‘ஏட்டி அம்சவேணி... உங்காத்தாளுக்கு பொங்கச் சீருன்னா என்னனு தெரியுமா... நான் என்ன உங்களக் கணக்கா
வழிச்சு நக்கற பரம்பரைனு நினைச்சாளா... சொக்காரங்க... சொகக்காரங்கனு ஒரு அறுப்பு ஆள்
இருக்கு எனக்கு... ஒவ்வொருத்தருக்கும் ஒரு கை அள்ளிப் போட்டுக் குடுக்கணும்னாக் கூட
காணாதுட்டி... ஒவ்வொண்ணுலயும் அவ்வஞ்சு கிலோ குடுக்கணும்னு சொல்லியும் உங்காத்தா இப்படி
பொங்கப்படி குடுத்து விட்டிருக்கான்னா என்ன நெஞ்சழுத்தம்...’ என்று மாமியார்காரி வசைபாடியபோதுகூட
அம்சவேணிக்கு வலிக்கவில்லை. ஆனால், இந்த வார்த்தைகளை எல்லாம் ஏதோ மெகா சீரியலில் வரும்
வசனத்தைக் கேட்கும் பாவனையில் ரியாக்ஷனே இல்லாமல் சாமிநாதன் கேட்டுக் கொண்டு நின்றதுதான்
வலித்தது.
இத்தனைக்கும்
அம்மா எல்லா காய்கறிகளிலும் ஐந்து கிலோவுக்கு மேலேயே போட்டிருந்தாள். பூசணிக்காய்,
தடியங்காய் எல்லாம் முழுக் காயாகத்தான் கொடுத்திருந்தாள். அந்த பூசணிக்காயை எடை போட்டதில்
ஐந்து கிலோவுக்கு அரைக்கிலோ குறைவாக இருந்ததாம். அதனால்தான் இத்தனை கூச்சலும் கூப்பாடும்!
சாமிநாதன் கையைப்
பிடித்துக் கொண்டு இந்த வீட்டுக்குள் நுழைந்த நாளிலேயே அம்சவேணிக்கு புரிந்துவிட்டது
இந்த வீட்டின் தன்மை என்னவென்று!
‘மறுவீட்டு பலகாரத்துல
இருபது முறுக்கு உடைஞ்சிருக்கு… இப்படி உடையும்னு எதிர்பார்த்து அம்பது முறுக்கு கூடுதலா
குடுத்திருக்கணும்… இல்லை, மறுவீட்டு பலகாரத்தை பித்தளை குத்துப் போணியில வச்சு குடுத்துருக்கணும்…
என்ன சம்பந்தம் கண்டுருக்கா உங்க அம்மா…’ என்று அன்றே தன் கணக்கைத் தொடங்கிவிட்டாள்.
எடுத்ததெற்கெல்லாம்
உங்க அம்மா என்று முகவாய்க் கட்டையில் இடிக்கும் மாமியார்காரி ஆறு மாதங்கள் ஆனதும்,
‘உங்க ஆத்தா…’ என்று சொல்லும் லெவலுக்கு கீழிறங்கியிருக்கிறாள்.
‘என்னங்க… இந்த
பொங்கச் சீரு அத்தனையையும் உங்க அம்மாதான் பொங்கித் திங்கப் போறாங்க… உறவு சனங்களுக்கு
இதுல இருந்து ஒரு வெண்டைங்காய் கூட குடுக்க மாட்டாங்க… பேச்சுத்தான் பெருசா இருக்கு…
அவங்க அப்படிப் பேசுதாங்கன்னா நீங்களும் இடிச்ச புளி மாரி நிக்கிறீங்க…’ என்று படுக்கையறையில்
புலம்பும்போதுகூட, ‘அம்மா இன்னும் எத்தனை நாளைக்கு பேசிகிட்டு இருக்கப் போறா… விட்டுத்
தள்ளு…’ என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
ஆரம்பத்தில்
அம்சவேணிக்கு அழுவதற்கே நேரம் சரியாக இருந்தது. புதுப் பொண்ணைப் பார்க்க வருபவர்கள்
எல்லாருமே, ‘ஊரு மாறி வந்தது உனக்கு கொஞ்சம் மாச்சலாத்தான் இருக்கும்… நீ பட்டணத்துக்காரி…
படிச்சவ… இந்த பட்டிக்காடு கொஞ்சம் பழகச் சவுகரியம் இல்லாமத்தான் இருக்கும்… மனசுல
போட்டு குழப்பிக்கிடாத…’ என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள். ஆனால், விளக்கு
வைத்த பிறகுதான் கால்வாய் கரைக்குப் போகமுடியும் என்பதோ ஆத்துல குளிக்கறப்ப உள் பாவாடையை
மாராப்பாகக் கட்டிக் கொண்டுதான் குளிக்க வேண்டும் என்பதோ அம்சவேணிக்கு கஷ்டமாக இல்லை.
