Tuesday, October 8, 2013

சு(த)ந்தரம் பெரியப்பா!

போனவாரம் ஊரிலிருந்து சுந்தரம் பெரியப்பா வந்திருந்தார். ஒரு போன்கூட செய்யவில்லை. ஏன் என்று அவரைக் கேட்க முடியாது. ‘என்னல சொல்லுத... மவன் வீட்டுக்கு அப்பன் வாரதுக்கு போன் பண்ணி அப்பாயின்மெண்ட் வாங்கணுமோடே!’ என்பார். ‘இல்ல பெரியப்பா... ஷூட்டிங், அதுஇதுனு எங்கனயாச்சும் போயிருந்தா... அதுக்குதான் கேட்டேன்...’ என்றால், அடுத்த நொடியே பதில் வரும்... ‘அதுக்கென்னல... மருமவ, புள்ளைய வீட்டுலதான இருப்பாங்க...’ என்பார்.
நான் ஷூட்டிங், மீட்டிங் என்று அலையும் தருணங்களில் மனைவிதான் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கும் கடைகளுக்கும் அழைத்துக் கொண்டு அலைவாள். அப்படியொரு நேரத்தில் இந்த பெரியப்பா வந்திருந்தால், ‘வீட்டப் பாத்துக்கறத விட மருமகளுக்கு அப்படி என்னடே வேல...’ என்பார். அவரைப் பொறுத்த அளவில் அவர் வரும்போதெல்லாம் கையில் செம்போடும் துண்டோடும் காத்திருக்கும் பெரியம்மாதான் சரியாக வீட்டைப் பார்த்துக் கொள்கிறவள். காய்கறி வாங்கக் கூட படியை விட்டு இறங்காத அவள்தான் வீட்டைப் பார்த்துக்கறவள்.
நல்லவேளையாக பெரியப்பா வந்த அந்த காலை நேரத்தில் நான் வீட்டில் இருந்தேன். முதல்நாள் இரவு லேட்டாக வந்து தூங்கியதால் ஏதோ கனவில் காலிங்பெல் அடிப்பது போலத்தான் இருந்தது. பக்கத்தில் படுத்திருந்த மனைவி முதல்நாள் மளிகைக்கடை, காய்கறிக் கடை, அந்தக் கடை இந்தக் கடை என்று சுற்றிய அலுப்பில் படுத்திருந்தாள். யாருனு பாருங்க... பால்காரர்னா நாளைக்கு பால் வேணாம்னு சொல்லுங்க...’ என்றாள்.
நான் அரைத் தூக்கத்தோடுதான் கதவைத் திறந்தேன்... ‘என்னடே... இப்பந்தான் எந்திரிக்கியோ..?’ என்ற வார்த்தைகள் முன்னே வர விடுவிடுவென்று உள்ளே நுழைந்தார் பெரியப்பா. ‘அவளை எங்கடே..? இந்த சோபாவை எதுக்குடே வாங்கியிருக்க... பேப்பர் போட்டு வைக்கதுக்கா..?’ என்றபடி சோபாவில் கிடந்த பேப்பர்களை எடுத்து அடுக்கத் தொடங்கிவிட்டார்.
அதுதான் பெரியப்பா... அவருக்கு எல்லாமே வைத்த இடத்தில் இருக்க வேண்டும். பெரிய டைம் டேபிளே வைத்திருப்பார். காலையில் ஆறரை மணிக்கு மேல படுக்கையிலே படுத்திருக்கக் கூடாது. ரெண்டுமுறை குரல் கொடுப்பார்... மூன்றாவது முறை கன்னத்தில் கொடுப்பார். பல் விளக்க பத்து நிமிஷம்... குளிக்க பத்து நிமிஷம், சாப்பிட பத்துநிமிஷம் என்று அவர் டைம் டேபிளில் எல்லாத்துக்குமே பத்து நிமிஷம்தான்!
‘என்னங்க… பால்காரன்கிட்டே சொல்லிட்டீங்களா..?’ என்ற மனைவியை உலுக்கி எழுப்பி, ‘இல்லே… நீ பாத்ரூம்ல இருக்கேனு சொல்லியிருக்கேன்…; என்றதும் கன்ஃப்யூஸ் ஆகி கண்ணை விழித்தாள். பெரியப்பா வந்திருக்கும் விஷயத்தைச் சொல்லி அவளை பாத்ரூமுக்குள் தள்ளினேன். முகத்தைக் கழுவிக் கொண்டு வெளியே வந்தாள். அதற்குள் பெரியப்பா இன்னொரு பாத்ரூமில் காலைக் கடமைகளை முடித்துவிட்டு குளித்திருந்தார். (கரெக்ட்… பத்து நிமிடத்தில்தான்!)
‘என்னடே… ஒரு மனுஷன் வந்திருக்கானே… ஊர்ல பெரியம்ம எப்படி இருக்கா… மேலுகாலெல்லாம் சும்மா இருக்கானு ஒரு வார்த்தை கேட்கணும்னு தோணலையோ… என்ன புள்ள நீ…’ என்ற பெரியப்பா, ‘என்னம்மா… ஊர்ல அம்மா அப்பா சும்மா இருக்காங்களா… என்ன டிபன் பண்ணப் போறே…?’ என்றபடி பெட்ரூமை எட்டிப் பார்த்தார். பிள்ளைகள் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தன.
