Monday, June 21, 2021

வீடு பேறு! 4/16

 ‘சென்னைக்கு வந்திருங்க பாபு..!’ என்று அழைத்தார்கள் நாசரும் இஸ்மாயிலும்! ‘சென்னைக்குப் போனால் என்ன செய்வே..?’ என்ற கேள்விக்கு முன்பாக அப்பாவும் அம்மாவும் கேட்ட கேள்வி ‘எங்கே தங்குவே..?’ என்பதுதான்! ‘நண்பர்கள் நாசர், இஸ்மாயில் எல்லாம் வீடு எடுத்திருக்காங்க… நானும் அங்கே தங்கிக்குவேன்…’ என்றேன்.

1/123… முகப்பேர் மேற்கு… இதுதான் சென்னையில் என் முதல் முகவரி! சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னைக்கு வந்து இறங்கிய நாள் இன்னமும் நினைவில் இருக்கிறது. அதற்கு முன்பு விருந்தாளியாக சில நாட்கள் நாசர் மற்றும் நண்பர்கள் இருந்த வீட்டில் தங்கியிருக்கிறேன். கிட்டத்தட்ட ஒற்றை அறை வீடு அது. கிச்சன் என்று பெயருக்கு ஒன்று இருக்கும். சில நாட்கள் வந்து தங்கிவிட்டு ஓடிவிடுவேன். இந்தமுறை இனி சென்னைதான் என்ற முடிவோடு வந்து இறங்கினேன். என்ன செய்யப் போகிறோம் என்ற தெளிவில்லை, ஆனாலும் சென்னைதான் வாழ்க்கை என்ற முடிவு மனதில் இருந்தது.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை… நாசர் ஒமேகா கேபிள்ஸ் என்ற நிறுவனத்தில் பணியில் இருந்தார். திங்கள் முதல் சனி வரையில் காலை சீக்கிரமே அலுவலகம் போய்விடுவார். இஸ்மாயிலுக்கு சொந்த கம்பெனி… அவரும் தலைவர் என்கிற வெங்கட், வேத்து என்கிற வேதமூர்த்தி இன்னும் சில நண்பர்கள் இணைந்து நடத்திய ஏதோ உதிரிபாகம் தயாரிக்கும் ஏதோ ஒரு கம்பெனியை நடத்தி வந்தார்கள். அதனால், இஸ்மாயில் கொஞ்சம் முன்னேபின்னே போவார், வருவார்!

அதனால், எப்போது ஊருக்கு வந்தாலும் சனியன்று கிளம்பி ஞாயிறன்று சென்னை வந்து விடுவார்கள். அப்போதுதான் திங்கட்கிழமை டென்ஷன் இல்லாமல் வேலைக்குச் செல்லமுடியும். அப்படியொரு ஞாயிற்றுக்கிழமைதான் நானும் அவர்களோடு வந்து இறங்கினேன்.

அவர்கள் தங்கியிருந்த அறையில் நாசர், இஸ்மாயிலைத் தவிர வேதமூர்த்தி தங்கியிருந்தார். கூடவே மேலூரார் என்று செல்லமாகவும் கோபமாகவும் அழைக்கப்படும் சிவசுப்பிரமணியன் தங்கியிருந்தார். அவரும் பொறியாளர்தான். அவர் வேறொரு மென்பொறியியல் நிறுவனத்தில் வேலையில் இருந்தார். அவர் ஏற்பாட்டின் பேரில்தான் நான் சென்னையின் முதல் வேலையில் சேர்ந்தேன். அதன்பிறகுதான் விகடனுக்குள் நுழைந்தேன்.

மறுபடியும் அந்த ஞாயிற்றுக் கிழமைக்கு வருகிறேன். காலையில் அறைக்கு வந்தவுடன் அறிமுகமெல்லாம் முடிந்தது. நாசர் எனக்கும் அந்த அறைக்குமான உறவைப் பற்றிச் சொன்னார். ‘பாபு… ஒரு வேலைனு செட்டில் ஆகற வரைக்கும் ரூம் ரெண்ட் ஷேர் பண்ண வேண்டாம்… நாங்க பார்த்துக்கறோம்… சாப்பாடு தினமும் ராத்திரியும் ஞாயிற்றுக் கிழமைகள்ல மதியமும் ஒரு வீட்டில் இருந்து சாப்பாடு கொடுத்து விடுவாங்க… அந்த பில்லும் நாங்க பார்த்துக்கறோம்… காலை சாப்பாட்டுக்கும் சோப்பு, சீப்பு இத்யாதிகளுக்கும் வர்ற வழியில் இருக்கற அண்ணாச்சி டிபன் கடையில் அக்கவுண்ட் தொடங்கித் தர்றோம்… உங்களால் எப்ப எவ்வளவு கொடுக்க முடியுமோ கொடுத்து அக்கவுண்டை மெயிண்டெய்ன் பண்ணிக்கோங்க… ஓகேதானே..?’ என்றார்.

‘டபுள் ஓகே..!’ என்றேன். அடுத்த நொடி நாசர் அதிர்ச்சி காட்டினார்.

‘பாபு… நீங்க வெஜிடேரியனாச்சே… இங்கே சன் டேன்னா அசைவம் சமைச்சு கொடுத்து விடுவாங்களே..?’ என்று பதறியவரிடம், ‘நண்டு சாப்பிடுற ஊருக்குப் போனா நடுத்துண்டு சாப்டுக்க வேண்டியதுதான்… அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்…’ என்றேன்.

குளித்து ப்ரெஷ் ஆகி வருவதற்குள் லஞ்ச் கேரியர் வந்துவிட்டது. டப்பாவைத் திறந்தால் நண்டு! ‘நடுத் துண்டை பாபுவுக்கு கொடுத்திருங்க…’ என்றார் இஸ்மாயில் சிரித்துக் கொண்டே! சுடச்சுட நான் வெஜிட்டேரியன் ஆனேன். அதன்பிறகு அத்தனையும் சாப்பிட்டுப் பழகிக் கொண்டேன், அகோரியாக மட்டும்தான் மாறவில்லை!

வீடென்று பார்த்தால் மூன்றே அறைகள்தான். முதல் அறை செருப்புகளைப் போட்டு வைப்பதற்கான வராண்டா… (ஆமாம்… செருப்பு கழற்றி கழற்றி அவ்வளவு மண்ணோடு இருக்கும்.) அடுத்த அறையில்தான் எல்லோருக்கும் படுக்கை! அதை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்வோம். மூன்றாவது அறை கட்டும்போது கிச்சன்… எங்களுக்கு உடைமாற்றும் அறை. பின்னால் சின்னஞ்சிறு பாத்ரூம்… வீட்டின் முன்னால் படிக்கட்டின் கீழே டாய்லெட்! அவ்வளவுதான் வீடு!

ஆனால், தென்காசியில் இருந்து புறப்படும் அத்தனை வி.ஐ.பி (யெஸ்… தனுஷ் நடித்த அதே விஐபி விரிவாக்கம்தான்) களுக்கும் அந்த அறையில் இடம் உண்டு. எவ்வளவு வேண்டுமானாலும் விரிந்து கொடுக்கும்.

ஒருகட்டத்தில் எங்கள் படைக்கு நிகராக தம்பியர் படையும் அறையை நிறைத்திருந்தது. எங்கள் தென்காசி டீம் மெம்பர்களான தங்கராஜின் தம்பி பாரி, மகேஷின் தம்பி செந்தில், கைலாஷின் தம்பி மாரியப்பன் என்று இளைய தலைமுறை வந்து இறங்கினார்கள். அவர்களுக்கும் இடம் இருந்தது அந்த வீட்டில்!

மேலே சொன்னேனே மேலூரார்… எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தவர், அவர்தான் எங்கள் அறையின் எண்டர்டெய்னர்… யார் கேள்வி கேட்டாலும் அவர் சொல்லும் பதில் அத்தனை ஃபன்னாக இருக்கும். மொழி மட்டுமல்ல… முழியும் கொஞ்சம் பாண்டியராஜன் டைப்தான்! ஆனால், அவர் அந்த ஃபன் விஷயங்களை அறிந்து செய்வதில்லை… சீரியஸாகவே பேசுவார். நமக்குதான் சிரிப்பு சிரிப்பாக வரும்.

எங்களுக்கு இருந்த இன்னொரு எண்டர்டெய்ன்மெண்ட் ஞாயிற்றுக் கிழமை சினிமா. அப்போது குடும்பஸ்தனாக இருந்த தலைவர் என்கிற வெங்கட் வீடு அடுத்த தெருவில் இருந்தது. ஞாயிற்றுக் கிழமை மாலை கும்பலாகக் கிளம்பி அவர் வீட்டுக்குப் போய் தூர்தர்ஷன் சினிமா பார்ப்போம். சினிமா மொக்கையாக இருந்தாலும் கவலையில்லை… ஏனென்றால் அண்ணி கையால் சிறப்பான டீ கிடைக்கும்.

நான் சென்னையில் முதன்முதலில் தங்கியதால் அந்த வீடு எனக்கு ஸ்பெஷல் இல்லை. நான் வந்து இறங்கிய நாளில் சாப்பாடு, வட்டச் செலவுகளுக்கு கவலைப்பட வேண்டாம் என்று நண்பர்கள் சொன்னது வெறும் வாய் வார்த்தை இல்லை. கையில் எடுத்துக் கொண்டு வந்த பணம் தீரும் வரை ஜாலியாக சுற்றிய என்னிடம், ‘பாபு… நீங்க விகடன்ல ஸ்டூடண்ட் ரிப்போர்ட்டரா எல்லாம் இருந்திருக்கீங்க இல்ல… மேலூர் கம்பெனியில் ஒரு பத்திரிகை நடத்துறாங்க… அதிலே ட்ரை பண்ணலாமே..?’ என்றார் நாசர். நானும் மேலூரார் சிபாரிசால் வேலையில் சேர்ந்தேன். மாதம் 900 ரூபாய் (இரண்டு சைபர்தான்… எண்ணிக்கை பிழை இல்லை) சம்பளம்!

அடுத்த வாரம் ஏதோ வேலையாக அண்ணாசாலை பக்கம் போனவன் அங்கிருக்கும் விகடன் அலுவலகம் போனேன். அங்கு நிருபர்களாக இருந்த ரா.கண்ணனும் ஜி.கவுதமும், ‘பத்திரிகை வேலைன்னா விகடனுக்கு வந்துட வேண்டியதுதானே..?’ என்றார்கள். ஆனால், அங்கே முழுநேர வேலை உடனடியாகக் கிடைக்காது. கட்டுரை எழுதிக் கொடுத்து அது பிரசுரம் ஆனால் சன்மானம் கிடைக்கும். ஒருவேளை எதிர்காலத்தில் வேலை கிடைக்கலாம் என்கிற நிலை!

மாதம் ஒன்றாம் தேதி கிடைக்கும் உறுதியான சம்பளமா… அல்லது விகடன் என்ற பிரபலமான பிராண்டா… குழப்பத்தில் இருந்தேன்.

மறுபடியும் நாசர்தான் உட்கார வைத்து பேசினார். ‘விகடன்ல ட்ரை பண்ணுனா ஆறு மாசம் இல்லை ஒரு வருஷத்துல உங்களை ப்ரூவ் பண்ணி வேலையில் சேர்ந்திட முடியாதா என்ன..? அந்த ஒரு வருஷத்துக்கு வீடு, சாப்பாடு பற்றியெல்லாம் யோசிக்காதீங்க… நாங்க பார்த்துக்கறோம்… வீட்டுக்கு ஷேர் கொடுக்கணுமேனு சின்ன வேலைக்கு போகவேண்டாம்..’ என்று அவரும் இஸ்மாயிலும் சொன்ன வார்த்தைகளை எடுத்துக் கொண்டு விகடனுக்கு போனேன்..! முதல்மாதமே ஆயிரத்து அறுநூறு ரூபாய் சன்மானம்..!

அடுத்த பூ காலத்தில் கைலாஷ் தம்பி மாரியப்பன் வந்தான்… நாசர் சொன்னார். ‘மாரியப்பனுக்கு வேலை கிடைக்கற வரைக்கும் அவன் செலவுகளை நாம பார்த்துக்கணும் பாபு… அதனால உங்க ஷேர் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா தேவைப்படும்..!’

No comments: