அந்தப் பாடலை முழுமையாகப் பாடிக் காட்டினார். எந்த ரசிகனுக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு..?!

தெய்வம் நேரில் வந்தது, விகடன் ரூபத்தில்!