‘என்னம்மா… நீ கோழிகூப்புட எந்திரிச்சா போதுமா… பிள்ளைகளையும் எழுப்பி விட்டு பழக்கணும்… அப்பதானே நாளைப்பின்னே நம்ம புள்ளைகளும் நல்லா வளரும்…’ என்றபடி உள்ளே நுழைந்து பிள்ளைகளின் முதுகில் ரெண்டு போட்டு எழுப்பி விட்டார். கிடுகிடுவென்று போர்வைகளை இழுத்துப் போட்டு மடித்து வைத்தார். கையில் டீயுடன் வந்த மனைவி, ‘நீங்க எதுக்கு மாமா இதையெல்லாம் பண்ணிகிட்டு…’ என்றாள். அந்த அடிகளெல்லாம் என் முதுகில் விழுந்த காலம் நினைவில் வந்து போனது. அவர் கடிகாரத்துக்குதான் நாங்களெல்லாம் கட்டுப்பட வேண்டும்.
‘இதென்ன காபியா… காலைல நான் நீராகாரம்தான் குடிப்பேன்… ஒரு சொம்பு கரிக்க உப்பு போட்டு கொண்டா…’ என்றார். ‘இது க்ரீன் டீ பெரியப்பா… ஆண்டி ஆக்ஸிடைன்ஸ் இருக்கு… உடம்புக்கு நல்லது…’ என்றேன். ‘சமாளிக்கியாக்கும்… வீட்டுல நீராகாரம் இருக்கறதுதாண்டா சம்சாரி வீட்டுக்கு லெச்சணம்…’ என்றார். எங்களுக்கு காலை சாப்பாடு நீராகாரத்தில்தான் தொடங்கும்.
ஏழு மணிக்கு எழுப்பியபோதே பாதி ராத்தியில் எழுப்பியது போல மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்ற பிள்ளைகள் கையில் பால் தம்ளரை திணித்தாள் மனைவி.
‘அதை இங்க கொண்டா... பல் தேய்க்காம பால் குடிக்கது என்ன பழக்கம்... பேரப்புள்ளைகளா... வாங்க இங்க...’ என்று இழுத்துக் கொண்டு போய் பால்கனியில் நிறுத்தி பல்லை விளக்கிவிட்டார். ‘அம்மா... இங்கனயே குளிக்க ஊத்திரட்டுமா... டவுரசக் கழற்றுடே...’ என்று என் மகனின் டவுசரைக் கழற்றி குளிக்க வைத்து துடைத்து வழிய வழிய எண்ணெய்யைத் தேய்த்துவிட்டார். திருத்தமாக விபூதி வேறு!
மனைவி பிள்ளைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கட்டி வைக்க, அதைத் திறந்து பார்த்த பெரியப்பா, ‘என்னம்மா... காக்காய்க்கு சோறு வைக்க மாரி கொறைய வச்சிருக்க... வளர்ற புள்ளைக நல்லாச் சாப்புட வேண்டாமா... நல்லா அள்ளி வை... என் மவன் படிக்கையிலே அவன் கொண்டு போற தூக்குச் சட்டி எப்படி இருக்கும் தெரியுமா..? என்ன புள்ள நீ...’ என்றவர், ‘இப்பம் சாப்புட என்ன வச்சிருக்க..?’ என்றார். என் மனைவி கெலாக்ஸ் பால் ஊத்தி என்று சொன்னது அவளுக்கே கேட்டிருக்குமா என்று தெரியவில்லை.
நான் பிள்ளைகளைக் கொண்டு போய் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வரும்போது பெரியப்பாவைக் காணவில்லை. ‘காய் வாங்கப் போயிருக்கார்...’ என்றாள் மனைவி.
எப்போதுமே வீட்டில் காய்கறி வாங்குவது அவர் வேலை. பச்சைப் பசேல் என்று அன்று விளைந்த காய்கள்தான் அவர் சாய்ஸ்! எங்க பெரியப்பா வந்து சொல்லும் வரையில் அன்று என்ன சமையல் என்று பெரியம்மாவுக்கே தெரியாது.
பெரிய மூட்டை போல காய்கறிகளோடு உள்ளே நுழைந்த பெரியப்பா, ‘யம்மா... பிஞ்சு கத்தரிக்காயா கிடந்துது... இதை நாலா வகுந்துபோட்டு எண்ணக் குழம்பு வெச்சிரு... தொட்டுக்கிட இந்த தடியங்காயப் போட்டு கடலைப்பருப்பு கூட்டு வெச்சிரு... முடிஞ்சா முட்டைக் கோஸை பொரிச்சிரு...’ என்றார்.
‘யப்பா... இன்னிக்கு ஒருநாள் சிப்ஸ் வெச்சு சாப்டுக்கறீங்களா...’ என்று கேட்கும் மனைவி திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றாள். நான் அவசரமாக பாத்ரூமுக்குள் நுழைந்தேன்.
