Sunday, November 3, 2013

வேடந்தாங்கல்!

தொகுப்பு எழுதினால்தான் சமர்ப்பணம் போடணுமா என்ன... இந்தக் கட்டுரை தமயந்தி அக்காவுக்கு சமர்ப்பணம்..! முகநூலில் அவர் எழுதிய தெற்கு பஜார் என்ற திருநெல்வேலி குறிப்புகள்தான் எனக்கு வேலு அண்ணனை நினைவுக்குக் கொண்டு வந்தது. இத்தனைக்கும் அவர் தெற்கு பஜார்காரர் இல்லை... அதைத்தாண்டி மார்க்கெட் முக்குல அன்னபூர்ணாவுக்கு எதுத்தாப்ல பப்ளிக் டெலிபோன் பூத் வெச்சிருந்தார்.

வெள்ளைச் சட்டை, குங்குமப் பொட்டு என்று அவர் தோரணையே கம்பீரமாக இருக்கும். நாற்காலியில் காலை மடித்துப் போட்டு ஸ்டைலாக உட்கார்ந்திருப்பார். கழுத்தில் மின்னும் சங்கிலி, வலது கையில் வாட்ச், விரலில் அகல மோதிரம் என்று பவுசுக்கும் குறைவிருக்காது. அவருடைய டெலிபோன் பூத் ஓரமாக நிற்கும் சக்கர வண்டியைப் பார்க்காவிட்டால் வேலு அண்ணன் போலியோவால் பாதிக்கப்பட்டவர் என்பதை நம்பவே முடியாது.

அவரால் நடக்க முடியாது என்றாலும் அவர் வாயில் இருந்து நடக்காது... நடத்த முடியாது என்ற வார்த்தைகளே வராது. எதைச் சொன்னாலும் செஞ்சுடலாம் தம்பி என்றுதான் ஆரம்பிப்பார். ஒருவேளை அது அவர் சக்திக்கு மிஞ்சிய விஷயமாக இருந்தால், செஞ்சுடலாம் தம்பி.,.. ஆனா, அதுல இப்படியாப்பட்ட சிக்கல் இருக்கு... அதை மீறி உனக்கு இந்த விஷயத்தைச் செய்யணுமானு யோசனை பண்ணிக்கோ! என்பார். நமக்கே அது தேவையில்லை என்று தோன்றிவிடும்!

திருநெல்வேலியில் எந்த தியேட்டராக இருந்தாலும் வேலு அண்ணன் பேரைச் சொன்னால் எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் வாங்கலாம். அது அவர் மேல் பரிதாபப்பட்டு கிடைப்பது அல்ல... கவுண்டரில் டிக்கெட் கிழிப்பவர் தொடங்கி, முறுக்கு விற்பவர் வரைக்கும் (இந்த பட்டியலில் முதலாளிகள் உண்டா என்று தெரியாது) வேலு அண்ணனிடம் கடன்பட்டிருப்பார்கள்.

அவருடைய மூன்று சக்கர சைக்கிள் பூத் ஓரமாகக் கிடக்குமே தவிர ஒருநாளும் வேலு அண்ணன் அதை ஓட்டிப் பார்த்ததில்லை. வீட்டில் புறப்பட்டு ரெடியாக இருந்துகொண்டு கடைக்கு போன் அடிப்பார். கடையில் இருந்து யாராவது சைக்கிளில் போய் அழைத்துக் கொண்டு வருவார்கள். அதேபோல மதியம் சாப்பாட்டுக்கு போகும்போதும் யாராவது அழைத்துக் கொண்டு போவார்கள். கடைக்கு வரும்போதே பவுடர் மின்னும். ஆனாலும் வந்தவுடனேயே ஒரு கோட்டிங் கொடுத்துக் கொள்வார். அதேபோல கடையைவிட்டு புறப்படும்போது ஒரு கோட்டிங் அடித்துவிட்டுதான் புறப்படுவார்.

வேலு அண்ணனோடு கூடப் பிறந்தவர்கள் நாலைந்து பேர் உண்டு. ஆனால், ஒருநாளும் அந்த டெலிபோன் பூத்தில் அவருடைய சொந்தம் என்று யாரையும் பார்த்தது இல்லை. எப்போதும் நண்பர்கள் புடைசூழத்தான் இருப்பார்.

மாரியப்பன், செந்தில் மூலமாகத்தான் நான் வேலு அண்ணனுக்கு அறிமுகம் ஆனேன். முதல்நாளே என்ன தோழா... உங்க ரத்த வகை என்ன..? என்றார். ஓ பாசிட்டிவ் என்றேன். சின்னக் குழந்தைக்கு ரத்தம் குடுத்தீங்களாமே... வெரிகுட்... என்கிட்டே யாராச்சும் கேட்டா சொல்றேன் என்றார். நீங்க ரத்தம் குடுப்பீங்களாண்ணே... என்றேன். என்னை அறியாமல் என் கண்கள் காலைப் பார்த்தன. ரத்தம் கையிலேதானே எடுப்பாங்க... என்று வேலு அண்ணன் சிரித்தபடி சொன்னது இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது.

நான் திருநெல்வேலியை விட்டு அம்பாசமுத்திரத்துக்கு மேற்படிப்புக்காகச் சென்ற பிறகும் பாளையங்கோட்டை செல்லும்போதெல்லாம் வேலு அண்ணனைப் பார்க்காமல் வருவதில்லை.

அப்படியொரு நாளில் வேலு அண்ணன் தனியாக பூத்தில் உட்கார்ந்திருந்தார். கூடுதலாக எந்த மேக்கப்பும் இல்லை. ஆனால், முகத்தில் களை கொஞ்சம் கூடுதலாக இருந்தது. கல்யாணம் முடிஞ்சிருச்சு தோழா... என்றார்.

பசங்களை எங்கே காணோம் என்றேன். நீங்க ஒருமுறை எனக்காக நான் சொல்லச் சொல்ல ஒரு நண்பரோட ஆட்டோகிராஃப் நோட்டுல எ\ழுதுனது ஞாபகம் இருக்கா..? என்றார்.

கமா ஃபுல் ஸ்டாப் உட்பட ஞாபகம் இருந்தது.

எப்போதும் பறவைகள் வருகை... வேடந்தாங்கலுக்கு மட்டுமல்ல... இந்த வேலுவின் பூத்துக்கும்தான்! பறவைகள் போகலாம்... வரலாம்... போய் வாருங்கள்! என்று நானே எழுதிக் கொடுத்தேன் அன்று!

என்ன தோழரே... யோசனை... உங்க கார் காத்துகிட்டிருக்கு... போய் வாருங்கள் என்றார்!

No comments: