Thursday, June 17, 2021

வீடுபேறு! 3/16

 விகடனில் சம்சாரி என்றொரு கதை எழுதியிருந்தேன். விவசாயம் பார்க்க ஆசைப்படும் ஒருவன் முன்னால் அவனுக்கு தூண்டுதலாக இருந்த ஒரு விவசாயி எந்தக் கோலத்தில் நின்றார் என்பதுதான் கதையின் சாரம். நிஜ வாழ்வில் நான் பார்த்த மனிதர்தான் அந்தக் கதைக்கான மையப்புள்ளி! நான் கதையில் எழுதியிருந்ததைப் போலவே கந்தன் சித்தப்பா வெள்ளைச் சிரிப்போடுதான் பந்தி பரிமாறும் வரிசையில் நின்று கொண்டிருந்தார். நான்தான் ஒரு விவசாயியை சமையல் கூலித் தொழிலாளி ஆக்கிய குற்ற உணர்வில் தலை குனிந்து நின்றேன்.

அந்த கந்தன் சித்தப்பாவின் வீடு ஆய்க்குடியில் இருக்கிறது. என் பள்ளிப்பருவ நாளில் அப்பாவுக்கு ஆய்க்குடிக்கு டிரான்ஸ்பர் கிடைக்க, அந்த வீட்டுக்கு அடுத்து அவருடைய அண்ணன் புதிதாகக் கட்டியிருந்த வீட்டுக்குதான் நாங்கள் குடி போனோம்.

புத்தம் புதிய வீடு… முற்றத்தை அடுத்து ஒரு வெளித் திண்ணை, உள்ளே ஒரு திண்ணை, அடுத்து ஒரு பட்டாலை, அடுக்களை என்று மிகச் சுருக்கமான வீடு… ஆனால், மாளிகை போல மனம் படைத்த மக்கள் சுற்றிலும் குடியிருந்தார்கள். கந்தன் சித்தப்பா, அவருடைய மனைவி முருகம்மா சித்தி, அவர்களுடைய தம்பி மனைவி கரடி சித்தி (கரடிமாடசாமி அவர்களுடைய குல தெய்வம்) பட்டன் பெரியப்பா குடும்பம், வீட்டுச் சொந்தக்காரரான சண்முகம் பெரியப்பா என்று எல்லோரையுமே உறவு சொல்லி அழைக்கும் அளவுக்கு முதல்நாளே நெருக்கமாக மாறிய மனிதர்கள்.

இப்போதும் ஆய்க்குடியில் ரத்த சொந்தங்கள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் இந்த உறவுகளையும் பார்க்காவிட்டால் பேசாவிட்டால் அந்தப் பயணம் முழுமை பெறாது என்கிற அளவுக்கு நெருக்கமான உறவு இருக்கிறது.

வீட்டின் முன்னால் மாட்டுத் தொழுவம் இருக்கும். அப்பா அரசு வேலை பார்க்கிறவர், அம்மா முன் கொசுவம் வைத்து சேலை கட்டுபவர் என்பதால் டீசண்டான குடும்பம் என்ற சலுகையில் மாடுகளை கொஞ்சம் தள்ளி கட்டிக் கொண்டார்கள். ஆனால், அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்க முடியாத அளவுக்கு அன்பு வழிந்தது அந்த வீட்டில்!

மெயின் ரோட்டுக்கு மிக அருகில் இருந்த வீடு அது. அதனால் மெயின் ரோட்டில் இருந்த எங்கள் பள்ளிக்கூடத்துக்கும் அப்பாவின் ஆஸ்பத்திரிக்கும் (அப்பா அங்கே மருந்தாளுநர்) அது மிக அருகில் அமைந்திருந்தது.

அந்த வீட்டிலும் டாய்லெட் கிடையாது. ஆற்றுக்குத்தான் போக வேண்டும். குளிக்க ஆற்றுக்குச் செல்லும் வழியில்தான் நண்பர்கள் கிடைத்தார்கள். அதைவிடச் சிறப்பான அனுபவமாக அமைவது துணி துவைக்கச் செல்வதுதான். எங்கே கிணற்றில் பம்ப் வைத்து தண்ணீர் இறைக்கிறார்கள் என்று பார்த்து அங்கே செல்வோம். சில நேரங்களில் கிணற்றில் தண்ணீர் அடியாழத்துக்குப் போய்விடும். அப்போது நீர் ஊறட்டும் என்று போட்டுவிட்டுப் போய்விடுவார்கள் பம்ப் ஷெட் காரர்கள். நாம் அப்படி காத்திருக்க முடியாதே..? கரையில் வைத்து துணியை கும்மி வாளிக்குள் வைத்து கிணற்றில் இறக்குவார்கள். உள்ளே யாரேனும் ஒருவரோ இருவரோ இறங்கி தேங்கியிருக்கும் ஊற்றில் அலசி வாளியில் போட்டு மேலே அனுப்புவார்கள். ஓரிரு முறை கரடிச் சித்தியோடு நானும் கிணற்றுக்குள் இறங்கியிருக்கிறேன்.

பொதுவாக எங்கள் கிராமத்து வீட்டில் இருந்த காலங்களில் அம்மா எங்கேனும் வெளியூர் செல்ல வேண்டியிருந்தால் (துஷ்டி போன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்காக) எனக்கும் அண்ணாச்சிக்கும் தூக்குச் சட்டியில் சாப்பாட்டை எடுத்து வைத்து திண்ணையில் கிடக்கும் ஊஞ்சல் கொக்கியில் மாட்டி வைத்துவிடுவார்கள். அங்கே சாப்பாட்டு சட்டி தொங்கினாலே புரிந்துவிடும். பள்ளிக்கூடம் முடிந்து வந்தவுடன் எடுத்து வைத்து சாப்பிட்டு விட்டு திண்ணையில் இருந்தபடியே விளையாடிக் கொண்டோ படித்துக் கொண்டோ இருப்போம். கை கழுவ, தண்ணீர் குடிக்க கடைசி வீட்டு ஆச்சி வீடு கை கொடுக்கும்.

இங்கேயும் அதே பழக்கம்தான். அதேபோல சாப்பாடு இருக்கும். எடுத்து சாப்பிட்டு விட்டு விளையாடப் போவோம். இங்கே மற்ற தேவைகளுக்கு முருகம்மா சித்தி வீடு கைகொடுக்கும்.

வீடு பற்றி இத்தனை நினைவுகளைச் சுமந்து இறக்கி வைக்கும் இந்த நேரத்தில் கரடிச் சித்தி வீட்டு சித்தப்பாவைப் பற்றி பேசாமல் கடக்க முடியாது. அவருடைய வேலையே கேரளாவுக்கு அடிமாடுகளைக் கொண்டு செல்வதுதான். கொண்டு செல்வது என்றால் லாரியில் ஏற்றிக் கொண்டுபோய் இறக்குவது அல்ல. சாலை வழியாக நாட்கணக்கில் பெரும் மந்தையாக மாடுகளை ஓட்டிக் கொண்டுபோய் உரிய விலாசத்தில் சேர்த்துவிட்டு வரவேண்டும். அவரைப் பொறுத்த அளவில் வீடு என்பதே சாலையும் டீக்கடைகளும்தான்!

எப்போதாவதுதான் வீட்டுக்கு வருவார். அதுகூட ஒரு மந்தை மாடுகள் சேரும் காலம் வரைக்கும்தான்! கிட்டத்தட்ட ஒரு நாடோடி வாழ்க்கையை வாழும் மனிதர். திடீரென்று பார்த்தால் வீட்டு வாசலில் பல் துலக்கும் குச்சியோடு உட்கார்ந்திருப்பார். சில நேரங்களில் தின்பண்டம் ஏதேனும் வாங்கி வந்து எங்களுக்கும் தருவார். மிக மிக அன்பான மனிதர்.

முதன்முதலாக நானும் என் தங்கையும் சேர்ந்து உப்புமா கிண்டலாம் என்று முடிவெடுத்து அதைச் செயல்படுத்தியது இந்த வீட்டில்தான். ரவையில் தொடங்கி வெங்காயம் பச்சைமிளகாய் வரையில் எல்லாமும் சரியான அளவில் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிண்டி இறக்கிவிட்டோம். சாப்பிடும்போதுதான் தெரிந்தது, அதில் உப்பு போடவில்லை என்று! அதனாலேயே என்ன சமைத்தோம் என்பதைச் சொல்ல முடியாத சிக்கல் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் சீனி தொட்டுக் கொண்டு அதைச் சாப்பிட்டோம்.

உறவுகள் என்பது நம்மோடு பிறந்தவர்கள் மட்டும்தான்… நம் சொந்தத்தோடு இருப்பவர்கள் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த எண்ண ஓட்டத்தை மாற்றி யாவரும் கேளிர் என்பதைக் கற்றுக் கொடுத்த வீடு அது என்று சொல்லலாம். இன்றுவரை கைகுலுக்கும் யாருடனும் நட்பாக முடிகிறது என்றால் அதற்கான சிறு தொடக்கப் புள்ளி அந்த வீட்டில் இருக்கிறது.

ஆனால் உலகத்தின் தராசு எப்படி இயங்குகிறது என்பதையும் அந்த வீடு கற்றுக் கொடுத்தது. அந்த வீட்டின் பின்பக்கமுள்ள தெருவில் வீட்டுக்கு நேர் பின்பக்கம் ஒரு பலசரக்குக் கடை இருந்தது. எல்லோரும் உறங்கும் அல்லது உண்ட மயக்கத்தில் கிறங்கிக் கிடக்கும் நேரத்தில் அந்த பலசரக்குக் கடையில் ஒரு பாடம் நடந்து கொண்டிருக்கும். முதலாளி கடைப் பையனுக்கு கைப்பக்குவத்தைக் கற்றுக் கொடுப்பார்.

ஏலே… நாம தராசைப் புடிக்கையிலே நடுவுல இருக்கற முள்ளை இப்படி பெருவிரலால லேசாத் தள்ளிவிடணும். அது சாமான் இருக்கற தட்டுப் பக்கம் சாயும்போதே வாங்க வந்தவங்க பையிலயோ கூடையிலயோ தட்டிறணும். அதேபோல எண்ணெய் அளக்கற உழக்க லேசா ஒரு நூல் சாய்ச்சு புடிக்கணும்… வாங்குறவங்க கண்ணுக்கு எண்ணெய் வழிய வழிய ஊத்துற மாரி இருக்கும்… ஆனா, உழக்குல தலை தடவுனாப்புலதான் எண்ணெய் அளவு இருக்கும்… இதுலதான் நாம மிச்சம் புடிக்கணும்… புரியுதா..? என்று அவர் நடத்தும் பாடத்தை கண்ணால் பார்த்தவன் நான்!

இன்றைக்கும் உலகத்தில் நடு முள்ளை யார் எந்தப்பக்கம் தள்ளி விடுகிறார்கள் என்றும் அந்த நூல் அளவு வித்தியாசத்தில் வழியும் விஷயத்தையும் என்னால் கண்டுபிடித்துவிட முடியும். அந்தக் கடைப் பையன் என்னவாக இருக்கிறானோ தெரியவில்லை!

No comments: