Tuesday, July 20, 2021

வீடுபேறு! 10/16

படையப்பா படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சியில் ரஜினியின் உடைகளை செந்தில் அணிந்து கொண்டு பெண்பார்க்கச் செல்வார். அப்போது ரஜினி வழியெல்லாம் மாப்பிள்ளை அவர்தான்… அவர் போட்டிருக்கும் உடை என்னுடையது என்று சொல்லிக் கொண்டே செல்வார். அதுபோல, நான் சென்னையில் முதன்முதலில் வாங்கிய வீடு என்னுடையதுதான்… ஆனால், அதில் குடியிருந்தது நண்பன் ராஜநாராயணன் தான்!

ஊரில் சொந்தமாக வீடு இருக்கிறது… சென்னை என்பது பிழைக்க வந்த ஊர்தான் என்ற எண்ணம் பிரதானமாக இருந்தாலும் வாங்கும் சம்பளம் செலவுக்கே சரியாகப் போய்விடும் நிலையில் இருந்த எனக்கு சொந்த வீடு என்பது கனவிலும் நடக்காத விஷயமாகத்தான் இருந்தது.

ஆனால், நானும் சென்னையில் ஒரு வீடு வாங்கினேன். அதற்கு இருவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். முதலாவது ஆள் என்னுடைய சீனியர் அசோகன் சார் (இப்போது தமிழ் இந்து நாளிதழின் ஆசிரியர்) அவர்களுடைய மனைவி அஞ்சனா மேடம். ‘என்னங்க… வீடு கீடுனு வாங்க வேணாமா… இப்பதான் காசு கையிலே மிஞ்சி நிற்கும்.. குடும்பம் குழந்தைனு ஆகிட்டா வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும்… இப்பவே பாருங்க…’ என்று சொன்னதோடு நில்லாமல் வண்டியில் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக் காட்டினார். அதனால்தான் முதல் நன்றி அவருக்கு!

அப்போது சென்னையில் வளர்ந்து வரும் பகுதிகளான ஆதம்பாக்கம்,. வேளச்சேரி பகுதிகளில் அவர் காட்டாத வீடு இல்லை, பார்க்காத தெரு இல்லை. எல்லாமே ஆறு லட்சம், ஏழு லட்சம் என்கிற ரேஞ்சில் இருந்தது. சும்மா விசாரித்துப் பார்க்கலாமே என்று சம்பள கணக்கைக் காட்டி வங்கியில் வீட்டுக் கடன் கேட்டபோது அதிகபட்சம் ரெண்டு லட்சம் வரை தரலாம் என்றார்கள். மீதிக்கு..?

வீடு ஐடியாவை மூட்டை கட்டிவிட்டு, வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் சொன்னது போலவே அஞ்சனா மேடம் அலுவலகத்தில் உள்ள பல இளைஞர்களிடமும் சொல்லியிருப்பார் அல்லவா..? அப்படிப்பட்ட ஒரு ஆள் ம.கா.சிவஞானம். அவருக்கு தான் இரண்டாவது நன்றி..! ஏன் என்று அடுத்து சொல்கிறேன்.

பழைய வீடுகளாகப் பார்க்கலாம். கொஞ்சம் விலை குறைவாக இருக்கும் என்ற யோசனையோடு தேடிய ம.கா.சி. கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டைப் பற்றி பேப்பரில் படித்துவிட்டு குறித்து வைத்திருந்தார். ‘பாபு… ஆபீஸ் போற வழியில் அதைப் பார்த்துட்டுப் போகலாமா..? என்று கேட்க, நானும் ஓகே சொன்னேன். அவரிடம் விலாசம் வாங்கிக் கொண்டு நான் முதலில் அந்த இடத்துக்குப் போய்விட்டேன். அது ஒற்றைப் படுக்கையறை வீடு!

மகாசி தேடிக் கொண்டிருந்தது இரண்டு படுக்கையறை கொண்ட வீடு. நான் ஒற்றைப் படுக்கை விஷயத்தைச் சொன்னதுமே, அப்ப அதைப் பார்க்கிறது வேஸ்ட்… விட்டுறலாம் பாபு என்று சொல்லிவிட்டார். அவர் வேண்டாமென்று சொன்ன வீடு என்னைப் பார்த்து வாங்கிக்கோயேன் என்று வேண்டி விரும்பிக் கேட்டது போல இருந்தது.

ஆதம்பாக்கம் ஏரியாவில் வீடு தேடி அலைந்த காலத்துக்கும் இப்போது கோடம்பாக்கத்தில் வீட்டைப் பார்த்துக் கொண்டு நின்ற இந்த காலத்துக்கும் இடையே என் சம்பளம் ஏதோ கொஞ்சம் உயர்ந்து நின்றது. வங்கியில் விசாரித்தபோது நாலு லட்சம் வரை கடன் கிடைக்கும் என்றார்கள். ஒரு லட்சம் மேற்கொண்டு தேவைப்பட்டது. அதை என்னுடைய பர்சனல் வங்கியான அப்பாவிடம் இருந்து வாங்கினேன்.

அப்படித்தான் சென்னையில் நான் ஹவுஸ் ஓனர் ஆனேன். என் திருமணமும், வீடு வாங்கும் படலமும் ஒன்றாக நடந்தது. திருமண சமயத்தில் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட, திருமணம் முடிந்த நிலையில் ரெஜிஸ்ட்ரேஷன்  முடிந்தது. வாங்கும்போது குடியிருந்த பழைய ஓனர் காலி செய்ய, இரண்டு மாதம் எடுத்துக் கொள்ள, அதற்குள் நாங்கள் வாடகை வீட்டில் செட்டில் ஆகியிருந்தோம்.

சரியாக அந்த வீடு காலியான நேரத்தில் நண்பன் ராஜநாராயணனுக்கு திருமணம் நடந்தது. இங்கே குடி வந்துவிடேன் என்று சொல்ல, அவனும் மனைவி மதுவுடன் வந்து இறங்கினான். அவர்களை வரவேற்று ஆரத்தி எடுத்து வீட்டுக்கு பால் காய்ச்சி எல்லாமும் செய்து குடி வைத்தோம்.

அன்றுமுதல் அது ராஜநாராயணனின் வீடானது. நான் மிகவும் உரிமையோடு போய்த் தங்குவேன். எல்லாமும் செய்வேன். ஆனால், அது என் வீடு என்று தோன்றவே தோன்றாது. அதுதான் ஆச்சரியம்!

ராஜநாராயணன் வீடு காலி செய்து போன பிறகு கூட அடுத்தடுத்து வாடகைக்கு ஆள் தேடினோமே தவிர, அங்கு குடி போகலாம் என்ற எண்ணமே எழவில்லை. இத்தனைக்கும் நாங்கள் குடியிருந்ததும் ஒற்றைப் படுக்கையறை வீடுதான்!

சில காலங்களுக்குப் பிறகு வேறு வேறு ஆட்கள் மாறிக் கொண்டே இருந்தார்கள். ஒரு வீட்டு ஓனராக அங்கு செல்வதும் குடியிருப்பவர் வீட்டில் ஒரு தம்ளர் காபி குடிப்பதுமாகத்தான் அந்த வீட்டோடு உறவு கொண்டாடிக் கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு சில இளைஞர்கள் வந்து தங்கினார்கள். என் நண்பனின் மருமகன் வந்து வீடு கேட்டான். அவனும் இன்னும் இரு நண்பர்களும் தங்கப் போவதாகச் சொல்லி! சரி… அபார்ட்மெண்டில் குற்றம் சொல்லாத வகையில் நடந்து கொள்ளுங்க என்ற கோரிக்கையோடு அவர்களைத் தங்க வைத்தேன். அமைதியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு மொட்டை மாடியில் அதிகம் திரிகிறார்கள் உங்கள் டெனண்ட் என்ற குற்றச்சாட்டு கிளம்பியது. மொட்டை மாடிக்கெல்லாம் போகாதீங்கப்பா என்றேன். சரிங்க அங்கிள் என்றார்கள். ஒருகட்டத்துக்குப் பிறகு அவர்களைக் காலி செய்ய வைக்க வேண்டியதாகிவிட்டது.

அதன்பிறகு குடி வைத்தால் குடும்பத்துக்குதான் என்ற முடிவோடு இருந்தேன். கணவன், மனைவி, குழந்தை என்று சிம்பிளான குடும்பம் வந்து கேட்க, சம்மதித்து சாவியைக் கொடுத்தேன். மாதம் 2500 ரூபாய் வாடகை என்பது பேச்சு. ஆனால், ஒரு மாதம்கூட அவர் முழு வாடகையைக் கொடுத்தது கிடையாது.

சார்… பாத்ரூம் தாழ்ப்பாள் மாத்தினேன்… முப்பத்தி ரெண்டு ரூபா ஆச்சு என்று கழித்துக் கொண்டு கொடுப்பார். அடுத்த மாதம், பால்கனியில் சின்ன ரிப்பேர் என்று ஒரு தொகையைக் கழிப்பார்.

இதையெல்லாம் செய்யும் முன்னே சொல்லலாமே என்றால் எப்படி சார் உங்களைத் தொந்தரவு செய்ய முடியும்? என்றார்.

இதில் ஏற்பட்ட சலிப்பு ஒருபக்கம்… குடியிருந்த வளசரவாக்கம் பகுதியில் இரண்டு படுக்கையறை வீடாகப் பார்க்கலாம் என்ற திட்டம் மறுபுறமுமாக நெருக்க, இந்த வீட்டை விற்றுவிடலாம் என்று முடிவு செய்தேன். அப்போது அந்த வீட்டின் சந்தை மதிப்பு 14 லட்ச ரூபாய். குடியிருந்த மனிதரே வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஆனால், எனக்கு சிறு சலுகை தரவேண்டும். வாடகைக்காகக் கொடுத்த அட்வான்ஸைக் கூட வீட்டை வாங்குவதற்கான அட்வான்ஸாக வெச்சுக்கோங்க… மேற்கொண்டு பத்து லட்ச ரூபாய் கொடுத்துடறேன் என்றார். அதாவது மொத்த மதிப்பு 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

கட்டாது சாமி என்று காலி செய்ய வைத்தேன்.

இவர் கொடுத்த சலிப்பு ஒருபக்கம் இருந்தாலும் இந்த வீட்டை விற்றுவிடலாம் என்ற விதை என்னுள் விழுந்தது அந்த பேச்சிலர்ஸ் இருந்தார்கள் என்று சொன்னேனே… அப்போதுதான்..!

ராஜநாராயணன் இருந்த போது என் வீடென உரிமையோடு புழங்கிய வீட்டில்… அடுத்து வந்த வாடகைகாரர்கள் காபி கொடுத்து உபசரித்த வீட்டில்… உள்ளே வராதீங்க சார் என்று சொல்லி கதவைத் திறக்க மறுத்த இளைஞன்தான் அந்த வீடு உனக்கானதில்லை என்பதை உணர்த்தினான். வாடகைக்கு விட்டுட்டீங்கள்ல… நாங்க சொன்னால்தான் வரணும் என்றான். இத்தனைக்கும் என்னிடம் நான் பார்த்துக்கறேன் அங்கிள் என்று பேசி வாடகைக்கு வந்த என் நண்பனின் மருமகன் அந்த வீட்டை தன் நண்பர்களுக்கு உள் வாடகைக்கு விட்டுவிட்டுப் போய்விட்டான். அந்த நண்பர்களில் ஒருவன் தான் என்னை வாசலில் நிறுத்தினான்.

பரவாயில்லைப்பா… மொத்த அபார்ட்மெண்டையும் ரிப்பேர் செய்யப் போறாங்க… தனிப்பட்ட முறையில் வீட்டில் ஏதாவது செய்யணுமா என்று நான் பார்க்கணும்… அதனால் நீ கதவைத் திறந்துதான் ஆகணும்… என்று சொன்னதோடு அந்த மருமகனுக்கும் போன் அடித்தேன். பிறகுதான் கதவு திறந்தது.

ஒருவேளை அவர்கள் என் வீட்டை டாஸ்மாக் குடோனுக்கு உள் வாடகைக்கு விட்டிருப்பார்களோ என்று எண்ணும் அளவுக்கு கிச்சன் நிறைந்திருந்தது.

ஆக என்னை வெளியில் நிறுத்தி வீட்டை விற்கும் முடிவெடுக்கத் தூண்டியவன் உண்மையில் ‘குடி’யிருந்தவன் தான்!

No comments: