Wednesday, June 16, 2010

என் குடும்ப மரம்!

இதுதான் வேர்!

சங்குபுரம்... ராயகிரிக்குப் பக்கத்தில் இருக்கிறது. ராயகிரி சேத்தூருக்குப் பக்கத்தில் இருக்கிறது. சேத்தூர் ராஜபாளையத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது.

ராஜபாளையம் இப்போதுதான் வறண்டபூமியாகிக் கொண்டிருக்கிறது. சேத்தூர் அதற்கு சில ஆண்டுகள் முன்னமே... ராயகிரி அதற்கும் பல ஆண்டுகள் முன்னதாகவே... அப்படியானால் சங்குபுரம் சில தலைமுறைகளுக்கு முன்னேயே வறண்டு போய்விட்டது.

அந்த வறட்சியின் கொடுமை தாங்காமல் கிருஷ்ணன் தன் மூன்று மகன்களையும் அழைத்துக் கொண்டு மனைவி வழி சொந்தங்கள் வாழும் ஊரைத் தேடி நடக்கிறார் பஞ்சம் பிழைக்க..! அந்த முதல் அடியில் இருந்துதான் என் குடும்ப சரித்திரம் தொடங்குகிறது! அதற்கு முன்பு கிருஷ்ணன் குடும்பம் என்னவாக இருந்தது, அவருடைய கிழவியை எப்படிக் கல்யாணம் முடித்துக் கொண்டார் என்பதைச் சொல்ல ஆளில்லை.

’பொண்டாட்டி ஊரோடு வந்துட்டாலும் மீசை முறுக்கைக் கைவிடாத மனுஷன். அவங்க கண் பார்வையில இருக்கலாமே ஒழிய கைநிழலுல இருக்கக் கூடாதுனு வைராக்கியமா வாழ்ந்த மனுஷன். சின்னதா ஒரு குடிலைப் போட்டுகிட்டு அன்னாடம் உழைச்சு குடும்பம் குழந்தைகளைக் காபந்து பண்ணிகிட்டுக் கிடந்த மனுஷனுக்குக் கை ஓய்ஞ்சு போனதும் ஊரு நினைப்பு வந்துடுச்சு. என் சுத்து சொந்தங்களை ஒரு எட்டு பார்த்துட்டு வந்துரட்டா...’னு சொல்லிட்டு சங்கோரத்துக்குப் புறப்பட்டுப் போனாரு உங்க தாத்தன். வெற்றிலையோடு குடும்ப வரலாற்றையும் போட்டு ஒதுக்கிக் கொண்டு சாறு ஒழுகும் வாயோடு கதை சொன்னாள் கடைசி வீட்டு ஆச்சி! அந்த கிருட்டினன் கிழவனின் மூன்றாவது மருமகள்.

போன மனுஷனைப் பத்தி ஒரு பூவுக் காலமா ஒரு தாக்கலும் இல்லை. என்னாச்சுனு வீட்டுப் பொம்பளை… அதான் எங்க மாமியார்காரி புலம்ப நடுள்ள பிள்ளையை அதான் எங்க சின்ன மச்சானைக் கையிலே புடிச்சுகிட்டுக் கிளம்பினாரு எங்க மாமியாரோட அண்ணன் பெரிய போத்தி. அதான் எங்க பெரியய்யா!

இன்னைக்கப் போல அன்னைக்கு காரு பஸ்ஸெல்லாம் பெருசாக் கிடையாதே... பெரிய போத்தியும் எங்க சின்ன மச்சானும் நடந்தே போகையிலே முக்கால்வாசி தூரம் கடந்திருக்கையிலே எதுத்தாப்புல வந்தான் ஏகாளி.

அய்யா... தாக்கல் கிடைச்சு வர்றீகளா... இல்லை தானா வர்றீங்களா... நேத்து ரத்திரி நம்ம கிட்டுனன் ஐயா தவறிப் போனாருன்னு மூச்சுவாங்கி நின்னான் ஏகாளி.

ஒருநாழிகை கலங்கி நின்ன பெரிய போத்தி, நீ அப்படியே போய் தங்கச்சிகிட்டே தகவல் சொல்லி கடைசிகாரியங்களை செய்யச் சொல்லிடு... நான் மருமவனைக் கூட்டிக்கிட்டு சங்கோரத்துக்குப் போறேன்னு சொல்லிட்டு நடையை விரசாப் போட்டாரு. மூத்த மகன் இருந்தாலும் அப்பனுக்குக் கொள்ளி போடுற பாக்கியம் அடுத்த மகனுக்குதான் அமைஞ்சுது. இதுதான் விதினு வெத்திலையைத் துப்பிட்டு வெள்ளைச் சேலையில் வாயைத் துடைச்சுகிட்டு போயிட்டா கடைசிவீட்டு ஆச்சி!

என்னதான் பஞ்சம்னு பாதை விலகி வந்துட்டாலும் தன் உசுரு சொந்த ஊருலதான் போகணும்னு வைரக்கியமா இருந்த எங்க தாத்தனோட தாத்தனை நினைக்கையில் பிரமிப்பா இருக்கு.

தாத்தனுக்கு அங்கே கொள்ளி போட்டு குடம் உடைக்கையிலே இங்கே கிழவிக்கு எல்லா காரியமும் ஆகி கண்ணீர் வத்திப் போச்சு! அதோட ஊர் தடமும் அழிஞ்சு சொந்த ஊரு குற்றாலம் பக்கத்துல இருக்கற கொட்டாகுளம்னு ஆகிப் போச்சு!
அங்கேதான் ஆரம்பிச்சது எங்க தாத்தனோட அப்பா சிதம்பரத்தோட சீரான ஆட்சி! அவரு பேரு சிதம்பரம்... ரயில்வே ஊழியர்... ஆனா, அங்கே அவரு பேரு சுப்பையா! ஏன் அப்படி?

சொல்றேன் அந்த சுவாரஸ்யமான கதையை!

4 comments:

Chitra said...

ரொம்ப நாள் கழித்து, ப்லாக் பக்கம் வந்து இருக்கீங்க..... வாங்க, வாங்க..... எப்படி இருக்கீங்க? நம்ம ஊர் பக்கம் உள்ள மண்ணின் மணம் - பெருமையோடு - பாசத்தோடு எழுதி இருக்கீங்க.... அருமை.

Ponchandar said...

கொட்டாகுளமா ??? நான் பிரானூர் பார்டர்ல பணிபுரிகிறேன். வீடு மின்நகர் அருகில்...கதையோட அடுத்த பாகம் எங்கே ? கொட்டாகுளத்தில் சிலரைத் தெரியும் ! ! மரியா கேண்டீன் பெயர் காரணம் தெரிஞ்சுக்கலாமா ? ஒவ்வொரு மாதமும் அங்கிருக்கும் மிலிட்டரி கேண்டீனுக்கு சென்று வருவேன். I am an Ex-Airforce person.

சி. முருகேஷ் பாபு said...

நன்றி சித்ரா, பொன் சந்தர்!

அன்பு சித்ரா, நீண்டநாட்களுக்குப் பிறகு இப்போதுதான் பிளாக் பக்கம் வர அவகாசம் கிடைத்தது.

பொன் சந்தர்... பிரானூர் பார்டரில் எங்கே வேலை செய்கிறீர்கள்?

pooda said...

சார் நீங்க விகடன்ல தானே... ஒர்க் பன்றீங்க...

இப்பவும் விகடன் குரூப்ல தானே இருக்கிறீங்க...

உங்க குழந்தைங்க நலமா...

5 வருஷத்துக்கு முன்னால உங்களை கொட்டாகுளத்தில் சந்தித்திருக்கிறேன்.

நான் யார் என்பது வேண்டாம்.