Tuesday, October 29, 2013

மாரியப்பன் டெய்லர்!

 
எங்கள் வீட்டுக்கு தீபாவளி எப்போதுமே டெய்லர் சித்தப்பா மூலமாகத்தான் வரும்! அப்பா துணி எடுத்துவிட்டு வந்து இறங்கும்போதே, ‘மாரியப்பா... வீட்டுக்கு வா..!’ என்பார். கையில் டேப்போடு வந்துவிடுவார்.

துணியின் நிறத்தை வைத்தே அது எனக்கு எடுக்கப்பட்டதா இல்லை அண்ணனுக்கு எடுக்கப்பட்டதா என்பதைச் சொல்லிவிடும் சாமர்த்தியம் எப்போதுமே அவருக்கு உண்டு. கரெக்டாக துணியை எடுத்து அளந்து பார்த்துவிட்டு, ‘பாபு... வாடே..’ என்றபடி அளவெடுப்பார். உயரத்தை அளந்துகொண்டிருக்கும்போதே, பார்வை அப்பா பக்கம் போகும். அவர் போதும் என்று சொல்லும் வரையில் அளவு நீண்டுகொண்டேபோகும். முழுக்கை வேண்டாம் என்று ஈனஸ்வரத்தில் முனகுவேன். ‘துணி வீணாப் போயிரும்... முழுக்கை வெச்சிரு...’ என்பார் அப்பா.

ரெண்டு பாக்கெட்... மூடி வெச்ச பாக்கெட் என்று நான் சொல்லும் மாடலைவிட, ‘ரவுடிப் பயலுக்கு தைக்க மாரி தைச்சுறாத... படிக்க புள்ள போடுத சட்ட... பாத்து தை...’ என்ற அப்பாவின் வார்த்தைகள்தான் எடுபடும்.

அளவெல்லாம் எடுத்து முடித்த பிறகு தலையைச் சொறிவார் டெய்லர். ‘கேன்வாஸ் வாங்கணும்... பட்டன் வாங்கணும்... தீவாளி செலவு இருக்கு...’ என்ற டெய்லரின் வாயை நூறு ரூபாயால் அடைப்பார் அப்பா.

நம்பர் கடை பக்கம் பார்த்தேன்... தொலைச்சுருவேன்...’ என்ற அப்பாவுக்கு தெரியும், அந்த நூறு ரூபாய் எங்கே மாற்றப்படும் என்று..!எனக்கும் தெரியும் எந்தச் சமயத்தில் போனால் அளவு மாறும் என்று..! தீபாவளி அன்று அப்பா கண்டுபிடித்துவிடுவார்... ஆனால், அன்று டெய்லரிடம் போய்ப் பேசமுடியாது. ஏனெறால் அவர் கேட்கும் நிலையில் இருக்கமாட்டார்.

ஒருகட்டத்துக்குப் பிறகு டெய்லர் கடை எங்கள் சங்கமாகிவிட்டது. அங்கேதான் அரட்டை..! முன்னால் கடை... பின்னால் வீடு என்று டெய்லருக்கும் தொழிலும் குடும்பமும் ஒன்றாகவே இருந்தது. கடையையும் வீட்டையும் பிரிக்கும் நடையில் அமர்ந்துதான் பீடி சுற்றுவாள் வள்ளி சித்தி... டெய்லர் சித்தப்பாவின் மனைவி.

கண் பார்க்கும் வேலைய கை செய்யணும்டே... அதுதான் கலை..!’ என்பார் அடிக்கடி. அது உண்மைதான் என்பது போல அவருடைய கைகள் துணியில் நாட்டியமாடும். ஆளைப் பார்த்தே அளவெடுத்துவிடுவார். ஆனால், எதுவாக இருந்தாலும் சாயங்காலம் ஆறு மணிவரைதான். அதன்பிறகு அளவெல்லாம் இழவாகிவிடும். கோடி ரூபாய் கொடுத்தால்கூட லுங்கியைக்கூட மூட்டமாட்டார்.

ஊருக்குள் எல்லா நல்லது கெட்டதுகளுக்கும் அவர்தான். கொஞ்சநாளில் இன்னும் சில தையல் கடைகள் எங்கள் ஊருக்குள் முளைத்தன. சட்டென்று பெரிய ரேக் செய்து கடையில் வைத்து துணிகளை வாங்கி வைத்து விற்கத் தொடங்கினார். ஆனால், ஊருக்குள் இழவு விழுந்தால் கோடித் துணி வாங்க மட்டுமே அவரிடம் போனார்கள். அதனால் எல்லா துணிகளையும் விற்றுவிட்டு கடையில் அந்த கண்ணாடி ரேக்கையும் விற்றுவிட்டார்.

எனக்கு முதன்முதலாக பேண்ட் அவர்தான் தைத்தார். டவுசர் வரைக்கும் ஓகே... நான் பேண்டை தென்காசியிலே தைச்சுக்கிறேனே என்றபோது யூனிஃபார்ம்தானே... மாரியப்பன்கிட்டேயே குடு என்று அப்பா அதட்டல் போட துணி கைமாறியது.

ஆனால், அவர் பேண்ட் தைத்துக் கொடுத்ததுபோல அத்தனை கச்சிதமான பேண்ட் இதுவரையில் எனக்கு அமையவில்லை. என் உடலோடு ஒட்டியும் இருந்தது. உட்கார கொள்ள வசதியாகவும் இருந்தது. ஆனாலும் அடுத்தடுத்த பேண்ட்களை தென்காசியில் கொண்டுபோய்க் கொடுத்தேன்.

கால சுழற்சியில் சாராயம் குடித்துக் கொண்டிருந்த மாரியப்பன் டெய்லர் கசாயத்துக்கு இறங்கினார். அதுவும் பகலிலேயே..! அப்போது யாரோ சில பெண்கள் அவரிடம் ஜாக்கெட் தைக்கக் கொடுத்துக் கொண்டிருந்தனர். நூல் கோர்க்க முடியாத அளவுக்கு கைகள் நடுங்கின.

வள்ளி சித்தி பீடி சுற்றலில் அந்த குடும்பம் சுழலத் தொடங்கியது. ஊருக்குள் யாரோ இறந்தபோது நானும் பாடை தூக்கி வருவேன் என்று பிடிவாதமாக தொங்கிக் கொண்டே வந்தார். ‘சின்யா... ஒன்ன தனியா ஒருநா தூக்கிட்டுப் போறோம்யா... விடுய்யா...’ என்று வேடிக்கையாகச் சொன்னபோதுகூட விடவில்லை.

அவம் குடிச்சுட்டு அழுவுதான்னு நினைக்காத... இன்னைக்கு பகல்குடிகாரனாகிட்டாங்கறது வாஸ்தவம்தான்... ஆனா, மெட்ராஸ்ல தொழில் பழகிட்டு வந்து கட வெச்சப்ப இவருதான முத சட்டையக் குடுத்தாரு... அது அவன் நினைப்புல இருக்கும்லா... என்று மயானக் கரையில் ஒருவர் சொல்லக் கேட்டபோது எனக்கு மாரியப்பன் டெய்லர் பகலிலேயே குடிக்கத் தொடங்கிய நாள் நினைவுக்கு வந்தது.

அன்றுதான் வெளியூர் சென்று திரும்பிய நண்பன் ஒருவன் தான் வாங்கி வந்த ரெடிமேட் சட்டைகளை கடையில் வைத்து எங்களிடம் காட்டினான்.

No comments: