Monday, August 2, 2021

வீடுபேறு! 13/16

 நீ என்ன பண்றே… வண்டியை எடுத்துகிட்டு நம்ம வீட்டுக்கு வந்துரு… அங்கே இருந்து ஒரே வண்டியில நாம அசைன்மெண்ட்டுக்கு போயிறலாம்… அப்டியே ஆபீஸ் போயிட்டாக் கூட சாயங்காலம் வீட்டுல வந்து வண்டியை எடுத்துக்கோ..!’ முதல்நாள் அசைன்மெண்டுக்காகப் பேசும்போதே சொல்லிவிடுவார் பொன்ஸி அண்ணன். (பொன்.சந்திரமோகன் என்பது அவர் பெயர். அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் அவரே கூட திரும்பிப் பார்க்க மாட்டார்) விகடனின் சீனியர் போட்டோகிராபர். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் என்பதால் மட்டுமல்ல… தற்காலிக நிருபராக இருந்த என்னோடு அசைன்மெண்ட் வரும் ஒரே ஆள் அவர்தான் என்பதாலும் பதில் சொல்லாமல் கேட்டுக் கொள்வேன்.

நான் தங்கியிருந்த அறையில் இருந்து வண்டியை எடுத்துக் கொண்டு கேகே நகரில் இருக்கும் பொன்ஸி அண்ணன் வீட்டுக்குப் போகும் நேரத்துக்கு நான் அசைன்மெண்ட் ஸ்பாட்டுக்கே போய்விடலாம். அவரும் அதே நேரத்துக்குப் புறப்பட்டால் அங்கு வந்துவிடலாம். ஆனால், செய்யமாட்டார். தன் வீட்டுக்குதான் வரவைப்பார்.

முதன்முறையாக அழைத்தபோது இல்லண்ணே… நேரே ஸ்பாட்டுக்கு வந்துடறேன்… என்று சொல்லிப் பார்த்தேன். ஆனால், அவர் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. கொஞ்சம் எரிச்சலோடுதான் அவர் வீட்டுக்குப் போனேன்.

கேகே நகர் பொன்னம்பலம் காலனியில் இருந்தது அவர் வீடு. ஹவுசிங் போர்டு அபார்ட்மெண்ட் அது. ஹால், கிச்சன், ஒரு படுக்கையறை என்று சிம்பிளாக இருக்கும் வீடு. நட்சத்திர அந்தஸ்து பெற்ற அந்த வீட்டில்தான் கஸ்தூரி ராஜா, செல்வராகவன், தனுஷ் எல்லாம் ஆரம்ப காலத்தில் குடியிருந்தனர் என்பதை பின்னாளில் அறிந்தேன்.

படியேறி மாடியில் இருக்கும் பொன்ஸி அண்ணன் வீட்டுக்குச் செல்வதற்குள் இடைச்செருகல் செய்தி… சென்னையில் பேச்சிலராக வாழ்ந்த காலத்தில் பெரும்பாலும் ப்ரெஞ்ச் எனப்படும் பிரேக்ஃபாஸ்டுக்கும் லஞ்சுக்கும் இடைப்பட்ட சாப்பாடுதான் வாய்க்கும். அதாவது, பனிரெண்டு மணியளவில் நேராகப் போய் மீல்ஸ் சாப்பிட்டு விடுவோம். காலையில் ரொம்பப் பசியாக இருந்தால் ஒரு டீ எக்ஸ்ட்ராவாக ஓடும். அப்படித்தான் இருக்கும் நிருபர் வாழ்க்கை!

காலிங் பெல்லில் கைவைக்கும்போதே உள்ளே இருந்து அண்ணன் குரல் வந்துவிடும். ‘வாங்கண்ணே… கதவு திறந்துதான் இருக்கு…’

பொன்ஸி அண்ணனின் தம்பி பொன்.காசிராஜனுக்கும் எனக்கும் சம வயது… ஆனால், பொன்ஸி அண்ணன் என்னை அண்ணே என்றுதான் கூப்பிடுவார். விகடனுக்கே அவர் அண்ணன்… ஆனால் விகடனில் எல்லோரும் அவருக்கு அண்ணந்தான்!

உள்ளே போனால் இரண்டு தட்டுகளில் சோறு பரிமாறப்பட்டு குழம்பு ஊற்றி தயாராக வைத்திருப்பார். ‘அண்ணி ஸ்கூலுக்கு போயிருச்சு… நானும் ரெடியாகிட்டேன்… தட்டுல எடுத்து வெச்சேன்… நீங்க வந்துட்டீங்க… ஆறிடுச்சுன்னா கடகடனு சாப்டுறலாம்… நீங்க ஆரம்பிங்க… நான் சட்டையை மாத்திட்டு வந்துடறேன் என்றபடி அறைக்குள் சென்று விடுவார்.

நாம மதியம் சாப்டே பழகிட்டோமே என்று மனசு நினைத்தாலும் வயிறு சோற்றைப் பார்த்ததும் பசிக்கும். குழம்பு வாசனை வேறு ஆளை இழுக்கும். அசைன்மெண்டே அதுதான் என்பது போல எடுத்துப் போட்டு சாப்பிட ஆரம்பிப்பேன். ஆற வைத்த சோத்தையும் நம் தட்டில் கொட்டுவார். அண்ணே… அண்ணே என்பதற்குள் அதன் தலையில் குழம்பை ஊற்றுவார். சாப்பிடுங்க… நான்லாம் சாப்டாச்சு… என்று கேமரா பையைச் சரிபார்க்கத் தொடங்குவார்.

பொன்ஸி அண்ணன் வீடு என்று நினைத்தாலே அறைகளை முந்திக் கொண்டு நினைவுக்கு வருவது சுடுசோறும் சுவையான குழம்பும்தான். அண்ணி பள்ளிக்கூடம் செல்லும் நாட்களில் குழம்புதான் பிரதானமாக இருக்கும். லீவு நாளில் போனால் கோழி, ஆடு என்று வெளுத்துக் கட்டலாம்.

அதாவது லீவு நாளில் போவது என்பது சாப்பாட்டுக்காகத்தான். கொஞ்சநாளில் பொன் காசி ராஜனும் விகடனுக்கு வந்துவிட்டான். அதன்பிறகு பெரும்பான்மையாக நாங்கள் இருவரும்தான் அசைன்மெண்ட் செல்வோம். அண்ணனுக்கு பதில் தம்பி என்பது மாறியிருக்குமே தவிர, அந்த சாப்பாடு மேட்டரில் மாற்றமே இருக்காது. அந்த விஷயத்தில் பொன்ஸி அண்ணன் எட்டடி என்றால் காசிராஜன் பதினாறு அடிதான். (மிகச் சமீபத்தில் அவனுக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்று பார்க்கப் போயிருந்தேன். திரும்பும்போது கைநிறைய பழங்கள் கொடுத்து அனுப்பினான்.)

அலுவலகத்தில் இருந்து புறப்படும்போதே நாளைக்கு நம்ம வீட்டுக்கு வந்துருங்கப்பா என்பார். ஆசிரியராக வேலை செய்யும் அண்ணிக்கு (இதில் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத ஆசிரியர் என்ற பெருமையும் பட்டமும் பெற்றவர் வேறு) ஒருநாளாவது லீவு குடுங்க அண்ணே என்றால், அட… வாங்கப்பா… நாம சமைச்சு அண்ணிக்கு குடுப்போம் என்பார். ஆனால், நாம் செல்லும்போதே சமைத்து ரெடியாக வைத்திருப்பார் அண்ணி.

சும்மா சம்பிரதாயத்துக்குச் சொல்வார்களே… இதை உங்க வீடு மாதிரி நினைச்சுக்கோங்க என்று… அண்ணன் வீடு என்பது எங்களுக்கு அப்படித்தான். அது காசியின் வீடாகவும் இருந்ததால் உண்மையிலேயே எங்கள் வீடு போலத்தான் வைத்திருந்தோம். ஆங்கில சானல்களில் போடும் படங்களைப் பார்க்க நள்ளிரவு வரை விழித்துக் கொண்டிருப்பதில் தொடங்கி, அகால நேரத்தில் அசைன்மெண்ட் முடித்துவிட்டு வந்து படுப்பது வரையில் சொந்த வீட்டில்கூட சில சச்சரவுகள் வர வாய்ப்புள்ள வேலைகளை எல்லாம் சலிக்காமல் செய்வோம்.

அண்ணனும் காசியும் சொந்த ஊரான தேனி, வடபுதுப்பட்டியில் ஒரு வீடு கட்டினார்கள். கீழேயும் மேலேயுமாகப் பெரிய வீடு. அந்த வீட்டைக் கட்டிய கையோடு காசி கல்யாணமும் முடித்தான். அப்போது ரெண்டு பேரும் சென்னையிலே இருக்கீங்க… எதுக்கு இங்கே இவ்வளவு பெரிய வீடு என்றதற்கு, எல்லோரும் வந்தாப் போனா வீடு கொள்ளணும்ல… என்றார்கள். எல்லோரும் என்பது நாங்கதான்! ஏனென்றால் அவர்களுடைய உறவுகள் எல்லோரும் அந்த ஊரில்தான் இருக்கிறார்கள்.

(இப்போது காசி சொந்த ஊரில் ஒரு தோட்டமும் வீடும் அமைத்திருக்கிறான். அதுபற்றிப் பேசும்போதும் எல்லோரும் வந்தால்கூட படுக்க கொள்ள வசதியா இருக்கும் என்றுதான் சொல்கிறான்.)

சாப்பாடு மட்டுமல்ல… ஊருக்குப் போயிருந்தேன்பா… பலாப்பழம் கொண்டு வந்தேன் என்று சுளைகள் கொடுப்பார்… மாம்பழம் வந்துச்சு என்று பழங்கள் கொடுப்பார். ஒருமுறை சீக்கிரம் வீட்டுக்கு வா என்று அழைத்தார். போனேன். படுக்கை நிறைய புதிது புதிதான சட்டைகளைக் கொட்டி வைத்திருந்தார். நம்ம மாம்ஸ் ஒருத்தர் எக்ஸ்போர்ட் பிசினஸில் இருக்கார்… அவங்க லாட் லாட்டா பேக்கிங் பண்ணுனது போக மிஞ்சிய சட்டைகளை கட்டி வெச்சிருந்தார். நான் எடுத்துட்டு வந்துட்டேன்… உன் சைஸுக்கு இருக்கறதுல உனக்கு பிடிச்ச சட்டைகளை எடுத்துக்கோ என்றார். நாலைந்து சட்டைகளைப் பொறுக்கிக் கொண்டு வந்தேன்.

பொன் காசியின் திருமணத்துக்குப் பிறகு அண்ணன், அண்ணி தனி வீடாகவும் காசியும் அவன் மனைவி சுஜாதா தனி வீடாகவும் எடுத்து விட்டனர். இப்போது இருவருமே சென்னையில் தனித்தனி வீடு கட்டிக் கொண்டு விட்டார்கள்.

கல்யாணமான புதிதில் வழக்கம்போல அசைன்மெண்ட் வேலையாக காசியின் வீட்டுக்குச் சென்றேன். இப்போது எனக்கும் திருமணம் ஆகிவிட்டதால் காலை சாப்பாட்டை வீட்டிலேயே முடித்துவிட்டுத்தான் சென்றேன்.

காசியின் மனைவி சுஜாதா கேட்டார்… ‘உங்களுக்கு காபியா… டீயா… இல்லை ஹார்லிக்ஸ், பூஸ்டா..?’

அதுசரி… அண்ணியைப் போல இவர் வேலைக்குச் செல்லவில்லை அல்லவா… உபசரிப்பு இந்த அளவுக்குக் கூட இல்லைன்னா எப்படி?!

No comments: