Wednesday, November 11, 2009

கதையின் கதை - 2

இலையில் உட்கார்ந்து நிமிர்ந்து பார்த்தேன். கை வைத்த பனியன், சமையலறை அழுக்கு வேட்டி, துண்டுடன் கையில் கேசரி வாளியோடு பரிமாறக் காத்திருந்தார் கந்தன் சித்தப்பா, அதே குறுஞ்சிரிப்போடு!

சம்சாரி கதையின் முத்தாய்ப்பான வார்த்தைகள் இவை. அந்தக் கதையில் வலி நிறைந்த வார்த்தைகளும் அவைதான்! ஆனால், அந்த வரிகள் நூறு சதவிகிதம் நிஜம். அதிலும் கந்தன் சித்தப்பாவை அந்தக் கோலத்தில் நான் பார்த்தது என் சகோதரனின் திருமணத்தில்!

கந்தன் சித்தப்பாவின் சகோதரர் வீட்டில் இருந்து கொஞ்சநாளிலேயே மாற்றிக் கொண்டு மீண்டும் எங்கள் கிராமத்துக்கு வந்துவிட்டாலும் அந்தக் காம்பவுண்டில் இருந்த அத்தனை வீடுகளிலும் எங்கள் உறவு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அந்த வகையில் அந்த காம்பவுண்டில் எல்லோருடைய வீட்டுக்கும் பத்திரிகை வைத்துவிட்டுத்தான் வந்திருந்தோம். ஆனால், அவர் அப்போது சமையல் காண்ட்ரக்டரிடம் பறிமாறுபவராக வேலை பார்க்கும் விஷயம் தெரியாது. அதே சமையல் காண்ட்ராக்டரை நாங்கள் எங்கள் வீட்டு திருமணத்துக்கு அழைக்க, அவரை கெடுபிடி செய்து பறிமாற அழைத்து வந்துவிட்டார் சமையல்காரர்.

பத்திரிகை வைத்து அழைத்திருந்தாலும் அவரால் பந்தியில் உட்கார்ந்து சாப்பிடமுடியவில்லை. இந்தக் கதையில் ஒரு விவசாயி வீழ்ந்து போன சோகத்தைப் பதிவு செய்யும் நோக்கத்தில் சம்பவங்களை அமைத்துவிட்டேன். ஆனால், கல்யாணத்துக்கு முந்தையநாள் இரவும், பறிமாறும் வாளியோடு அவர் தயாரான தருணத்திலும் அவருடைய உள்மன போராட்டங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் பதிவு செய்யமுடியவில்லை.

என்னைப் பார்த்ததும் கந்தன் சித்தப்பா, ‘ஏய் பாபு... எப்படியிருக்கே... மெட்ராஸ்ல வேலை பாக்கியாமே... அண்ணாச்சி சொன்னாவோ! என்னடே இப்படிப் பாக்கே... வெள்ளை வேட்டி சட்டை பொட்டுகிட்டு நின்னா அழுக்காயிரும்லா!” என்றார் அதே குறுஞ்சிரிப்போடு! அந்தச் சிரிப்பு என்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தியது.

எத்தனை கந்தன் சித்தப்பாக்கள் விவசாயத்தைக் கைவிட்டு (அல்லது விவசாயம் அவர்களைக் கைவிட்டு) இப்படி நிற்கிறார்களோ..!

(இந்தக் கதை விகடனில் வந்த விஷயம் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு பிரதி வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். என்னுள் குறுகுறுக்கும் குற்ற உணர்வைப் போல அவரிடம் பத்திரமாக இருக்கிறது அந்தக் கதை!)

5 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

முந்தைய பாகத்தை விடவும் இதில் வந்த கந்தன் சித்தப்பா மிகவும் ஆக்ரமித்துவிட்டார் மனதை.

எத்தனை கந்தன் சித்தப்பாக்கள் விவசாயத்தைக் கைவிட்டு (அல்லது விவசாயம் அவர்களைக் கைவிட்டு) இப்படி நிற்கிறார்களோ..!
உண்மைதான்

கடைசிவரிகள் மிகவும் நெஞ்சை கனக்கச்செய்கிறது

Unknown said...

உங்களின் கல்லூரி ஆண்டு மலருக்கான கதையை போன்றதொரு கதை http://yananwritings.wordpress.com/2009/11/12/uravu/

Unknown said...

தொடர்பிற்கு முகவரி தெரியபடுத்தவும்.
sivamanipuram@gmail.com ற்கு
தோழமை தொடர விரும்பும் சிவா

ungalrasigan.blogspot.com said...

திரு.முருகேஷ்பாபு! தங்களின் சிறுகதை ஒவ்வொன்றுமே அருமைதான்! அதில் சந்தேகமே இல்லை. எனினும், தங்கள் வலைப்பூவில் சிறுகதைகளைவிட தங்கள் அனுபவங்களை (மகனும் மதமும் போன்று) அதிகம் பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. உங்கள் சிறுகதைகளைப் பத்திரிகைகளில்கூடப் படித்துக் கொள்ளலாம். அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேறு பொதுக் களம் இல்லையே!

கிருபாநந்தினி said...

கந்தன் சித்தப்பா பற்றிப் படித்தபோது அந்தக் கதையை உடனே படிக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு சின்ன குறிப்பு: அடர் நீல பின்னணியில் சிவப்பு எழுத்தில் போட்டால் படிக்கவே முடியவில்லை. வெள்ளையில் அல்லது மஞ்சளில் விட்டிருக்கலாம். இன்னொரு சின்ன குறிப்பு: பரிமாற என்பதற்குச் சின்ன ‘ரி’; பெரிய ‘றி’ அல்ல!