Tuesday, March 29, 2011

நானும் விகடனும்! 03

விகடனின் பலம் வாசகர் கடிதங்கள்! அதில் இருந்து கிடைக்கும் ஐடியாக்கள் எப்போதுமே தனித்துவம் மிக்கதாக இருக்கும். அப்படி ஒரு கடிதம்தான் இந்த கட்டுரையின் ஆதாரம். ‘சென்னை .............. (அரசு அலுவலகத்தைக் குறிப்பிட்டிருந்தார்) கேஷியராகப் பணிபுரியும் என் கணவரை கடந்த ஒருவாரமாகக் காணவில்லை. கடந்த வாரம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அலுவலகத்தில் கேட்டால் பணத்தைக் கையாடி விட்டு ஓடிவிட்டதாகச் சொல்கிறார்கள். அவர் அப்படிப்பட்ட நபரில்லை. எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று ஒரு பெண் எழுதிய கடிதம் எனக்கு அசைன்மெண்டாகத் தரப்பட்டது.

நானும் அந்தப் பெண்மணியைப் பார்த்து விசாரித்து அந்த அலுவலகத்தில் விசாரித்து ஜூனியர் விகடனில் கட்டுரை ஆக்கினேன். ஆனால், அந்த நபர் திரும்ப வரவில்லை. தலைமைச் செயலகம்வரை சென்று பார்த்து அந்த ஊழியரைப் பற்றி விசாரித்தேன். மீண்டும் ஒரு ஃபாலோ அப் செய்தியைக் கொடுத்தேன். மூன்றாவது முறையாக அந்தப் பெண்மணி அலுவலகத்துக்கு வந்தார். எனக்கு அவரை நேரில் சந்திக்கவே சங்கடமாக இருந்தது. என்ன பதில் சொல்வது அந்த அபலைப் பெண்ணுக்கு..? என்ற கேள்வி என்னைக் குடைய சிறு தயக்கத்தோடு ரிசப்ஷனுக்குச் சென்றேன். தன் மகளுடன் வந்திந்தார் அந்தப் பெண்மணி.

‘உங்க கணவர் பற்றிய எந்த புது தகவலும் என்னிடம் இல்லை என்று தாழ்ந்த குரலில் தொடங்கினேன். ‘இல்லை சார்... நான் அதுக்கு வரலை. அவர் இருந்தபோதும் குடும்பத்துக்காக பெரிசா எதுவும் கொட்டிக் கொடுக்கலை. இப்போ அவர் இல்லை. அதனாலும் எனக்கு நஷ்டமில்லை. என் குடும்பத்துக்கு தலைவராக இருந்த மனிதர் இப்போ காணாமல் போயிட்டார். இதுவரை எந்தத் தகவலும் சொல்லாத அந்த ஆளைப் பற்றி பேசறதுக்காக நான் வரலை. ஆனா, என் பொண்ணு நிலைமையைப் பாருங்க...’ என்று அருகில் இருந்த பெண்ணிடம் கையை நீட்ட, அந்தப் பெண் பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொடுத்தார்.

அது +2 தேர்வு மதிப்பெண் பட்டியல்... 90%-க்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்திருந்தார் அந்தப் பெண். ‘மேலே என்ன படிக்கப் போறேம்மா..?’ என்றேன்.

‘அதுக்குத்தான் வந்திருக்கேன், உங்க உதவியைத் தேடி! அவளுக்கு என்ஜினியரிங் படிக்கணும்னு ஆசை. மெரிட்ல இடம் கிடைக்கும். என்னால், அவளுக்கு சாப்பாடு போட்டு காலேஜுக்கு அனுப்பவும் முடியும். ஆனால், கட்டணம்... ஆயிரக்கணக்கில் செலவாகுமே... இதுல அடுத்த பொண்ணு வேற +1 படிக்கிறா...’ என்றார் அந்தப் பெண்மணி. கையில் மதிப்பெண் பட்டியலுடம் நின்றிருந்த அந்தப் பெண்மணியைப் பார்த்தபோது எனக்கு ஒருகணம் ஒன்றுமே தோன்றவில்லை. சட்டென்று அதைக் கையில் வாங்கிக் கொண்டு படியேறி ஜே.எம்.டி (இப்போதைய எம்.டி. ஸ்ரீனிவாசன் சார்) அறைக் கதவைத் தட்டினேன்.

உள்ளே நுழைந்து மொத்த விஷயத்தையும் சுருக்கமாகச் சொன்னேன். எவ்ளோ கட்டணம் ஆகும் நாலு வருஷத்துக்கும் சேர்த்து? என்றார். சுமார் 40,000 ரூபாய் ஆகும்னு சொல்றாங்க என்றேன். கொடுத்திடலாம். நாலு வருஷத்துக்கும் சேர்த்து! கட்டண விவரத்தையும் காலேஜுக்கு செக் கொடுக்க வேண்டிய பெயரையும் சொல்லச் சொல்லுங்கள் என்றார். எனக்கு அந்த கணத்தில் என் பிள்ளைக்கு என்ஜினியரிங் கிடைத்தது போல சந்தோஷம் பிறந்தது. அதன்பிறகு நான் விலகிக் கொள்ள விகடன் பி.ஆர்.ஓ (ரேவதி மேடம்... இப்போது அவள் அணியில் இருக்கிறார்) அவர்களிடம் விவரங்களை வாங்கி வேண்டிய உதவிகளைச் செய்தார்.

அடுத்த ஆண்டு திடுமென்று என்னை அழைத்த ஜே.எம்.டி. அந்த குடும்ப தலைவர் மிஸ் ஆன கேஸ் என்னாச்சு என்று விசாரித்தார். ஆள் கிடைக்கவில்லை. ஹேபியஸ் கார்பஸ் போட்டிருக்கிறார்கள். போலீஸ் தேடுகிறது என்று சொன்னதும் அந்த பெண் என்ன படிக்கிறார் என்றார். நான் விசாரித்த மறுநாள் செமஸ்டர் மதிப்பெண் பட்டியலோடு அந்த அம்மா அலுவலகத்துக்கு வந்துவிட்டார். ஜே.எம்.டியிடம் கொடுத்தேன். அடுத்த மகள் பற்றி விசாரித்தார். அவருக்கும் என் ஜினியரிங்தான் விருப்பம் என்றால் பணம் செலுத்த நான் தயார் என்றார். அப்படியே செய்யவும் செய்தார்.

நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. நானும் அந்தக் குடும்பத்தை மறந்துவிட்டேன். திடுமென்று ஒருநாள் அந்தப் பெண்மணி தன் மகளுடன் வந்திருந்தார். கையில் பெரிய தாம்பாளம்... அதில் பழங்கள்... இனிப்புகள்! அதைவிட இருவர் முகத்திலும் சந்தோஷம்! ஜே.எம்.டி-யிடம் அழைத்துச் சென்றேன். கீழே விழுந்த வணங்கிய அந்தப் பெண் படிப்பை முடித்துவிட்டதாகவும் கேம்பஸ் தேர்வில் .......... கம்பெனியில் வேலை கிடைத்திருப்பதாகவும் சொன்னாள் அந்தப் பெண். ‘முதல் மாத சம்பளத்தில் நீங்கள் கொடுத்த 40,000 ரூபாயைக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்று பணக் கட்டை எடுத்து தாம்பாளத்தில் வைத்து ஜே.எம்.டி-யிடம் நீட்டினாள் அந்தப் பெண். அந்தத் தட்டில் இருந்து ஒரு இனிப்பை எடுத்துக் கொண்ட ஜே.எம்.டி. எல்லோரையும் உட்காரச் சொல்லிவிட்டு, ‘நான் உங்களுக்குக் கடன் கொடுக்கவில்லை. இந்தப் பணத்தைத் திரும்ப வாங்கிக் கொள்வதற்கு! இது உங்களுக்கு நான் செய்திருக்கும் உதவி. நீங்கள் வேறொரு நபருக்குச் செய்யுங்கள். ஒன்றாக இருக்கும் உதவி பத்தாகப் பெருக வேண்டும் என்றார். அந்தப் பெண் தன் செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.

இப்போது தன் கணவருடன் அமெரிக்காவில் இருக்கிற அந்தப் பெண் நிச்சயம் அதை பத்தாகப் பெருகச் செய்திருப்பாள். கூடவே, அடுத்த ஆண்டு படிப்பு முடித்து கேம்பஸில் தேர்வான அவளுடைய தங்கையும் தன் பங்குக்கு பத்தாக்கி இருப்பாள். நான் பதினொன்றாக்கிக் கொண்டிருக்கிறேன்!

8 comments:

சேலம் தேவா said...

Super Sir..!! :)

Rathnavel Natarajan said...

நல்ல நிகழ்வு. நிஜமாகவே நம்ப முடியவில்லை. உங்கள் நிறுவனம் நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்.
கல்விக்கு படும் சிரமம் எனக்கு நன்கு தெரியும்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

Chitra said...

இது உங்களுக்கு நான் செய்திருக்கும் உதவி. நீங்கள் வேறொரு நபருக்குச் செய்யுங்கள். ஒன்றாக இருக்கும் உதவி பத்தாகப் பெருக வேண்டும் என்றார். அந்தப் பெண் தன் செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.


.... Very nice. Very good message.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நீங்கள் வேறொரு நபருக்குச் செய்யுங்கள். ஒன்றாக இருக்கும் உதவி பத்தாகப் பெருக வேண்டும் என்றார். //
இதைத்தான் செய்ய வேண்டும் என பதிவை பகுதி படித்துக் கொண்டிருக்கும் போது நினைத்தேன். அதையே செய்து விட்டார். அள்ளித் தருவதில் விகடனுக்கு நிகர் விகடன். நான் பள்ளி நாட்களில் இருந்தே விகடன் வாசகி. இடையில் எனது எழுத்துக்கள் கூட விகடனில் வந்து இருக்கின்றன. வேலைப் பளுவில் விட்டுப் போய் விட்டது. என் தாயைப் பற்றி பெருமையாய் பேசுவதைப் போல் இருக்கின்றது.

சி. முருகேஷ் பாபு said...

நன்றி சேலம் தேவா, ரத்னவேல், சித்ரா மற்றும் நாய்க்குட்டி மனசு!

கிருபாநந்தினி said...

நல்லதொரு பகிர்வு! திரு.ஸ்ரீனிவாசன் சாரோட தாத்தா எஸ்.எஸ்.வாசனுக்கு இப்படியான தயாள குணம் இருந்ததா கேள்விப்பட்டிருக்கேன். பையன் பாலசுப்ரமணியன் சாருக்கும் உதவும் மனப்பான்மை மிக அதிகம்னு தெரியும். அவங்க வழியில ஸ்ரீனிவாசனும் நடைபோடுறதைக் கேக்க மகிழ்ச்சியா இருக்குது.

karuppi said...

Nice one! vikatanin balam eppodhu
mae manidhaneyamdhan!

vijaysankar said...

அருமை சார்வாள்.