Monday, June 14, 2021

வீடு பேறு! 2/16

 இந்த கொரோனா முதல் அலைக் காலத்தில் ஈரோட்டில் இருந்து தங்கராஜ் போன் பண்ணியிருந்தான். ‘ஒரு வீடு கட்டியிருக்கேன்… இந்த தேதியில் பால் காய்ச்சப் போறேன்… உன் வேலைக்கு ஏற்றபடி பிளான் பண்ணிக்கோ..! என்றான். தங்கராஜ் எப்போதுமே அப்படித்தான்… தன் தரப்பு விஷயங்களைச் சொல்வானே தவிர தன் விருப்பங்களைச் சொல்லமாட்டான். ஒருவேளை அது என்னால் நிறைவேற்ற முடியாததாக இருந்துவிட்டால் அவன் விருப்பத்தைச் செய்யமுடியவில்லையே என்று நான் வருத்தப்படுவேனோ என்று நினைப்பான். அதனாலேயே விருப்பமாக எதையும் சொல்லமாட்டான்.

அம்மாவும் தங்கையும் போய்ப் பார்த்துவிட்டு வீடு அருமையாக இருக்கிறது என்று சிலாகித்துச் சொன்னார்கள். எனக்கும் தங்கராஜ் வீட்டைப் பார்க்க வேண்டும் போலத்தான் இருந்தது. ஆனால், அப்போது படப்பிடிப்பு வேலை இருந்தது, கொரோனா அலையடித்து முடிந்த பிறகு சிலநாட்கள் அங்கு தங்கும் வகையில் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

எனக்கு தங்கராஜ் வீடு என்றதும் செங்கோட்டையில் வண்டிமலச்சி அம்மன் கோவில் அருகே அவன் குடியிருந்த வீடுதான் நினைவில் வருகிறது. மிகப் பழமையான வீடு அது. உள்ளே நுழைந்ததும் ஒரு கூடம்… இடதும் வலதுமாக அறைகள் என்று குத்துமதிப்பாகத்தான் அந்த வீடு என் நினைவில் இருக்கிறது. அவனுடைய அப்பா செங்கோட்டை பஸ் நிலையம் எதிரில் ஒரு கடை வைத்திருந்தார். பெரிதாக வியாபாரம் எதுவும் நடக்காது. ஆனாலும் சின்சியராக கடையில் இருப்பார்.

எங்கள் நட்பு வட்டத்திலேயே முதன்முதலில் வேலைக்குச் சென்றவன் தங்கராஜ்தான். சானிடரி இன்ஸ்பெக்டர் கோர்ஸ் படித்துவிட்டு முனிசிபல் அலுவலகத்தில் சானிடரி இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தான். கும்பகோணத்தில் வேலை பார்த்தான். மேன்ஷன் போன்ற இடத்தில் அறை எடுத்து தங்கியிருந்தான். அங்கே போனால் ராஜ மரியாதை கிடைக்கும். எஸ்.ஐ நண்பர் என்பது பெரிய கெத்து!

அவன் செங்கோட்டைக்கு வரும் நாட்களில் வீட்டுக்குப் போவேன். பெரும்பாலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக்காலத்தில்தான் வீட்டுக்கு வருவான். எனக்கும் அப்போதுதான் கல்லூரியில் விடுமுறை கிடைக்கும். ஊருக்கு வந்திருப்பேன்.

பொதுவாகவே அவன் வீடு பெரிய அலங்காரம் ஏதுமில்லாமல்தான் இருக்கும். அது எளிமை என்றுதான் பலநாள் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவன் அப்பாவின் மனநிலை என்று ஒருநாள் தெரிந்து கொண்டேன்.

ஒருமுறை பொங்கலுக்கு அவன் வீட்டுக்குப் போன போது வெள்ளையடிக்கப்படாமல், வாசலில் கோலம் இல்லாமல் பளிச்சென்று வெறுமையாக இருந்தது. என்ன இது என்று கேட்டபோது, வீடு இருக்கறவங்களுக்குதான் பொங்கல் என்பது பண்டிகை… இல்லாதவங்களுக்கு அது ஒரு விடுமுறை நாள்… அவ்வளவுதான்! என்றார் அவன் அப்பா. இது வீடுதானே என்றபோது, ‘வீடுதான்… ஆனா, என் வீடுனு உரிமையோடு சொல்ல முடியாதுல்ல… நான் தங்கியிருக்கிறேன்… அவ்ளோதான்…’ என்றார். தங்கராஜ் வழக்கம் போல சிரித்துக் கொண்டே என்னை வெளியில் அழைத்து வந்தான்.

அதன்பிறகு அவன் தென்காசிக்கு மாற்றல் வாங்கி வந்த பிறகு அவனுக்குத் திருமணமும் ஆன பிறகு தென்காசியில் ஹவுசிங் போர்டு பகுதியில் வாடகைக்கு குடியிருந்தான். அங்கு சென்றிருந்த போதும் அப்பா அதே ஜென் மனநிலையில்தான் இருந்தார். எல்லா விஷயங்களும் இயல்பாக கலகலப்பாகப் பேசுவார். பத்திரிகைப் பணி பற்றியெல்லாம் விலாவாரியாகப் பேசுவார். வீடு பற்றி மட்டும் அவரும் பேசுவதில்லை, நானும் எதுவும் கேட்டுக் கொள்வதில்லை!

அப்பாவின் அந்த மனநிலையினாலேயே என்னால் அவன் குடியிருந்த செங்கோட்டை வீட்டையும் சரி, தென்காசி ஹவுசிங் போர்டு வீட்டையும் சரி, அறை அறையாக நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. கொஞ்சம் மங்கலாகத்தான் நினைவில் இருக்கிறது. அப்பா சொன்னது போலவே அது அவர் வீடு அல்லவே..! அப்பாவுக்கே அது வீடு இல்லை என்னும்போது அது எப்படி தங்கராஜ் வீடாக இருக்கமுடியும்!

தங்கராஜ் மனதிலும் வீடு என்பது ஒரு விஷயமாகவே இருக்காது. சம்பாதிக்கத் தொடங்கிய பிறகும் வீடு வாங்கவோ கட்டவோ வேண்டும் என்ற என்ணம் இருப்பதாகவோ தெரியவே தெரியாது. அவன் அதுபற்றியெல்லாம் பேசமாட்டான். தென்காசியில் தங்கராஜ் உட்பட நண்பர்கள் எல்லோரும் இடம் வாங்கி குடியிருப்பாக வீடுகள் கட்டலாம் என்று பேசினோம். பேச்சளவிலேயே இன்றும் இருக்கிறது அந்தத் திட்டம்!

மாற்றலாகிப் போகும் இடங்களில் எல்லாம் நமக்கு ஒரு வீடு கிடைக்காமலா போய்விடும்… அதுபற்றிப் பேசவும் கவலைப்படவும் என்ன இருக்கிறது என்பதுதான் அவன் எண்ணம். அப்படியேதான் அதை அமைத்துக் கொள்ளவும் செய்தான்.

அவன் கொஞ்சகாலம் சங்கரன்கோவிலில் வேலை பார்த்தான். அப்போது தனியாக ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தான். தங்குமிடம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அவனுடைய உதவியாளர் அதை வீட்டைவிட மேலாகப் பார்த்துக் கொள்வார். நாம் போய்த் தங்கினால் தங்கராஜுக்குக் கிடைக்கும் அதே மரியாதை நமக்கும் கிடைக்கும். தேர்தல் காலங்களில் தொகுதி குறித்த அலசல் கட்டுரைகளுக்காகச் செல்லும்போது அந்த வீடுதான் எனக்கு இளைப்பாறுதல் தந்தது.

தங்கைக்கு ராஜபாளையத்தில் திருமணம் நடந்த நாளில் அவள் இல்லாத என் வீட்டை எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பத்தில் இருந்தபோது அவனுடைய சங்கரன் கோவில் வீட்டுக்குத்தான் ஓடினேன். தேர்தல் வேலை ஒரு சாக்கு என்றாலும் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ள அந்த நிழல் உதவியாக இருந்தது.

இப்போதுமே அப்படித்தான் சொல்வான், அவன் இருக்கும் வீடு என்பது நமக்கும் உரிமை உடையதுதான்… அதில் நீயும் பங்கெடுத்துக் கொள்ளலாம் என்பான்.

கால மாற்றத்தில் கணினித் துறையில் வேலைக்குப் போன தங்கராஜின் தம்பி பாரி செங்கோட்டை குற்றாலம் சாலையில் ஒரு அவுட்டர் ஏரியாவில் இடம் வாங்கி வீட்டைக் கட்டினான். அந்த வீட்டில்தான் தங்கராஜின் அப்பாவும் அம்மாவும் இருந்தார்கள். அங்கிருந்துதான் ஒருநாள் தங்கராஜ் அழைத்துச் சொன்னான், அப்பா இறந்துட்டாங்க என்று!

சொந்த வீட்டில் இருந்து இறுதிப் பயணம் புறப்பட்ட அப்பாவின் முகத்தில் இருந்த சிரிப்பு எந்த வீட்டில் இருந்தபோதும் அவரிடம் நான் பார்த்தறியாதது!

No comments: