Friday, August 6, 2021

வீடுபேறு! 14/16

 ஆச்சி வீடு என்பது அன்னையின் வீடுதான்… எந்தப் பிள்ளையிடம் உங்க ஆச்சி வீடு எது என்று கேட்டாலும் அம்மாவைப் பெற்ற ஆச்சியைத்தான் சொல்லுமே தவிர, அப்பாவைப் பெற்ற ஆச்சியைச் சொல்லும் பிள்ளைகள் மிக மிகக் குறைவு. நானும் அப்படித்தான்… அதற்கு அம்மா ஆச்சியின் பிரியம் ஒருபக்கம் என்றால் இன்னொருபக்கம் அப்பா ஆச்சி எங்களுடனேயே இருந்தாள் என்பதுதான்!

அம்மா வளர்ந்ததெல்லாம் மதுரையில்… திருமணம் ஆகும்வரை அங்குதான் இருந்தார். அதனால் எங்களுக்கு தொடக்க காலத்தில் ஆச்சி வீடு என்றால் அது மேலப் பொன்னகரத்தில் இருந்த ஆச்சிவீடுதான். நான் பார்த்த முதல் அடுக்குமாடிக் குடியிருப்பு!

அது எப்படி கீழ் வீடு ஒருவருக்கும் மேல் வீடு இன்னொருவருக்கும் சொந்தமாக இருக்க முடியும் என்ற ஆச்சரியம் வெகுநாட்களாக எனக்கு இருந்தது.

ஒற்றை அறை, ஒரு சமையலறை, அதிலேயே வாசல் வைத்து ஒரு பாத்ரூம், பின்னால் ஒரு பால்கனி, அதை ஒட்டி ஒரு கக்கூஸ்! இவ்வளவுதான் மொத்த வீடும். ஆனால், தாத்தா அந்த ஒற்றை அறையை காட்போர்டு தட்டி வைத்து மறைத்து ஒரு சிறிய வராண்டா போன்ற பகுதியாகவும் ஒரு படுக்கையறையாகவும் மாற்றியிருந்தாங்க. அடுக்களையும் பெரியதாகவே இருக்கும். அதனால் அந்த வீட்டில் நெருக்கடி என்பதே தெரியாது.

இந்த அறைகளை விட மனதுக்குள் இடம் பிடித்து உட்கார்ந்திருப்பது முழுப் பரீட்சை லீவில் நாங்கள் செல்லும்போது ஆச்சி சமைத்துத் தரும் முப்பது நாள் முப்பது சமையல்தான். காலையிலும் மதியமும் அத்தனை வெரைட்டியில் சமைத்துப் போடுவாங்க. ஆச்சி என்றால் முட்டைக் குழம்பு வாசனைதான் முதலில் வரும்!

அதன்பிறகு ஆச்சி வீடு என்றால் அவர்கள் சொந்த ஊரான செங்கோட்டைக்குக் குடிபெயர்ந்த பிறகு குடியிருந்த கிட்டங்கி வீடுதான்! சொந்தமாக இருந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் காலி செய்ய மறுத்து கோர்ட்டுக்குப் போக, வழக்காடி வெற்றி பெற்று வீட்டை மீட்டார்கள் தாத்தா. அதுவரையில் குடியிருந்த வீடுதான் கிட்டங்கி வீடு!

விவசாயிகள் தானியங்களைக் கொட்டி வைத்துப் பாதுகாக்கும் கிட்டங்கியை ஒட்டியிருந்த வீடு என்பதால் அதற்கு கிட்டங்கி வீடு என்று பெயர்.

ஒருபக்கம் கிட்டங்கி சுவர் மதில் போல நீண்டிருக்க அதையொட்டிய காலி இடத்தைத் தாண்டி வரிசையாக நிற்கும் வீடுகளே கிட்டங்கி வீடு. கிட்டத்தட்ட பத்து வீடுகள் இருந்தன. அத்தனை வீடுகளும் ஒரே மாதிரியான வடிவத்தைக் கொண்டவை. எல்லாச் சுவர்களுமே பொதுச் சுவராக ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருக்க, வீட்டைப் போலவே மனிதர்களும் ஒட்டி உறவாடிக் கொண்டுதான் இருந்தார்கள்.

அப்பாவின் நண்பரான ஷாப் கடை பாய் வீட்டில்தான் தாத்தா ஆச்சி குடியிருந்தார்கள். முதல் வீடு பாய் வீடு, அடுத்த வீடு தாத்தா குடியிருந்த வீடு, அதையடுத்து செல்வநாயகம் பெரியப்பா வீடு. அப்பாவோடு பணியாற்றிய அவர் அதன்காரணமாகவே எனக்கு பெரியப்பா.

ஆனால் மருந்தாளுனர் படிப்பின்போதே சொல்லிக் கொடுப்பார்களோ என்று சந்தேகிக்கும் வண்ணம் நடை உடை பாவனை தொடங்கி தோளில் போடும் துண்டு வரையில் அப்பாவும் பெரியப்பாவும் ஒன்று போல இருப்பார்கள்.

அங்குதான் முதன்முதலில் மணி ப்ளாண்ட் பார்த்தேன். அந்த வீட்டு பெரியம்மாவின் அப்பா பாட்டில்களில் மணி ப்ளாண்ட் வளர்த்தார். கூடவே பூனைகளும் வளர்த்தார்.

செல்வநாயகம் பெரியப்பாவின் பிள்ளைகளான ஜேம்ஸ் அண்ணன், சேவியர், ஜெஸ்ஸி என்கிற ஜெயசீலன் மூவரும் இருந்ததால் தாத்தா வீட்டுக்குப் போனால் விளையாட்டுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும்.

கிட்டங்கி வீடும் கிட்டத்தட்ட மூன்று பத்தி வீடுதான். சைடு ரூம் இருக்கும் என்பதால் சிறு வசதி கூடுதலாகத் தெரியும். சைடு ரூம் அளவையும் சேர்த்து அடுக்களை நீளமாக இருக்கும். பின்னால் இருக்கும் புறவாசல் அந்த வீட்டுக்கு தனி அழகைக் கொடுக்கும்.

கிட்டங்கி வீடு என்றவுடன் என் நினைவில் வருவது அந்த மொத்த வீடுகளுக்கும் பொதுவாக இருந்த அடிகுழாய்தான். செலவுக்குத் தண்ணீரை அங்குதான் அடித்து எடுக்க வேண்டும். சின்னப் பசங்களாக இருக்கும் என்னாலோ அண்ணனாலோ பெரிய பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்க முடியாது. அதனால் சிறிய குடம் ஒன்றைக் கொடுப்பார்கள். அந்தக் குடத்தைக் கொண்டுபோய் குழாயடியில் வைத்து அடிகுழாயை அடித்தால் நான்கே அடியில் குடம் நிரம்பி விடும். அதனால் நானும் அண்ணனும் அந்த குடத்துக்கு நாலடியார் என்றே பெயர் வைத்திருந்தோம்.

அந்த வீட்டில் இருக்கும்போதுதான் பெரிய மனிதன் போல தனியே கடைக்குப் போவேன். பலமுறை என்னைத் தேடிக் கொண்டு யாராவது வரவேண்டியிருக்கும். ஏனென்றால், வித்தியாசமாக எதையாவது பார்த்தால் வேடிக்கை பார்த்தபடி நின்றுவிடுவேன்.

அப்படித்தான் ஒருமுறை மதிய விருந்து முடிந்து வெற்றிலை பாக்கு வாங்கிவரச் சொன்னார்கள். கிட்டங்கியை ஒட்டி கோர்ட், தாலுகா ஆபீஸ் உள்ளிட்ட பல அலுவலகங்கள் இருக்கும் என்பதால் அது பிஸியான பஜாராக இருக்கும். அதில் ஒரு கடைக்குப் போய் ஒரு ரூபாயைக் கொடுத்து வெற்றிலை பாக்கு கொடுங்க என்றேன். அப்போது என்னை இடித்துக் கொண்டு வந்து நின்ற நபர் ஒருவர் இடுப்பில் இருந்து கத்தியை உருவி கடைக்காரரை நோக்கி வீச, கண்ணிமைக்கும் நொடியில் கடைக்காரர் அதை லாவகமாகத் தடுத்து அதே கத்தியால் வந்தவரைக் குத்தினார். நிதானமாக என்னிடம் வாங்கிய காசைக் கொடுத்து, பக்கத்து கடையிலே வாங்கிக்கோ தம்பி என்று சொல்லிவிட்டு கடையை அடைத்துவிட்டு அப்போது வந்த பஸ்ஸில் ஏறிச் சென்றுவிட்டார். பதற்றத்தில் உறைந்து போய் நின்றிருந்த என்னை மாமா வந்து கூட்டிக் கொண்டு போனார்.

இன்னொருமுறை இரவு உணவு முடித்துவிட்டு வாழைப்பழம் வாங்கி வரச் சொல்லி அனுப்பினார்கள். பெட்டிக்கடை வரைக்கும் போய்விட்டேன். அப்போதுதான் பக்கத்து கடையில் டிஸ்ப்ளேயில் வைத்திருந்த டிவியில் ஏதோ ஜாக்கிசான் படம் ஓடிக் கொண்டிருந்தது. ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கிய என்னை கடை அடைக்கும் நேரம் வரையில் காணவில்லையே என்று தேடி வந்த அண்ணன் அழைத்துக் கொண்டு போனார்.

மூன்றாவது முறை சந்தை பக்கத்தில் நடந்து கொண்டிருந்த பாம்பு கீரி சண்டைக்காக காத்துக் கொண்டிருந்தேன். அங்கே வீட்டில் நான் வாங்கி வரப் போகும் காய்கறிக்காக சமைக்காமல் காத்துக் கொண்டிருந்தார்கள். கீரி பாம்பை விடவில்லை என்றாலும் பரவாயில்லை, கிளம்பி விடலாம் என்று பார்த்தால் நகர்ந்தால் ரத்தம் கக்கிச் செத்துருவே என்று மிரட்டிக் கொண்டிருந்தான் பாம்பாட்டி. என்ன செய்வது என்று காலைச் சேர்த்து நின்று கொண்டிருந்த என்னைத் தலையில் தட்டி கூட்டிக் கொண்டு போனார் தாத்தா!

கிட்டங்கி வீட்டில் காற்றைப் போல மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. என்ஜினியரிங் படித்திருந்த மாமா சுயமாக ஒரு டேப் ரெக்கார்டரை அசெம்பிள் செய்து பாட வைப்பார். அந்த டேப் ரெக்கார்டரில் இருந்து நீளமாக வயர் இழுத்து அடுக்களையிலோ திண்ணையிலோ ஸ்பீக்கரை வைத்து பாட்டுப் போடுவார். திடீரென்று கொஞ்சநேரத்துக்கு பாட்டு கேட்காது. ஆச்சியும் மற்றவர்களும் ஏதோ பேசிக் கொண்டிருக்க, சற்று நேரத்தில் அவர்கள் பேசியது ஒலிபரப்பாகும். ஸ்பீக்கரை மைக்காக மாற்றி பேசியதைப் பதிவு செய்திருப்பார்.

ஒருவர் பாட, இன்னொருவர் குடத்தில் தாளம் போட, இன்னொருவர் வேறொரு வாத்தியம் வாசிக்க என்று மாமாக்கள் எல்லோரும் சேர்ந்து கச்சேரியே நடத்துவார்கள். அதில் பல பாடல்கள் ஒலிப்பதிவும் ஆகும். அந்த ஒலிநாடாக்கள் எங்கிருக்கின்றனவோ… ஆனால், பாடல்கள் என் மனதில் இன்னமும் ஒலிக்கின்றன.

சொந்த வீட்டு சுகம் வராது என்று அங்கிருக்கும்போது பேச்சு எழும். ஆனால், என்னைப் பொறுத்த அளவில் கிட்டங்கி வீடு இல்லையென்றால் இத்தகைய அனுபவங்கள் கிட்டியிருக்காது அல்லவா!

No comments: