Friday, October 28, 2011

7 ஆம் அறிவுக்கு என்னுடைய ஒன் லைன்!

காட்சி 1: சர்க்கஸ் கூடாரத்தில் படம் தொடங்குகிறது. ஓர் அழகான இண்ட்ரோ பாடல்! சூர்யாவின் சாகசங்களை முதல் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி. ஸ்ருதியின் கண்களில் காதல் ஜொலிக்கிறது.

காட்சி 2: சூர்யா தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்படி பார்த்தா அது காதல்தான் என்று நண்பர்கள் சொல்ல, குழப்பத்தோடு இருக்கிறார் சூர்யா.

காட்சி 3: சீனாவில் ஒரு கான்பரன்ஸ் ஹாலில் மீட்டிங் நடக்கிறது. டோங்லி வருகிறார். காவலாளியை வசியம் செய்கிறார். கான்பரன்ஸ் கூட்டத்தில் இருப்பவர்கள் டோங்லியை நம்புகிறார்கள். டோங்லி என்ன அசைன்மெண்ட் என்று கேட்க, ஸ்ருதியைக் கொல்ல வேண்டும் என்கிறார் அந்த தலைவர்.

காட்சி 4: ஸ்ருதியை அவருடைய தோழி பரபரப்பாக வண்டியில் கொண்டு வந்து இறக்கிவிட, பஸ் ஸ்டாப்பில் யாருக்காகவோ காத்திருக்கிறார். கொஞ்சநேரத்தில் சூர்யா யானையில் வருகிறார். ஸ்ருதியை ஏற்றிக் கொள்கிறார். இருவரும் பேசிக் கொண்டே செல்கிறார்கள். ஸ்ருதியின் கூந்தல், உடை, உடல் எல்லாம் சூர்யா மீது பட, சிலிர்ப்போடு இருக்கிறார் சூர்யா.

காட்சி 5: டோங்லி விமானத்தில் வந்து இறங்குகிறான். யாருக்கோ போன் செய்கிறான். டாக்ஸி டிரைவரிடம் போனைக் கொடுத்து விலாசம் கேட்டுவிட்டு ஏறிக் கொள்கிறான்.

காட்சி 6: ஸ்ருதியும் அவளுடைய தோழியும் ஆராய்ச்சிகூடத்தில் இருக்கிறார்கள். டி.என்.ஏ பற்றிய ஆராய்ச்சிக்கான பின்னணி தகவலை இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.

காட்சி 7: சர்க்கஸ் கூடாரத்தில் பார் கம்பி மீது ஸ்ருதி ஏறிப் பார்க்க ஆசைப்பட, சூர்யா அவளை மேலே ஏற்றிவிடுகிறார். பேலன்ஸ் பண்ணி நிற்க முற்படும் ஸ்ருதி தற்செயல் போல சூர்யா மீது விழ, அப்படியே தாங்கிக் கொள்கிறார். ஆனாலும் இருவரும் சரிந்து கீழே விழ, சூர்யாவுக்கு அடிபடுகிறது.

காட்சி 8: ஆஸ்பத்திரியில் கையில் கட்டோடு சூர்யா தன் நண்பர்களுடன் இருக்கிறான். காதலை எப்படிச் சொல்வது என்ற ரிகர்சல் நடக்கிறது. ஆளாளுக்கு விதவிதமாக ஐடியா கொடுக்க, சூர்யா கடைசியாக அவளுக்குப் பிடித்த மாதிரி பொம்மை செய்து அதில் லவ் யூ என்று எழுதிக் கொள்கிறார்.

காட்சி 9: ஸ்ருதி தன் தோழிகளோடு தீம் பார்க்கில் இருக்க, சூர்யா அங்கு வருகிறார். ஸ்ருதி பின்னாலேயே அலைகிறார். ஸ்ருதி திட்டிவிட, பரிசுப் பொருளைக் கொடுக்காமல் விட்டுவிடுகிறார். அதன்பிறகு ஸ்ருதியின் போனை சூர்யா அடித்து விடுகிறார் (அது ஸ்ருதிக்கும் தெரியும் என்றாலும் காட்டிக் கொள்ளவில்லை).

காட்சி 10: சர்க்கஸ் கூடாரத்தில் அந்த போனை வைத்துக் கொண்டு நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார் சூர்யா. அப்போது போன் அடிக்கிறது. ஸ்ருதி போன் பற்றி விசாரிக்கிறார். சூர்யா கொண்டுவந்து தருவதாகச் சொல்கிறார். அப்படியே ஒரு ட்ரீம் பாடல்!

காட்சி 11: டோங்லி ஒரு நாயைப் பிடித்து ஊசி போடுகிறான். அப்போது போலீஸ் வர அடித்துப் போட்டுவிட்டு தப்பிக்கிறான்.

காட்சி 12. சூர்யா சொன்ன இடத்துக்கு ஸ்ருதி வருகிறார். பொம்மை ஒரு பீஸ் கொடுக்கிறது. பொக்கே கடையில் ஒரு பீஸ் கொடுக்கிறார்கள். மூன்றாவது பீஸுடன் சூர்யா கே.எஃப்.சியில் உட்கார்ந்திருக்கிறார். இருவரும் பேச ஆரம்பிக்கும்போது போன் வர, ஸ்ருதி பதற்றமாக புறப்பட்டுச் செல்கிறார்.

காட்சி 13: ஸ்ருதியின் தோழி அழைப்பை அடுத்து ஸ்ருதியின் ஆராய்ச்சிகூடத்தில் அவரும் தோழியும் இருக்கிறார்கள். தோழி காட்டிய விஷயத்தை ஸ்ருதி நெட்டில் பார்த்துவிட்டு பரபரப்பாகிறாள். அந்த விஷயம், சீனாவில் நடக்கும் நோய்க்கிருமி பற்றிய ஓர் ஆராய்ச்சி குறித்தது. இருவரும் அதிர்ச்சியாக பார்த்துக் கொள்கிறார்கள். அந்த இடத்தில் அந்த கிருமி பற்றிய விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஸ்ருதி அந்த கிருமி தாக்கியதும் உடலில் கொப்புளம் ஏற்பட்டு புண்ணாகும் என்று சொல்கிறாள். டோங்லி மருந்து செலுத்திய நாய் அதேபோல பாதிக்கப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறது.

காட்சி 14: சர்ப்ரைஸாக ஸ்ருதியைப் பார்த்து காதலைச் சொல்வதற்காக வீட்டுக்கு வரும் சூர்யா சர்க்கஸ்தனங்கள் செய்து பூட்டிய வீட்டுக்குள் நுழைகிறார். அங்கே சூர்யாவின் படங்களை வைத்து விதவிதமான அறிவியல் மருத்துவ படங்கள் வரையப்பட்டிருக்கின்றன. சூர்யா அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டே வர, ஓர் இடத்தில் கம்பீரமான மீசையோடு அரசர் வேடத்தில் சூர்யாவின் படம் வரையப்பட்டிருக்கிறது. சூர்யா அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கும்போது ஸ்ருதி கதவைத் திறந்து உள்ளே வருகிறார். சூர்யாவைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

காட்சி 15: ஸ்ருதி சூர்யாவுக்கு டி.என்.ஏ. ஆராய்ச்சி பற்றி விளக்குகிறார். சூர்யா பிரமை பிடித்தவர் போல அரசர் டைப் படத்தை பார்த்துக் கொண்டேயிருக்க, ஸ்ருதி அது உன் படம் அல்ல... பல்லவ இளவரசன் போதி தர்மனின் படம்... அவன் வழித் தோன்றல்தான் நீ... என்று சொல்ல. சூர்யாவுக்கு அதிர்ச்சி!

காட்சி 16: போதி தர்மன் ஃப்ளாஷ்பேக்!

காட்சி 17: காஞ்சிபுரத்தில் டி.என்.ஏ. கலெக்‌ஷனுக்காக வந்திருந்தப்போ உன்னைப் பற்றி தெரிஞ்சுது. என்னுடைய ஆராய்ச்சிக்காக உன்னுடைய டி.என்.ஏவை எடுத்து டெஸ்ட் பண்ணனும்னு நினைச்சேன்... அதுக்காகத்தான் உன்னை ஃபாலோ பண்ணினேன். சும்மா ஆராய்ச்சிக்குதான் அப்போ வந்தேன்... ஆனா, இப்போ உன் தேவை நிஜமாகவே அவசியமாகி இருக்கு... என்று சொல்லும் ஸ்ருதி சூர்யாவின் கையில் இருக்கும் காதல் பொம்மையைப் பார்த்து குழப்பமாகிறாள். எனக்கு உன்மேல் காதல் இல்லை என்கிறாள்.

உன் ஆராய்ச்சிக்காக என் காதலை ஊறுகாய் ஆக்கிட்டியே... என்று கத்தும் சூர்யா காதல் பரிசை அங்கேயே வீசிவிட்டு கண்ணீரோடு வெளியேறுகிறார்.

யம்மா யம்மா பாடல்!

காட்சி 18: டோங்லி ஸ்ருதியின் வீட்டைக் கண்டுபிடித்து கள்ளச் சாவி போட்டு உள்ளே நுழைந்து ஸ்ருதியைத் தேடுகிறான். அப்போது அவளுடைய ஆராய்ச்சி பற்றித் தெரிந்து கொள்கிறான். உடனே போன் செய்து சீனாவில் யாருக்கோ பேசுகிறான். சீனாவில் இருப்பவன், ‘நோ... போதி தர்மன் மறுபடியும் வரக் கூடாது... அவனையும் சேர்த்து கொன்னுடு...’ என்று கட்டளை போடுகிறான்.

காட்சி 19: ஊரெங்கும் ஆங்காங்கே மக்கள் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அவதிப்பட, மர்மக் காய்ச்சல் பரவியது என்ற செய்தி பரபரப்பாகிறது. ஸ்ருதி அதிர்ச்சியோடு அந்தச் செய்தியையும் தான் நெட்டில் பார்த்த விஷயத்தையும் முடிச்சுப் போட்டுப் பார்த்து தன் தோழிக்கு போன் செய்து பகிர்ந்து கொள்கிறாள். தோழி இதற்கு என்ன வழி என்று கேட்க, ஒரே வழி போதி தர்மன் தான் என்று சொல்கிறாள்.