தொட்டதற்கெல்லாம் குத்தம் சொல்லும் மாமியாரின் வசவுகளும் சாமிநாதனின் பாராமுகமும்தான்
கஷ்டமாக இருந்தது.
வந்த ஒரு வாரத்தில்
ஊர் கொஞ்சம் பழகி விட்டது. சாமிநாதனுக்கு வங்கி உத்தியோகம். காலையில் புறப்பட்டுப்
போய்விடுவான். மதியம் வங்கி பியூன் சாப்பாடு வாங்க வருவார். அதற்குள் கேரியர் கட்டி
வைத்தால் போதும். என்ன சமைக்க வேண்டும் என்று அத்தைக்காரி எடுத்துக் கொடுத்துவிடுவாள்.
அவள் வயக்காடுக்குக் கிளம்பிச் சென்றதும் அதை அரைத்தோ கரைத்தோ குழம்பாக வைத்துவிட்டு,
தொடுகறியும் வைத்துவிட்டு பக்கத்து வீட்டுக்கு ஓடிவிடுவாள். அங்கே இருந்த கிழவிதான்
அம்சவேணிக்கு ஒரே ஆறுதல்..!
வீட்டில் இருந்துகொண்டே
இட்லி அவித்து விற்றுக் கொண்டிருந்தாள் கிழவி. பெரும்பாலும் டிபன் பாக்ஸ் கொண்டு வந்து
பிள்ளைகள் வாங்கிச் சென்றுவிடும். அங்கே வந்து சாப்பிடுபவர்கள் குறைவுதான்… அதுவும்
பத்து மணிக்கெல்லாம் கடையை மூடிவிடுவாள். அதன்பிறகு கிழவருக்கு அந்த விறகடுப்பு காந்தலிலேயே
வெந்நீர் போட்டு வைத்துவிட்டு மிச்சமிருக்கும் நாலைந்து இட்லிகளையும் மிஞ்சியிருக்கும்
சட்னி சாம்பாரையும் தட்டில் வைத்துக் கொண்டு சாப்பிட உட்காருவாள். அம்சவேணி குழம்பு
தொடுகறி வேலையை அதற்குள் முடித்து விடுவாள். மாமியார் வர சில நேரங்களில் மூன்று மணிகூட
ஆகும். சாமிநாதனின் வங்கி பியூன் பனிரெண்டரைக்குதான் வருவார். ஆக, பனிரெண்டு மணிக்கு
உலையை வைத்தால்கூட போதும்.
அந்த ஊரின் வரலாற்றை
கிழவிதான் அம்சவேணிக்கு தினம் ஒரு எபிசோடாகச் சொல்வாள். நகைச்சுவைத் திங்கள், காவிய
புதன் என்கிற ரேஞ்சில் ஒவ்வொரு எபிசோடு ஒவ்வொரு வகையாக இருக்கும்.
திடுமென்று நினைத்தாற்போல
சொல்வாள்… ‘நம்ம கடைல கணக்கு வைச்சு திங்கானே கோவிந்தன்… அவனுக்கு ரெண்டு பொண்டாட்டி.
இருந்தும் என்ன பிரயோசனம்… நான் போட்டாத்தான் அவனுக்கு சாப்பாடு… பத்து இட்லியை உள்ள
தள்ளிட்டு மாட்டை பத்திகிட்டு போவான்… ஏம்ல, ரெண்டு பேரு இருக்காளுவல்லானு ஒருநா கேட்டேன்…
அவட்ட போனா நீ அங்க சாப்டுருப்பனு பானையைக் கழுவிட்டேன்னு சொல்லிட்டா… இவட்ட போனா,
அங்க சாப்டலையாக்கும்… இப்பந்தான் இருந்த மாவை சுட்டு சாப்டேன்னுட்டா… பச்சத் தண்ணியக்
குடிச்சுட்டு பசியோட மாட்டப் பத்திகிட்டு போனேன். இனிமே ஒரு செருக்கியையும் நம்பப்
படாதுனு அன்னைக்கு முடிவு பண்ணிட்டேன் பெரியாத்தானு இங்க வந்துட்டான்… என்ன யாவாரம்
நடந்தாலும் அவனுக்கு ஒரு ஈடு தனியா ஊத்திருவேன்…’ என்று கிழவி சொன்ன கொஞ்சநேரத்தில்
கோவிந்தன் வந்தான். அம்சவேணிக்கு சிரிப்பாகவும் அதேநேரம் பாவமாகவும் இருந்தது.
‘ஏளா… அம்சா…
அம்மங்கோயில் பக்கத்துல பிள்ளையார் கோயில் இருக்குல்ல… போயிட்டு வருவமா… சோமவாரத்துக்கு
புள்ளையாரை கும்புட்டா புருஷனுக்கு நல்லது… அந்த புண்ணியத்துலதான் கிழவரு வண்டியெல்லாம்
ஓடுது…’ என்று ஒருநாள் அழைத்தாள் கிழவி.
மாமியாருக்கு
அத்தை உறவுக்காரி அந்த கிழவி. அதனால், மாமியார் ஏதும் சொல்லவில்லை. அப்படிப் போகும்போது
ஒருநாள் அந்த ஊர் அம்மனின் கதையைச் சொன்னாள்.
‘ரொம்ப துடியானவ
இந்த இசக்கி… லெச்சணமா இருக்கியே… உன்னைக் கட்டிக்கிடுதேன்னு கூட்டிட்டு வந்த செட்டியார்
ஏமாத்துனதும் அவன கால்ல போட்டு மிதிச்சு குடலை உருவுனவ… புள்ளையாரக் கும்புடுத கையோட
இசக்கிக்கும் ஒரு சூடனப் பொருத்து… அவ பாத்துக்கிடுவா… வருசத்துக்கு ஒருக்க கொடை நடக்கும்…
நடக்கையிலே வீட்டு வீட்டுக்கு தேங்கா உடைப்பாங்க. அப்பம் அருள் வந்து ஆடுறவங்களை ஊரே
கும்புடும். நம்ம காலனியிலே இருக்கானே தருமரு... தை மாசக் குளுருல அவன் பொண்டாட்டி
நாக்கைத் துருத்திகிட்டு ஆடிவருவா... அம்மா தாயேனு மஞ்சத் தண்ணிய குடங்குடமா ஊத்துவாங்க.
அதையும் தாங்கிகிட்டு ஊரைச் சுத்தி வருவா பாரு… அம்மனோட அருள் இல்லன்னா கால்ல தண்ணிய
ஊத்துனாக் கூட ஜன்னி கண்டுரும்…’ என்று சொல்லிக் கொண்டே அம்மனுக்கு ஒரு சூடனைக் கொளுத்துவாள்
கிழவி.
பொங்கல் அன்று
மூன்று பானை பொங்கல் வைக்க வேண்டும் என்று சொன்ன மாமியார்காரி வாசலில் பெரிய கோலத்தைப்
போட வைத்து அதிலே வரிசையாக பானைகளையும் ஏற்றி விட்டாள்.
‘என்ன சம்முவத்
தாயி… மருமவ தலைப் பொங்கல் சீரு கொண்டாந்துருக்காளாக்கும்… மூணு பானை வெச்சிருக்கியே..!’
என்று வாசலில் நின்று கேட்டவர்களிடம், ‘ஒண்ணு வீட்டுப் பான… ஒண்ணு தலைப் பொங்கல் பானை…
ரெண்டா வைக்கக் கூடாதுன்னு ஒண்ணு சேர்த்து வெச்சிருக்கேன்…’ என்றாள். அம்சவேணிக்கு
மனசு உலையாகக் கொதித்தது. பொங்கல் பொங்கி முடிந்ததும் கையோடு எல்லாக் காயையும் நறுக்கிப்
போட்டு ஒரே குழம்பாக வைத்து இஞ்சிப் பச்சடியும் வைத்து இறக்கி விட்டாள்.
மெலிதான குரலில்,
‘பொங்கல்னா எங்க வீட்டுல சக்கரப் பொங்கல் வைப்பாங்க…’ என்று சாமிநாதனிடம் சொன்ன அம்சவேணியிடம்,
‘சாயங்காலம் சாமி கும்பிடையிலே வேற வைக்கணும். அப்ப சக்கர பொங்கல் வெச்சுக்கிடலாம்…
அதுதான் வழக்கம்…’ என்றாள் மாமியார்காரி!
‘அது என்ன சாமி
கும்பிடு…’ என்றாள் மத்தியான நேரத்தில் கிழவி வீட்டுக்குப் போன அம்சவேணி.
‘செத்தவங்களுக்கு
சீலை வெச்சுக் கும்பிடுறது நம்ம குடும்பத்துல பழக்கம்… கன்னி கழியாம செத்துப் போன பொம்பளைப்
புள்ளை சீலைக்கு அலந்து போய்க் கிடக்கும். வருசத்துக்கு ஒருதடவை சீலையை வெச்சு ஒரு
தம்ளர் தண்ணியும் ஒரு முழம் பூவும் வெச்சுக் கும்பிட்டோம்னா அந்த ஆத்துமா சாந்தியடையும்.
நம்மளுக்கும் நாள் பூரா வழிகாட்டும்…’ என்றாள் கிழவி.
‘அந்த சேலையை
என்ன செய்வாங்க..?’ என்றாள் அம்சவேணி.
‘ஒரு பொட்டி
வெச்சிருக்கோம்… அதுல புதுத் துணியை மடிச்சு வெச்சிருவோம். ஒரு வருசத்துக்கு ஆசைக்கு
அவ கட்டிக்கிடுவா… வருசம் கழிஞ்சதும் புதுச் சேலையை எடுத்து பொட்டியிலே வெச்சுட்டு
பழச நனைச்சு குடும்பத்து பொம்பளை ஒருத்தி எடுத்து கட்டிக்கிடுவா…’ என்றாள் கிழவி.
‘நம்ம குடும்பத்துல
செத்தது யாரு… சேலை யாருக்கு..?’ என்ற அம்சவேணிக்கு இந்த பழக்கமே ஆச்சரியமாக இருந்தது.
ஆச்சரியத்தின் அடியாழத்தில் நம்ம மாமியாருக்கும் யார் மேலயோ அன்பு இருந்திருக்கே… சேலை
எடுத்து வைத்து கும்பிடும் அளவுக்கு என்ற எண்ணம் இருந்தது.
‘உங்க மாமியாருக்கு
நாத்தனாக்காரிதான்… பதிமூணு வயசு… அப்ப நம்ம வீட்டுல மாடு மேய்க்கதுதான் எல்லாருக்கும்
தொழில். இவ கடைக்குட்டி… பெரியவளுக எல்லாம் மாடு பத்திகிட்டு போனாளுவன்னா இவ சாணிக்
கூடையை தூக்கிக்கிட்டு பின்னாலயே போவா… ஒரு பொட்டு சாணியக் கூட சிந்தாம சிதறாம கொண்டு
போய் எருக்குழியிலே கொட்டணும்…’ சொல்லும்போதே கிழவியின் குரலில் சாணி வீச்சம் அடித்தது.
‘முத்தம்மானு
பேரு… அவ மட்டும்தான் நம்ம குடும்பத்துலயே சொல்லிக்கிடுத மாரி கலரு… அவளுக்குப் பொறகு
நீதான் செவத்த தொலியா வந்திருக்கே… முத்தம்மா திடீர்னு மூச்சு விட முடியாம இந்தா… இந்த
திண்ணையில வந்துதான் படுத்துகிட்டா… ரெண்டே நாளுதான்… அம்மன் கோயில் பூசாரி தண்ணி ஓதி
விட்டும்கூட சரியாகலை… மூணாம் நாளு மத்தியானம் போல இழுத்துகிட்டுக் கிடந்த மூச்சு ஒரேயடியா
நின்னு போச்சு… அவ மேல் மூச்சு கீழ்மூச்சு இழுத்துகிட்டு கிடந்தப்ப ஒரு கிளாஸ் தண்ணிகூட
உங்க மாமியார்காரி குடுக்கலை… இவ அள்ள வேண்டிய சாணிய நம்ம அள்ள வேண்டியதாப் போச்சேனு
இவளை கரிச்சுக் கொட்டுனா… இப்பம் விழுந்து விழுந்து கும்புடுதா… அவளுக்கு படைச்ச சீலையையும்
வெக்கமில்லாம உடுத்திக்கிடுதா…’ என்றாள் கிழவி.
ஏற்கனவே நல்ல
கஞ்சி ஊத்த மாட்டாள் என்பதில் தொடங்கி மாமியார் காரியைப் பத்தி பலரும் பல விஷயங்களைச்
சொல்லித்தான் வைத்திருந்தார்கள். அம்சவேணிக்கே இந்த ஆறுமாசத்தில் பல அனுபவங்கள் கிடைத்திருந்தன.
ஒருநாள் சோத்துப்
பானையில் தண்ணீரை ஊற்றிவிட்டு, ‘நீ இன்னும் சாப்பிடலையா… நான் தண்ணி ஊத்திட்டேனே… சரி,
பரவாயில்லை… அப்படியே அரிச்சு வெச்சு குழம்பை ஊத்து… சுடுசோறு மாரிதான் இருக்கும்…’
என்று சொல்லிவிட்டுப் போனாள்.
இன்னொருநாள்
இருந்த குழம்பை எல்லாம் துணி கொண்டாந்த ஏகாளிப் பயகிட்ட ஊத்திட்டேனே… சரி, தொவைய அரைச்சு
மோரை ஊத்தி சாப்புடு என்றாள். அப்படிப்பட்ட மாமியார்காரி தன்னோட நாத்தனாருக்கு எப்படியெல்லாம்
சாப்பாடு போட்டிருப்பாள் என்பதை அம்சவேணியால் யூகிக்க முடிந்தது.
‘அது இருக்கட்டும்…
இந்த சேலை புடிச்சிருக்கு… இது புடிக்கலைனு முத்தம்மா எப்படிச் சொல்லும்..?’ என்றாள்.
‘வழக்கமா எந்த
வீட்டுல சீலை வெச்சு கும்புட்டாலும் யார் மேலயாவது சாமி வரும்… நம்ம முட்டாயி வளவுல
ஒருத்தன் நாண்டுகிட்டு செத்துப் போனான். அவனுக்கு வேட்டி வெச்சு கும்புடுவாங்க. அவன்
தங்கச்சி மேலதான் சாமி வரும். வந்தா சீரெட்டு புடிக்கதென்ன… சீமை சாராயம் குடிக்கதென்னனு
அட்டூழியம் பண்ணிருவா அந்தப் புள்ள… படையல் முடிஞ்சதும் இந்தப் புள்ளயா இப்படி பண்ணுச்சுனு
கேட்கிற மாதிரி அமைதியா இருப்பா… ஆனா, நம்ம முத்தம்மா அப்படி யார் மேலயும் வரமாட்டா…
நாமளா கும்புட்டு எடுத்து வெச்சிருவோம்…’ என்றாள்.
‘சரி… அம்சா…
நீ போ… உன் மாமியார்காரி சக்கரைப் பொங்கல் வைக்க உன்னைத் தேடுவா… நான் சாமி கும்பிடயில
வந்திருதேன்…’ என்று அனுப்பி வைத்தாள்.
படையல் தயாராக
இருந்தது. மாமனார் புதுச் சேலையையும் பழைய சேலையையும் நனைத்து சுருட்டி வைத்து அதன்
மேலே மல்லிகைச் சரம், கொஞ்சம் வேப்பிலை எல்லாம் எடுத்து வைத்தார். நிறை குடத்தில் இருந்து
தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து வைத்த அம்சவேணி அந்தச் சேலைகளைப் பார்த்தாள். எல்லாமே
அவள் மாமியார்காரி கட்டும் விதமாகத்தான் இருந்தன. பதிமூணு வயசில் செத்துப் போனவள் கட்டும்
சேலையா இது என்று நினைத்துக் கொண்டாள்.
சாம்பிராணி போடுறதுக்கு
என்று ஒரு சட்டியில் விறகு மூட்டத்தில் இருந்து கங்கு எடுத்துக் கொண்டு வந்த மாமியார்காரி
முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டாள். எல்லாம் தயார்… சாம்பிராணி புகையில் சேலையைக்
காட்டி மணம் உண்டாக்கி வைத்துவிட்டு கண்ணை மூடி அமர்ந்த மாமனார், ‘என்ன முத்தம்மா…
குத்தம் குறையில்லாம செஞ்சிருக்கோம்… ஏத்துக்கிடணும்…; என்றார். வழக்கமாக அத்தோடு படையல்
முடிவுக்கு வந்துவிடும். ஆனால், மூடிய அம்சவேணியின் கண்களில் நீர் சரசரவென்று வழிந்தது.
மூசுமூசென்று அழுதவள் விடுவிடுவென்று எழுந்து போய் கிழவி வீட்டு திண்ணையில் படுத்துக்
கொண்டாள். மூச்சு மேலுக்கும் கீழுக்குமாக இழுத்தது. மொத்த குடும்பமே எழுந்து ஓடி வந்தது.
‘அட… இத்தன நாள்
காத்திருந்த முத்தம்மா புது மருமக மேல வந்திருக்காளா..?’ என்றாள் கிழவி. ‘எல்லாருக்கும்
விபூதி பூசு… உன் மதினிகாரிக்கு நல்ல வார்த்தை சொல்லி பூசு… புதுசா பயிரெடுத்திருக்க…
அந்த பயிரு உன் நிழல்ல நல்லாயிருக்கணும்… உன் கோபதாபங்கள கொறைச்சுகிட்டு நல்ல வழிகாட்டு…’
என்று பேசிக் கொண்டே போனாள் கிழவி!
‘இனி வருசந்தோறும்
படையல் வைக்கோம்… நீ வந்து நாலு வார்த்த நல்லதாச் சொல்லும்மா… நல்லது கெட்டது உன் வாயில
வந்தா நம்ம குடும்பத்துக்கு நல்லது…’ என்று பவ்யமாக நின்ற மாமனாருக்கு விபூதி பூசினாலும்
முழியும் முறைப்பும் மாமியார்காரி மேலேயே இருந்தது.
‘முத்தம்மா…
உனக்கு என்ன வேணும்… பாலு இருக்கு… பானகம் இருக்கு… என்ன வேணும்னு மதினிகிட்டே கேளு’
என்ற மாமியார்காரியை நிமிர்ந்து பார்த்த அம்சவேணி, ‘உள் தொண்டையிலே உசுரு இழுத்துகிட்டு
கிடக்கையில ஒரு மடக்கு தண்ணி குடுக்கலை… இப்ப பாலும் பானக்கரமும் தராளாம்… த்தூ…’ என்று
நாக்கை வழித்துத் துப்பினாள்.
தி இந்து பொங்கல்
மலர் 2015
1 comment:
அம்சவேணியின் வெஞ்சினத்தை முத்தம்மா மூலியமா எறக்கி வச்சிட்டிய.இனி வருசத்துக்கொரு தரம் மருமவ தினம்.
Post a Comment