Friday, November 8, 2013

சீதாம்மா!


அப்போது நான் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் பள்ளிக்கூடத்தின் மாணவத் தலைவர்தான் இலக்கிய மன்றத்துக்கும் தலைவர். ஆக, எனக்கு இரட்டைப் பொறுப்பு. பள்ளி இலக்கிய மன்ற விழாவுக்கு விருந்தினரைத் தேர்வு செய்ய மன்ற செயலாளர் சுப்புராஜுடன் அலைந்து திரிந்துவிட்டு களைப்போடு அவன் வீட்டுக்குச் சென்றோம்.

அம்மா... இவன் பாபு... ரெண்டு பேருக்கும் சாப்பாடு போடு...என்று சொல்லிவிட்டு கைகால் கழுவ பின்கட்டுக்கு கூட்டிச் சென்றான். அப்போதே அம்மா என்று அழைக்காமல் அவ்வா என்று அழைக்கலாம் போல வயோதிகத்தில் இருந்தார் சுப்புவின் அம்மா! என் வீட்டில் அம்மாவின் சாப்பாட்டைத் தவிர வேறு சாப்பாடு அறியாத எனக்கு அந்தச் சாப்பாடு வேறு விதமாக ருசித்தது.

சுப்பு அவர்கள் வீட்டில் நாலாவதாகப் பிறந்தவன். மூத்த அக்காவுக்கு திருமணம் ஆகி, அண்ணனுக்கு திருமணம் ஆகி, இளைய அக்காவுக்கு திருமணம் ஆகி பல குழந்தைகளுக்கு அவ்வாவாகி விட்டதால் அம்மாவுக்கு தோற்றத்திலேயே அவ்வாத்தனம் வந்துவிட்டது. சுப்புவும் அவனுக்குப் பிறகு தம்பி கிருஷ்ணாவும் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

அதன்பிறகு பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளில் சுப்பு வீடே கதி என்று ஆகிவிட்டது. எப்போது போனாலும் உரிமையோடு தட்டு எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு அந்த வீட்டில் எனக்கு சுதந்திரம் இருந்தது.

அம்மாவுக்கு முடியலைடா என்று படுத்திருப்பார். ஆனாலும் டீ போட்டுத் தரட்டுமா என்று எழுந்து வருவார். இல்லம்மா நாங்க கடைல பார்த்துக்கறோம் என்றாலும் எனக்கும் குடிக்கணும் போல இருக்குடா என்று சொல்லி டீ குடிக்க வைத்துவிட்டுதான் விடுவார்.

பேரக் குழந்தைகளுக்காக எப்போதும் பண்டம் செய்து கொண்டே இருப்பது அம்மாவின் இயல்பு. எப்போதுமே வீட்டில் எண்ணெய் வாசனை அடித்துக் கொண்டே இருக்கும். சனி ஞாயித்துக் கிழமைகள் என்றால் பிள்ளைகள் நிறைந்து வீடே கலகலவென்று இருக்கும். அண்ணி, அக்கா எல்லோரும் இருந்தாலும் அம்மா சமையலறையில் ஏதேனும் செய்துகொண்டே இருப்பார்.

எப்போது சென்னையில் இருந்து சென்றாலும் அம்மாவைப் பார்க்காமல் வரமாட்டேன். ‘என்ன பாபு... எப்படி இருக்க... வேலையெல்லாம் நல்லா போகுதா... எங்க தலைமுறையை நாங்க கழிச்சுட்டோம்... உங்க நைனா தையல்ல கொண்டு வர்றதை வெச்சு ரெண்டு பிள்ளைகளைக் கட்டிக் குடுத்து எல்லாப் பிள்ளைகளையும் படிக்க வெச்சுட்டோம். உங்க காலம் அப்படி இல்லை... கவனமா நடந்துக்கோ...என்பார்.

நைனா கொண்டு வரும் சொற்ப வருமானத்தில் இத்தனை கட்டுசெட்டக குடித்தனம் செய்ததே பெரிய சாதனைதான். அண்ணனை வங்கி அதிகாரி ஆக்கி, அக்காக்களை நல்லவிதமாக கட்டிக் கொடுத்திருப்பதே பெரிய விஷயம்தான். நான் வேலை தேடி சென்னைக்கு நகர்ந்துவிட்ட பிறகு சுப்புவுக்கும் அரசு வேலை கிடைத்துவிட்டது. அவனுக்கும் திருமணம் முடிந்து அவன் தம்பிக்கும் திருமணம் முடிந்த ஒருநாளில் சுப்பு வீட்டுக்குச் சென்றேன்.

அன்று தீபாவளியோ என்னவோஅக்கா, அண்ணா, சுப்பு, அவன் தம்பி என்று எல்லோரும் குடும்ப சகிதமாக கூடியிருந்தார்கள். கொஞ்சம் தளர்ந்த நடையில் வாசலுக்கு வந்த அம்மாவின் புடவை தொடைப்பகுதியில் இருந்த ஈரம் சொன்னது, உள்ளே அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று. அண்ணியின் ஸ்பெஷலான சிக்கன் சமையல் அன்று. ஆனல், அம்மாவும் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருந்தார்.

எனக்கு திருமணம் நிச்சயமானபோது நைனா கொஞ்சம் தளர்ந்து தையல் கடையை மூடிவிட்டார். வீட்டிலேயே மிஷின் போட்டு பொழுதுபோக்காக தைத்துக் கொண்டிருந்தார். நிச்சயத்துக்கு வந்த அம்மாவால் என் திருமணத்துக்கு வர வாய்க்கவில்லை. திருமணத்துக்கு சில தினங்கள் முன்பு நைனா தவறிப் போக, அம்மாவோ சுப்புவோ திருமணத்துக்கு வரவில்லை.

திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு என் மனைவியை அழைத்துக் கொண்டு சுப்பு வீட்டுக்குச் சென்றேன். படுக்கையில் சாய்ந்திருந்த அம்மா, என் மனைவியின் கன்னத்தைத் தடவி சந்தோஷப்பட்டார். ‘பாபுஉன்னால உன் ஆயுசுக்கும் என்னை மறக்க முடியாதுப்பாஏன்னா என் பேருள்ள பொண்ணைக் கட்டியிருக்கியேஆமாஅவளை எப்படிக் கூப்பிடப் போறே..?’ என்றார்.

இப்போதும் நான் என் மனைவியை பெரும்பாலும் அம்மா என்றுதான் கூப்பிடுகிறேன்..!

No comments: