Wednesday, July 28, 2021

வீடுபேறு! 12/16

 மதுரை… என் வாழ்க்கையின் மிக முக்கியமான ஊர்… என்னுடைய பல ’முதல்’கள் இங்கேதான் அரங்கேறியிருக்கின்றன. என்னுடைய தாத்தா இங்கே பணியாற்றிய காலங்களில் முழு பரீட்சை விடுமுறைகள் அனைத்துமே மதுரையில்தான் கழிந்தன. இப்போதும் எனக்கு சி6/11, மேலப்பொன்னகரம் மூன்றாவது தெரு என்பது மனப்பாடமாக இருக்கும் விலாசம். என் தாத்தா அந்த ஊரை விட்டு வந்தபிறகு அந்த ஊரோடு இருந்த உறவு விட்டுப் போய்விட்டது. மதுரைக்கு நான் விருந்தினன் ஆகிவிட்டேன். அதன்பிறகு மதுரைக்கு வர நேர்ந்த காலங்களில் விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறேன்.

முந்தையா பாராவில் சொன்ன முதல் பட்டியலில் கொஞ்சம் இங்கே சொல்கிறேன். முதன்முதலாக கோன் ஐஸ் சாப்பிட்டது மதுரையில்தான்… குளிரூட்டப்பட்ட ஆவின் பால் குடித்தது இங்கேதான்… பொருட்காட்சி பார்த்தது, சர்க்கஸ் பார்த்தது இங்கேதான்… ஏசி திரையரங்கில் சினிமா பார்த்தது இங்கேதான்! (சினிப்ரியா தியேட்டரில் கல்லுக்குள் ஈரம்) சைக்கிள் கற்றுக் கொண்டது இங்கேதான்… இப்படி பல இருக்கின்றன. எல்லாமே குழந்தைப் பிராய நினைவுகள்…

அதன்பிறகு விகடனுக்கான தேர்வை எழுதிய இடம் மதுரைதான்… அங்கிருந்துதான் என் பயணத்தைத் தொடங்கினேன். பல போட்டித் தேர்வுகளை மதுரைக்கு வந்து எழுதியிருக்கிறேன். அந்த வகையில் என் வேலை முயற்சியின் முதல் அங்குதான் தொடங்கியது.

இந்த வரிசையில், திருமணத்துக்குப் பிறகு நடந்த மிக முக்கியமான முதல் ஒன்று இருக்கிறது. நானும் என் மனைவியும் முதன்முதலாக சண்டை போட்டுக் கொண்ட இடம் மதுரைதான்!

என் அண்ணியின் வீடு… என் மனைவியின் அக்கா வீடு! விருந்துக்கு வந்த இடத்தில் சின்னதாக மன வருத்தம்… இருவரும் முதுகுகாட்டிப் படுத்திருந்தோம். விடிந்தபிறகும் சண்டை தொடர்ந்தால் விபரீதமாகிவிடும் என்பதால் அதைத் தொடரவில்லை. அனேகமாக எங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த பூசல்… ஊடல் அது! இருபது ஆண்டுகளைக் கடந்துவிட்டது! முதல் என்பதால் நினைவில் தங்கியிருக்கிறது.

அண்ணியின் வீடு கொஞ்சம் வித்தியாசமான அமைப்பில் இருக்கும். அவர்களுக்கு இரண்டு வீடுகள் உண்டு. அதாவது வீடு இரண்டு இடத்தில் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் மூன்று தளங்கள் இருக்கும்.

முதலில் அவர்கள் இப்போது இருக்கும் வீடு… இது கொஞ்சம் பெரிய வீடு. தரைத் தளத்தில் வாடகைக்கு ஆள் இருக்க, முதல் மாடிப் படியேறிப் போனால் படிக்கட்டு முடியும் இடத்தில் சிறு திண்ணை இருக்கும். அதில் இருந்து உள்ளே நுழைந்தால் சின்னதாக ஓர் அறை… ஹால் என்று சொல்லலாம், ஆனால் அது அகலமான விசாலமான சித்திரத்தைக் கொடுக்கும் என்பதால் அறை என்று சொல்கிறேன். அதைத் தாண்டி உள்ளே சென்றால் இன்னொரு சிறிய அறை… அதற்குப் பின்னால் அடுக்களை. இந்த வீட்டின் பெரிய அறை என்றால் அடுக்களைதான்! அங்கிருந்து வெளியேறி சிறிய சந்து போன்ற பகுதியில் நடந்து சென்றால் கட்டக் கடைசியில் பாத்ரூம்!

