Wednesday, November 4, 2009

என் மகனும் என் மதமும்!


நேற்றிரவு படுக்கையில் இருந்தபோது என் மகன் தீபன் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினான். ’அப்பா... என் பிரெண்ட் ஆகாஷ் கிரிஸ்டியனாம்... நான் யார்?’ என்றான். அவனுக்கு விளக்கங்கள் சொல்லத் தயாராகிக் கொண்டே, ‘நீ இந்து!’ என்றேன். அவனிடமிருந்து அடுத்த கேள்வியாக, ‘எப்படி நான் இந்து?’ என்று வரும் என்ற எதிர்பார்ப்போடு, அதற்கான பதிலைத் தயார் செய்து கொண்டேன். ஆனால், அவனோ, ‘அப்ப நீ?’ என்றான். நான் இந்துங்கறதாலதாண்டா நீ இந்து’ என்றெல்லாம் சொல்லாமல் கேள்விக்கு மட்டும் பதிலாக ’நானும் இந்துதான்... என்றேன். அடுத்தடுத்து அப்போ அம்மா, அப்போ தர்ஷினி (என் மகள்) என்று எல்லோரையும் கேட்டுக் கொண்டான்.

சிறிது நேரம் மவுனமாக இருந்தவன், ‘ச்சே... மிஸ் ஆகிப் போச்சு!’ என்றான் சின்ன வருத்தத்தோடு!

என்னடா மிஸ் ஆச்சு? என்றேன்.

‘எங்க மிஸ் யாரு இங்கே இந்துனு கேட்டாங்க... ஒருத்தன்தான் கையைத் தூக்கினான். நான் இந்துனு தெரிஞ்சிருந்தா கையைத் தூக்கியிருக்கலாம். மிஸ் ஆகிடுச்சு!’ என்றவன், அடுத்து நான் முதலில் எதிர்பார்த்த கேள்வியைக் கேட்டான்.

‘இந்துனா எப்படித் தெரியும்?’ என்றான்.

‘நம்ம வீட்டிலே பூஜை ரூமில் பிள்ளையார், ராகவேந்திரா, ஆண்டாள் எல்லா படங்களும் இருக்குதில்லையா... அதை நீ கும்பிடுறே இல்லையா... அந்தச் சாமியைக் கும்பிடுறவங்க இந்து’ என்றேன்.

’அப்போ கிரிஸ்டியன்?’ என்றான்.

‘அவங்க ஜீஸஸைக் கும்பிடுவாங்க! நாம முன்னே இருந்த வீட்டுக்கு எதிரில் இருந்ததே சர்ச்... அதுதான் அவங்க கோவில்’ என்றேன்.

‘நாமகூட அங்கே போய் சாமி கும்பிட்டிருக்கோமே... கேண்டில் எல்லாம் ஏத்தினோமே... அப்போ நாம எப்படி இந்து?’ என்றான்.

‘இல்லைடா... எல்லா சாமியும் ஒண்ணுதான்...’ என்றேன்.

‘அப்போ வேற என்ன வித்தியாசம்?’ என்றான்.

‘இந்துனா தீபாவளி, பொங்கல் எல்லாம் கொண்டாடுவாங்க!” என்றேன்.

‘அப்போ கிரிஸ்டியன் என்ன கொண்டாடுவாங்க?’ என்றான்.

‘கிருஸ்துமஸ் கொண்டாடுவாங்க... ஸ்டார் எல்லாம் கட்டுவாங்க!’ என்றேன்.

‘நம்ம வீட்டுலயும் கிருஸ்துமஸ் ஸ்டார் கட்டினோமே...’ என்றான்.

’தம்பிக்கு ஸ்டார் பிடிக்குமேனு கட்டினேன்... அதோட ஸ்டார் போட்டப்ப வீடு எவ்ளோ அழகா இருந்தது... அதுவும் ஒரு காரணம்’ என்றேன்.

கொஞ்சநேரம் மவுனமாக இருந்தான்.

‘சரி, கிரிஸ்டியன், இந்து மாதிரி இன்னும் என்னவெல்லாம் இருக்கு? என்றான் அடுத்ததாக!

‘அது நிறைய இருக்கு...’ என்றேன்.

‘ஏதாவது சொல்லு என்றான் விடாப்பிடியாக.

‘முஸ்லிம், சீக், சமணம், புத்தம்னு நிறைய இருக்கு’ என்றேன்.

‘முஸ்லிம் எனக்குத் தெரியும்... என் பிரெண்ட் அர்ஷத் முஸ்லிம்தான்...’ என்றான்.

‘உனக்கு எப்படித் தெரியும், அவன் முஸ்லிம்னு’ என்றேன். அதற்கு பதில் அவனுக்குத் தெரியவில்லை.

‘ஆனால், அவன் என் பெஸ்ட் ஃபிரெண்ட் தெரியுமா? ரெண்டுபேரையும் எங்க மிஸ் சேட்டை பண்ணினோம்னு நிக்க வெச்சிருக்காங்க...’ என்றவன், தொடர்ந்து, ‘சீக்னா எப்படி இருப்பாங்க?’ என்றான்.

’டர்பன் கட்டி தாடி வெச்சு!’ என்றதும் நம்ம மினிஸ்டர் மாதிரியா? என்றான்.

அவனுடைய அப்சர்வேஷன் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

‘எனக்கு அது ரொம்பப் பிடிக்கும் என்றான்.

சமணம் பற்றியும் புத்தம் பற்றியும் அவனிடம் எந்தக் கேள்விகளும் இல்லை. என்னிடமும் விளக்கங்கள் இல்லை.

உறங்கப் போகும் முன் திடீரென்று ‘நல்லவேளை, நான் எஸ்கேப்... மிஸ் யாரு இந்துனு கேட்டப்போ நான் கை தூக்கலை!’ என்று சொல்லிவிட்டுத் தூங்கிவிட்டான்.

நான் யாரு என்று அவன் கேட்டபோது, ‘நீ இந்து என்று சொல்லியிருக்கக் கூடாதோ என்று தோன்றியது!

ஆனால், வேறு என்ன சொல்வது?

14 comments:

ஜெட்லி... said...

//ஆனால், வேறு என்ன சொல்வது///


இந்தியன்னு சொல்லுங்க சார் ....
நமக்கு அப்புறம் பசங்களாவது
மத அடையாளம் இல்லாமல்
இருக்கட்டும்

ரோஸ்விக் said...

மதங்களை அவர்களிடம் புகுத்த வேண்டாம். அவர்கள் நல்வழியில் செல்ல சில நேரங்களில் கடவுளை சொல்லி பயமுறுத்த வேண்டியிருக்கிறது. :-(

அனால், தீவிரமான மத அடையாளங்களை அவர்களுக்கு அளிக்காமல் இருப்பது நலம் என்பது என் கருத்து. :-)

Vijay said...

இன்னிக்குத்தான் உங்க பிளாக் பக்கம் வரேன். நெல்லை சேவியர் காலேஜ் பக்கத்துல மரியா கேண்டீன்’னு ஒண்ணு இருந்தது. அதைத்தான் உங்க பதிவுல் பெயரா வச்சிருக்கீங்களா???

சி. முருகேஷ் பாபு said...

நன்றி ஜெட்லி
நன்றி ரோஸ்விக்...

ஆமாம் விஜய்... அதே கேண்டீன் தான்... நான் சேவியர்ஸ்ல படிச்சேன்... அதனால் அந்த நினைவுகள்!

கிளியனூர் இஸ்மத் said...

//ஆனால், வேறு என்ன சொல்வது///

நீ யாருன்னு கேட்டா மனிதன் என்று சொல்லிக் கொடுங்கோ....நம்நாட்டுல மனுசங்க ரொம்பக்குறைவு...

ungalrasigan.blogspot.com said...

நண்பர் முருகேஷ்பாபு! இன்றைக்குத்தான் யதேச்சையாக தமிழிஷ் மூலம் தங்கள் ‘ம்ரியா கேண்டீ’னுக்கு வந்தேன். மதம் பற்றிய பதிவு அருமை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சாதி, மத அடையாளங்கள் இருந்தே தீரும். நம் அரசியல்வியாதிகள் அவற்றைத் தங்கள் கடைசி மூச்சு உள்ளவரையில் பேணிப் பாதுகாப்பார்கள். எனவே, அவற்றைக் குழந்தைகளிடமிருந்து ஒளித்துவிடுவது என்பது சாத்தியமில்லை. ஆனால், அவர்களுக்குச் சாதி வெறி, மத வெறி இல்லாமல் செய்துவிட நம்மால் முடியும். நாம் செய்யக்கூடியதும் அதுதான். வீட்டில் ஸ்டார் கட்டிக் குதூகலித்ததன் மூலம் நீங்களும் அதைத்தான் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

சி. முருகேஷ் பாபு said...

வருகைக்கு நன்றி இஸ்மத்

ரவி பிரகாஷ் சார்... ரொம்ப தேங்க்ஸ்

நா.இரமேஷ் குமார் said...

//வீட்டில் ஸ்டார் கட்டிக் குதூகலித்ததன் மூலம் நீங்களும் அதைத்தான் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!//

அப்படியே ரமலானுக்கு பிரியாணி போடுங்க பாஸ்

அமிர்தவர்ஷினி அம்மா said...

சில நேரங்களில் இப்படித்தான் குழந்தைகள் போகிற போக்கில் ஒரு கேள்வியை கேட்டு யோசிக்க வைத்துவிடுகிறார்கள் !

Jayaprakash Sampath said...

தன்னோட மாணவன், இந்துவா கிறிஸ்டியனான்னு எதுக்காக மிஸ் தெரிஞ்சிக்க முயற்சி செஞ்சாங்கன்னு விசாரிச்சீங்களா?

சி. முருகேஷ் பாபு said...

ரமேஷ், பிரியாணி வேணும்னா கேளுப்பா... எதுக்கு ரமலான் வரைக்கும்!

அமிர்தவர்ஷினி அம்மா, குழந்தைகள்தான் நம்மை தொலைந்துபோகாமல் மீட்டு எடுக்கிறார்கள்.

பிரகாஷ் சார்,
என் மகனின் பள்ளிக்கூடத்தில் சாதிச் சான்றிதழ்கூடக் கேட்டதில்லை. கொஞ்சம் இந்து சார்ந்த பிரேயராக இருந்தாலும் மதம் வளர்க்காத பள்ளிக்கூடம்தான்!
மிஸ் ஏன் கேட்டார்கள் என்பது பற்றி என் மகனிடம் பதில் இல்லை!

சி. முருகேஷ் பாபு said...

ஸாரி கிருஷ்ணா உங்களை வரவேற்க மிஸ் பண்ணிட்டேன்...

butterfly Surya said...

ஒரு கேள்வி கேட்டு மண்டைய குடைய வைப்பாங்க குழந்தைகள்..அவர்கள் உலகமே அலாதி..

என் டீச்சருக்கு கூட நான் பயந்ததில்லை..

கிருஷ்ணா said...

//ஸாரி கிருஷ்ணா உங்களை வரவேற்க மிஸ் பண்ணிட்டேன்...//

Do you know who is Krishna ?

Krishnakumar Chidambaram