Sunday, May 5, 2013

நினைவுத் தடங்களைத் தேடி..!



 அஞ்சு நிமிஷம்தான் டைம்... ரொம்ப தொந்தரவு பண்ணக் கூடாது...’ என்று சொல்லித்தான் உள்ளே அனுமதித்தார்கள். நான் அஞ்சு நிமிஷத்தை அரைமணிநேரமாக நீட்டிக் கொள்ளும் சூட்சுமம் தெரிந்தவன். என் தொழிலின் பாலபாடம் அது. சரியென்று தலையாட்டிவிட்டு உள்ளே நுழைந்தேன். ஒரு கிரவுண்ட் நீள அகலத்தில் பெரிய ஹால்... நடுநாயகமாக இருபுறமும் வளைந்து ஏறிய படிக்கட்டில் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளமே பிரமிப்பை உண்டாக்கியது. படிகளின் அடியில் பெரிய பியானோ கவனத்தை ஈர்த்தது. இதை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று தோன்றியது. பியானோவை ஒட்டி இருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தேன்.

இந்த ரத்தினக் கம்பளமோ பியானோவெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல உட்கார்ந்திருந்தார் அந்த உயர்ந்த மனிதர்
. தகுதியால் மட்டுமல்ல உருவத்தாலும் உயர்ந்த மனிதர்தான். யெஸ்... என்றபடி திரும்பியபடி அவர் என் கண்களை நேராகப் பார்க்க அந்த கரண்ட் எனக்குள்ளும் இறங்கியது போல இருந்தது.

பேச்சை எப்படித் தொடங்குவது என்று தெரியாமல் பையில் இருந்து விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினேன்
. நிதானமாக அதில் உள்ள தகவல்களை வாசித்துவிட்டு, ‘யங் ஜர்னலிஸ்ட்... வெரிகுட்... ஐ லைக் பீப்பிள் லைக் யூ...’ என்று தோளில் தட்டினார்.

நான் மெதுவாக உதட்டை ஈரம் செய்து கொண்டு
, ‘வணக்கம் அமிதாப்ஜி... எனக்கும் உங்களைப் போன்ற ஸ்டார்களைப் பிடிக்கும்...’ என்றேன் உடைந்த ஆங்கிலத்தில்!

ஆனந்த விகடனைப் பற்றி அவருக்கு தெரிந்திருந்தது
. ‘எஸ்.எஸ்.வாசனின் நிறுவனம்தானே என்றவர், ‘இப்ப என்ன... உங்களுக்கு என் பேட்டி வேண்டுமா..?’ என்றபடி கைதட்டினார். கொள்ளைகூட்ட தலைவனின் கைதட்டலுக்கு எட்டிப் பார்க்கும் அடியாள் போல டை கட்டிய ஆசாமி ஒருவர் எட்டிப் பார்த்தார். ‘எஸ் பாஸ்என்று மட்டும்தான் சொல்லவில்லை. அமிதாப் எதற்கு அழைப்பார் என்று தெரிந்தவர் போல ஒரு ஃபைலை அமிதாப் கையில் கொடுத்தார்.

அதை என்னிடம் கொடுத்த அமிதாப்
, ‘இதில் என் பேட்டிகள், என்னைப் பற்றிய கட்டுரைகள், நான் நடித்த படங்கள் பற்றிய தகவல்கள், நான் வாங்கிய விருதுகள் என்று எல்லா தகவல்களும் இருக்கின்றன. நீங்கள் கேள்வி கேட்டது போலவும் நான் பதில் சொன்னது போலவும் எழுதிக் கொள்ளுங்கள். ஹிந்திவாலாக்கள் மாதிரி நீங்களும் எழுதுவீர்கள்தானே..!’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

ஃபைலை வாங்கிக் கொண்டு வெளியே வரும்போதுதான் தோன்றியது
... அந்த பிரம்மாண்ட ஹால் உழைப்பாளி படத்தில் இடம் பிடித்திருந்த செட்..!

அமிதாப்பை சந்தித்த அந்த இடத்தை
...

அம்பது ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கு போலீஸ் யூனிபார்ம் குடுங்க... முப்பது நாப்பது பேர் வெள்ளை வேட்டி சட்டை, வேட்டி குடுங்க... கொஞ்சபேர் பப்ளிக் மாதிரி இருக்கட்டும்... ரெயின் ஷாட்டுக்கு முன்னால் ஸ்டாக் ஷாட் கொஞ்சம் எடுத்துக்குவோம்...’ பல இன்ஸ்ட்ரக்‌ஷன்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார் அந்த புதுமுக இயக்குனர் முருகதாஸ். எல்லாம் ரெடியான பிறகு சாரைக் கூப்பிடலாம் என்று சொல்லியிருந்ததால் சார் மேக்கப் ரூமில் இருந்தார்.

அந்த சார் அழைப்பின்பேரில்தான் நான் சென்றிருந்தேன்
. அந்த படத்துக்குப் பிறகுதான் அவருக்கு தல என்ற பெயர் வந்தது. சொல்லுங்க ஜி... என்ன நடக்குது நாடுல என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த அஜீத் ஷாட் ரெடியானதும் ஷூட்டிங் போய்விட்டார்.

நான் ஜூவியில் தொடராக எழுதிய நான் ரமேஷ் நாயகன் ரமேஷ் அந்தப் படத்தில் சின்னதாக ஒரு வேடம் கட்டியிருந்தார்
. அதற்கு முன் அஜீத் நடித்த அமர்க்களம் படத்தில் நண்பர் இயக்குனர் சரண் மூலம் அறிமுகமாகியிருந்தார் நான் ரமேஷ். அப்போது கிடைத்த அறிமுகத்தின் பேரில் அஜீத் தனது அடுத்த படத்திலும் வாய்ப்பு கொடுத்திருந்தார்.

தீபாவளிக்கு மிக நெருக்கமான அந்த நாளில் நான் ரமேஷை குடும்பத்துடன் வரவைத்து மொத்த குடும்பத்துக்கும் உடைகள்
, பலகாரம், பட்டாசு எல்லாம் கொடுத்ததோடு பணமும் கொடுத்தார் அஜீத். நான் ரமேஷ் சிறையில் இருந்து மீண்ட பிறகு வந்த இரண்டாவது தீபாவளி. அமர்க்களமாக அமைந்ததில் அவருக்கு சந்தோஷம். அவர் குடும்பத்துக்கும் மகிழ்ச்சி!

கலவரத்தில் அடித்து நொறுக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அந்தக் குடும்பமே கண்ணில் ஆனந்த கண்ணீரோடு நின்றது இன்னமும் மனக்கண்ணில் இருக்கிறது
.

அஜீத் அன்போடு பரிசு கொடுத்த அந்த இடத்தை
...

அசைவமெல்லாம் அந்தப் பக்கம் போங்க
... சைவமெல்லாம் இந்தப்பக்கம் போங்க... என்று ஆளாளுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்க, அசைவத்துக்குப் போகும் வழியில்ஒதுங்கஇடம் எங்கே என்று உடன்பிறப்புகள் தவித்துக் கொண்டிருந்தார்கள். திமுகவின் பொதுக்குழு கூட்டம். பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் திருநெல்வேலி மாவட்ட திமுக அடையாள அட்டையோடு நானும் கும்பலில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தேன்.

எலேய்
... தீர்மானம் எப்ப வாசிப்பாங்க... பஸ்ஸை சீக்கிரம் எடுத்தா ராத்திரி மேல்மருவத்தூர்ல சாமி கும்பிட்டுப் போயிறலாம்... என்று ஒரு பகுத்தறிவு பகலவன் சொல்லிக் கொண்டிருக்க, அதுவும் சரிதான்... ஆனா, கோயிலுக்கு போணும்னா மேற்படி ஒண்ணும் செய்யமுடியாதே... |ண்னு செய்வோமா... கையிலே வெச்சுகிட்டு ராத்திரி பார்த்துக்கிடுவோமா... என்று பெரிதாக பிளான் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் கூட்டத்தில் டி
.ஆர். மீது ஏதோ நடவடிக்கை பாயும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் வேவு பார்க்கவும் செய்தி சேகரிக்கவும் அந்த மண்டபத்தில் இங்கும் அங்கும் அலைய வேண்டியிருந்தது. ஆனால், அந்தக் கூட்டத்தில் டி.ஆர். என்றும் என் தலைவன் கலைஞர்தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி பிரச்னையை முடித்து வைத்தார். அந்தக் கூட்டம் முடிந்து அவருடைய ஆதரவாளர்கள் அவரை நெருக்க, அவர்கள் மத்தியில் அவர் மிதந்தபடி சென்ற காட்சி எந்தத் தலைவனுக்குமே சந்தோஷம் தரக்கூடியது.

அப்படி வாசல் வரை அவரை அலேக்காகத் தூக்கிக் கொண்டு போன விஜய மஹால் கார் பார்க்கிங் இடத்தை
...

நாசர் சாருடன் அமர்ந்து விவாதம் செய்த இடத்தை
...

தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா என்று ராஜு சுந்தரம் காதல் ஒழுக சிம்ரனுடன்
(அப்போது இருவருக்குள்ளும் காதல் ஓடிக் கொண்டிருந்தது)ஆடிப்பாடிய இடத்தை...

பாரதி படத்தில் பாரதிக்கு டப்பிங் பேசிய ராஜீவை சந்தித்துப் பேசிய இடத்தை
...

இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்
... என் நினைவுகளில் பதிந்து கிடக்கும் இந்த இடங்களை போர்ம் விஜயா மால் என்ற ஆசியாவின் மிகப் பெரிய வணிக வளாகம் என்று சொல்லப்படும் வளாகத்தில் தேடி அலைந்தேன்... கிடைக்கவில்லை!

நரைச்ச தலைக்கு டை அடிங்கன்னா கேக்கறீங்களா என்றாள் என் மனைவி
! சரிதான்!

Wednesday, May 1, 2013

மற்றும் பலர்! - 1

முத்தண்ணா
அந்தக் கால சினிமாவில் டைட்டில் போடும்போது நாயகன் நாயகி நகைச்சுவை நடிகர், நகைச்சுவை நடிகை, வில்லன், குணச்சித்திர நடிக நடிகைகள் என்று எல்லா பெயர்களும் போட்டு முடித்த பிறகு மற்றும் பலர் என்று ஒரு டைட்டில் கார்டு வரும்... அது சினிமாவில் மட்டுமில்லை... எல்லா வாழ்க்கையிலும் இருக்கிற டைட்டில் கார்டு! இன்று இருக்கும் நான் என்ற என்னை உருவாக்கியதில் நானோ என்னைச் சார்ந்தவர்களோ மட்டும் காரணமில்லை... மற்றும் பலர் இருக்கிறார்கள்.

சி|றுவயது பிராயத்தில் மதுரைக்கு என் பாட்டி வீட்டுக்கு லீவுக்குச் சென்ற காலங்களில் தன் துணியை தானே துவைத்து மடித்து வைக்கப் பழகிய என்னைவிட ரெண்டு வயது பெரியவனான முத்தண்ணாவில் தொடங்கி நேற்று நான் கலந்து கொண்ட பயிலரங்கத்தில் மாணவராக வந்து, சார் இவ்ளோ நல்லா பேசறீங்க... இதை ஒரு புத்தகமாக் கொண்டாறலாம்ல... என்று கையைப் பிடித்துக் கொண்டு நின்ற தோழர் வரை (மே 1 அன்னிக்கு சந்திச்சதுக்கு இதாச்சும் இருக்கட்டுமே!) மற்றும் பலருக்கும் பங்கு இருக்கிறது.

முத்தண்ணாவில் இருந்தே தொடங்குகிறேன். அவரைப் பற்றிச் சொல்வதற்கு முன் கொஞ்சம் முன்கதை..! நாலாங்கிளாஸ் படிக்கிற காலத்திலேயே கோடை லீவு என்றால் அது மதுரையில் இருக்கும் ஆச்சி (அம்மாவின் அம்மா) வீடுதான். அப்போதெல்லாம் அம்மா தன் அப்பாவுக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். எங்களுக்கு (எனக்கும் என் அண்ணாச்சிக்கும்) பரீட்சை தொடங்கிய வேளையில் அம்மா எழுதும் கடிதத்தில் ஓரமாக நாங்களும் ஒரு வரி எழுதுவோம். தாத்தா... எங்களுக்கு வர்ற 27ம் தேதி வரலாறு புவியியல் பரீட்சை... என்று!

கொள்ளைக்கூட்ட தலைவனுக்கும் அதன் அடிப்பொடிக்கும் இருக்கும் கோட் வேர்டை விட வலிமையானவை இந்த வார்த்தைகள். சரியாக வரலாறு புவியியல் பரீட்சை அன்று காலையில் எங்க தாத்தா வந்து இறங்கிவிடுவார். நாங்கள் போய் பரீட்சையை எழுதிவிட்டு வருவதற்குள் எங்கள் உடைகளை பேக் பண்ணி ரெடியாகி விடுவார். செங்கோட்டையில் இருந்து அர்த்தராத்தியில் ரயிலைப் பிடித்து அதிகாலையில் மதுரை வந்து இறங்குவோம். முழுசாக முப்பது நாட்கள் மதுரைதான்.

இந்த ஒரு மாதத்தில் ரெண்டு சினிமா, ரெண்டுமுறை பொருட்காட்சி (ஒரே நாளில் முழுக்க சுற்ற முடியாது. அவ்ளோ பெருசு) ஒருமுறை சர்க்கஸ்... அவ்வளவுதான்! ஆனால் அதையெல்லாம் விட சந்தோஷமாக இருப்பது காலையில் என் தாத்தாவின் நண்பர் கோபால் தாத்தா வீட்டுக்கு போய் பேப்பர் வாங்கி வருவதும் மாலையில் நூலகத்துக்குப் போய் வருவதும்தான்! இதில் முப்பது நாளும் முப்பது வகை டிபன், முப்பது வகை குழம்பு என்று அசத்தும் ஆச்சியின் கைமணம் தனி சந்தோஷம்!

வந்துவிட்டேன் முத்தண்ணா கதைக்கு!

மேலப்பொன்னகரம் மூன்றாவது தெருவில் சி 6 பிளாக்கில் 11ம் எண் வீடு ஆச்சி வீடு. மூன்றாவது தளம்... இரண்டாவது தளத்தில் 10ம் எண் வீடு முத்தண்ணா வீடு. அந்த அண்ணாவின் அப்பாவும் அம்மாவும் வேலைக்குச் செல்வதால் விடுமுறைக்கு எங்கும் செல்ல மாட்டார்கள். எப்போ பார்த்தாலும் முகம் கழுவி திருநீறு வைத்த நெற்றியோடுதான் இருப்பான் முத்தண்ணா. (நானும் ஸ்கூல் காலத்துக்குப் போயிட்டேன். அதான் மரியாதை குறைஞ்சிடுச்சு) சட்டையும் டவுசரும் பளிச்னு இருக்கும்.

அவன் மூஞ்சியைப் பார்த்தியால... லெட்சுமி களை ஜொலிக்கு. உன் மூஞ்சியும் இருக்கே... போ... போய் மூஞ்சியைக் கழுவி பவுடர் கிவுடர் போட்டுட்டு வாஎன்று ஆச்சி துரத்திவிடுவார். அந்த அளவுக்கு பளிச்சென்று இருப்பான் முத்தண்ணா.

நான் நாலாங்கிளாஸ் படிக்கும்போதே அந்த அண்ணன் ஏழோ எட்டோ படிச்சான். ஊர்ல செல்லாங்குச்சி, பம்பரம், கோலிக்காய் விளையாடிகிட்டிருந்த என்கிட்டே, ‘வர்றியா... டிரேட் விளையாடுவோம்என்றான். எனக்கு அந்த விளையாட்டே தெரியாதேனு சொன்னதும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் காட்டுனான். நம்ம தாயக்கட்டை விளையாட்டு மாதிரிதான். அதுல காயை நகர்த்திகிட்டே போய் நடுவுல இருக்கற ஊர்களை விலைக்கு வாங்கி அங்க வீடு கட்டுறது, தியேட்டர் கட்டுறதுனு ஒரு விளையாட்டு! நாலைஞ்சு பேரு உட்கார்ந்து விளையாட ஆரம்பிச்சோம்னா சாயங்காலம் வரைக்கும் ஓடும்.

முத்தண்ணாவுக்கு தனி தட்டு. அவனோட தங்கை லதா அக்காவுக்கு தனி தட்டு. அவங்க சாப்ட தட்டை அவங்கதான் வெளக்கி கழுவி வைக்கணும். அவங்க துணிமணிகளை அவங்களே சோப்பு போட்டு காயப் போட்டு எடுத்து மடிச்சு வைக்கணும்னு ரொம்ப கண்டிஷனான வீடு.

திங்கற தட்டுல கையைக் கழுவுதியே... போ... அந்த முத்து காலைக் கழுவிக் குடி... அப்பயாச்சும் புத்தி வருதானு பார்ப்போம் என்று பல வீடுகளில் திட்டு விழும். அந்த அளவுக்கு முத்தண்ணா எல்லா விஷயங்கள்லேயும் கரெக்டா இருந்தான். அவங்க வீட்டுல உட்கார்ந்து இந்த ட்ரேட் விளையாடுறப்ப தண்ணி தாகம் எடுத்து உள்ளே போய் குடத்துல மோந்து குடிச்சுட்டு வந்தோம்னா மெனக்கெட்டு உள்ளே போய் நான் குடத்து பக்கத்துல வெச்ச தம்ளரை எடுத்து பாத்திரங்கள் அடுக்கியிருக்கற இடத்துல வெச்சுட்டு வருவான்.

முத்து... இந்தப் பயகளுக்கு கொஞ்சம் சைக்கிள் சொல்லித் தர்றியாப்பா என்று ஆச்சி வைத்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து ஒரு லீவு முழுக்க எங்களை தோளில் சுமந்து கொண்டு கிழக்கும் மேற்குமாக அலைந்தான். என் மாமாகூட, ‘ஏண்டா... வீட்டுல இடமில்லையா என்ன... எதுக்கு முத்து தோள்ல தொங்கிகிட்டு தூங்குத...’ என்று கேலி செய்திருக்கிறார். ஆனா, இடுப்பை வளைக்கறதை மட்டும் கரெக்ட் பண்ணிட்டா நீ சூப்பரா ஓட்டிருவேடா என்று நம்பிக்கை வார்த்தை சொல்லி நம்மை மகிழ்விப்பான் முத்தண்ணா.

படிப்பிலேயும் கில்லாடி. எப்படியும் முந்நூத்தம்பது மார்க்குக்கு மேல வாங்கிடுவான் என்று வீட்டில் சொன்னார்கள். நான் ஏழாவது படிக்கும்போது முத்தண்ணா பத்தாவது என்று நினைவு. அந்தமுறை அம்மாவுடன் ஊருக்குப் போய் இறங்கினோம். பயணக் களைப்பில் இருந்ததைக் கூட பொருட்படுத்தாமல் அம்மாவிடம் ஆச்சி ஏதோ அங்கலாய்த்துக் கொண்டிருந்தார். பிள்ளைகளை வளர்க்கறதுல ரொம்ப கவனமா இருக்கணும்மா... அதுலயும் இந்த பத்தாங்கிளாஸ்ங்கறது பெரும் கண்டமால்ல இருக்கு... மூக்குக்கு கீழ புல்லு கணக்க ...சுரு மொளச்சதும் என்னமெல்லாமோ கத்துகிட்டு வருதுங்க...’ என்ற ஆச்சியின் புலம்பலை சட்டை செய்யாமல், ‘அம்மா... நான் முத்தண்ணாவை பார்த்துட்டு வர்றேன்...’ என்று செருப்பில் காலை நுழைத்தேன்.

முத்தண்ணா அவன் இவன்னு போன... கால வெட்டிருவேன்... ஒழுங்கு மரியாதையா வீட்டுல கிட..!’ என்றார்கள் கண்டிப்பான குரலில்!