Thursday, November 26, 2009

மன்மோகன் சிங்கைக் கடித்த பாம்பைச் சுட்ட விஜய்!


செக்கச் செவேலென அந்தப்புரம் சினிமாவில் வருவது போன்ற செவ்வக் காட்டின் நடுவே எங்கள் வீடு... இப்போ இருக்கும் வீடு இல்லை... இதைக் கட்டுவதற்கு முன்பு இருந்த வீடு. காரை பெயர்ந்தும் லேசாக செம்மண் வழிந்தும் இருக்கும் வீடு... அந்த வீட்டில் எனக்கு மிகவும் பிடித்த இடமான முன்பக்கத்து குச்சிலில் உட்கார்ந்து நேற்று புதிதாக வாங்கிய கார்போன் மொபைலில் பேசிக் கொண்டிருந்தேன்.

ஜன்னலோரமாக நின்று பேசிக் கொண்டிருந்த என் கவனத்தை ஈர்த்தாள் என்னோடு அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் படித்த கிருஷ்ணம்மாள். இப்போ போலீஸ் வேலையில் இருக்கிறாள். ஆனால் நான் பார்த்தபோது அவள் யூனிஃபார்மில் இல்லை. நைட்டி போல ஒரு உடையை அணிந்துகொண்டு என்னை நோக்கி வந்தாள். ஜன்னல் வழியே கைகளை வெளியே நீட்டி அவள் கரங்களைப் பிடித்து நலம் விசாரித்தேன்.

மலர்ந்த கண்களோடு கைகளை எட்டிப் பிடித்தவள், சட்டென்று கணநேரத்தில் முகம் மாறி கண்களில் நீரோடு கைகளை விடுவித்துக் கொண்டு போனாள். சற்று தள்ளி இரண்டு காவலர்களும் ஒரு காவலப் பெண்ணும் சீருடையில் இருக்க, கிருஷ்ணம்மாளும் சீருடை அணிந்தபடி அழுத கண்களோடு அவர்கள் பின்னால் நடந்து சென்றாள்.

நான் கைபேசி உரையாடலைத் தொடர்ந்தபடி அண்ணாந்து பார்த்தேன். சிதிலமகி இருந்த என் வீட்டுக் குச்சிலுக்கு மேலே படர்ந்திருந்த பெரிய மரத்தின் கிளையில் பெரிய பாம்பொன்று நகரமுடியாமல் நகர்ந்து கீழிறங்கிக் கொண்டிருந்தது. நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்த கணத்தில் குச்சிலுக்கு உள்ளே நுழைந்த என் தாயும் அந்தப் பாம்பைப் பார்த்துவிட்டார்.

நம்ம வீட்டு பாம்புதான் அது என்று அம்மா எனக்கு அந்தப் பாம்பை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த நொடியில் அந்தப் பாம்பு மரத்தில் இருந்த மிகப் பெரிய பொந்துக்குள் தன்னை நுழைக்கத் தொடங்கியிருந்தது.

நம்ம வீட்டுப் பாம்பு அதுக்குள்ளே போகாதே... இது வேற ஏதோ பாம்பு! என்று பதறிய அம்மா, குச்சிலுக்குக் கீழே இருந்த பங்கருக்குள் படுத்திருந்த அப்பாவை எழுப்பச் சொன்னாள். அப்பா என் பிள்ளைகளுக்காக வாங்கிப் போட்டிருந்த இரண்டு அடுக்குக் கட்டிலின் கீழ் பாகத்தில் படுத்திருந்தார். மேலே உள்ள கட்டிலில் தலைவரையில் போர்த்திக் கொண்டு படுத்திருந்தது யார் என்று தெரியவில்லை.

சின்னதாகக் குரல் எழுப்பியும் சைகை காட்டியும் அப்பாவை எழுப்பிவிட்டேன். மேலே பொந்துக்குள் நுழைந்த பாம்பு அதன் வழியாகக் கீழிறங்கி கட்டிலில் நகரத் தொடங்கியது. மேல் கட்டிலில் படுத்திருந்தவரின் அருகில் நீளமாகக் கிடந்த பாம்பு புஸ் புஸ் என்று மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது.

பங்கரை விட்டு வெளியே வந்த அப்பாவிடம் பாம்பு பற்றிச் சொன்னதும் அய்யோ என் பை என்றபடி மறுபடியும் பங்கருக்குள் நுழைந்து தன் பையை எடுத்துக் கொண்டு வெளியேறும்போது தன்னையறியாமல் கட்டிலை அசைத்ததோடு லேசாக கத்தியும் விட்டார்.

அப்பா போட்ட சத்தத்தில் மேல் கட்டிலில் படுத்திருந்தவர் போர்வையை விலக்க... அட... தலை டர்பன், தாடி சகிதம் மன்மோகன் சிங்! போர்வையை விலக்கிப் பார்த்த மன்மோகன் சிங் மூக்கருகே இருந்த பாம்பு படக்கென்று அவர் மூக்கைக் கடித்துவிட்டது.

என்ன நினைத்ததோ கடித்தவேகத்தில் சரசரவென்று கீழிறங்கத் தொடங்கியது. நானும் அப்பாவும் வேகமாக மேலேறி வந்து பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு பார்க்க, என் வீட்டு குச்சிலின் வாசலில் நின்ற இளைய தளபதி விஜய் அந்தப் பாம்பை தன் கைத்துப்பாக்கியால் பட்டென்று சுட்டு வீழ்த்தினார்.

இந்தத் துப்பாக்கி சத்தம் கேட்டு நான் கண்விழித்தபோது மணி மூன்றரை! நான் திடுக்கிட்டு எழுந்த சத்தத்தில் விழித்த மனைவி என்ன கனவா..? என்றார்.

ஆமா... பாம்பு கனவு? என்றேன்.

கனவுல வந்த பாம்பு கடிச்சுதா, இல்லை போயிடுச்சா... ஏன்னா, கனவுல பாம்பு கடிச்சாத்தான் நல்லது நடக்கும்பாங்க!” என்றார்.

கடிச்சுடுச்சு! என்று சொல்லிவிட்டு மொடக்கென்று தண்ணீரைக் குடித்தேன்.

அப்போ நல்ல விஷயம் நடக்கும் என்று சொல்லிவிட்டு தூக்கத்தைத் தொடர்ந்தார் என் மனைவி.

யாருக்கு நல்ல விஷயம்... கனவு கண்ட எனக்கா, இல்லை கடிபட்ட மன்மோகன் சிங்குக்கா?!

7 comments:

கிருபாநந்தினி said...

ரெண்டு பேருக்கும் இல்லை. பாம்பைச் சுட்டு வீழ்த்திய இளைய தளபதி விஜய்க்குதான் நல்லது நடக்கப் போகுது! பார்த்துக்கிட்டே இருங்க!

நா.இரமேஷ் குமார் said...

கனவிலும் விஜய் துப்பாக்கியால சுடுறாரா ........அவ்வ்வ்வ் ......

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹை, நல்ல கனவுங்க.

தூங்கறதுக்கு முன்னாடி நியூஸையும், வேட்டைக்காரன் ட்ரெய்லரையும் பார்த்தீங்களோ? :))))

Unknown said...

கடிச்சா தானே நல்லது நடக்கும்.அப்ப கடிக்காட்டி கெட்டதுதான நடக்கும்.கெட்டது நடந்துடுச்சு.வேட்டைக்காரன் மூலமா அது நடந்துடுச்சு.பாபு தயவு செஞ்சு பாம்பு கனவெல்லாம் வரக்கூடாதுன்னு சாமிய கும்புட்டுக்கா.ஏன்னா நம்மால யாருக்கும் கெட்டது வரக்கூடாது.சரியா.

Chitra said...

முருகேஷ் சார், மரியா கான்டீன் பேரே கலக்கல். நீங்க நல்லா எழுதுறீங்க. தொடர்ந்து எழுதுங்க.
சேவியர்ஸ் ஸ்கூலில் படிச்சீங்களா?

Chitra said...

not for publishing in comment column:

chitrax@gmail.com
nammoorkaarar, blog moolamaa meet panrathil magilchi. ungalukku thiru.po.ma.raasamani sir, thiru.po.se.paandiyan sir ellaam theriyumaa?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உங்க ப்ளாக் பேர் கவர்ந்து தான் வந்தேன். இந்த பேர் எங்க ஊர் பார்க் ஆச்சே. எத்தனை மாணவர்களின் இளமைக் காலம் கழிந்த இடம். பாளை பள்ளியில் படித்தவரா? இப்படி எல்லாமா கனவு வரும் ?