படுக்கையறை என்பது அடுத்த மாடியில் இருக்கிறது. அண்ணியும் அண்ணாச்சியும் கீழே அறையிலேயே படுத்துக் கொள்வார்கள் என்பதால் படுக்கையறை என்பது விருந்தினர்களின் வருகையின்போதுதான்!

திரும்பிய பக்கமெல்லாம் பரோட்டாக் கடைகளுக்குப் பெயர்போன மதுரையில் அண்ணியின் வீட்டின் பின்னாலேயே ஒரு கடை இருக்கிறது. போய்ச் சேர்ந்த அன்றே தூக்குச் சட்டியுடன் கடைக்குக் கிளம்பிவிடுவான் என் மகன். அவனுக்குக் கடை தெரியும் என்னும் அளவுக்கு பழக்கமான விஷயம் பரோட்டா வாங்குவது!

அவர்களுடைய இன்னொரு வீடு அதற்கு முந்தைய தெருவில் இருக்கிறது. அது மிகவும் சிறிய வீடு… அதுவும் கீழே ஒரு வளையல் கடை… முதல் மாடியில் ஒரு வீடு… இரண்டாவது மாடியில் ஒரு வீடு என்று இருக்கும். வீடு என்று சொன்னாலும் படியேறி வாசலைத் திறந்து நுழைந்தால் அடுக்களை, அடுத்து ஒரு சிறிய அறை… அவ்வளவுதான் மொத்த வீடும். ஆனாலும் விசாலமான தோற்றம் தருவது வீடல்ல… வசிக்கும் மனிதர்கள்தான்!

அண்ணியைப் பொறுத்த அளவில் அவரை வீட்டின் ராகுல் டிராவிட் என்று சொல்லலாம். மிகவும் பொறுமையாகவும் திறமையாகவும் சூழலை சமாளிக்கும் வித்தை அறிந்தவர். அதனாலேயே வீட்டின் முக்கிய முடிவுகள் எல்லாவற்றுக்கும் அவருடைய ஆலோசனையும் இருக்கும்.

அண்ணாச்சியைப் பொறுத்த வரையில் சிரிப்பு மட்டுமே அவருடைய அடையாளம். எதுவாக இருந்தாலும் சிரிப்பு முகத்தில் இருக்கும். சொல்லும் விஷயங்கள் ரொம்ப கன்சர்வேட்டிவாக இருந்தாலும் அவர் சூழலில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் பார்க்க வேண்டும்.

அண்ணியின் வீட்டில் போய்த் தங்கிய காலங்கள் மிகவும் குறைவுதான். சென்னைக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசிக்கும் இடையே இருக்கும் ஊர் மதுரை என்பதால் போகும் வரும் வழிகளில் காரை நிறுத்தி இளைப்பாறிக் கொள்ளும் இடமாகவே இருக்கிறது. அதையும் தாண்டி சில தருணங்கள் தங்க வாய்த்திருக்கிறது.

எந்த அகால நேரத்தில் சென்றாலும் எனக்காக ஃபில்டர் காபியோடு தயாராக இருப்பார். ஊரெல்லாம் டீ குடிக்கும் ஆசாமியான எனக்கு ஃபில்டர் காபி மீது தனி காதல் உண்டு. அதை எப்போதோ ஒருமுறை சொல்லி வைக்க, அதன்பிறகு எப்போது சென்றாலும் ஃபில்டர் காபி நிச்சயமாக இருக்கும்.

சும்மா கடமைக்கு காபி போட்டுக் கொடுத்தோம் என்பதாக இருக்காது. அதைக் கையில் கொடுத்துவிட்டு நம் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். முதல் வாய் குடித்தவுடன் நம் முகத்தில் தெரியும் ரியாக்‌ஷன் அவருக்கு முக்கியம். அதன்பிறகு எத்தனை பாராட்டினாலும் உண்மையான பாராட்டு அந்த முக பாவனைதான்! அதைக் கண்டுபிடித்துவிடுவார்.

ஆனால், அவர் மனதில் எந்த கணத்தில் என்ன ஓடுகிறது என்பதை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது, முற்றம், திண்ணை, தாண்டினால், ஹால், அதையடுத்து படுக்கையறை, பின்னால் அடுக்களை என்ற வழக்கமான வரிசை போல இல்லாமல் சிறிதும் பெரிதுமான அறைகளோடு புதிர்கட்டங்களைப் போன்ற அவருடைய வீட்டைப் போலவே அவர் மனமும்!

No comments: