Tuesday, April 5, 2011

நானும் விகடனும்

இந்தமுறை மட்டும் நானும் விகடனும் அல்லது நானும் கிரிக்கெட்டும் அல்லது நானும் சச்சினும் என்று எந்தத் தலைப்பை வைக்கலாம் என்று குழம்பிப் போய்விட்டேன். ரேடியோவை வைத்துக் கொண்டு கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பாரும் (இன்று அவரோடு நெருங்கிப் பழகும் பேறு பெற்றிருக்கிறேன்) கிரிக்கெட் வல்லுனர் ராமமூர்த்தியும் ரங்காச்சாரியும் சொல்லும் வர்ணனைகளைக் கேட்டு கிரிக்கெட்டை காட்சிப்படுத்திக் கொண்டிருந்த என்னை அழைத்து சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக விளக்குகள் அமைத்திருக்கிறார்கள். அதை இன்று தொடங்கி வைக்கப் போகிறார்கள்... பார்த்துவிட்டு வாருங்கள் என்று அசைன்மெண்ட் கொடுத்தார் வீயெஸ்வி சார். ஏதோ திருப்பதிக்கு சிறப்பு தரிசனத்துக்கு பாஸ் கிடைத்த சந்தோஷத்தோடு ஸ்டேடியத்துக்கு ஓடினேன்.

துவக்க விழா சம்பிரதாயங்கள் முடிந்து ஸ்ரீகாந்த் ஒருபக்கமும் வெங்கட்ராகவன் மறுபக்கமும் தலைமை தாங்க ஒரு காட்சி போட்டி நடத்தினார்கள். (அனேகமாக முதல் ட்வெண்டி 20 அதுதான் என்று நினைக்கிறேன்) பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. அந்தமுறை நடந்த உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் மோதும் போட்டிக்கான டிக்கெட் கொடுத்திருந்தார்கள். அப்போது விகடன் போன்ற வார இதழ்களுக்கு பாஸ் கொடுக்கமாட்டார்கள். ஆனால், அந்த டிக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டே நானும் புகைப்படக் காரர் குமரேசனும் பாஸ் வைத்திருப்பவர்கள் செல்லமுடியாத இடங்களுக்கெல்லாம் போய்வந்தோம்.

போட்டி தினத்தன்று கூடுதல் பரவசம்... எப்படியாவது வீரர்களை நெருங்கிப் பார்த்துவிட வேண்டும் என்ற வேகம்... நிகழ்ச்சிக்கு டிரிங்ஸ் வழங்கிய குளிர்பான நிறுவனத்தின் மேலாளரைப் பிடித்து சின்ன பேட்டி எடுத்துவிட்டு அந்த டிரிங்க்ஸ் வண்டிக்குள் ஏறி பதுங்கி வீரர்களை அருகில் கண்டோம். சும்மா போயிட்டு வாங்க என்று அனுப்பிய விகடனுக்கு கவர் ஸ்டோரியோடு திரும்பினோம். எனக்கும் குமரேசனுக்கும் எப்போதுமே அப்படி ஒரு ராசி வொர்க் அவுட் ஆகும்!

அடுத்து அனேகமாக சென்னை சேப்பாக்கத்தில் நடந்த எல்லாப் போட்டிகளையும் நான் பத்திரிகையாளர் கேலரியில் அமர்ந்து ரசித்திருக்கிறேன். இந்தியா பாகிஸ்தான் போட்டியில் அன்வர் அடித்து வெளுத்தாரே... அந்தப் போட்டியில் மட்டும் பத்திரிகையாளர் கேலரியில் இடம் கிடைக்காமல் ரசிகர்கள் கேலரியில் அமர்ந்து பார்த்தேன். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வெளுத்து வாங்கியிருக்க... இடைவேளையில் சாப்பிட வெளியே வந்தேன். மீண்டும் உள்ளே சென்றபோது சச்சின் அல்லாமல் வேறு இரு வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். என்னங்க... சச்சின் ஓப்பனிங் இறங்கலையா என்று கேட்டேன் பக்கத்து நாற்காலிக்காரரிடம்.

கடுப்பைக் கிளப்பாதீங்க... நாலு ரன்னில் அவர் அவுட் என்றார். என்ன இப்படிப் பண்ணிட்டாரு சச்சின் என்று சங்கடமாக இருந்தது. இத்தனைக்கும் முதல்நாள் பார்க்கும்போது நாளைக்கு நல்லபடியா ஆடுங்கனு சொல்லிட்டுத்தான் வந்தேன். (நிஜம்தான்! இந்த ஃப்ளாஷ்பேக்கைப் படிங்க... புரியும்!)