பெரியப்பாவின் விஜயத்துக்கான காரணம் சாயங்காலம்வரை தெரியவில்லை. சாயங்காலமாக வீடு திரும்பியபோது வீடே தலைகீழாக இருந்தது.
‘பிள்ளைகள் இன்னைக்கு என்கூட படுக்கட்டும்... தாத்தா கதை சொல்றேன்...’ என்று அழைத்துக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தார் பெரியப்பா. பத்து நிமிஷத்துல தூங்கிறணும் என்ற பெரியப்பாவின் குரலும் சின்னவளின் அழுகையும் கேட்டது.
‘என்னங்க... ரொம்ப நாளா உங்க பிரவுன் சாக்ஸை காணோம்னு தேடிகிட்டிருந்தீங்களே... அது பீரோவுக்கு மேலே கிடந்துச்சு...’ என்றாள் என் மனைவி. ‘அங்கே உனக்கு என்ன வேலை..?’ என்றேன். ‘நானா... உங்க பெரியப்பா... வீட்டையே தூசி தொடைக்கிறேன்னு துவம்சம் பண்ணிட்டார்... எனக்கே கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு... கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க மாமானு கேட்டதுக்கு, ‘இந்த வயசுல என்னம்மா ரெஸ்ட் வேண்டியிருக்கு’னுட்டார்.... மாமாவுக்கு இப்ப என்ன வயசு?’ என்றாள். ‘இந்த கார்த்திகை வந்தா எழுபது முடியுது...’ என்று சொல்லிவிட்டுப் படுத்தேன்.
அடுத்தநாள் அலாரம் வைத்து எழுந்து வெளியே வரும்போது பிள்ளைகள் ரெண்டு பேரும் யூனிபார்முடன் உறங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். ‘பார்த்தியா... ஒரேநாள்ல எப்படி மாறிட்டாங்கனு... இன்னைக்கு ஆளுக்கு நாலு இட்லியைக் குடு... ஜம்முனு சாப்பிட்டுட்டு போவாங்க...’ என்றதும் என் பிள்ளைகள் அடைந்த அதிர்ச்சியை வாழ்நாளில் முதன்முறையாகப் பார்த்தேன்.
என் மனைவி மெதுவாக வாய்திறந்து, ‘அவங்களுக்கு இட்லி புடிக்காது...’ என்றாள். பெரிதாகச் சிரித்த பெரியப்பா, ‘புள்ளைகளுக்கு எது நல்லது கெட்டதுனு எப்படித் தெரியும்... நாம குடுக்கறதை நம்ம புள்ளைகள் சாப்பிடணும்... அதான் சரி...’ என்றார். நான் அவசரமாக பேண்ட்டை மாட்டிக் கொண்டு பைக்கை எடுக்க கீழிறங்கினேன்.
ஊரில் யாரோ ஒருவரின் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்களாம். அந்த மாப்பிள்ளை எப்படிப்பட்டவர் என்று விசாரிக்கத்தான் வந்திருக்கிறார். என்னை அழைத்தார். நான் ஷூட்டிங் இருக்கேப்பா... என்றதும் ஊர்ல இருக்கறவங்க நம்ம சொல்ற வார்த்தையை நம்பி இருக்காங்க... நாம உதவலைன்னா எப்படி... உன் கல்யாணத்துல அவன் ரெண்டுநாள் மண்டபத்து ஆக்குப்பறைல கிடையாக் கெடந்தான்... தெரியுமா..? என்றார். எனக்கு இந்த ஈக்வேஷன் புரியவில்லை.
பெரியப்பா அவராகவே போய்விட்டார். முழுக்க விசாரித்து முழு திருப்தியோடு ஊருக்கு கிளம்பினார். புறப்படும்போது பிள்ளைகளை அழைத்துக் கொண்டுபோய் அதிரசம் வாங்கிக் கொடுத்து கூட்டி வந்தார். ‘என்ன்லே... இந்தப் பயலுவ கடைக்குள்ள போனதும் கலர் கலரா சிப்ஸ் பாக்கெட்டை பெறக்குதானுவ... நாம வாங்கிக் குடுக்கதைத் திங்க பழக வேண்டாமா... அதான் அதிரசம் வாங்கிக் குடுத்தேன்...’ என்றவர், என் மனைவி பக்கம் திரும்பினார்.
‘என்னம்மா... இப்ப சரஸ்வதி பூசை லீவு வரும்லா... நாலு நாளைக்கு புள்ளைகளக் கூட்டிட்டு வாயேன்... மிசினு மாரி இல்லாம நினைச்சபடிக்கு சுதந்திரமா இருந்துட்டு வரலாம்ல...’ என்றார் சுந்தரம் பெரியப்பா.

1 comment:

Silvester said...

நான் கூட நம்ம கூட படிச்ச பெரியப்பா என்று நினைத்து விட்டேன்!!. எங்கே இருக்கிறான்அந்த பயன்?