காட்சி 20: சர்க்கஸ் கூடாரம் கலைக்கப்பட்டு வேறு ஊருக்குச் செல்ல ஏற்பாடுகள் நடக்கின்றன. சூர்யா சோகமாக பெட்டியைக் கட்டிக் கொண்டு புறப்படுகிறார். அவருடைய நண்பர்கள் அவரை வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு திரும்புகிறார்கள். ஸ்ருதி தன் ஸ்கூட்டரில் வந்து இறங்குகிறாள். சர்க்கஸ் வளாகத்தில் தேடிவிட்டு நண்பர்களிடம் விசாரிக்கிறாள். சூர்யா புறப்பட்டுச் சென்றுவிட்டதைச் சொல்கிறார்கள். கவலையோடு ஸ்ருதி வாசலுக்கு வர, அவளுடைய ஸ்கூட்டரில் அலட்சியமாக அமர்ந்திருக்கிறான் டோங்லி!

இடைவேளை!

Tuesday, April 5, 2011

நானும் விகடனும்

இந்தமுறை மட்டும் நானும் விகடனும் அல்லது நானும் கிரிக்கெட்டும் அல்லது நானும் சச்சினும் என்று எந்தத் தலைப்பை வைக்கலாம் என்று குழம்பிப் போய்விட்டேன். ரேடியோவை வைத்துக் கொண்டு கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பாரும் (இன்று அவரோடு நெருங்கிப் பழகும் பேறு பெற்றிருக்கிறேன்) கிரிக்கெட் வல்லுனர் ராமமூர்த்தியும் ரங்காச்சாரியும் சொல்லும் வர்ணனைகளைக் கேட்டு கிரிக்கெட்டை காட்சிப்படுத்திக் கொண்டிருந்த என்னை அழைத்து சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக விளக்குகள் அமைத்திருக்கிறார்கள். அதை இன்று தொடங்கி வைக்கப் போகிறார்கள்... பார்த்துவிட்டு வாருங்கள் என்று அசைன்மெண்ட் கொடுத்தார் வீயெஸ்வி சார். ஏதோ திருப்பதிக்கு சிறப்பு தரிசனத்துக்கு பாஸ் கிடைத்த சந்தோஷத்தோடு ஸ்டேடியத்துக்கு ஓடினேன்.

துவக்க விழா சம்பிரதாயங்கள் முடிந்து ஸ்ரீகாந்த் ஒருபக்கமும் வெங்கட்ராகவன் மறுபக்கமும் தலைமை தாங்க ஒரு காட்சி போட்டி நடத்தினார்கள். (அனேகமாக முதல் ட்வெண்டி 20 அதுதான் என்று நினைக்கிறேன்) பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. அந்தமுறை நடந்த உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் மோதும் போட்டிக்கான டிக்கெட் கொடுத்திருந்தார்கள். அப்போது விகடன் போன்ற வார இதழ்களுக்கு பாஸ் கொடுக்கமாட்டார்கள். ஆனால், அந்த டிக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டே நானும் புகைப்படக் காரர் குமரேசனும் பாஸ் வைத்திருப்பவர்கள் செல்லமுடியாத இடங்களுக்கெல்லாம் போய்வந்தோம்.

போட்டி தினத்தன்று கூடுதல் பரவசம்... எப்படியாவது வீரர்களை நெருங்கிப் பார்த்துவிட வேண்டும் என்ற வேகம்... நிகழ்ச்சிக்கு டிரிங்ஸ் வழங்கிய குளிர்பான நிறுவனத்தின் மேலாளரைப் பிடித்து சின்ன பேட்டி எடுத்துவிட்டு அந்த டிரிங்க்ஸ் வண்டிக்குள் ஏறி பதுங்கி வீரர்களை அருகில் கண்டோம். சும்மா போயிட்டு வாங்க என்று அனுப்பிய விகடனுக்கு கவர் ஸ்டோரியோடு திரும்பினோம். எனக்கும் குமரேசனுக்கும் எப்போதுமே அப்படி ஒரு ராசி வொர்க் அவுட் ஆகும்!

அடுத்து அனேகமாக சென்னை சேப்பாக்கத்தில் நடந்த எல்லாப் போட்டிகளையும் நான் பத்திரிகையாளர் கேலரியில் அமர்ந்து ரசித்திருக்கிறேன். இந்தியா பாகிஸ்தான் போட்டியில் அன்வர் அடித்து வெளுத்தாரே... அந்தப் போட்டியில் மட்டும் பத்திரிகையாளர் கேலரியில் இடம் கிடைக்காமல் ரசிகர்கள் கேலரியில் அமர்ந்து பார்த்தேன். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வெளுத்து வாங்கியிருக்க... இடைவேளையில் சாப்பிட வெளியே வந்தேன். மீண்டும் உள்ளே சென்றபோது சச்சின் அல்லாமல் வேறு இரு வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். என்னங்க... சச்சின் ஓப்பனிங் இறங்கலையா என்று கேட்டேன் பக்கத்து நாற்காலிக்காரரிடம்.

கடுப்பைக் கிளப்பாதீங்க... நாலு ரன்னில் அவர் அவுட் என்றார். என்ன இப்படிப் பண்ணிட்டாரு சச்சின் என்று சங்கடமாக இருந்தது. இத்தனைக்கும் முதல்நாள் பார்க்கும்போது நாளைக்கு நல்லபடியா ஆடுங்கனு சொல்லிட்டுத்தான் வந்தேன். (நிஜம்தான்! இந்த ஃப்ளாஷ்பேக்கைப் படிங்க... புரியும்!)

போட்டிக்கு முந்தைய நாள் சச்சின் தி ஹிந்து பத்திரிகையின் நிருபர் சஞ்சய் ராஜனுக்கு பேட்டிக்கு நேரம் கொடுத்திருந்தார். நானும் சஞ்சயும் நல்ல நண்பர்கள். அவரோடு பேசிக் கொண்டே போனேன். பேட்டியின்போது சும்மா பக்கத்தில் இருந்து பார்க்கலாம் என்பது என் எண்ணம். சஞ்சய்க்கும் அவர் கேட்கும் கேள்விகளை நான் விகடனில் எழுதமாட்டேன் என்று தெரியும். அவர் கேட்கும் கேள்விகளை விகடனில் எழுதவும் முடியாது. ‘உங்களுடைய பத்தாவது டெஸ்ட் போட்டியில் நாக்பூர் மைதானத்தில் ஏழாவது ஓவரை வீசிய வாசிம் அக்ரம் மூன்றாவது பந்தை பவுன்சராகப் போட்டார்... அதை ஆடாமல் தலையைக் குனிஞ்சு தவிர்த்தீங்களே... ஏன்? என்ற ரேஞ்சில் புள்ளிவிவிவரங்களாக இருக்கும். அன்றைக்கும் அப்படிப்பட்ட கேள்விகளுக்கு சீரியஸாக பதில் சொல்லிக் கொண்டிருந்த சச்சின், நடுவே என்னிடம், ‘நீங்களும் பத்திரிகையாளர்தானே... உங்ககிட்டே எனக்கான கேள்விகள் இல்லையா..?’ என்றார்.

ஏன் இல்லாமல்..? என்று ஆரம்பித்து சஞ்சயின் பேட்டிக்கு நடுவே கவாஸ்கர் பற்றி கபில் பற்றி உலகக் கோப்பை பற்றி அவருடைய ஓட்டல் பற்றி அஞ்சலி பற்றி அம்மாவுடன் ஆடிய பால்கனி கிரிக்கெட் பற்றி காம்ளி பற்றி பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டேன். இருவரும் சுமார் ஒருமணி நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெறும்போது சஞ்சயின் கேள்விகளுக்கு நடுவே நான் ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டது உங்களுக்குக் கொடுத்த பேட்டியில்தான். இன்னும் சொல்லப் போனால் என் பிராக்டீஸ் களைப்பே உங்கள் கேள்விகளால் போய்விட்டது. நன்றி’ என்று சொல்லிவிட்டுப் போனார். அப்போதுதான் சொன்னேன். நாளைக்கு கவனமா ஆடுங்க! என்று.

அப்போதே சொன்னார் உலகக் கோப்பையை ஒருநாள் வெல்வோம்னு!

Monday, April 4, 2011

சுயதம்பட்டம்..!


இதுக்கு மேல நான் என்ன சொல்றது... சந்தோஷமா இருக்கு!

Tuesday, March 29, 2011

நானும் விகடனும்! 03

விகடனின் பலம் வாசகர் கடிதங்கள்! அதில் இருந்து கிடைக்கும் ஐடியாக்கள் எப்போதுமே தனித்துவம் மிக்கதாக இருக்கும். அப்படி ஒரு கடிதம்தான் இந்த கட்டுரையின் ஆதாரம். ‘சென்னை .............. (அரசு அலுவலகத்தைக் குறிப்பிட்டிருந்தார்) கேஷியராகப் பணிபுரியும் என் கணவரை கடந்த ஒருவாரமாகக் காணவில்லை. கடந்த வாரம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அலுவலகத்தில் கேட்டால் பணத்தைக் கையாடி விட்டு ஓடிவிட்டதாகச் சொல்கிறார்கள். அவர் அப்படிப்பட்ட நபரில்லை. எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று ஒரு பெண் எழுதிய கடிதம் எனக்கு அசைன்மெண்டாகத் தரப்பட்டது.

நானும் அந்தப் பெண்மணியைப் பார்த்து விசாரித்து அந்த அலுவலகத்தில் விசாரித்து ஜூனியர் விகடனில் கட்டுரை ஆக்கினேன். ஆனால், அந்த நபர் திரும்ப வரவில்லை. தலைமைச் செயலகம்வரை சென்று பார்த்து அந்த ஊழியரைப் பற்றி விசாரித்தேன். மீண்டும் ஒரு ஃபாலோ அப் செய்தியைக் கொடுத்தேன். மூன்றாவது முறையாக அந்தப் பெண்மணி அலுவலகத்துக்கு வந்தார். எனக்கு அவரை நேரில் சந்திக்கவே சங்கடமாக இருந்தது. என்ன பதில் சொல்வது அந்த அபலைப் பெண்ணுக்கு..? என்ற கேள்வி என்னைக் குடைய சிறு தயக்கத்தோடு ரிசப்ஷனுக்குச் சென்றேன். தன் மகளுடன் வந்திந்தார் அந்தப் பெண்மணி.

‘உங்க கணவர் பற்றிய எந்த புது தகவலும் என்னிடம் இல்லை என்று தாழ்ந்த குரலில் தொடங்கினேன். ‘இல்லை சார்... நான் அதுக்கு வரலை. அவர் இருந்தபோதும் குடும்பத்துக்காக பெரிசா எதுவும் கொட்டிக் கொடுக்கலை. இப்போ அவர் இல்லை. அதனாலும் எனக்கு நஷ்டமில்லை. என் குடும்பத்துக்கு தலைவராக இருந்த மனிதர் இப்போ காணாமல் போயிட்டார். இதுவரை எந்தத் தகவலும் சொல்லாத அந்த ஆளைப் பற்றி பேசறதுக்காக நான் வரலை. ஆனா, என் பொண்ணு நிலைமையைப் பாருங்க...’ என்று அருகில் இருந்த பெண்ணிடம் கையை நீட்ட, அந்தப் பெண் பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொடுத்தார்.

அது +2 தேர்வு மதிப்பெண் பட்டியல்... 90%-க்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்திருந்தார் அந்தப் பெண். ‘மேலே என்ன படிக்கப் போறேம்மா..?’ என்றேன்.

‘அதுக்குத்தான் வந்திருக்கேன், உங்க உதவியைத் தேடி! அவளுக்கு என்ஜினியரிங் படிக்கணும்னு ஆசை. மெரிட்ல இடம் கிடைக்கும். என்னால், அவளுக்கு சாப்பாடு போட்டு காலேஜுக்கு அனுப்பவும் முடியும். ஆனால், கட்டணம்... ஆயிரக்கணக்கில் செலவாகுமே... இதுல அடுத்த பொண்ணு வேற +1 படிக்கிறா...’ என்றார் அந்தப் பெண்மணி. கையில் மதிப்பெண் பட்டியலுடம் நின்றிருந்த அந்தப் பெண்மணியைப் பார்த்தபோது எனக்கு ஒருகணம் ஒன்றுமே தோன்றவில்லை. சட்டென்று அதைக் கையில் வாங்கிக் கொண்டு படியேறி ஜே.எம்.டி (இப்போதைய எம்.டி. ஸ்ரீனிவாசன் சார்) அறைக் கதவைத் தட்டினேன்.

உள்ளே நுழைந்து மொத்த விஷயத்தையும் சுருக்கமாகச் சொன்னேன். எவ்ளோ கட்டணம் ஆகும் நாலு வருஷத்துக்கும் சேர்த்து? என்றார். சுமார் 40,000 ரூபாய் ஆகும்னு சொல்றாங்க என்றேன். கொடுத்திடலாம். நாலு வருஷத்துக்கும் சேர்த்து! கட்டண விவரத்தையும் காலேஜுக்கு செக் கொடுக்க வேண்டிய பெயரையும் சொல்லச் சொல்லுங்கள் என்றார். எனக்கு அந்த கணத்தில் என் பிள்ளைக்கு என்ஜினியரிங் கிடைத்தது போல சந்தோஷம் பிறந்தது. அதன்பிறகு நான் விலகிக் கொள்ள விகடன் பி.ஆர்.ஓ (ரேவதி மேடம்... இப்போது அவள் அணியில் இருக்கிறார்) அவர்களிடம் விவரங்களை வாங்கி வேண்டிய உதவிகளைச் செய்தார்.

அடுத்த ஆண்டு திடுமென்று என்னை அழைத்த ஜே.எம்.டி. அந்த குடும்ப தலைவர் மிஸ் ஆன கேஸ் என்னாச்சு என்று விசாரித்தார். ஆள் கிடைக்கவில்லை. ஹேபியஸ் கார்பஸ் போட்டிருக்கிறார்கள். போலீஸ் தேடுகிறது என்று சொன்னதும் அந்த பெண் என்ன படிக்கிறார் என்றார். நான் விசாரித்த மறுநாள் செமஸ்டர் மதிப்பெண் பட்டியலோடு அந்த அம்மா அலுவலகத்துக்கு வந்துவிட்டார். ஜே.எம்.டியிடம் கொடுத்தேன். அடுத்த மகள் பற்றி விசாரித்தார். அவருக்கும் என் ஜினியரிங்தான் விருப்பம் என்றால் பணம் செலுத்த நான் தயார் என்றார். அப்படியே செய்யவும் செய்தார்.

நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. நானும் அந்தக் குடும்பத்தை மறந்துவிட்டேன். திடுமென்று ஒருநாள் அந்தப் பெண்மணி தன் மகளுடன் வந்திருந்தார். கையில் பெரிய தாம்பாளம்... அதில் பழங்கள்... இனிப்புகள்! அதைவிட இருவர் முகத்திலும் சந்தோஷம்! ஜே.எம்.டி-யிடம் அழைத்துச் சென்றேன். கீழே விழுந்த வணங்கிய அந்தப் பெண் படிப்பை முடித்துவிட்டதாகவும் கேம்பஸ் தேர்வில் .......... கம்பெனியில் வேலை கிடைத்திருப்பதாகவும் சொன்னாள் அந்தப் பெண். ‘முதல் மாத சம்பளத்தில் நீங்கள் கொடுத்த 40,000 ரூபாயைக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்று பணக் கட்டை எடுத்து தாம்பாளத்தில் வைத்து ஜே.எம்.டி-யிடம் நீட்டினாள் அந்தப் பெண். அந்தத் தட்டில் இருந்து ஒரு இனிப்பை எடுத்துக் கொண்ட ஜே.எம்.டி. எல்லோரையும் உட்காரச் சொல்லிவிட்டு, ‘நான் உங்களுக்குக் கடன் கொடுக்கவில்லை. இந்தப் பணத்தைத் திரும்ப வாங்கிக் கொள்வதற்கு! இது உங்களுக்கு நான் செய்திருக்கும் உதவி. நீங்கள் வேறொரு நபருக்குச் செய்யுங்கள். ஒன்றாக இருக்கும் உதவி பத்தாகப் பெருக வேண்டும் என்றார். அந்தப் பெண் தன் செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.

இப்போது தன் கணவருடன் அமெரிக்காவில் இருக்கிற அந்தப் பெண் நிச்சயம் அதை பத்தாகப் பெருகச் செய்திருப்பாள். கூடவே, அடுத்த ஆண்டு படிப்பு முடித்து கேம்பஸில் தேர்வான அவளுடைய தங்கையும் தன் பங்குக்கு பத்தாக்கி இருப்பாள். நான் பதினொன்றாக்கிக் கொண்டிருக்கிறேன்!

Thursday, March 3, 2011

நானும் விகடனும்! 02

விகடன் எனக்கு என்ன கொடுத்தது என்ற யோசனையில் இருந்தபோது சட்டென்று நினைவுக்கு வந்த விஷயம் இது. அது என்ன என்பதற்கு முன்னால் மறுபடியும் விகடன் எடிட்டோரியல் மீட்டிங்..!

புதிய பகுதிகளாக என்னவெல்லாம் கொண்டுவரலாம் என்பது பற்றிய ஒரு விவாதத்தில் எம்.டி. ஒரு ஐடியாவை முன் வைத்தார். அவர் அதிகமாக கடவுள் பற்றி சிலாகித்துப் பேசமாட்டார். ஆனால், அவர் சொன்ன ஐடியாவின் தலைப்பு ஒரு தெய்வம் நேரில் வந்தது. அந்த ஐடியாவுக்கான பின்னணி கதையையும் சொன்னார்.

எம்.டி. பறவைகளை நேசித்து பராமரிக்கும் படப்பை பண்ணையில் விளிம்பு வரை ததும்பும் கிணறு ஒன்று இருக்கிறது. அந்த கிணறைத் தோண்டும் முயற்சியில் பல்வேறு இடங்களில் நீரோட்டம் பார்த்திருக்கிறார்கள். சில இடங்களில் கொஞ்சம் தோண்டவும் செய்திருக்கிறார்கள். எங்கேயுமே தண்ணீர் கிடைக்கவில்லை. எல்லோருமே களைத்துப் போய் அடுத்து என்ன செய்யலாம்... கிணறு தோண்டும் முயற்சியைக் கைவிட்டுவிடலாமா என்ற யோசனையில் இருந்தபோது அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு நபர் அங்கு வந்து கிணறு தோண்டப் போறீங்களா... இந்த இடத்தில் தோண்டிப் பாருங்க என்று ஒரு இடத்தைக் கைகாட்டியிருக்கிறார். அவநம்பிக்கையோடு தோண்ட ஆரம்பித்த தொழிலாளிகள் உற்சாகமாகிவிட்டார்கள். சில அடிகளிலேயே நீர் கசிவைப் பார்த்துவிட்ட அவர்கள், பரபரப்பாகத் தோண்டுவதைத் தொடர, எம்.டி. இடத்தைக் கைகாட்டிய ஆளைத் தேடியிருக்கிறார்.

‘கையில் கம்பு வைத்திருந்ததால் அவரை மாடு மேய்ப்பவர் என்று நினைத்துக் கொண்டோம். உண்மையில் அங்கே எந்த மாடுமே இல்லை. சரி, பக்கத்து ஊர்காரராக இருப்பார் என்ற நினைப்பில் ஆட்களை அனுப்பி பக்கத்து ஊர்களில் எல்லாம் தேடிவிட்டோம். அப்படி ஒரு ஆளே இல்லை. அப்படியானால் வந்தவர் யார்? எப்படி அவரால் இன்றளவும் வற்றாமல் இருக்கும் கிணறைத் தோண்ட இடத்தைக் காட்ட முடிந்தது... கிட்டத்தட்ட முயற்சியைக் கைவிட்ட நேரத்தில் வந்து வழிகாட்டிய அவரைத் தெய்வம் என்று கொள்ளலாமா? அதுபோல பலரும் ஒரு மனிதனை தெய்வமாக உணர்ந்திருப்பார்களே... அந்த அனுபவங்களை எழுதலாமா?’ என்றார். எல்லோரும் ஒப்புக் கொள்ள ஒரு தெய்வம் நேரில் வந்தது..? என்ற தலைப்பில் வாரம் ஒரு பிரபலம் எழுதினார்கள்.

அந்தப் பகுதிக்காக பாடகி வாணி ஜெயராமைப் பேட்டி காணச் சென்றிருந்தேன். போனிலேயே கருத்தைச் சொல்லியிருந்ததால் சம்பவத்தை நினைவுபடுத்தி கோர்வையாக்கி வைத்திருந்தார்.

‘இமயமலைச் சாரலில் நடந்த இசை நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தபோது பாதை பழுதாகிவிட்டது. கார் அதற்கு மேல் செல்லாது என்ற நிலை. நிகழ்ச்சிக்கு அரைமணிநேரம்தான் இருக்கிறது. எப்படிச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த நேபாளி இளைஞர் ஒருவர், என் கையைப் பிடிச்சுகிட்டு வாங்க என்று என்னை மலைப்பாதையில் அழைத்துக் கொண்டு போய் சரியான நேரத்தில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குக் கொண்டுபோய் உட்கார வைத்தார். எல்லோரும் தயங்கிக் கொண்டிருந்தபோது அவர் மட்டும் எப்படி முன் வந்தார். நான் எப்படி முகம் தெரியாத அந்த இளைஞரை நம்பிச் சென்றேன் என்பது இதுவரை விடை தெரியாத கேள்விகள்... என்னைப் பொறுத்த அளவில் தெய்வம் நேரில் வந்து என்னை அழைத்துச் சென்றதாகத்தான் நினைக்கிறேன்’ என்று வாணி ஜெயராம் சொல்லிமுடித்தார்.

நிருபராக எனக்கு வேண்டியது கிடைத்துவிட்டது. ஆனால், விகடன் எனக்குக் கொடுத்ததாக நினைக்கும் விஷயம் அடுத்து நடந்ததுதான்!

பேட்டிக்குப் பிறகு பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் பாடிய மேகமே... மேகமே..! என் ஆல்டைம் ஃபேவரிட் என்றேன். சிறு தயக்கம்கூட இல்லாமல் இந்த ஒற்றை ரசிகனுக்காக அந்தப் பாடலை முழுமையாகப் பாடிக் காட்டினார். எந்த ரசிகனுக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு..?!

தெய்வம் நேரில் வந்தது, விகடன் ரூபத்தில்!

Monday, February 28, 2011

நானும் விகடனும்!

நண்பர் அரவிந்தனுக்கு முதல் நன்றி. அவர்தான் நான் பேசும்போதெல்லாம் இதை எழுதுங்க பாபு... நல்ல விஷயங்கள் சொல்றீங்க... இதெல்லாம் உங்க அனுபவமா மட்டும் இல்லாமல் பத்திரிகையாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அடிக்கடி சொல்லிச் சொல்லி என்னை எழுதத் தூண்டினார்.

விகடன் 85-ம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதிலேயே நானும் விகடனும் என்ற பிரபலங்களின் அனுபவப் பகிர்வு இடம்பெற்றிருக்கிறது. ஆனால், இது அந்த டைப் நானும் விகடனும் அல்ல..! விகடன் எனக்குக் கற்றுக் கொடுத்த விஷயங்களைச் சொல்லலாம் என்ற யோசனையோடுதான் எழுதத் தொடங்குகிறேன்.

என்னை பத்திரிகையாளனாக ஆக்கியது விகடன். என்ஜினியரிங் படித்த என் அண்ணன் என்ஜினியராகிவிட்டார். ஆனால் டிகிரி படித்த நான் என்னவாகப் போகிறேன் என்ற பயம் என் பெற்றோரிடம் இருந்துகொண்டேதான் இருந்தது. ஆனால், என் அண்ணனுக்கு முன்னால் என்னை சம்பாதிக்க வைத்தது விகடன். மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோதே விகடன் ஊழியராகிவிட்டேன்.

அடடே... கொஞ்சம் உபசார வாசனை அடிக்கிறதே... சரி, ரூட்டை மாத்திடலாம்!

உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்து கொண்டிருந்த நேரம்... அனேகமாக 96 போட்டி என்று நினைவு. விகடனில் கிரிக்கெட் தொடர்பாக ஒரு போட்டி வைத்திருந்தோம். அதாவது கோப்பையை வெல்லப் போகும் அணி, அரையிறுதிக்கு வரும் நான்கு அணிகள், வேகமாக 50 அடிக்கும் வீரர், 100 அடிக்கும் வீரர் அதிக விக்கெட்டுகள் எடுக்கப் போகும் பவுலர் என்று பல கேள்விகளோடு இருந்தது அந்தப் போட்டி.

இறுதிப் போட்டி ஞாயிறன்று நடப்பதாக இருந்தது. அந்தப் போட்டியின் முடிவில் விகடன் கேள்வித்தாளில் இருந்த அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும். ஆனால், அதைப் பற்றி எதுவுமே விகடனில் எழுத முடியாது. ஏனென்றால், விகடன் இதழ் முடிக்கும் நாள் சனிக்கிழமை. எப்படி இந்த இக்கட்டை சமாளிப்பது என்ற கேள்வியோடு எடிட்டோரியல் மீட்டிங் நீண்டநேரமாக நடந்து கொண்டிருந்தது.

ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்ல, அணியின் கடைக்குட்டியான நான் கையை உயர்த்தினேன். எம்.டி. (பாலசுப்பிரமணியன் சார்) என்ன என்பது போல பார்த்தார். மெதுவாக எழுந்து சார், நாம இஷ்யூவை ஞாயிற்றுக்கிழமை முடிச்சா என்ன..?’ என்றேன். ஒட்டுமொத்த எடிட்டோரியல் அணியும் அதிர்ந்து போனது. சனிக்கிழமை இரவு இதழ் அச்சுக்குப் போனால்தான் ஞாயிறன்று பிரிண்ட் ஆகி, திங்களன்று கடைகளுக்குச் செல்லும். அதையே காலி செய்வது போல ஐடியா கொடுக்கிறானே... அடிப்படையே தெரியாமல்! என்பதுபோல எல்லோரும் என்னைப் பார்க்க, எம்.டி. கொஞ்சநேரம் கண்களை மூடி யோசித்தார். பிறகு, ‘சொல்லுங்க பாபு... ஞாயிற்றுக் கிழமை இரவு 11.30 மணிக்கு இறுதிப் போட்டி முடியும். அதன் பிறகு என்ன செய்யமுடியும் என்றார்.

நானோ உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு, ‘கேள்விகளுக்கான சரியான பதிலை மட்டும் முதல் பக்கத்தில் போட்டுடலாம். இந்த பதில்களை எழுதிய வெற்றியாளர் விவரம் அடுத்த இதழில்னு போடலாம் சார். உலகக் கோப்பை போட்டியை கவர் பண்ணின மாதிரி ஆகிடும் என்றேன். மீண்டும் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தார் எம்.டி. அடுத்து போனை எடுத்து ஜே.எம்.டி-யை அழைத்தார்.

இதழை ஞாயிறன்று முடித்தால் என்ன என்ற கேள்வியோடு அவரை உசுப்ப, பேப்பர் பேப்பராக கணக்குப் போட்டுப் பார்த்த ஜே.எம்.டி. கடைசியாக ஒரு தொகையைச் சொன்னார். அதாவது, சனியன்று இரவு ஷிப்ட், ஞாயிறு பகல் ஷிப்ட் ஊழியர்களுக்கு வேலை இல்லை. ஞாயிறு இரவு ஷிப்ட் ஊழியர்கள் தவிர இன்னும் கொஞ்ச பேர் ஓவர் டைம் செய்ய வேண்டும் என்றெல்லாம் கணக்குப் போட்டுச் சொன்னார். மீண்டும் எம்.டி. சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். பிறகு ஓகே... அப்படியே செய்துடலாம்’ என்று சொன்னார்.

ஒப்பந்தப்படி நான் ஞாயிறன்று அலுவலகத்தில் உட்கார்ந்து போட்டியைப் பார்த்தேன். இதழ் நிர்வாக ஆசிரியர் வீயெஸ்வீ சார் அவருடைய வீட்டில் மேட்ச் பார்த்தார். எம்.டி. அவர் வீட்டில்! போட்டி முடிந்ததும் மூவரும் அந்த கூப்பனை நிரப்பினோம். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் போனில் பேசி சரியான பதில்களை உறுதி செய்து கொண்டோம். 12.00 மணிக்கு அச்சகத்து இயந்திரங்கள் ஓடத் தொடங்கின. முதல் செட் புத்தகம் ரெடியானதும் வழக்கம் போல திங்களன்று காலையில் சென்னை கடைகளுக்கு விற்பனைக்குச் சென்றது. வாசகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

செவ்வாயன்று மீண்டும் எடிட்டோரியல் மீட்டிங். கையில் ஒரு கட்டு கடிதங்களோடு வந்தார் எம்.டி. வரும்போதே ஜே.எம்.டி-யையும் வரச் சொல்லியிருந்தார். அவர் கொண்டு வந்திருந்த கடிதங்கள் அத்தனையும் உலகக் கோப்பை பற்றிய உடனடி ரியாக்‌ஷனுக்குக் கிடைத்த பாராட்டுகள். பணக் கணக்கு, ஓவர் டைம் கணக்கைவிட இது பெரிய விஷயம் என்றார். என்னைப் பாராட்டும்விதமாக பணமுடிப்பு கொடுத்தார்.

இப்படித்தான்... எந்த சபையாக இருந்தாலும் உனக்குத் தோன்றும் கருத்தை தைரியமாக முன் வைக்க வேண்டும், அதற்கான முழு திட்டமும் உன்னிடம் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் என்னைப் பாராட்டவில்லை. ஆனால், அதை என்னை உணரச் செய்தார். அதுதான் விகடனின் வெற்றி! இன்று அது என் குணமாகவே மாறியிருக்கிறது.

விகடனுக்கு நன்றி!