போட்டிக்கு முந்தைய நாள் சச்சின் தி ஹிந்து பத்திரிகையின் நிருபர் சஞ்சய் ராஜனுக்கு பேட்டிக்கு நேரம் கொடுத்திருந்தார். நானும் சஞ்சயும் நல்ல நண்பர்கள். அவரோடு பேசிக் கொண்டே போனேன். பேட்டியின்போது சும்மா பக்கத்தில் இருந்து பார்க்கலாம் என்பது என் எண்ணம். சஞ்சய்க்கும் அவர் கேட்கும் கேள்விகளை நான் விகடனில் எழுதமாட்டேன் என்று தெரியும். அவர் கேட்கும் கேள்விகளை விகடனில் எழுதவும் முடியாது. ‘உங்களுடைய பத்தாவது டெஸ்ட் போட்டியில் நாக்பூர் மைதானத்தில் ஏழாவது ஓவரை வீசிய வாசிம் அக்ரம் மூன்றாவது பந்தை பவுன்சராகப் போட்டார்... அதை ஆடாமல் தலையைக் குனிஞ்சு தவிர்த்தீங்களே... ஏன்? என்ற ரேஞ்சில் புள்ளிவிவிவரங்களாக இருக்கும். அன்றைக்கும் அப்படிப்பட்ட கேள்விகளுக்கு சீரியஸாக பதில் சொல்லிக் கொண்டிருந்த சச்சின், நடுவே என்னிடம், ‘நீங்களும் பத்திரிகையாளர்தானே... உங்ககிட்டே எனக்கான கேள்விகள் இல்லையா..?’ என்றார்.

ஏன் இல்லாமல்..? என்று ஆரம்பித்து சஞ்சயின் பேட்டிக்கு நடுவே கவாஸ்கர் பற்றி கபில் பற்றி உலகக் கோப்பை பற்றி அவருடைய ஓட்டல் பற்றி அஞ்சலி பற்றி அம்மாவுடன் ஆடிய பால்கனி கிரிக்கெட் பற்றி காம்ளி பற்றி பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டேன். இருவரும் சுமார் ஒருமணி நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெறும்போது சஞ்சயின் கேள்விகளுக்கு நடுவே நான் ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டது உங்களுக்குக் கொடுத்த பேட்டியில்தான். இன்னும் சொல்லப் போனால் என் பிராக்டீஸ் களைப்பே உங்கள் கேள்விகளால் போய்விட்டது. நன்றி’ என்று சொல்லிவிட்டுப் போனார். அப்போதுதான் சொன்னேன். நாளைக்கு கவனமா ஆடுங்க! என்று.

அப்போதே சொன்னார் உலகக் கோப்பையை ஒருநாள் வெல்வோம்னு!

5 comments:

Chitra said...

அருமையான பகிர்வு. கலகலப்பான பதிவு.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இன்னும் சொல்லப் போனால் என் பிராக்டீஸ் களைப்பே உங்கள் கேள்விகளால் போய்விட்டது. நன்றி’ என்று சொல்லிவிட்டுப் போனார். //
நாமும் ஒரு பத்திரிகையாளர் ஆக மாட்டோமா என்னும் ஏக்கத்தை கிளப்பிய வரிகள் இறுதி ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுக்காமல் அவுட் ஆனாலும், சச்சினுக்கு உரிய மரியாதை கொடுத்ததை பார்க்கும் போது சந்தோஷமா இருந்தது.

கிருபாநந்தினி said...

சச்சினுடன் நடத்திய அந்த உரையாடலைத் தனிப் பதிவாவே போடலாங்களேண்ணா?!

சி. முருகேஷ் பாபு said...

போடலாம் கிருபா நந்தினி,
ஆனால், அதை ஆனந்த விகடனில் கட்டுரையாக எழுதிவிட்டேன். அந்தச் சூழலுக்கு ஏற்ற கட்டுரையாக எழுதிய நினைவு.
எனிவே, வருகைக்கு நன்றி

Thenammai Lakshmanan said...

கிரிக்கெட் கொஞ்சம் பிடிக்காத விஷயம். அவ்வப்போது ஸ்கோர் பார்த்தாலும் கூட. இந்தியா விளையாடினால் மட்டும் கொஞ்சம் பார்ப்பது..

உங்கள் கட்டுரை நல்ல சுவாரசியம். ..பிடிக்காததையும் பிடிக்கச் செய்வது எழுத்தின் ஒரு அழகான உத்தி..:))