Wednesday, August 25, 2021

வீடுபேறு! 16/16


D-6/4… என்னுடைய முதல் வீடு… ஆமாம்… அப்பாவின் வீடு, மாமாவின் வீடு, தாத்தாவின் வீடு என்ற அடையாளங்களுடனே வாழ்ந்த நான் சென்னைக்கு வந்த பிறகு பல வீடுகளில் தங்கியிருந்தாலும் அத்தனையுமே அறைகள்தான். யார் கேட்டாலும் நண்பர்களோடு ரூம் எடுத்து தங்கியிருக்கேன் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட எனக்கு வீடு என்ற அடையாளத்தைத் தந்தது கோடம்பாக்கம் புலியூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஒற்றைப் படுக்கையறையைக் குறிக்கும் D வரிசையில் ஆறாவது பிளாக்கில் இருந்த நாலாம் எண் வீடுதான்!

ஒரு தளத்தில் நான்கு வீடுகள் இருக்கும் வகையிலான அமைப்பு கொண்டு அடுக்குமாடி கட்டடம். நான்கு வீட்டு வாசல்களும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டுதான் இருக்கும். ஒரு வீட்டு வாசலில் கோலம் போட்டால் அது அடுத்த வீட்டுக்குமான கோலமாக காட்சியளிக்கும். அந்த அளவுக்கு நெருக்கமான வாசல்களைக் கொண்ட அமைப்பு அது.

திருமணம் முடிந்த பிறகு மனைவி சீதாவை அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குத்தான் வந்தேன். நான்கு மாடிகளைக் கொண்ட அந்த ஆறாம் எண் அபார்ட்மெண்டில் தரைத் தளத்திலேயே இருந்தது நாலாம் எண் வீடு! அலுவலக நண்பர் வேல்ஸ்-க்கு சொந்தமான வீடு.

வீட்டில் பெண் பார்க்கலாமா என்று கேட்டநாளில்தான் வேல்ஸ் வீட்டில் குடியிருந்தவர் காலி செய்து கொண்டு போனார். (இரண்டும் தனித்தனி சம்பவங்கள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லை) கல்யாணமானால் வீடு வேண்டுமே என்ற முன்னேற்பாட்டுடன் அதை மடக்கிப் பிடித்துவிட்டேன்.

வீடு நண்பர் வேல்ஸ்- உடையது என்றாலும் நான் வாடகையை எல்.ஐ.சியில்தான் செலுத்திக் கொண்டிருந்தேன். அந்த நிறுவனத்தில்தான் வீட்டுக் கடன் வாங்கியிருந்தார் அவர். நான் அந்த வீட்டைக் காலி செய்யும் வரையில் வெளியில் விலை வாசியும் வாடகை நிலவரமும் ஏறியிருந்தாலும் கடைசி வரையில் கடனுக்கான இ.எம்.ஐ என்னவோ அதைத்தான் வாடகையாகக் கட்டி வந்தேன்.

நான் அந்த மாத வாடகையை இ.எம்.ஐ-யாகக் கட்டினேனா என்பதைப் பற்றிக்கூட கேட்க மாட்டார். சில மாதங்களில் தவற விட்டு சேர்த்து அடுத்த மாதத்தில் கட்டியிருக்கிறேன். அவருடைய கணக்குக்காக ரசீதுகளை மட்டும் கொடுத்துவிடுவேன்.

ஒருகட்டத்தில் நானே இ.எம்.ஐ கட்டி அந்த வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளப் போவது போன்ற தோற்ற மயக்கத்தில் இருந்தேன். அந்த அளவுக்கு சொந்த வீட்டின் உணர்வைத் தந்த வீடு அது!

மேலே சொன்னது போல ஒற்றைப் படுக்கையறைதான் வீடு… நுழைந்தவுடன் ஒரு ஹால்… அதில் உள்ள ஒரு வாசலில் நுழைந்தால் அடுக்களை… இன்னொரு வாசலில் நுழைந்தால் படுக்கையறை..! கழிவறையும் குளியலறையும் தனித்தனியாக ஹாலில் இருந்து செல்லும் வகையில் அமைந்திருக்கும். இந்த வசதிதான் இந்த வீட்டின் சிறப்பு.

விருந்தினர்கள் வந்திருந்தாலும் கூட ஹாலில் படுத்திருப்பவர்கள் இரவு நேர இயற்கை உபாதைகளுக்காக படுக்கையறைக் கதவைத் தட்ட வேண்டிய தேவை இல்லை. பல நாட்களை விருந்தினர்களோடு கழித்த எங்களுக்கு இது பெரும் வசதியாக இருந்தது.

இரட்டைப் படுக்கை அறைகளைக் கொண்ட சி வகையில் பல பிளாக்குகள், ஒற்றைப் படுக்கையறை கொண்ட டி வகையில் பல பிளாக்குகள், ஒற்றை அறை வீடான ஈ வகையில் பல பிளாக்குகள் என்று ஒரு கிராமம் அளவுக்கு குடும்பங்களால் நிறைந்திருந்த குடியிருப்பு அது!

பாஸ்கர் சக்தி, யுகபாரதி, ராஜூ முருகன் என்று பல நண்பர்கள் புடைசூழ குடியிருந்த குடியிருப்பு என்பதால் அந்நியமாகவே இல்லை. பழகிய இந்த நண்பர்களுக்கு நிகராக புதிதாகக் கிடைத்த ஆஷா அம்மா, சுபா அம்மா போன்ற சகோதரிகளும் அந்த நினைவுகளை இனிமையாக்கினர்.  அந்த வகையில் அந்த வீடு எப்போதுமே இல்லம்தான்!

தீபனின் படிப்புக்காக (எல்.கேஜிதான்) கோடம்பாக்கத்தில் இருந்து இடம்பெயர்ந்து வளசரவாக்கம் வந்து சேர்ந்து குடியிருந்த வாடகை வீடுகள் தந்த அனுபவம் வேறு வகை! சொந்த வீடு வாங்கும் முடிவை நோக்கித் தள்ளும் அளவுக்கு அன்பானவர்களாக இருந்தார்கள் வீட்டு உரிமையாளர்கள்.

அப்படித்தான் கிடைத்தது ஜேட் அபார்ட்மெண்ட்ஸ் என்ற குடியிருப்பில் உள்ள வீடு! ஆதார் கார்டில் இடம் பிடித்து அசைக்க முடியாத அடையாளமாகி இருக்கும் அந்த வீடுதான் பத்தாண்டுகளுக்கும் மேலாக என் விலாசம். இரட்டைப் படுக்கையறை, இரண்டிலும் தனித்தனியே பாத்ரூம்கள் என்று வசதிக்குக் குறைவில்லை.

இந்தப்பக்கம் ஆறு, அந்தப்பக்கம் ஆறு என்று இரண்டு பிளாக்குகளில் 12 வீடுகள்… ஆனால், 12 வீடுகள் என்பதைவிட 12 க்தவுகள் என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலும் மூடிய கதவுகள்தான் கண்ணில் படும். நகரத்தில் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் கதவுகள் அவை!

மூடிய கதவுகளுக்குள் அன்பும் அரவணைப்புமாக இருந்தாலும் கூடி வாழும் இயல்பினனான எனக்கு மூடிய கதவுகள் மூச்சு முட்ட வைக்கின்றன.

சிறிய சன்னல் திறப்பு போல 12ல் ஒரு வீடு மட்டுமே உறவு போல போய் வரும் அளவுக்கு உரிமை கொடுத்திருக்கிறது. ஒரு வெப் சீரிஸே எடுக்கும் அளவுக்கு அழகழகான கதைகள் கொண்ட சகோதரிகள் அம்மாவோடு வாழும் வீடு..! அந்த வீட்டில் இப்போதைய புதிய வரவு நோயல் (இன்னும் ஒரு வயதைத் தொடாத குட்டிப் பயல்) வீட்டை இன்னும் அழகாக்கி இருக்கிறான்.

இதுவரையில் சொன்ன எத்தனையோ வீடுகளில் என் வேர்களைப் பரப்பியிருப்பதால் இந்த வீட்டில் என்னால் நிலை கொண்டிருக்க முடிகிறது.

ஏனென்றால் வீடு என்பது வெறுமனே வீடு மட்டுமல்ல!

அன்பும் நன்றியும்..!

No comments: