Sunday, August 15, 2021

வீடுபேறு! 15/16

காணி நிலம் வேண்டும் என்ற பாரதிக்கு நட்பு வட்டாரம் ரொம்பக் குறைவாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஏக்கர் கணக்கில் நிலம் வேண்டும் என்று கேட்டிருப்பார் சௌபா அண்ணன் தோட்டம் போல!

மதுரை திண்டுக்கல் சாலையில் கொட ரோட்டுக்குப் பக்கத்தில் உள்ளே உள்ளே பல கிலோமீட்டர் பயணித்துச் சென்றால் சௌபா அண்ணனின் தோட்டத்தை அடையலாம், இல்லை, அது அண்ணனின் வீடு!

வீடு என்றால் முற்றம், திண்ணை, முன்னறை, பின் அறை, அடுக்களை என்று எல்லாமும் இருக்க வேண்டும் அல்லவா… இதையும் நீங்கள் அப்படி நினைத்துக் கொள்ளலாம். ஆனால், அங்கு இருப்பது ஒற்றை அறையும் ஒரு சமையலறையும்தான்! மற்ற எல்லாமே சுற்றியுள்ள தோட்டத்தின் பார்வையில்தான்..!

பொதுவாக அரவத்தின் அசைவு கேட்டால்தான் கோழிகளெல்லாம் நடுங்கும் என்று சொல்வார்கள், ஆனால், சௌபா அண்ணன் தோட்டத்தில் வளரும் கோழிகள் எல்லாம் அவருடைய நண்பர்களின் குரல் கேட்டால்தான் நடுங்கும். யார் வந்தாலும் நிச்சயமாக ஒன்றிரண்டு கோழிகளுக்கு சொர்க்கமோ நரகமோ நிச்சயம்!

போய் இறங்கும்போதே எல்லைச் சாமி போல இரு கைகளையும் விரித்துக் கொண்டு நிற்பார். ஒருகையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கும்.

‘வாடா தம்பி… வாடா தம்பி…’ என்பார். அவரிடம் எப்போதும் இரண்டு கேள்விகள் இருக்கும். என்ன படிச்சுகிட்டிருக்கே..? இது முதல் கேள்வி..! என்ன எழுதிகிட்டிருக்கே..? இது இரண்டாவது கேள்வி. இந்த இரண்டுக்கும் அவருக்கு திருப்தியான பதில் கிடைக்காவிட்டால் ஆளே கொஞ்சம் முகம் வாடிப் போய்விடுவார்.

இங்கே வந்திருடா எழுதறதுக்கு… சாப்பாடு கீப்பாடு எல்லாம் பார்த்துக்கிடலாம்…  பேப்பர் பேனாவெல்லாம் வேணும்னாலும் வாங்கிக்கிடலாம் என்பார். அண்ணே… லேப்டாப்புல எழுத ஆரம்பிச்சு கொள்ள நாள் ஆகிருச்சுண்ணே… இப்ப போய்… என்றால் சிரிப்பார். டேய்… அண்ணனை பழசுன்றியா… என்பார்.

எங்களுடைய முன்னத்தி ஏர் அவர்… மாணவப்பத்திரிகையாளர் என்ற திட்டத்தின் முதல் செட் மாணவர் அவர். சௌந்தர பாண்டியனாகத் தொடங்கி சௌபா ஆனவர். எழுத்துல பொரட்டிறணும்டா… இல்லன்னா, எழுதி என்னத்துக்கு..? என்பார்.

என்னுடைய திருமணத்துக்கு அவரையும் அழைத்திருந்தேன். அவரோ அலுவலக நண்பர்களை எல்லாம் தோட்டத்துக்கு வரவழைத்துவிட்டார். எல்லோரும் இங்கே இருந்து குற்றாலத்துக்கு பாபு கல்யாணத்துக்குப் போயிறலாம் என்று சொல்லி! சொன்னபடியே எல்லாரும் வந்துவிட்டார்கள் அண்ணனைத் தவிர! உற்சாகக் கொண்டாட்டத்தில் சர்க்கரை அளவு கூடி நகர முடியாமல் போய்விட்டது. விட்றா தம்பி… அண்ணன் தோட்டத்துல இருந்தாலும் அன்னிக்கு அங்கேதான் இருந்தேன்… என்று சமாதானம் சொன்னார்.

அவருடைய தோட்டத்தையும் அந்த வீட்டையும் தமயந்தி அக்கா அழகாக தன்னுடைய தடயம் படத்தில் பதிவு செய்திருப்பார். எல்லோருடைய மனதிலும் இருக்கும் அந்த வீடு, அடையாளமாக அவர் படத்திலும் இருக்கிறது.

இரண்டுமுறை அந்த வீட்டுக்குப் போயிருக்கிறேன்.

முதன்முறை ராஜூமுருகனுடன்… ஒரு இலக்கில்லாத பயணத்தின் ஒரு மாலைப் பொழுதில் அவரைத் தேடிப் போனோம். சில பல கோழிகள் குலை நடுங்கின. ஆனால், போகும்போதே, அண்ணன்கிட்டே சிக்கிடக் கூடாது… நம் பயணத் திட்டத்தில் பெரிய ஓட்டை விழுந்துவிடும்… அண்ணன் நம்மளை அமுக்கிப் போட்டுருவார் என்று பேசிக் கொண்டேதான் போனோம்.

அதேபோல அவரும் முயன்றார். ஆனால், வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கு… இந்த வழியாகப் போறப்ப உங்ககிட்டே பாஸ் போடாம போறது மரியாதையா இருக்காதேனுதான் வந்தோம் என்று சொல்லி கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் புறப்பட்டோம். எங்கள் பயணத்தின் நோக்கத்தைக் கேட்டுக் கொண்டவர் நாலைந்து நபர்களின் பெயர்களைச் சொல்லி, அவங்களைப் பாருங்க… உங்க முழுக் கதைக்குமான புள்ளிகளை அவங்க வரைஞ்சு கொடுப்பாங்க என்றார். அந்த வீட்டில் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.

அதன் பிறகு ஒருமுறை கரு.பழனியப்பனோடு போயிருந்தேன். அப்போது இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். தேவைப்பட்டால் பம்ப்ஷெட்டில் இருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீரில் குளிப்போம், இல்லையென்றால் பாத்ரூமில் குளிப்போம் என்று சகலமும் கொண்டாட்டமாகவே இருந்தது.

அப்போதுதான் கலங்கிய கண்களோடு நடமாடிக் கொண்டிருந்த சௌபா அண்ணன் சொன்னார். பாபு… இந்த வீட்டுக்கு நம்ம எம்டி வந்திருக்கார் தெரியுமா..? ஒருநாள் நான் வர்றேன்னு சொன்னார். இங்கே வசதியெல்லாம் இருக்காதுனு சொன்னேன். உன்கூட இருக்கறதைவிட பெரிய வசதி என்ன இருந்துடப் போவுது… நான் வர்றேன்னு கிளம்பி வந்துட்டார். அம்மாவும் கூட வந்திருந்தாங்க!

நான், எம்டி எல்லாரும் சீட்டு விளையாடினோம். சின்னப் பிள்ளை மாதிரி இங்கேயும் அங்கேயுமா நடமாடினார். சந்தோஷமா இருக்கேன்… ரொம்ப நிறைவா இருக்கேன்னு மனசாரச் சொல்லிகிட்டே இருந்தார். மனசே இல்லாமல்தான் கிளம்பிப் போனார்னு சௌபா அண்ணன் சொல்லும்போது அவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்!

உட்கார்ந்து பேச, எழுத, சாப்பிட என்று தனியாக ஒரு ஷெட் அமைத்திருப்பார். அங்கேயேதான் அமர்ந்து கொண்டிருப்பார். அந்த ஷெட்டுக்குள் யார் யாரெல்லாம் வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று பட்டியல் வாசித்துக் கொண்டே இருப்பார். பாரதி ராஜாவில் தொடங்கும் பட்டியல்… பலப்பல மனிதர்கள் பெயரால் நீண்டுகொண்டே செல்லும். பெரிய ஆள் சின்ன ஆள் எல்லாம் கிடையாது, எல்லோரும் சௌபா அண்ணனின் நண்பர்கள். அவ்வளவே! வேறு யாரிடமாவது பட்டியலைச் சொல்லும்போது நிச்சயம் என் பெயரையும் சொல்வார்.

பாபு… பிள்ளைகளையும் வீட்டம்மாவையும் கூட்டிட்டு வா… நாலுநாள் இருந்துட்டு போ என்பார். எத்தனையோ பேரோட சினிமா இந்த வீட்டுல உருவாகி இருக்கு… நீயும் உன் கதையை இங்கே வந்து எழுது என்பார். நிச்சயம் வர்றேன்ணே என்பேன்.

அந்த வீட்டின் அடையாளமாக சிரிக்கும் புத்தர் நின்று கொண்டிருப்பார்.

இப்படி சுகமான நினைவுகளோடு இதை முடித்துவிடலாம்தான். ஆனால், எப்போதுமே நாங்கள் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் மூத்தவர் சௌபா அண்ணன் தானே… இந்தக் கட்டுரையை அப்படி இனிமையாக முடிக்க அவர் விடவில்லை…

எல்லா நண்பர்களுக்கும் இளைப்பாறுதல் தந்த அந்த வீட்டுத் தோட்டத்தில்தான்…

இரு கையை விரித்து நின்று வாரி அணைத்து வரவேற்ற அந்த வீட்டுத் தோட்டத்தில்தான்…

சிரிக்கும் புத்தர் பார்த்தபடியே நின்ற அந்த வீட்டுத் தோட்டத்தில்தான்…

சௌபா அண்ணனின் மகன் சடலத்தையும் தோண்டி எடுத்தார்கள்…

அதற்கு முந்தைய கணம் வரையில் வீடாக இருந்தது அது!

ஏமாத்திட்டீங்க சௌபா அண்ணே!

No comments: