Friday, June 18, 2010

மணிரத்னம் காட்டும் திருநெல்வேலி எங்கே இருக்கிறது?

எல்லோரும் ராவணனைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், திருநெல்வேலிக்காரனான எனக்கு கொஞ்சமும் ஒட்டவில்லை, காரணம் கதையின் களமாகச் சொல்லப்படும் திருநெல்வேலி!
பொதுவாக கதையைப் பார்க்கும்போது இடத்தைப் பார்க்கக் கூடாது என்பார்கள். பொள்ளாச்சியில் படம் எடுத்துவிட்டு ஒரே ஒரு போர்டில் அபத்தமாக ராமநாதபுரம் என்று காட்டுவார்கள். இதிலும் அதேபோல, அங்கங்கே பைன் மரங்களும் ரப்பர் மரங்களும் எட்டிப் பார்த்தாலும் அதை திருநெல்வேலி மலைக் காடு என்று நம்புகிறோம். அதேபோல, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியையும் நம்புகிறோம். அதையெல்லாம் நான் குறைசொல்லவரவில்லை. என் வருத்தமெல்லாம் வேறு!
ரோஜாவின் காலத்தில் இருந்தே மணிரத்னத்துக்கு திருநெல்வேலியின் மீது கோபம் போலிருக்கிறது. அந்தத் தமிழைக் குதறி எடுக்கிறார். ராவணன் அதன் உச்சமாக இருக்கிறது. வாடே, போடே... என்னல... யான் இப்படி? என்பன போன்ற சில வார்த்தைகளை அங்கங்கே போட்டுவிட்டால் அது நெல்லைத் தமிழாகிவிடும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. அவருக்கு வசதிப்படும் நேரத்தில் வட்டார மொழி எட்டிப் பார்க்கிறது.
அந்த மொழியில் கோபம் எபபடி இருக்கும், சிருங்காரம் எப்படி இருக்கும், எக்காளம் எப்படி இருக்கும் என்றெல்லாம் கொஞ்சமும் ஹோம் ஒர்க் பண்ணாமல் தமிழின்மீது லாரியை ஏற்றியிருக்கிறார். அவருடைய உதவியாளராக இருந்த அழகம்பெருமாள் டும் டும் டும் படத்தில் காட்டிய திருநெல்வேலியைப் பார்த்தாவது கொஞ்சம் திருந்தியிருக்கலாம். இதிலும் போட்டோகிராபராக எட்டிப் பார்க்கும் அழகம்பெருமாள் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.
இன்னொருபக்கம், விக்ரமுக்கு ஊர் விக்கிரமசிங்கபுரம் என்கிறார். ஆனால், தங்கச்சி கல்யாணத்தைக் கொண்டுபோய் தங்கக் கோவில் மாதிரியான இடத்தில் நடத்துகிறார். மாப்பிள்ளை குஜரத் சேட்டு என்று சொல்லியிருந்தால்கூட கொஞ்சம் நம்பியிருக்கலாம். நீங்கள் ராவணனோடு சேர்த்து ராவண் எடுக்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் இதை சகித்துக் கொள்ள வேண்டுமா? ஏன், திருநெல்வேலியில் படம்பிடித்துக் கொண்டுபோய் பம்பாயில் காட்ட உங்களுக்கு தைரியம் இல்லையா? அப்படிக் காட்டினால் அம்பானி முதலாளி கோவிச்சுக்குவரோ?
இதையெல்லாமாவது பொறுத்துக் கொள்ளலாம். ப்ரியாமணி கல்யாணத்துக்கு முதல்நாள் மருதாணி வைக்கும் வைபவம் நடக்கிறது. ஒடுக்கப்பட்ட இனம் என்று பொங்கிப் பொங்கிப் பேசும் விக்ரம் அவர்களின் குலத்தில் மருதாணி என்பது எங்கே இருந்து வருகிறது சார்? எங்கள் ஊர் கல்யாணம் எப்படி நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா... உங்கள் சினிமா வசதிக்காக கொஞ்சம் மிகைப்படுத்தலாம்... அதற்காக சேட்டு வீட்டுக் கல்யாணமாக்கி விருந்தில் ஜாங்கிரி போடாதீர்கள்.
நீங்கள் ராமன் கோஷ்டியில் இருந்துகொண்டு ராவணன் எடுக்கிறீர்கள்... மேல்குடியில் இருந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையை அபத்தமாகச் சொல்கிறீர்கள் என்றெல்லாம் பெரிய குற்றச்சாட்டுகளை நான் வைக்கவில்லை. எங்க திருநெல்வேலி தமிழைக் கையில் எடுத்து காலி பண்ணாதீங்கனுதான் சொல்றேன்!

7 comments:

Chitra said...

அந்த மொழியில் கோபம் எபபடி இருக்கும், சிருங்காரம் எப்படி இருக்கும், எக்காளம் எப்படி இருக்கும் என்றெல்லாம் கொஞ்சமும் ஹோம் ஒர்க் பண்ணாமல் தமிழின்மீது லாரியை ஏற்றியிருக்கிறார்.

..... இந்த படத்திலேயுமா? இந்த ஆதங்கம் எனக்கும் உண்டு.

Blogeswari said...

Very well put across.

ஹரன்பிரசன்னா said...

சும்மா ல போட்டுவிட்டால் அது திருநெல்வேலி வழக்காகிவிடும் என்று மணிரத்னம் நினைத்து திருநெல்வேலி தமிழை குதறி எடுத்துவிட்டார். படத்தின் பல கொடுமைகளில் இதுவும் ஒன்று.

Kadarkarai Thangam.S said...

அருமை அருமை Suhasini Mani Ratnam Plz Visit this blog. She is writer of this film.

சி. முருகேஷ் பாபு said...

வருகைக்கு நன்றி சித்ரா, பிளாகேஸ்வரி,ஹரன் பிரசன்னா, கடற்கரை தங்கம்..!

ரமேஷ் வைத்யா said...

athaanee

Anonymous said...

//நீங்கள் ராவணனோடு சேர்த்து ராவண் எடுக்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் இதை சகித்துக் கொள்ள வேண்டுமா? //

Well Said

-jagan